"ஏண்டா? பி.எஸ்ஸிங்கிறே! உனக்கு இது புரியலையா?"
"என்னதும்மா?"
"அடேயப்பா! போதி மரத்தடிப் புத்தன் மாதிரி என்ன பொறுமையா, கேக்கறான் பாரு. என்னதும்மாவாமே…"
"என்னதும்மான்னு கேட்டாலும் தப்பு. கேக்காட்டாலும் தப்பு...."
"ஆமாண்டா, அம்மா சண்டைக்காரி, உன்னைப் புடிச்சி நிறுத்தி வெச்சிக்கிட்டு அர்த்தம் கெட்டதனமா, சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறேன். இல்லையா?"
"நீ விஷயத்தைச் சொல்லும்மா..."
"இதோ பாரு! இமயவரம்பா! எல்லாம் உனக்குத் தெரிஞ்ச விஷயம் தான், தெரியாதவன் மாதிரி என்னையே கேட்டுக்கிட்டு நிக்காதே!"
"என் பிரெண்ட்ஸ் விஷயமா?"
"என்னடா அவ்வளவு அலட்சியமா சொல்லிட்டு உள்ளே போறே!"
"பின்னே என்னம்மா? அவங்களை ஏம்மா நீ இப்படி வெறுக்கறே? ஏழைகளாப் பொறக்குறது என்ன அவ்வளவு பெரிய பாவமா? அவங்களா இஷ்டப்பட்டா ஏழை வீட்டுலே பொறந்தாங்க. ஒருத்தன் ஒருத்தனும் என் மேலே உயிரையே வெச்சிருக்காங்க, குமரன் இருக்கானே அவன், போன மாசம் டூர் போயிருந்தமே. அப்ப நான் மயக்கம் போட்டு விழுத்துட்டேன்னு சொன்னேன் இல்லியா? அப்போ குமரன் என்னைத் தோள்லே தூக்கிப் போட்டுக்கிட்டு ரெண்டு மைல் தூரம் டாக்டர் வீடு தேடி ஓடியிருக்கிறான் தெரியுமா? மொழி தெரியாத ஊர். குமரனுக்கு என்ன தலையெழுத்தா? மத்தவங்களை மாதிரி, ரூம்லே போட்டுட்டுப் போயிருக்கலாம் இல்லியா? மருது இருக்கானே மருது. அவன் என்ன பண்ணான் தெரியுமா?"
"போதும் இமயா! நீ புராணம் அடுக்க வேண்டாம்."
"அய்யோ! அம்மா! இது புராணம் இல்லேம்மா! சத்தியம்"
"இதோ பாரு இமயா! உளக்கு இன்னும் உலகம் புரியலே. நீ பணக்கார வீட்டுப் பையன்னு உன்னை அவனுக சுத்திச் சுத்தி வரானுங்க. நீ என்னமோ பாசம்னு நினைச்சி ஏமாந்து போறே. இதோ பாரு, பரம்பரையா நல்ல பணக்கார வீட்டுலே பொறந்து வளர்ற பையன் இருக்கானே, அவன் குணம் அலாதியா இருக்கும். அவன்கிட்டே பெருந்தன்மை இருக்கும். அப்படிப்பட்டவன் நட்பைத் தேடிக்கோ, நான் என்ன வேண்டாம்னா சொல்றேன்? நீ என்னன்னா, எப்பப் பார்த்தாலும் இந்தப் பஞ்சைப் பராரிங்க, ஏழை, பாழைங்க இந்தச் சனியனுங்களையே இல்லே சுத்திச் சுத்தி வரே? அதுங்க கிட்டே ஒரு நல்ல நடத்தை இருக்குமா? நாகரிகம் இருக்குமா"
"ப்ளீஸ்மா! இதே வார்த்தையை வேற யாராவது சொல்லியிருந்தா, நான் சும்மா இருந்திருக்க மாட்டேன். வேற எந்தக் கொம்பனா இருந்தாலும் சரி... ஆனா…."
