|
|
|
 |
காலையில் எழுந்ததுமே வெட்டுக் கத்தியும் கையுமாகக் கொல்லைப்புறம் நோக்கிப் போனான் கோபி. தொழுவத்தில் போடப்பட்டிருந்த மரக்கட்டையின் மீது சிறிது பொடி மணலைத் தூவிக் கத்தியை முன்னும் பின்னுமாகத் தீட்டத் தொடங்கினான்.
கட்டைக்கும் கத்திக்கும் இடையில் அகப்பட்ட பொடி மணல் மேலும் பொடியாகியது. 'சர் சர்' என்ற ஒலியுடன் தீப்பொறிகள் பறந்தன. அதைப் பார்க்கப் பார்க்கக் கோபியின் மனத்தில் எல்லையில்லாத ஆனந்தம் ஏற்பட்டது. தன் உள்ளத்தில் பெரிதாகக் குமுறிக் கொண்டிருக்கும் பெரு நெருப்பின் பிரதிபலிப்பைக் காண்பதில் அவனுக்குக் களிப்பு.
சட்டென்று தீட்டுவதை நிறுத்தி இடக்கை விரல் நகத்தின்மீது இலேசாக ஒரு தேய்ப்புத் தேய்த்தான். அப்படியே இழைப்புளியில் மரம் சுருண்டு வருவதுபோல் நகத்தைச் சுரண்டிக் கொண்டு வந்தது.
அப்பா! வெட்டுக் கத்தியால் க்ஷவரமே செய்து கொள்ளலாம் போலிருக்கிறது. அவ்வளவு கூர்மை. சட்டென்று கோபி அருகிலிருந்த வாழை மரத்தில் ஒரு சொருகு சொருகினான்.
கத்தி பாதிக்கு மேல் மரத்தில் பாய்ந்து விட்டது. அந்த இடத்திலிருந்து பால் கசிந்து கொண்டிருந்தது.
'இதுபோல ஒரு திவசம் வெட்டி, ஆ பட்டருடே சோரெயெ கொட்டிப்பிச்சு ஞான் கொல்லும்' (இதுபோல் ஒரு நாள் வெட்டி, அந்தப் பட்டரின் ரத்தம் சிந்த நான் கொல்லுவேன்) கோபி முணுமுணுத்தான்.
வீட்டை மெழுகுவதற்கு வாளியில் சாணத்தைக் கரைத்துக் கொண்டிருந்த பகவதி ஓரக்கண்ணால் மகனைப் பார்த்துவிட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
அவளுக்கும் அது அன்றாட வேலை, அவனுக்கும் அது அன்றாட வேலை. வெட்டுக் கத்தியைத் தீட்ட வேண்டியது. தென்னையிலோ முருங்கையிலோ ஒரு வெட்டு வெட்ட வேண்டியது. 'பட்டரை' இருமுறை திட்ட வேண்டியது.
ஆரம்பத்தில் சில காலம் பகவதி மகனைக் கண்டித்துக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாள். பிறகு வரவர அவனுக்கு ஈடு கொடுக்க அவளால் ஆகவில்லை. எத்துணை சொன்னாலும் அவன் கேட்பதும் இல்லை அதோடு அவளையே எதிர்க்கவும் தொடங்கி விட்டான். ஆகவே வரவர அவளும் பார்த்தும் பார்க்காததுமாகப் போய்விடுவாள்.
அன்று அவனது வெறி அதிகமாகிவிட்டதோ என்னமோ... குருத்தும் குலையுமாக இருந்த வாழையின் இடுப்பில் நாலைந்து போடு போட்டு விட்டான். அவை தன்னை வளர்த்து நிறுத்தியிருக்கும் பகவதியிடம் உடம்பையெல்லாம் காட்டிக் கண்ணீர் சிந்தியது.
பகவதிக்குத் தாளவில்லை. துக்கம் அவள் தொண்டையை அடைத்தது. சாணிக் கையாலேயே மகனை ஓர் உந்து உந்தித் தள்ளினாள்.
