Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
லான்ஸ் நாயக் ஏ. மீனாட்சிசுந்தரம்
- அரவிந்த்|ஜூலை 2026|
Share:
தமிழ்நாட்டில் ஏராளமான ஹீரோக்கள் இருக்கிறார்கள். 'நீ ரீல் ஹீரோ'; 'நான் ரியல் ஹீரோ' என்று அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையான ஹீரோக்கள் சப்தம் போடாமல் சாதனை செய்கிறார்கள். செயலாற்றுகிறார்கள். என்றென்றும் வரலாற்றில் உண்மைக் கதாநாயகராக இடம்பெறுகிறார்கள். அப்படிப்பட்ட ரியல் ஹீரோக்களில் ஒருவர்தான் மீனாட்சிசுந்தரம். யார் இவர், அவர் அப்படி என்ன சாதித்து விட்டார் என்பது தெரிந்தால் தேசபக்தி உள்ளவர்களுக்கு உடல் சிலிர்க்கும். மனம் நெகிழ்ந்து கண்ணீர் வரும். உண்மையில், உண்மையான ஹீரோக்களின் சாதனைகள் அப்படித்தானே இருக்கும்!

டிசம்பர் 19, 2024. காஷ்மீர். ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதிகளில் பணியில் இருந்த 34வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பீரங்கிப் படைப் பிரிவினருக்கு உளவுத்துறையிலிருந்து ஒரு தகவல் வருகிறது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் கடினமான நிலப்பரப்பில் சில தீவிரவாதிகள் ஊடுருவிப் பதுங்கியுள்ளனர் என்பதுதான் அது. குழுவினர் உடனடியாக அவர்களை எதிர்கொள்ளப் புறப்பட்டனர். அந்தக் குழுவில் ஒருவர் மீனாட்சிசுந்தரம்.



மீனாட்சிசுந்தரம் குழுவினருடன் தீவிரவாதிகள் தங்கியிருக்கும் வீட்டைச் சுற்றி வளைத்தபோது அதிகாலை மணி 3.30. அந்த வீட்டுக்குள் ஐந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் குழுவினரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தங்கள் சுழல்துப்பாக்கியால் சரமாரியாகச் சுட ஆரம்பித்தனர். மீனாட்சிசுந்தரம் குழுவினர் இரண்டு பேரைச் சுட்டுக் கொன்றனர். மீதம் இருந்த மூவர் மாடியில் ஏறிக் கீழே இறங்கித் தப்பிக்க முயன்றனர். வழியில் அவர்களை எதிர்கொண்டு அரணாக நின்ற மீனாட்சிசுந்தரம் அவர்களைச் சரமாரியாகத் தாக்கினார். தீவிரவாதிகள் அதனை எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்த் தாக்குதல் நடத்தினர். மீனாட்சிசுந்தரத்தைக் குறிபார்த்துச் சுட்டனர்.

தீவிரவாதிகள் சுட்டதில் ஒரு குண்டு மீனாட்சுந்தரத்தின் வாயில் பாய்ந்து வாயைக் கிழித்துக்கொண்டு சென்றது. வலது கை மணிக்கட்டிலும், தோள்பட்டையிலும் குண்டுகள் பாய்ந்தன. ஆனாலும் அயர்ந்துவிடாமல் உறுதியாக அவர்களை எதிர்கொண்டார் மீனாட்சிசுந்தரம். முகத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தபோதிலும், குருதி பெருகி வழிந்தபோதிலும், பின்வாங்காமல் உறுதியாக நின்று தொடர்ந்து முன்னேறி அவர்களுடன் போராடினார். இதனை எதிர்பாராத தீவிரவாதிகள் நிலைகுலைந்தனர். அங்கு வந்த சக வீரர்கள் தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.



காயமுற்று வீழ்ந்த மீனாட்சிசுந்தரத்தை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை அங்கிருந்து 90 கி.மீ. தூரத்தில் இருந்தது. தீவிரவாதிகளை அழித்த மனநிறைவுடனும், ஊரில் தனக்காகக் காத்திருக்கும் இளம் மனைவியின் நினைவுகளுடனும் மருத்துவமனைக்குப் பயணப்பட்டார் மீனாட்சிசுந்தரம். தொடர்ந்து மருந்துகள், பல்வேறு அறுவை சிகிச்சைகள் என நான்கு மாதம் சிகிச்சை தொடர்ந்தது. பின்னர்தான் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். இன்னமும் அவருக்குச் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையிலும், தனது பணியில் காட்டிய உறுதி மற்றும் அர்ப்பணிப்புக்காகவும், போர்க்களத்திற்கு வெளியே நிகழ்த்தப்படும் மிகச்சிறந்த வீரச்செயல், துணிச்சலான நடவடிக்கை மற்றும் தன்னலமற்ற தியாகத்துக்காக வழங்கப்படும் கீர்த்திச் சக்ரா விருது, ஆகஸ்ட் 15, 2025 சுதந்திர தினத்தன்று, லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு வழங்கப்படுவதாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

ஜூன் 8, 2026 அன்று, ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மீனாட்சி சுந்தரத்திற்கு கீர்த்திச் சக்ரா விருதை வழங்கினார்.



