|
|
 |
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒருப் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்ட்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றை தங்களுடைய தனிச்சிறப்ப நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப கடும்பொருட்கள் திருடப் பட்டன என்றாள். குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதை தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்!
★★★★★
குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்வுபோய், சில சமயங்களில் குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிகுந்த தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்டுகள் உருவாக்குவதால் கலையல் குறைவு என்றும், கணினிக்குள்ளேயே வயலெட் நிற லேஸர் கதிரை மிகக்குறைந்த சக்தியில் அதிவேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் மேரி கூறினாள். கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்பதை நிறுவனத்தின் நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முந்தைய தினந்தான் திடீரெனத் திருட்டு நடந்து விட்டது என்றும், ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.
திருடியவர்கள் யாரோ உள்நபர் உதவியோடு வாசல் வழியாக பயோமெட்ரிக் பாதுகாப்பையும் மீறி உள்புகுந்திருக்க வேண்டும் என்று மேரி கூறியதும் சூர்யா சில நொடிகள் யோசித்துவிட்டு "மேரி, பயோமெட்ரிக் பாதுகாப்பை யாராவது உள்நபர் பயன்படுத்தித் திருடர்களை உள்ளே விட்டிருந்தால், இரவில் யார் யார் அதை பயன்படுத்தியிருக்கிறர்கள் என்ற மின்குறிப்பேட்டின் மூலம் கண்டறிந்துவிட முடியுமே. அதனால் பயோமெட்ரிக்கை பயன்படுத்தாமல் உள்புக வேறு வழி இருக்க வேண்டும், அல்லவா?" என்று கேட்டார்.
சூர்யாவின் கேள்வி மேரியை வியப்பில் ஆழ்த்தியது! "ஓ! அதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே. வாசல் வழியாகத்தான் வந்திருக்க வேண்டும் என்றே ஆணித்தரமாக எண்ணிவிட்டேன். ஆனால் அப்படி நுழைய வேறு வழி எதுவும் இல்லையே?!"
சூர்யா மறுத்தார், "இருக்கிறது மேரி, நீங்களும் ஷாலினியும் அதைப் பற்றிச் சற்றுமுன் கூறினீர்கள்."
ஷாலினியும் மேரியும் ரெட்டை நாயனமாக ஒரே சமயத்தில் கூவினார்கள்! "என்ன, நாங்கள் கூறினோமா? என்ன அது?"
கிரண் குழப்பத்துடன், "ஆமாம், உள்ளிருந்து ஆபத்துக் காலத்தில் அவசரமாக வெளியேறும் கதவைப் பற்றித்தான் கூறினார்கள். அது எப்படி? அதை வெளியிலிருந்து திறக்க முடியாதே?" என்றான்.
சூர்யா முறுவலுடன் விளக்கினார். "வெளியிலிருந்துதானே திறக்க முடியாது? உள்நபர் உதவி என்பதுதான் உறுதியாகிவிட்டது. அப்படியானால் அந்த உள்நபர் யாருக்கும் தெரியாமல் உள்ளே இருந்துகொண்டு தக்க நேரத்தில் அந்த அவசரக் கதவைத் திறந்து உள்ளே விட்டிருக்கலாம், அல்லவா? அப்படி இருந்தால் பயோமெட்ரிக் பாதுகாப்புக் குறிப்பேட்டில் அந்த உள்நபர் இரவில் நுழைந்ததாகக் குறிப்பிருக்காது, அதனால் அது யார் என எளிதில் கண்டுபிடிக்கவும் இயலாது."
மேரி மறுத்தாள். "ஆனால் அந்த அவசரகாலக் கதவைத் திறந்தால் அபாய மணி மிகப் பலமாக ஒலித்திருக்குமே. அப்படி எதுவும் இரவில் நடந்ததாக எங்கள் தூரப் பாதுகாப்பு சேவையினர் கூறவில்லையே! அதைச் சமீபத்தில்தான் சோதனை செய்து திறந்தால் ஒலிக்கிறது என்று நிரூபித்தார்கள்; அவ்வாறு அவ்வப்போது சோதனை செய்வது வழக்கம்."
சூர்யா தலையாட்டி மறுத்தார். "சாதாரணமாக அப்படித்தான் மணி ஒலிக்கும். ஆனால் அந்த உள்நபருக்கு அதுவும் தெரிந்தே இருக்கும் அல்லவா? அதனால், அந்த அபாய மணி ஒலிக்காமல் இருக்க ஏதாவது முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும். சமீபத்தில் அந்த அபாய மணிச் சோதனை எப்போது நடந்தது?"
மேரி சற்று யோசித்துப் பதிலளித்தாள். "மூன்று வாரம் இருக்கலாம். ஏனெனில் எங்கள் நுட்பங்கள் அப்போது இன்னும் ஒழுங்காகத்தான் வேலை செய்து கொண்டிருந்தன; அதனால் இரண்டு வாரங்களுக்கு முன்னரே அந்தச் சோதனை நடந்திருக்க வேண்டும்."
சூர்யா தலையாட்டி ஆமோதித்தார். அப்படியானால் இந்த மூன்று வாரங்களுக்குள் யாரோ அதை ஒலிக்காதபடிச் செய்திருக்க வேண்டும். பொதுவாக அத்தகைய அபாய மணிகளை மௌனப்படுத்த ஒரு வழி இருக்கும். என் வீட்டிலும் அப்படிப்பட்ட வசதி உள்ளது. வாசல் பக்கம் காவலும் விடியோ கண்காணிப்பும் இருக்கக் கூடும் என்பதால் உள்நபரும் திருட்டுக்குப் பிறகு அதே வழியில் வெளியேறியிருப்பார். அதனால், அதை இப்போது சோதிப்பது நல்லது. நேற்று இரவுதான் இந்தத் திருட்டு நடந்திருப்பதால் அதை மீண்டும் ஒலிக்கச் செய்ய அவகாசம் இருந்திருக்காது.
மேரி வாய் பிளந்தாள்! "ஓ மை காட்! சூர்யா நீங்கள் கூறியபடியேதான் நடந்திருக்க வேண்டும்! இது எங்கள் பாதுகாவலர்களுக்கும் தோன்றவில்லையே. இப்போதே சோதிக்கலாம் வாருங்கள்" என்று அந்த அவசர வாசலுக்கு விரைந்தாள். நம் துப்பறியும் மூவரும் அவளைத் தொடர்ந்தனர்.
மேரி அந்தக் கதவின் உள்ளே இருந்த நீளமான உலோகக் கம்பத்தை அழுத்திக் கதவை வெளிப்பக்கம் தள்ளித் திறந்தாள். சூர்யா யூகித்தபடியே அபாய மணி ஒலிக்கவில்லை! மேரி சூர்யாவைப் பாராட்டினாள். "வாவ் சூர்யா, சரியாக யூகித்துவிட்டீர்களே, பிரமாதம்!"
சூர்யா மறுப்பாகத் தலையசைத்து, "இந்த யூகம் பலித்தது நமக்கு நல்லதல்ல. ஏனெனில் அந்த உள்நபர் யார் என்று எந்தக் குறிப்பேட்டிலும் காண முடியாது. இந்த அபாய மணியை ஒலிக்காமல் செய்தது எப்போது என்று வேண்டுமானால் உங்கள் தூரப் பாதுகாப்புச் சேவையின் குறிப்பேடுகளில் இருக்கலாம். ஆனால் அதுவும் நமக்கு உதவாது. ஏனெனில் அந்த உள்நபர் இந்த இடத்தில் வேலையில் இருக்கும் சமயத்தில் சாமர்த்தியமாக சில நொடிகளில் ஒதுக்குப் புறமாக இருக்கும் அபாய மணியின் இயக்க சாதனத்தில் ஒலிக்காதபடி மாற்றியிருப்பார். அதனால் அப்படிச் செய்தது யார் என்று சேவைக் குறிப்பேட்டிலிருந்து கண்டறிய இயலாது."
மேரி கவலையுடன், "அப்படியானால் என்னதான் செய்வது? எப்படித்தான் கண்டறிவது? வழியே இல்லையா!" என்றாள்.
கிரண் முந்திக் கொண்டு ஆறுதல் கூறினான். "அப்படியல்ல மேரி. நாம் தேடும் உள்நபரை அவ்வளவு எளிதாகக் குறிப்பேடுகளிலிருந்து பிடித்துவிட முடியாது என்றுதான் சூர்யா உணர்த்துகிறாரே தவிர கண்டறியவே முடியாது என்று கூறவில்லை. எப்போதும்போல் பல தரப்பட்ட விவரங்களையும் சேகரித்து அலசிய பின்புதான் கண்டறிய முடியும்."
சூர்யா தலையாட்டி ஆமோதித்தார். "சபாஷ் கிரண், சரியாகச் சொன்னாய்! அப்படித்தான் மேரி. நான் உங்கள் குழுவினரைச் சந்தித்துப் பேச வேண்டும். அதன் பின்பு நிலைமையை மீண்டும் பரிசீலிப்போம்."
மேரி பெருமூச்சுடன் "சரி அப்படியே செய்வோம் வாருங்கள்" என்றாள். சூர்யா குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேற்கொண்டு துப்பறிகிறார் என்பதை வரும் பகுதிகளில் காண்போம்!
(தொடரும்) |
|
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|