"அடா... நினிக்குப் பிராந்தோ.. வாழையை எந்தினடா வெட்டிக்களையுன்னு?" (டேய், உனக்குப் பைத்தியமா! வாழையை எதற்காகவடா இப்படி வெட்டி வீணாக்குகிறாய்?) கொடுவாளை அவன் கையிலிருந்து பிடுங்கி எறிந்தாள்.
"இதுபோலெ, ஆ பட்டரை என்றே கையால் வெட்டிக் கொல்லணும் அப்போள் தன்னே என்றே ஹிருதயத்தினு சமாதானம் கிட்டும்" (இதுபோல் அந்தப் பட்டரை வெட்டிக் கொல்ல வேண்டும். அப்பொழுது தான் என் மனம் சமாதானமடையும்). "அம்மே...! ஆ ஆளு யாராணுன்னு நீ பறயுயில்லா... அல்லே?" (அம்மா! அந்த ஆள் யாரென்று நீ சொல்ல மாட்டாயல்லவா?). கோபம் நீங்கிப் பொங்கி வந்த துக்கத்தை அடக்க முடியாமல் கேட்டான் கோபி.
பகவதி சட்டென்று தன் மகனைத் தாவி அணைத்துக் கொண்டாள். அவள் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.
வடக்கன் பாறையிலிருந்து பத்தாவது மைலில் இருக்கும் ஒற்றப் பாலம் மைனர் என்றால் அந்த வட்டாரத்தில் அறியாதவர்களே இருக்க மாட்டார்கள். நஞ்சையும் புஞ்சையுமாக அவருக்கு ஏராளமான சொத்து. எல்லாம் வழி வழியாக வட்டியும் முதலுமாகப் பெருகிவந்த பிதுரார்ஜித சொத்துத்தான்.
மைனர் மகாதேவனுடைய பத்தாவது வயதில், அவன் மேஜராவதற்கு முன்னமே, அவனது பெற்றோர்கள் இறந்து விட்டனர். பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை. அவனைக் கேள்வி கேட்பாரில்லை. சிறுவயதில் உற்றார் உறவினர்களுக்குச் சிறிது கட்டுப்பட்டிருந்த மாதிரி மகாதேவன் நடந்து கொண்டிருந்தான். மீசை முளைத்தவுடன் அதுவும் அஸ்தமித்துவிட்டது.
"மைனர்வாள்!" என்று அழைத்துக் கொண்டு அங்கு போலி உறவு கொண்டாடுபவர்களுக்கெல்லாம் ராஜ உபசாரம் நடந்தது. மைனர் வியாபகம் சுற்று வட்டாரம் முழுவதும் வியாபித்தது. அவனது நடத்தை பிடிக்காமல் உண்மை உறவினர்கள் ஒதுங்கிப் போய்விட்டனர். ஆனால் அதைப் பற்றியெல்லாம் மகாதேவனுக்குச் சிந்திக்க நேரமே இருக்கவில்லை.
மைனரின் செல்வமும் நண்பர்களின் ஆலோசனையும் பெட்ரோலும் நெருப்புமாக இணைந்து செயல்பட்டன. சொத்துக்கள் எல்லாம் விரைவிலேயே முக்கால்வாசிக்கு மேல் அழிந்து போயின. கால்வாசி வயதை எட்டிப் பிடிக்கு முன்னரே முக்கால்வாசி வாழ்க்கை வாழ்ந்து விட்டதைப் போல் தளர்ச்சியும் தள்ளாமையும் தன்னைத் தாவிப் பிடித்துக் கொண்டுவிட்டதை உணர்ந்த மகாதேவன் பற்றுக் கோட்டைத் தேடிக் கையை வீசினார். பக்கபலமாக இருந்த நண்பர்கள் எல்லாம் நகர்ந்து விட்டதை மைனர் அப்போதுதான் உணர்ந்தார்.
தனிமை வந்து மொய்த்துக் கொண்ட போதுதான் மைனரின் மனத்தில் தனக்கென்று ஓர் இல்லாள் இல்லாத குறை தோன்றவாரம்பித்தது. அப்போதெல்லாம் அவர் பகவதியைத்தான் நினைத்துக் கொள்வார்.
ஆம்! உண்மையிலேயே அவர் மைனராக இருந்த காலத்தில் அவரது ஆசை வார்த்தைகளில் நம்பி விழுந்து நாசமாய்ப் போன பெண்களில் பகவதியும் ஒருத்தி. ஆனால் மற்றவர்களை யெல்லாம் மறந்துவிட முடிந்த அவரால் பகவதியை மட்டும் மறக்கவே முடியவில்லை.
அதற்குக் காரணம், இறுதிவரை அவளை அவருடைய பணத்தினாலோ, பசப்பு வார்த்தைகளினாலோ ஏமாற்றவே முடியவில்லை. ஏழைப் பெண்ணாக இருந்தாலும் அழகிய அவள் பெரிய அரசியைப் போல் சிறந்து விளங்கினாள். அவளுடைய பிடிவாதத்தினாலேயே மைனருக்கு அவளிடம் பற்றுதல் அதிகமாயிற்று. அவளைப் பணிய வைக்காமல் விடுவதில்லை என்று மைனரின் நண்பர்கள் துரோக வலை விரித்தனர்.
"பகவதி, உன்னை நான் நிச்சயம் 'சம்பந்தம் (திருமணம்) பண்ணிக் கொள்கிறேன்" என்று அவள் தலைமேல் அடித்து நம்பவைத்து வயிற்றில் ஓர் உயிரையும் குடியேற்றிவிட்டுத் தனக்கு ஒரு சம்பந்தமுமே இல்லாதவன் போல் ஒருநாள் குடிசையிலிருந்து வெளிவந்து விட்டான் மகாதேவன். அப்போது ரத்தத்திலே ஜீவ அணுக்கள் அதிகமாகத் துள்ளித் திரிந்து கொண்டிருந்த காலம். எதுவும் லட்சியமில்லை. லட்சியம் எதுவுமில்லை, லட்சியத்துக்கு மதிப்புமில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த காலம்.
இன்று அந்த இறந்த காலம் அவர் கண்முன் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. பகவதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்ததாக அவர் கேள்விப்பட்டார். ஆனால் மனைவியோடு இருக்கிற அந்த நேரத்தில் அது மறைக்க - அல்லது மறந்துவிட வேண்டிய ஒரு விஷயமாகவே மகாதேவனுக்குத் தோன்றியது.
ஆனால் வரவர இப்போது அவரது மனத்தில் ஒரு புதுச் சபலம் அடிக்கடி தோன்றி வேதனைப்படுத்திக் கொண்டே யிருந்தது.
இன்று பகவதியின் மகனுக்குப் பதினைந்து பதினாறு வயதுகூட இருக்கலாம். அவனைப் போய்ப் பார்த்தால் என்ன? அவள்தான் எப்படி யிருப்பாள்? பகவதிக்குத் தன்னை இப்போது பார்த்தால்கூட அடையாளம் தெரியுமோ என்னமோ. அது கிடக்கட்டும். அடையாளம் தெரியாவிட்டால் என்ன? தம் நினைவாவது இருக்குமல்லவா? - இப்படி அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, "சுரீர்" என்று யாரோ தம் முதுகில் சவுக்கால் ஒங்கி அடிப்பதைப் போல் மகாதேவன் ஒரு கணம் துடித்தார்.
மனச்சாட்சியின் சவுக்கடிகளுக்கு ஈடு கொடுக்க முடியாத மகாதேவன் திக்கித் திணறினார். அதன் பிறகு அவளைத் தேடிக் கண்டுபிடித்துத் தம்முடன் அழைத்து வைத்துக்கொண்டுவிட வேண்டும் என்று மகாதேவன் மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் வீணாயின. அவள் தன் மகனையும் அழைத்துக் கொண்டு எங்கேயோ சென்றுவிட்ட செய்தி பிறகு அவருக்குத் தெரிய வந்தது.
ஆனால், அதன் பிறகும் அவர் அவளைத் தேடுவதை நிறுத்தவில்லை.