தமிழக முதலைமச்சர் சி. ஜோசப் விஜய், மீனாட்சி சுந்தரத்தையும், அவரது மனைவி முத்தமிழ்ச்செல்வியையும், தந்தை அய்யப்பராசாவையும், குடும்பத்தாரையும் நேரில் அழைத்துப் பாராட்டி, ரூ.48 லட்சத்துக்கான காசோலையைச் சமீபத்தில் வழங்கி கௌரவித்தார்.

மீனாட்சிசுந்தரம், தேனி மாவட்டத்தில் உள்ள காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர். இந்த ஊரே ராணுவ வீரர்களுக்காகப் பெயர் பெற்றது. இந்த ஊரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். பிள்ளைகளிடம் சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும்; நாட்டைக் காக்க வேண்டும் என்று தேசபக்தியை ஊட்டித்தான் இங்கே குழந்தைகளை வளர்க்கிறார்கள்.

அப்படித் தந்தை அய்யப்பனால் வளர்க்கப்பட்டார் மீனாட்சிசுந்தரம். மீனாட்சிசுந்தரத்தின் அண்ணனும் ராணுவத்தில் சேர முயன்றார், ஆனால் வாய்ப்புக் கிடைக்கவில்லை. மீனாட்சிசுந்தரத்தின் அயராத உழைப்பால், கடும் முயற்சியால், உடல் திறனால் அவருக்கு 2017-ல் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. '80 மீடியம் ரெஜிமென்ட் கம்பெனி'யில் பணி. ஹைதராபாத், ஜோத்பூர் என்று நாட்டின் பல இடங்களில் பணியாற்றினார்.

தீவிரவாதிகளோடு போராடி அவர்களை அழிக்க வேண்டும் என்பதுதான் மீனாட்சிசுந்தரத்தின் கனவு, லட்சியம். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடம் குறித்துத் தகவல் வந்தவுடன், '34 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் (34 RR)' கம்பெனி களத்தில் இறங்கி, சுற்றி வளைத்து அழிக்கும். ராணுவத்தினரின் இத்தகைய சாகசப் பணிகளில் பணியாற்ற ஆர்வம் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரத்திற்கு, ஆறு வருடங்கள் கழித்துத்தான், 2024-ல், அப்பணிகளை மேற்கொள்ளும் '34 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் (34 RR)' கம்பெனி'யில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு நிகழ்ந்ததுதான் மேற்கூறப்பட்ட தாக்குதல் சம்பவம்.



அச்சம்பவம் குறித்து மீனாட்சிசுந்தரம், "தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்போட தலைவரை நாங்க ரொம்ப காலமாத் தேடிக்கிட்டிருந்தோம். 2024, டிசம்பர் 19-ம் தேதி தெற்கு காஷ்மீர்ல இருக்குற கிராமத்துல அந்தத் தீவிரவாத அமைப்போட முக்கிய ஆட்கள் பதுங்கியிருக்கிறதா தகவல் கிடைச்சுது. சுற்றிவளைச்சு அடிச்சோம். அதுலதான் எனக்கு இந்தப் படுகாயம். என்னோட அட்டாக்கை, தப்பிக்க முயற்சி செஞ்ச தீவிரவாதிகள் எதிர்பார்க்கலை. உயிரே போயிருந்தாலும்கூட நான் அவங்களை என்னைத் தாண்டிப் போகவிட்டிருக்க மாட்டேன்," என்கிறார், உறுதியுடன்.

மேலும் அவர், "கீர்த்திச் சக்ரா விருது எனக்கு அறிவிக்கப்பட்ட போது, உண்மையிலேயே ரொம்பப் பெருமையா இருந்துச்சு. தீவிரவாதிகளை நேருக்கு நேர் சந்திச்சு வீழ்த்துறது ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் கனவு. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சது பெருமையான விஷயம்," என்கிறார், நெகிழ்ச்சியான குரலில்.

உண்மைதான். சாதனை நாயகர் மீனாட்சிசுந்தரத்தை வாழ்த்துவோம். தேச ஒற்றுமையில் உறுதி கொள்வோம்.

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்
- மகாகவி பாரதி
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline