ஆடி மாதம். பதினெட்டாம் பெருக்குக்கு முதல் நாள் சாயந்திரம். மேற்கே தேவாசுர யுத்தத்திற்கு அணிவகுத்தது போல், வரிசை வரிசையாய் நிமிர்ந்தெழும் மேகங்கள்; ஆகாயத்தில் யுத்த ஸன்னாஹம், பூமியின் மீது ஒரு கபடமான அமைதி.
தாவி வருகின்ற இருட்டில், மறையூர் வீரட்டானாறு இருகரையும் புரண்டு சீறிப் பயங்கரமாய் ஓடிற்று. நாணல் படர்ந்த கரையிலே மூங்கில் பாலத்தின் அருகே, இரண்டு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
"தாத்தா, எப்படி இருண்டுக்கிட்டு வருகுது பாரேன்! போன வருச மாதிரி இந்த வருசமும் யாரையோ பலியில்லை வாங்கக் காத்திருக்கு இந்த ஆறு! என்ன சுழிப்பு, என்ன கொந்தளிப்பு! கிழிச்சுக்கிட்டில்லை ஓடுது" என்றான் மத்திய வயதுள்ள ஒருவன்.
"கறுப்பா, பலிவாங்காமே என்ன பண்ணும்? அதோ இருக்காரே சாமி வீரன், அவருக்குச் செய்ய வேண்டிய திருவிழா, படைப்பு எல்லாம் நின்னு போயிட்டுது. அவருக்கு விட்ட மானிய நிலங்களிலுள்ள வருமானத்தையெல்லாம் ஊர்ப் பட்டாமணியக்காரரும், கணக்குப்பிள்ளையும் சேர்ந்து சாப்பிடுகிறாக. நாலு வருசத்திற்கு முந்தி இந்த மாதிரியான சாவு இங்கே உண்டா? எனக்கு எழுபது ஆகப்போவுது; இதுவரையில் இது மாதிரி சேதி காதிலேகூட விழுந்ததில்லை. கலி முத்துது. போன வருசம் பட்டாமணியக்காரர் அருமந்த மகன் தவறிட்டான், தெரியுமா? பண்ணுகிற அக்கிரமத்துக்குக் கைமேலே பலன் கிடைச்சுடுது" என்று தழுதழுத்த குரலில் மறுமொழி கூறினான் மற்றவன்.
"உங்க மகன் போன வருசம் இறந்தானே; நீங்க ஏதாகிலும் தப்புத் தண்டாவுக்குப் போறீங்களா? இந்தத் தள்ளாத வயசில எங்களோடே சேர்ந்து களை பிடுங்கிறீங்க, உழுறீங்க, ஏதோ உழைச்சுச் சாப்பிடுறீங்க. அடுத்த ஊர்ப் பட்டாமணியக்காரர் பண்ணுகிற அக்கிரமங்கள் கணக்கு வழக்கில்லை; ஆனால் வருசத்திலே ஒரு பிள்ளை உண்டாகுது. நிலத்துக்கு நிலம் சேருது. அதுக்கென்ன சொல்றீங்க?" என்று கேட்டான் கறுப்பன்.
இந்த வார்த்தைகள் கிழவனுடைய ஞாபகங்களைத் தட்டியெழுப்பின. ஒன்றன்பின் ஒன்றாக அவை அவன் மனத்தில் எழுந்தன. உழுத நிலம்போல் பள்ளங்குழிகள் விழுந்த அவன் முகத்தில் கண்ணீர் அருவி பாய்ந்தது.
"இந்த ஜன்மத்திலே நான் ஒரு பாவத்தையும் அறியேன். முன்னே ஏதானும் செய்திருப்பேன். அதனுடைய பலன் இது. சும்மா நடக்குமா, அப்பா? அவன் இருந்தால் எனக்கு எவ்வளவோ உதவியாயிருக்கும். வீட்டிலே சும்மா குந்திக்கிட்டிருப்பேன். என் வினை, மண்டையைப் போடுகிற நாள் வரையில் உழைச்சுச் சாப்பிடணும். உன்னைப் பார்க்கிற போதெல்லாம் என் மகன் ஞாபகம் வருது" என்று தொண்டையடைக்க மொழிந்தான் முதியவன்.
"தாத்தா, மன்னிக்கணும். வாய் தவறி இறந்துபோன உங்க மகன் பேச்சை எடுத்து விட்டேன். ஆறி வருகிற புண்ணைக் கீறி விட்டேனுங்க. வீட்டுக்குப் போவோமா? மழை குமுறிக்கொண்டு வருகுது. நம்ம வீடுகள் ஊத்தற இந்த மழையிலே என்ன ஆகுமோ? பயமாயிருக்குது" என்று இறங்கிப் பேசினான் கறுப்பன்.
"வீரன் காப்பாத்துவான். கவலைப்படாதே, தம்பி. பாலம் ஓரத்தில் முறிஞ்சிருக்குது. வீரப்பனே! நீதான் காப்பாத்த வேணும் இங்கே வருகிற ஏழை ஜனங்களை" என்றான் கிழவன், கோயிலிருந்த திசை நோக்கிக் கைதொழுதபடி.
கறுப்பன் முன் செல்லக் கிழவன் சிந்தையில் ஆழ்ந்தவனாய் மெள்ள வீட்டை நோக்கி நடந்தான்.
★★★★★
அதே சமயத்தில் மறையூர்க் கிராமத்தில் ஒரு வீட்டில் தாயும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
"அம்மா, என்னை நாளைக்கு ஊருக்கு அனுப்பிவிடு. இங்கே வந்து இரண்டு மாசத்திற்கு மேலாச்சு. என் ஆத்துக்காரருக்குச் சரியான உடம்பில்லை. மாமியார் கோபித்துக் கொள்ளுவார். அவருக்கும் தள்ளாத உடம்பு. அவர் முன்னைக் காட்டிலும் என்னிடத்தில் பிரீதியாயிருக்கிறார். இருந்தாலும் பிறந்தகத்தில் ரொம்ப நாள் உட்கார்ந்தால் யாருக்குத்தான் கோபம் வராது?"
"என்ன சுவர்ணம், நீ வருஷத்திற்கு வருஷம் இங்கே வருகிறாயா? ஒவ்வொரு வருஷமும் டில்லியிலிருந்து வரத்தான் முடியுமா? உன்னைப் பார்த்து வருஷம் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டன. நாளைக்குப் பதினெட்டாம் பெருக்கு: கிட்டு வந்துடுவான். நீங்கள் மூன்று பேரும் வேடிக்கையாய் ஆற்றங்கரையில் உட்கார்ந்து சாப்பிடலாம். அவன்தான் - உனக்குத் தெரியுமே - உன் மாமா ஆத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறான். நீ பார்ப்பதற்குத்தான் அவனை அழைத்து வர பாலுவை அனுப்பினேன். இன்றைக்குக் கடுதாசி வந்திருக்கிறதே; நீதான் பிரித்துப் பார்த்தாயே."
"ஏனம்மா, பாலுவுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை? எம்.ஏ. பாஸ் பண்ணி இரண்டு வருஷத்திற்கு மேல் இருக்கும்போல் இருக்கிறதே. என் அகத்துக்காரரிடம் சொல்லி அங்கே ஏதேனும் வேலை பண்ணிவைக்கச் சொல்லுகிறேன். தூரத்தைப் பார்த்தால் முடியுமா? இந்தப் பக்கத்தில்தான் கிடைக்கவில்லையே."
"அவனுந்தான், அத்திம்பேரிடம் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறான். ஏதோ டைப்பாம், அதைக் கற்றுக் கொண்டிருக்கிறான். என்னவோ குறுக்கெழுத்தாமே, அதுவுந்தான் கற்றுக் கொள்கிறான். எல்லாவற்றிற்கும் வேளையும் பொழுதும் வரவேண்டாமா! உன் தம்பியையும் உன்னோடு அனுப்பிவிட்டால் தனியாய் நான் என்ன பண்ணுகிறது?"
"வீட்டை யாரையாவது பார்த்துக் கொள்ளச் சொல்லுகிறது, நிலத்தைக் குத்தகைக்கு விடுகிறது, நீயும் அங்கே வந்து விடுகிறது."
"சொல்லுகிறதெல்லாம் சரிதான். இன்னும் ஒரு வருஷம் பார்க்கிறேன். அப்படி ஒன்றும் கிடைக்காது போனால் அங்கேயே வந்துவிட்டால் போச்சு."
"அம்மா! கிட்டு சமத்தாயிருக்கிறானோ? முன்னெல்லாம் ரொம்பக் குறும்பு பண்ணுவானே. மரத்தில் ஏறுகிறது, தூணில் தாவுகிறது, இவையெல்லாம் விட்டுவிட்டானோ இல்லையோ?"