கட்டுக் கட்டாக வெட்டி வைத்திருந்த ‘மரச் சீனி'ச் செடிகளை வரிசையாக இடைவெளி விட்டு நட்டுக் கொண்டிருந்தாள் பகவதி. அது முடிந்ததும் அழகாகக் கட்டி முடித்திருந்த பாத்திகளுக்குக் கமலையால் தண்ணீர் இறைத்து விட்டுக் கொண்டிருந்த பகவதியிடம் ஓடிவந்து அவளுடைய சிநேகிதி பாருக்குட்டி சேதி ஒன்றைக் கூறினாள்.
அதைக் கேட்டதும் பகவதியின் கையிலிருந்த கமலை தானே நழுவிக் கிணற்றில் விழுந்து தண்ணீரை வாரி இறைத்தது.
மறுகணம் கையையும் காலையும் உதறிவிட்டு பகவதி கண் மண் தெரியாமல் ஓடினாள். எங்கோ உலகத்தில் மறு கோடியை நோக்கி ஓடுவது போல் ஓடிக் கொண்டிருக்கும் பகவதி சிறு புள்ளியாகத் தெரியும்வரையில் இமைக்காமல் அந்த இடத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் அவளுடைய சிநேகிதி.
ஆம்! பகவதி அத்தனை வேகமாக எங்கோ இருக்கும் தன் குடிசையை நோக்கித்தான் ஓடிவந்து கொண்டிருந்தாள். அவள் உள்ளத்தில் இருந்த ஒரே பிரார்த்தனை எல்லாம், "தன் பிள்ளை அந்த வேளையில் எங்கேயும் போகாமல் வீட்டில் இருக்க வேண்டுமே" என்பதுதான். அந்தக் கவலையுடனேயே கண் மண் தெரியாமல் களத்து மேட்டிலிருந்து வேகமாக ஓடி வந்தவள், குடிசை திறந்திருப்பதைக் கண்டதும் எல்லை மீறிய மகிழ்ச்சியோடு உள்ளே பாய்ந்தாள். மறு கணம்...?
"கோபி...!" என்று அலறியவண்ணம் தடால் என்று தரையில் சாய்ந்தாள் பகவதி. ஆம்! ஓடிவந்த வேகத்தில் குடிசையின் நிலைப்படி அவளது நெற்றியைப் பிளந்து கீழே தள்ளி விட்டது.
கொல்லையில் கொடுவாளைத் தீட்டிக் கொண்டிருந்த கோபி, தன் தாயாரின் அலறலைக் கேட்டுப் பதறிப்போய் உள்ளே ஓடி வந்தான். கீழே ரத்த வெள்ளத்தில் பகவதி புரண்டு கொண்டிருந்தாள். அவளது தலையிலிருந்து ரத்தம் 'குபுகுபு'வென்று கொட்டிக்கொண்டிருந்தது.
கையிலே பளபளத்துக் கொண்டிருந்த அரிவாளை வீசி எறிந்துவிட்டு "அம்மா!" என்று அலறியவண்ணம் கோபி தன் தாயாரது தலையை இறுகப் பிடித்துக் கொண்டான். ரத்தம் வீணாகாமல் தன் தோளிலிருந்த துண்டால் வெட்டுண்ட பாகத்தை அழுந்தப் பிடித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்துக்கெல்லாம் கண் விழித்த பகவதி தன் மகனைத் துரிதப்படுத்தினாள். "மகனே, கோபி! வேகம்! நின்றே ஏழெட்டு பெடெக் கோழிக் குஞ்சுங்களையும் எடுத்தோண்டு, குஞ்சுண்ணி மரக்காயருடே பெரயடத்தேக்கு ஓடிப்போ... அவிடே யாரோ ஒரு ஆளுனெ, 'மூர்க்கன்' பாம்பு கடிச்சுக் களஞ்சு... தாமதிக்காதே ஓடிப்போ... ஓடிப் போ" என்று துரிதப்படுத்தினாள்.