"அம்மாவா இருக்கிறதாலே பொறுத்துக்கிட்டீங்களோ? போடா! புத்தி கெட்டவனே! அததுக்கு ஒரு தரம் உண்டுடா. செருப்பை எங்கே விடணும், குடையை எங்கே வைக்கணும், வைரத்தை எங்கே வைக்கணூம்னு ஒரு நியதி இல்லையா? ஓட்டை சைக்கிளிலே ஏறி வந்துடறானுங்க ஒருத்தொருத்தனும். தோள்மேலே கை போட்டுக்கிட்டு, ஹால்லே கூப்பிட்டு ஒக்கார வைச்சிக்கிறே."
"ம்… என்னம்மா நீ… நம்ம வீட்டுலே ஹால்லே தானேம்மா ஒக்கார வெக்கிறேன். அவனுங்க தங்களோட மனசுலியே சிம்மாசனம் போட்டு என்னை ஒக்கார வெச்சிருக்காங்கம்மா, அதை நீ புரிஞ்சுக்கணும்."
"சினிமாவுக்குக் கதைவசனம் எழுதறப்போ இப்படி எல்லாம் எழுது – இதயச் சிம்மாசனம் அது, இதுன்னு… ஆடியன்ஸ் கை தட்டுவான். கேட்டுக்கோ இமயா! உன் ஃப்ரெண்ட்ஸ வச்சுத்தான்டா ஒன்ன மதிப்பாங்க, கண்ட கழுதைங்களோட நீ சுத்திக்கிட்டிருந்தா ஒரு அந்தஸ்து இருக்குமா?"
"அந்தஸ்து.. அந்தஸ்து.. அந்தஸ்து.. சே.. நீ என்னம்மா மனுஷ ஜன்மம்தானா? ஒரு மனிதாபிமானம் இருந்தா இப்படி எல்லாம் பேசுவியா? பணக்காரன் வீட்டுப் பையனா இருந்தா அவன் வைரமா, வைடூரியமா ஜொலிப்பானா என்ன? அப்படியே ஒரு மாணிக்கமாவா அவன் இந்த மண்ணுல வாழ்ந்துக்கிட்டிருப்பான்? ஏன் நீ அப்படி நினைக்கற? எத்தனை பணக்கார வீட்டுப் பசங்க தெருப் பொறுக்கிங்களா அலைஞ்சிக்கிட்டு இருக்காங்க தெரியுமா?
"ஆமாமா.. ஏழைப் பசங்க நோபல் பரிசா வாங்கிக் குவிக்குறானுங்க. இவனுங்கதான் தெருப் பொறுக்கிகளா அலைஞ்சிக்கிட்டு இருக்கானுங்க. இவன்தான் கண்டான். அடேய் இமய வரம்பா! ஒண்ணைப் புரிஞ்சிக்கோ, சைகாலஜிப்படி அவனுங்களுக்கு – அதான் அந்த ஏழைப் பசங்களுக்கு - பணக்காரங்களைக் கண்டா ஒரு வெறுப்பு இருக்கும். ஒரு வெறி இருக்கும். குழி தோண்டிப் புதைச்சிட ஒரு ‘சான்ஸ்' பாத்துக்கிட்டே தாண்டா இருப்பாங்க. அதுமட்டும் நிச்சயம்…."
இமயவரம்பன் சலிப்புடன் நகர்ந்தான். அம்மாவின் எண்ணத்தை மாற்றவே முடியாது. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பவள், பரம்பரைப் பணக்காரி. காரும், பங்களாவும் ஏ.சி.யுமாகப் பிறந்தவள். அந்த ஆணவம் அவள் உடல் முழுக்க இரத்தத்தோடு கலந்திருந்தது. கண்ணால் அவள் ஏழையைப் பார்ப்பதே, ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாத கொடிய அனுபவமாக அந்த ஏழைக்கு அமைந்துவிடும். அப்படித்தானே தன்னைத் தேடிவந்த நண்பனின் தாயை அவமதித்து அனுப்பினாள்? சே! என்ன பெண்மணியோ!