"இப்பொழுதுதான் நீ கிட்டுவைப் பார்க்கவேணும். குறும்பெல்லாம் இருந்தவிடம் தெரியவில்லை. கிளாஸிலே முதல் மார்க்கு வாங்குகிறான் என்று உன் மாமாகூட எழுதியிருக்கிறான். பாலுவும் இப்படித்தான் இருந்தான். அவன் பேசுகிற சோடு உனக்கு இப்பொழுது தெரிகிறதா? எல்லாம் வயசானால் சரியாய்ப் போய்விடும்."
"அம்மா, மழை பெய்யும்போல் இருக்கிறதே. மழையிலே நனையாமல் வரவேணுமே பாலுவும் கிட்டுவும்."
"அதுகூட எனக்குப் பயமில்லை. மூங்கில் பாலத்திலே வராமல் பெரிய பாலம் சுற்றிவந்தால் பாதகமில்லை. அதுதான் பாலு போயிருக்கிறானே, அவனுக்குத் தெரியாதா? இருந்தாலும் சௌக்கியமாக வந்தால் இந்த ஊர் அனுமாருக்கு வடைமாலை சாத்துவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்."
"இந்த ஊர் அனுமார் ரொம்ப வரப்பிரசாதியாமோ? நானும் சந்தனக் காப்புச் சாத்துவதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஆத்துக்காரருக்குத்தான் ஏதேனும் பீடித்துக் கொண்டே இருக்கிறதே."
"உங்கள் அப்பா இருக்கிறவரையில் அந்த அனுமாரைத்தான் நம்பியிருந்தார். அவருள்ள வரையில் ஒரு குறையும் வரவில்லை. நீங்களெல்லாம் சௌக்கியமா இருக்கிறதை அவர் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை" என்று சொல்லிக் கொண்டே கண்ணீர் உகுத்தாள் அப்பெண்ணின் தாய்.
வீட்டுக் காரியம் சீக்கிரமாக ஆகிவிட்டதால், படுக்கையில் படுத்துக்கொண்டே அவர்கள் அநேக ஆயிரம் விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மழை வேகமாய்ப் பெய்யத் தொடங்கிற்று. இடியும் மின்னலும் மும்முரமாயிருந்தன. ஏதோ இவர்கள் சம்பாஷித்தார்களே யொழிய இவர்கள் சிந்தையெல்லாம் பாலுவினிடத்திலும் கிட்டுவினிடத்திலுந்தான் இருந்தது.
★★★★★
இரவு சுமார் எட்டு மணியிருக்கும்; மழை சற்று நின்றது. ஆனால் காற்று நின்றபாடில்லை. ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
வீரட்டான் ஆற்றங்கரைக்கு இக்கரையிலுள்ள வாதவனூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் இருவர் உட்கார்ந்திருந்தார்கள்.
"மழை சற்று நின்றிருக்கிறது. இப்பொழுது கிளம்பலாமா? கிட்டு."
"ஆமாம். கிளம்புவோமே. பாலத்தைச் சுற்றிக்கொண்டு போக வேண்டாம். மூங்கில் பாலத்தின் வழியாகப் போய்விடுவோமே" என்று மொழிந்தான் கிட்டு.
"மழையும் காற்றுமாயிருக்கிறது. மூங்கில் பாலம் என்னவாயிருக்குமோ? இராத்திரி வேண்டுமென்றால் இங்கே தங்கிவிட்டால் போச்சு; மாமா கொடுத்த பக்ஷணத்தைச் சாப்பிடுகிறது. இங்கேயே இருந்துவிடுவோம். பலபலவென்று பொழுது விடிகிற சமயம் ஊருக்குக் கிளம்புவோம். போகிறதாயிருந்தால் பெரிய பாலத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகவேண்டும்" என்றான் பாலு.
"இந்த வாதவனூரில் இராத்திரியிலே தங்கினால் அம்மா, அக்கா கவலைப்படுவார்கள். இப்பொழுதே கிளம்பிவிடுவோம். ஆற்றுக்கு அக்கரைதானே நம்ம ஊர்? மூக்கை இப்படித் தொடுவானேன்?" என்று பதில் கூறினான் கிட்டு.
விதியின் வசமோ, அல்லது புத்தியில்லாத்தனமோ கிட்டுவுக்கு இணங்கிவிட்டான் பாலு.
மின்னல் வெளிச்சத்தில் துழாவிக்கொண்டே மூங்கில் பாலத்திற்கு வந்தார்கள். கிட்டு முன்னால் பாலத்தின்மேல் காலை வைத்தான்.
"ஜாக்கிரதையாகப் போ; பதற்றம் வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கிட்டு வேகமாய் நடந்தான்.