மூர்க்கன் என்பது மலையாளப் பிரதேசத்தில் தோட்டம் துரவுகளில் சகஜமாகக் காணப்படும் ஒருவகை கொடிய விஷப்பாம்பு. அது ஒரு மனிதனைத் தீண்டிவிட்டால் அதன்பிறகு அந்த மனிதன் பிழைப்பது அரிதுதான். அதற்கு ஒரே ஒரு வைத்தியம் உண்டு. கடிபட்டவனுக்கு ஆயுசு கெட்டியானால் அருகில் எங்கேயாவது கோழி வளர்ப்பு இடம் இருக்கும். சட்டென்று ஒவ்வொரு பெட்டைக் கோழியாகக் கொண்டு வந்து பாம்பு கடித்த கடிவாயில் கோழியின் அடிவயிற்றை வைத்துப் பிடித்துக் கொள்ளுவார்கள். அந்தக் கோழி தனது அடிவயிற்றால் மனிதன் உடலிலிருக்கும் விஷத்தை உறிஞ்சும். உடனே அது இறக்கும். இப்படிப் பலப் பல கோழிகள் விஷம் இறங்கும்வரை தேவைப்படும். அந்த உதவிக்குத்தான் பகவதி இப்போது தன் மகனைக் கோழிகளுடன் செல்லத் தூண்டினாள். ஆனால் கோபி தன் தாயின் அருகிலிருந்து அசையவேயில்லை.
சட்டென்று உத்தரத்திலிருந்தும், கதவிலிருந்தும், ஜன்னலிலிருந்தும் ‘பூச்சைக்கூடை' பிய்த்துக் கொண்டு வந்து தன் தாயின் நெற்றியில் வைத்து அமுக்கி, ரத்தத்தைக் கட்டுப்படுத்த இன்னும் தனக்குத் தெரிந்த என்னவெல்லாமோ செய்து கொண்டிருந்தான்.
மீண்டும் மகன் தன் அருகிலேயே இருப்பதைக் கண்ட பகவதி, ‘அடா....இனியும் நீ இவிடேயிருந்து போயில்லியோ?'' என்று கேட்டு வெறி பிடித்தவள்போல் அவனை உந்திக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள். ஆனால் அவளால் தள்ளவில்லை.
"அம்மா... நின்னே இவிடே இங்ஙனே விட்டுமச்சு, ஞான் போவு இல்லா. எட்டடியோ, பத்தடியோ மூர்க்கன் யாரையோ எந்தினோ கடிச்சால் எனிக்கு எந்து? ஞான் நினிக்கு வைத்தியரே விளிச்சோண்டு வரான் போவுன்னு!"
பகவதி இரும்புப் பிடியாக மகன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள்.
"அடா..... நினுக்கு அம்மே வேணோ வேண்டியோ? பாம்பு கடிச்ச ஆளு, யாரோணென்னு நீ அறியுமோ? அடா.. அது நின்றே அச்சனாணு. கோழியேயும் எடுத்தோண்டு ஓடிப் போடா. நீ போயில்லங்கில் ஞான் இப்பொழே ஈ வெட்டுக் கத்தி கொண்டு என்றே தலையே அறுத்துக் கொள்ளும்."
சட்டென்று அவள் தரையில் கிடந்த அரிவாளைக் கையில் எடுத்துக் கொண்டாள். கோபி அப்படியே ஒரு கணம் வெலவெலத்துப் போய்ச் சிலையாக நின்று விட்டான்.
யாரை அவன் வாழைக் குலையைச் சீவி எறிவது போல் சீவி எறிய வேண்டும் என்று விவரம் தெரிந்த நாள் முதல் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தானோ, அவருக்கே அவன் உயிர்ப் பிச்சையளிப்பதா? தன் தாய்க்கு அவர் செய்த துரோகத்துக்குத் தெய்வத்தினிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல் அரவம் தீண்டிச் சாகப் போகிறவருக்குத் தன் கையினாலேயே உயிரூட்டுவதா?
நிச்சயம் முடியாது. அதைவிடத் தன் தாயார் அவள் கையிலிருக்கும் அரிவாளால் தன்னைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டாலும் போடட்டும். அது அவனுக்குப் பிடித்தது.
"அம்மே... ஞான் போவு இல்லா."