"என்ன இமயவரம்பா? காலேஜுக்குக் கிளம்பலை?"
"கிளம்பணும்ப்பா..."
"ஏம்ப்பா ஒரு மாதிரி இருக்கே? அம்மா என்னவாவது சொன்னாளா?"
"என்னப்பா பின்னே? எந்த நேரமும் என் ஃபிரெண்ட்ஸ் பத்தியேவா பேச்சு? சே! என்னப்பா? நீங்க எவ்வளவு பெரிய ஃபேக்டரி வெச்சி நடத்தறீங்க. உங்க அனுபவத்துலே எவ்வளவு பாத்திருப்பீங்க. ஏழைங்கன்னா அவங்க கெட்டவங்களாத்தான் இருக்கணும்னு ஏதாவது "டெஃபனிஷன்" இருக்கா என்ன? சொல்லுங்க. பணக்காரப் பயல்ன்னா அவனுங்களோட நான் பழகலாமாம். ஏன்னா, என் மரியாதை ஒசந்திடுமாம். நாலாங்கிளாஸ் படிக்கிற பையன்கூட இதெல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்க மாட்டான். ஆமாம்..."
அப்பா ஆதரவாக இமயன் தோளைப் பற்றிக் கொண்டார். வார்த்தைகள் தராத ஆறுதலை, விரல்களின் வருடல்கள் தந்து நின்றன. பொதுவாக, 'அப்பாவுக்கும், மகனுக்கும்தான் ஒத்துக் கொள்ளாது' என்பார்கள். அம்மாதான் பாலமாக இருப்பாள். இமயன் சிரித்துக் கொண்டான்... அப்பாவின் முகத்தை ஆதரவாகப் பார்த்துச் சிரித்தான்.
"கிடக்கட்டும். விடுடா கண்ணா. சிலர் குணம் அப்படி. அவங்களை யாருமே மாத்த முடியாது. ஒங்கம்மாவுக்கு அந்தப் பணக்காரத் திமிர் கொஞ்சம் அதிகம்தான். அடேயப்பா. இன்னிக்கு நேத்தா? வீணா ஏன் சண்டை போடறே?"
இமயனுக்கு மனம் சமாதானம் அடையவில்லை. குமரன், மருது வீடுகளில் எதையாவது சாப்பிடக் கொடுக்காமல் அனுப்பவே மாட்டார்கள். தங்கள் வீட்டு மைதா மாவுத் தோசையை அவன் சாப்பிடுவானா என்கிற தயக்கத்தில் குமரன் அம்மா தயங்குவார்கள், இமயன் ஆசையாக சமையற்கட்டிலேயே உட்கார்ந்து கொண்டு, குமரனோடு சேர்ந்து நான்கு தோசையை உள்ளே தள்ளிவிட்டுத்தான் வருவான். அவர்கள் வீடுகளில் எல்லாம் என்ன மாதிரியான விருந்தோம்பல்? எப்படிப்பட்ட பாசம்… வார்த்தைகள்…?
இமயன் அம்மாவைப் போலவா? கதவைக்கூடத் திறக்கமாட்டாள் மகராசி...
"ஆங்… இமயன் வெளியிலே போயிருக்கிறான். வந்தா சொல்றேன்." அவ்வளவுதான். அடுத்த வார்த்தையை வாய் உதிர்க்க லட்சம் பொன் கொடுத்தாக வேண்டும்.
இமயன் நண்பர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால் கூடுமானவரை வீட்டுக்கு வந்து. இமயனுக்குச் சுடுசொல் தேடித் தருவ நில்லை. ஆனால், இமயனுக்குத்தான் ஏக்கமமாக இருக்கும். நண்பர்களை அழைத்து உபசரிக்க வேண்டும் என்று. ஹூம், இந்தப் பிறவியில் அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கவில்லை.
அம்மா என்றால் 'பாசம்' என்பது மாறி அம்மா என்றால் 'ஆணவம்' என்று அகராதியில் குறிக்கத்தக்க விதமாய் இவள் இப்படி நடத்து கொள்கிறாளே! இமயனுக்கு ஆத்திரத்தில் வீட்டைவிட்டு ஓடி விடலாமா என்று இருந்தது.
★★★★★
"என்னக்கா, இங்கே வந்தும், உன் புள்ளை ஞாபகமா?"
டாக்டர் மாணிக்கவாசகம் தமக்கை மரகதவல்லியைப் பார்த்துச் சிரித்தார்.
மரகதவல்லி எதும் பேசவில்லை.
"க்கும்... இவன் ரொம்ப யோக்கியனா? சித்தி, சித்தப்பா அந்த நாள்லே எப்படி வருத்தப்படுவாங்க? இவனும் இமயவரம்பன் மாதிரி தானே அப்போ ஆடுவான்? பண்ணையிலே வேலை பாக்கறவன் வீட்டுக்கெல்லாம் போயிடுவானே..." - எரிச்சலுடன் தன் சித்தப்பா மகனைப் பார்த்தாள்.
"என்ன அப்படிப் பாக்கறே! பழைய ஞாபகமா? மலரும் நினைவுகளா?"
"வெரி குட்.. என்ன அப்படித் தப்புப் பண்ணிட்டான் இமயன்? ஏழைங்க கிட்டே பாசமா இருக்கான். அவள் நண்பர்கள் எல்லாருமே சாதாரண வீட்டுப் பசங்க இதுலே என்ன தப்பு கண்டுட்டே நீ?"
"உன் வேலையைப் பாத்துக்கிட்டுப் போ! நான் ஒண்ணும் இப்போ உன்கிட்டே நியாயம் கேக்கலை! வந்துட்டான்!"
"என்ன நீ வந்துட்டான், போயிட்டான்னு எல்லாம் பேசறே. நான் என்ன சின்னப் பையனா? வயசு நாப்பத்தி ரெண்டு. காதோரம் பாத்தியா.. நரைச்சிப் போயிட்டுது. அப்படின்னா நான் யாரு? பெரிய மனுஷன்! ஒரு டாக்டர்..."
"ஆமாண்டா! ஒனக்குக் காதோரம் நரைச்சா மட்டும்தான்டா பெரிய மனுஷன்னு ஒலகம் ஒத்துக்கும், மாமன்காரனா அவனைக் கண்டிப்பேன்னு பார்த்தா?"
"யக்கா… நீ இன்னாவோ பழைய ஞாபகத்திலியே கீரே! இன்னா பெரிய்ய அந்தஸ்து!? அட நீ யாரு? உன்னையே ஓங்க நயினா.. அதான் என் பெரிய நயினா தவிட்டுக்கு வாங்கினார்னு ஊரே பேசிக்குது! ஹக்காங்! அய்யே! இன்னான்ற நீயி…!"
"சனியன்! ஒரு டாக்டராட்டமாவா நீ பேசறே"
"ஹை! அப்பா… அப்பா.. லூஸ் மோகன் மாதிரியே இருக்குதுப்பா! பேசுங்கப்பா! ப்ளீஸ்ப்பா!"
"டேய்! ஓடுங்க! ஓடுங்க! கோவளம் பீச்சுக்குக் குளிக்கலாம்னுதானே வந்தீங்க போங்கடா! அத்தை வேற கோபமா இருக்காங்க..."
மாணிக்கவாசகத்தின் மனைவி லட்சுமியும், குழந்தைகளும் சிரித்தபடியே நகர்ந்தார்கள்.
மரகதவல்லிக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. "எல்லாருக்கும் என் பேச்சு சிரிப்பா இருக்குது. என்னைப் பார்க்கக் கிண்டலா இருக்குது. நான் சொல்றதிலே நியாயம் இல்லையா? அத ஏன் இவனுங்க கவனிக்க மாட்டேங்கறானுங்க?.."
மனசுக்குள் சொல்லிச் சொல்லிப் பொருமினாள். மெல்ல நடந்து ஒரு பாறைமீது உட்கார்ந்து கொண்டாள், கோவளம் பீச் அமைதியாக இருந்தது. மாணிக்கவாசகம் கூட கட்டாயமாக மாதத்திற்கு ஒரு முறையாவது வந்து விடுகிறாள்.
இப்படி வந்தால்தான் மனத்திற்கு ஒரு மாறுதல். இல்லையென்றால் அப்படியே கிடக்க வேண்டியதுதான்.
அலைகளும், மேகங்களும் கரையோரம் நடைபோடும் பழலைகளும் பார்க்கப் பார்க்க சொல்ல முடியாத ஒரு நிம்மதி மனத்துக்குள் பரவுவது தெரிந்தது.
இமயனும் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவன்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டானே! காரிலிருந்து சிப்ஸ், வேர்க்கடலை, உப்புக் கடலை, பிஸ்கட்ஸ் எடுத்துக்கொண்டு மாணிக்கவாசகமும். லட்சுமியும் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
மூன்று சிறுவர்கன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிழிந்து போன டிராயரின் பின் பகுதி பெரும் பாகம் காணாமல் போயிருந்தது.
என்ன, ஏழெட்டு வயதிருக்கலாம். பற்களின் வெண்மையில் அவர்களின் கறுப்பு இன்னும் கறுப்பாகத் தெரிந்தது. எண்ணெய் என்பதை எப்படியும் அந்தத் தலை பிறந்ததிலிருந்தே பார்த்திராது என்பது ஒரே பார்வையில் புரிந்தது.
மாணிக்கவாசகம் மூன்று பேரையும் அருகில் அழைத்தான். ஆளுக்கு ஒரு பிடி வேர்க்கடலையை அள்ளிக் கொடுத்தான். அதுதான் போகட்டும். கொடுத்தோமா, அனுப்பினோமா என்று விட வேண்டியதுதானே! அவர்களையும் உட்கார வைத்துக் கொண்டான் கூடவே...
பாறையிலிருந்து பார்க்க மரகதவல்லிக்குத் தெளிவாகத் தெரிந்தது... "ம்.. இவன் எல்லாம் ஒரு டாக்டர்! கோவளம் பீச்சில் இப்படிக் கடலைக்குக் கையேந்துகிற பையன்களுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே! பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்?"
"என்னடா அது கையிலே"
"இதுவா? இது மீனு..."
"டேய் கிளிஞ்சல், சோழியைப் போய் மீனுங்கறே!"
"இல்லே சார்! மீனுதான். வேக வெச்சா நல்லா இருக்கும்.".
"ஆமாம், பள்ளிக்கூடம் போறீங்களாடா?"
"நான் மட்டும்தான் சார் போறேன்.."
"இவனுங்கள்ளாம்.."
"இவனுங்கள்ளாம் படிக்கப் போவலை. இதோ கீரானே! செம்பட்டை! இவன் அடுத்த வருஷம் படிக்கப்போறான்"
"அது சரிடா.. உங்களிலே யார் யார் வீட்டுலே எல்லாம் சாராயம் காச்சறீங்க?"
"இதோ! இவன் வூட்டுலே சார். இவங்கப்பா காச்சுறார்."
"ச்சீ.. எங்கப்பா ஒண்ணும் காச்சல. விக்கிறாரு. அவ்வளவுதான்!"
"அது சரி சாரு. நீ ஏன் இதையெல்லாம் கேக்கறே"
"நான் போலீசுடா..."
பையன்கள் "கெக்கெக்கெக்" என்று சிரித்துக் கொண்டார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்
"பார்ரா... இவரு போலீசாம்.. அய்யே.."
"ஏண்டா பசங்களா சிரிக்கறீங்க. நான் போலீஸ் தான்டா"
"போ சாரு. போலீசு ஒதை தவிர வேற எதையும் கொடுக்காதே"
பையன்களின் விளக்கம் கேட்டு மாணிக்கவாசகம், 'ஹோஹோஹோ' என்று உரக்கச் சத்தமிட்டுச் சிரித்தான்
"அக்கா கேக்குதாக்கா உனக்கு"
"எல்லாம் கேக்குது..."
சே! என்ன இவன் இப்படி ஆடுகிறான்? இவன் வயசென்ன? வேலை என்ன?
மாணிக்கவாசகம் அந்தப் பையன்களைப் புன்முறுவலுடன் பார்த்தான். அவர்களும், அவனைத் தோழமையுடன் பார்த்தார்கள்,
"சரிடா! நீ தானே சொன்னே ஓங்கப்பா இது விக்கிறாருன்று. போயி ஒரு "கிளாஸ் எடுத்துக்கிட்டு வா."
"அய்யய்யோ!. அப்பன் என் பெண்டை நிமித்திடும்"
""போடா சரிதான். போயி எடுத்தாடான்னா..."
மரகதவல்லிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. விறகுக் கட்டையால் தன் தம்பி மாணிக்கவாசகம் மண்டையை ஒரே போடாகப் போட்டுப் பிளந்து விடலாம் போல் இருந்தது. பேச்சைப் யாரேன் பேச்சை….
"ஏண்டா பசங்களா? வெளிநாட்டுக்காரருங்க நிறையபேர் வருங்களா?"
"ஓ. நெறய."
"நீங்க எப்படிடா அவங்க கிட்டே பேசுவீங்க?"
"கையக் கைய நீட்டி 'சார்.. சார்'னு கத்துவோம். பிச்சைக்குப் பேச்சு என்னாத்துக்கு?"
"ஏண்டா இது அசிங்கமாயில்லியா"
"வேலை கேட்டா யார் சார் குடுக்கறாங்க? அப்புறம் இன்னாதான் பண்றது?"
மாணிக்கவாசகம் பச்சாதாபத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டவனாய், ஒரு பொட்டலத்தைப் பிரித்து, உப்புக் கடலை எடுத்துக் கொடுத்தான்.
"இன்னா சார்! மொத தடவையே நிறைய குடுத்தே! இப்போ இவ்ளோ தானா? கொட்டு சார்.."
சுற்றிலும் அமர்ந்திருப்பவர்கள் யாரையும் அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பிச்சையெடுக்கவும் போகவில்லை. தங்களை மதித்து இவ்வளவு பேசுகிற சினேகிதக்காரரை விட்டு விட்டு அப்படிப் போனால் மரியாதையாகுமா?
"ஏண்டா பையா! நீ மட்டும் கைலே அப்படியே வெச்சிருக்கே கடலையை"
"அது சார் வந்து"
இன்னும் சின்னவன் ஒருவன் - இன்னும் கிழிந்த துணியை உடுத்தியிருந்தவன் - வடக்கத்திக் கும்பலில் கையேந்தி விட்டு, இவர்கள் பக்கம் வந்தான்.
"தோ வரான் பாருங்க! அவன் பேருதான் சார் கண்டெலி! இதோ இவன் தம்பி... அதான் அவன் தம்பிக்குன்னு கடலை வெச்சிக்கினு இருக்கிறான்.."
கடலையைக் கையில் வைத்துக் கொண்டிருந்தவன் தம்பியைப் பரிவுடன் அழைத்தான்.
அவன் புதுப்பெண் போல நாணத்துடன் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
மாணிக்கவாசகம்தான் பேச்சை ஆரம்பித்தான்.
"என்னடா கொடுத்தாங்க அவங்க"
"இதோ! காராபூந்தி.."
பிஞ்சு கைக்குள் கொஞ்சம் போல காராபூந்தி.
"ஏண்டா சண்டெலி! நாங்கள்லாம் வேர்க்கடலை சாப்பிட்டமே. சார் குடுத்தாரே!"
"ஏண்டா சுண்டெலி… எனக்குடா காராபூந்தி"
மாணிக்கவாசகம் சிரித்துக் கொண்டே கேட்டான். மரகதவல்லிக்கு ஆத்திரமான ஆத்திரம், பீச்சுக்கு வந்தும் பிரச்சினை ஒழியவில்லையே!