"அட துரோகி... எந்தடா பறஞ்சு? நீ போவு இல்லா... அல்லோ? வேண்டா. இதோ ஞான் போவாம். இனி நீ என்ற மவனுமல்ல- ஞான் நினக்குத் தள்ளயு(தாயு)மல்ல."
எங்கிருந்துதான் அவளுக்கு அப்போது அப்படியொரு தெம்பு வந்ததோ! பத்திரகாளி மாதிரி ரத்தம் வழிந்தோடும் முகத்தோடு கூடையைத் தூக்கி ஏழெட்டுக் கோழிக் குஞ்சுகளின் காலை பிடித்துத் தூக்கினாள்.
"தடால்" என்று கோபி அவள் காலில் வந்து விழுந்து, அந்தக் கோழிகளைத் தன் கையில் சேர்த்துப் பிடித்துக் கொண்டான்.
''அம்மே... இதோ ஞான் போகுன்னு. நினிக்கே இல்லாத்தது எனிக்கெந்து? ஆ பாபிக்கு இப்பொழங்கிலும் என்? பொன்னு அம்மெயுடெ நெஞ்சு அறியட்டே!" - கூறியவன் பதிலுக்குக் கூடக் காத்திருக்கவில்லை. கைகளில் கோழிக்குஞ்சுகளுடன் பருந்தைவிட வேகமாகப் பறந்து. சென்று குஞ்சுண்ணி மரக்காயருடைய தோட்டத்தை அடைந்தான்.
அங்கே...!
தம்முடைய நிலத்தை மரக்காயருக்குப் பேச வந்த இடத்தில் பாம்பு கடிபட்ட ஒற்றப்பாலம் மைனர் பேச்சு மூச்சு இல்லாமல் மல்லாந்து கிடந்தார். சுற்றிலும் ஆட்கள் பேச்சு மூச்சில்லாமல் நின்றுகொண்டிருந்தனர். முழங்காலுக்கு மேல் விஷம் ஏறாமல் இருக்கப் பலமாக ஒரு கட்டுப் போடப் பட்டிருந்தது.
கோழிக் குஞ்சுகளோடு அங்கு வந்து சேர்ந்த சிறுவனைக் கண்டதும் அங்கிருந்த அனைவருக்கும் கடவுளையே நேரில் கண்டுவிட்டது போலிருந்தது.
எல்லோரும் வைத்த கண் வாங்காமல் அழகே உருவான அந்தச் சிறுவனையே பார்த்த வண்ணமிருந்தனர். வேறு சிலர் மைனரையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தனர். அதில் ஏதோ ஓர் அதிசயம் இருப்பதை அவர்கள் தேடினர். அவர்கள் விஷயம் அறிந்தவர்கள்.
கோபியின் ஆறு கோழிகளின் உயிரையும் குடித்துவிட்டு மைனரின் விஷம் இறங்கியது. "யார் இந்தப் பையன்? தக்க சமயத்தில் வந்து உயிர்ப் பிச்சை கொடுத்தானே..." என்கிற அனைவருடைய சந்தேகத்தையும் பகவதியின் சிநேகிதி பாருக்குட்டிதான் வந்து விளக்கினாள்.
"இது... மோட்டுவிளை பகவதியுடே மகனாணு!" அவளுடைய குரலில் இதைக் கூறும்போது ஒருவிதப் பெருமிதம் பொங்கி வழிந்தது.
மைனரின் கண்களோ தனக்கு உயிர்ப்பிச்சை அளித்த சிறுவனையே துழாவியது. ஆனால் அவன் அங்கிருந்தால்தானே! காரியம் முடிந்ததும் தாயைக் காணச் சிட்டாய்ப் பறந்தோடி விட்டான்.
பிறகுதான் அவன் யார் என்பதை மைனருக்கும் பாருக்குட்டியே விளக்கினாள். ‘பகவதி' என்ற சொல்லைக் கேட்டதும் மைனர் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்திருந்தார். அத்தனை நேரம் விஷம் பரவிக் கிடந்த உடம்பில் அந்தப் பெயரைக் கேட்டதும் அமிர்தம் பாய்ந்ததைப் போல் உடனே புதுத்தெம்பு அவர் உடலில் பரவியோடியது. மைனரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே சென்றது, அவர்களைப் பார்க்க. ஆனால் பகவதியின் வீட்டினுள் அடியெடுத்து வைத்த போது கோபியின் பெரும் அழுகுரல்தான் அவர்களை வரவேற்றது.