இவன் போய் ஒரு பிச்சைக்காரப் பையனிடம் கேட்பதா? அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
"ஏண்டா! எனக்குக் கிடையாதா?"
மாணிக்கவாசகம் விளையாட்டாகத்தான் கேட்டான், அந்தச் சிறுவன் தன் கையில் இருந்ததை அப்படியே கொடுக்க எழுத்தான்.
"வெளையாட்டில்லேடா? நிசமாத்தான் கேக்கறேன்..."
அந்தக் குழந்தையின் முகத்தில் புன்னகை மாறவில்லை. சின்னஞ்சிறு கையில் இருந்ததை அப்படியே தர முன்வந்தான்.
மரகதவல்லியின் சிடுசிடுப்பு ஸ்விட்சைத் தட்டியதும் இருள் ஓடுவதைப் போல மறைந்தது. மானுடத்தின் விசுவரூப தரிசனத்தைக் கண்ட அதிர்ச்சியில் அவள் பாறைமீது இன்னும் ஒரு பாறையாக உட்கார்ந்திருந்தாள்.
மிஞ்சிமிஞ்சிப் போனால் ஆறு வயதிருக்குமா இந்தக் குழந்தைக்கு? இந்தக் குழந்தைக்கு - இந்தப் பிச்சைக்காரக் குழந்தைக்கு - இப்படி ஒரு வள்ளல் மனதா?
லேடீஸ் கிளப் பிரசிடெண்ட் வீட்டில் போன வாரம் நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. 'ஒரு மிட்டாய்கூட தரமாட்டேன்' என்று அடம் பிடித்தானே அவர்கள் வீட்டுப் பேரன் - அந்த நிகழ்ச்சி இப்போது ஞாபகத்துக்கு வந்தது.
பார்க்கப் பார்க்க, இந்தச் சிறுவன் உயரமாகிக் கொண்டே போனான், அவன் அளித்த விசுவரூப தரிசனத்தின் முன்னால், மரகதவல்லி சிறுத்துச் சிறுத்துச் கடுகு போலானாள்.
சட்டையில்லாத அந்த அழுக்குப் பையன் இப்போது மிக அழகாகத் தெரிந்தான். மாலை வெயிலின் மஞ்சள் நிறம் அவனுக்குப் புதுச்சோபையை அளித்தது.
மரகதவல்லி பிரமித்து நின்றாள். பிச்சை எடுக்கிற பையன்தான். ஆனாலும் என்ன? ஒரு விதமான தயக்கமும் இல்லாமல் எடுத்து நீட்டுகிற பரந்துபட்ட மனம் இருக்கிறதே! இவனா பிச்சைக்காரன்?
முதல் முறையாக யோசிக்க ஆரம்பித்தாள். இப்படித்தான் ஒவ்வொருவனிடமும் நல்ல குணம் இருக்குமா? பார்க்கத் தவறியது யார் குற்றம்?
இத்தனை கஷ்டத்திலும் தம்பிக்கு என்று பங்கு எடுத்து வைத்திருக்கும் சிறுவன் – குழந்தைத்தனமான குதூலகத்துடன், பாசத்துடன் ஒட்டிக் கொண்டு விட்ட மற்றுச் சிறுவர்கள்-
மரகதவல்லி பாறையிலிருந்து இறங்கி வந்து அந்தச் சிறுவர்களை அப்படியே அணைத்துக் கொண்டாள், குட்டிப் பையன்கள் திகைத்துப் போனார்கள்.
"எனக்குடா?" கையை நீட்டினாள். அந்தக் குழந்தை அதே புன்முறுவலுடன் கையை நீட்டிக் கொடுக்க வந்தது. அவனை வாரி அணைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள் மரகதவல்லி.
ஆணவம், அகங்காரம் கரைந்து அங்கே கருணை ஈரம் கட்டுவதைக் கண்டார். டாக்டர் மாணிக்கவாசகம். |