தொண்டை நரம்புகளே வெடித்துவிடும்படி தன் தாயின் தலைமாட்டில் நின்று கோபி பெரிதாகக் கதறிக் கொண்டிருந்தான்.
பகவதியுடைய அன்பு உள்ளத்தால் கவரப்பட்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைவரும் அங்கு வந்து கூடி அழுத வண்ணம் இருந்தனர்.
"மண்டை பிளந்து விழுந்த தன் தாயாருக்கு அருகில் இருந்து முதல் உதவிகூடச் செய்ய முடியவில்லையே. அதற்குக்கூடத் தன்னைக் காத்திருக்க அனுமதிக்காமல் யாரோ ஒரு துரோகியைக் காப்பாற்றத் தன்னைத் துரத்திவிட்டாளே தன் அருமைத் தாய்" என்று ஆறுதலே பெற முடியாமல் முகத்திலே அறைந்து கொண்டான் கோபி.
ரத்த வெள்ளத்தில் புரண்டு கிடக்கும் பகவதியையும் அருகில் இருக்கும் மகனையும் மாறி மாறிப் பார்த்தார் மைனர். புத்திர பாசம் அவர் உள்ளத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்தது. "இத்தனை நாட்களுக்குப் பிறகு பகவதியை இந்த நிலையிலா சந்திக்க வேண்டும்?" என்று அவர் மனம் கலங்கியது. தம்மையும் மீறிப் 'பகவதி!' என்று அலறிய வண்ணம் அவள் அருகில் சென்றார்.
மறு கணம்...?
தரையிலே கிடந்த அரிவாளைப் பாய்ந்து எடுத்துக் கொண்ட கோபி அந்த வீடே அதிரும் வண்ணம் கத்தினான்.
"தொடாதே...!"
மைனர் அப்படியே ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டார். ஆவேசம் வந்தவனைப் போல் கோபி கூவினான்.
"என்றே பொன்னு அம்மையைக் கொன்ற மகாபாவி; நின்றே பாபக் கரங்களால் ஆ தெய்வத்தினே தொடாதே."
"கோபி.. அங்கத்து யாராணன்னு அறியுமோ...? நின்றே அச்சனாணு!" என்று ஒரு பெரியவர் விளக்கினார்.
"எனிக்கு யாரும், ஏதும் பறஞ்சு கொடுக்காண்டா." கோபி சீறி விழுந்தான்.
"அட, நின்னே அத்தேகம் பங்களாவுக்கு விளிச்சோண்டு போவான் போகுன்னு."
"ஞான் யாரு கூடேயும் வரான் தயாராயில்லா. நீங்களெல்லாம் இப்போழே இவிடந்து ஓடிப்போய்க் கொள்ளணும். அல்லங்கில் நிங்கள் அத்தனை பேரையும் ஞான் வெட்டிக் கொல்லும்.'' வெறி பிடித்தவனைப் போல் அரிவாளைக் கோபி உயர்த்தினான்.
மறுகணம் உயிரின் மேல் ஆசை கொண்ட உயிர்கள் அனைத்தும் தங்கள் தங்கள் உடலைச் சுமந்தவண்ணம் கொல்லையாலும் வாசலாலும் ஓடி மறைந்தன. குடிசையினுள் ஒரே ஒரு உயிரும், ஒரே ஒரு உயிரற்ற உடலும்தான் எஞ்சின.
கோபி கையிலிருந்த அரிவாளை வீசி எறிந்தான். தன் எண்ணம் ஈடேறாத வருத்தம் இப்போது அவனுக்கில்லை. அதைவிடத் தன் தாயின் இறுதி விருப்பத்தைப் பூர்த்தி செய்துவிட்ட ஆத்ம திருப்தியே அவன் முகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. |
|
|
| கே.பி. நீலமணி |
|
|
|
|
|
|
|
|
|
|