திடீரெனத் 'தொப்'பென்ற சப்தம் கேட்டது. "ஐயோ பாலு, அம்மா! போறேனே" என்ற கூச்சல் எழுந்ததோ இல்லையோ, பாலு தண்ணீரில் குதித்தான். தம்பியை வெள்ளம் அடித்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தது. அவன் முழுகவில்லை; நீந்துகிறான். பாலு அவனைப் பின்தொடர்கிறான். தம்பி தலை தெரிகிறது. தமையனால் காப்பாற்ற முடியவில்லை.
மறையூர்ப் படித்துறை தென்பட்டதும் பாலுவுக்கு மார்பு 'பக்பக்'கென்று அடித்தது. அவ்வூர்த் துறைக்குப் பக்கத்தில் ஒரு மதகு. அதன் அருகில் ஒரு பெருஞ்சுழல் பகாசுரன் மாதிரி ஆவென்று வாயைத் திறந்து கொண்டிருந்தது. அந்தச் சுழலில் கிட்டு அகப்பட்டுவிட்டான். அது அப்படியே அவனை உள்ளே இழுத்துவிட்டது. பாலுவும் அதில் அகப்பட்டான். ஆனால் அவனை அது மேலே கொணர்ந்து தள்ளிவிட்டது. எந்தத் துறையில் கிட்டுவும் அவனும் தண்ணீரில் துளைவார்களோ அந்தத் துறையில் அவனை ஒதுக்கிவிட்டது.
பாலுவுக்குப் புத்தி நிதானப்படவில்லை. மண்டையில் திடீரென்று ஓர் அடி விழுந்தால் ஒன்றுமே தோன்றாததுபோல், அவன் அசைவற்று நின்றான். இதற்குள் நின்ற மழை மும்முரமாய் ஆரம்பித்துவிட்டது. பைத்தியம் பிடித்தவன்போல் அந்தச் சுழலையே பார்த்த வண்ணம் அவன் நின்றான். ஒரு சம்பவமும் நடவாதது போலவே ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பெருங்காற்றிலே மரங்கள் சடசடவென விழுந்தன. வலையில் அகப்பட்ட மிருகம் போல் உறுமிற்று, புயற்காற்று. எங்கே பார்த்தாலும் பஞ்ச பூதங்களின் பெரும் பூசல்தான்.
இவைகளையெல்லாம் பாலு கவனிக்கவில்லை. தோட்டிகள், தொண்டைமான்கள், பண்டிதர்கள், பாமரர்கள், ஞானிகள், மூடர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், ஆடவர்கள், விருத்தர்கள், பெண்கள், சிசுக்கள் என்று பாராது எல்லோரையும் ஒருமிக்க வாரியடித்துச் செல்லும் விதியேபோல் விரைந்து செல்லுகின்ற வீரட்டான் ஆற்றோடு, அவன் கண்களும் ஓடிக்கொண்டிருந்தன.
★★★★★
மணி பதினொன்றாயிற்று. சுவர்ணமும் தாயும் வாசலில் எத்தனையோ தரம் வந்து எட்டிப் பார்த்தார்கள். எங்கேயாவது தொழுவிலே கட்டியிருக்கிற மாடு கத்துவது கேட்கும்போதெல்லாம் வண்டி வாசலில் நிற்பதாக எண்ணி வெளியே வந்து ஏமாந்து போவார்கள். 'ஒருவேளை வாதவனூரில் தங்கியிருப்பார்கள்; பொழுது விடிய அவர்கள் இங்கே வரலாம்' என்று மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு தூங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
பாலு தன்னை அறியாமல் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஏதோ மூச்சு ஓடிக்கொண்டிருந்தது. மற்ற உணர்ச்சிகளெல்லாம் இறந்துவிட்டனவென்றே சொல்லி விடலாம். காற்றின்முன் மிதந்து செல்லும் ஒரு பொருளேபோல் அடிபெயர்த்தான். ஏதோ ஒன்று அவனைத் தள்ளிக்கொண்டு போயிற்று. வீட்டிற்குப் போனதும் கதவைத் தட்டவில்லை. அங்கே கல்லும் கட்டையும்போல் நின்றான். இதற்குள் ஒரு பெரிய காற்றுக் கதவை மோதிற்று; யாரோ தட்டுவது போல் தாய்க்கும் பெண்ணுக்கும் காதில் பட்டது.
தாயும் சுவர்ணமும், "கிட்டு கிட்டு!" என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தார்கள். பாலுதான் நிற்கிறான். கிட்டுவைக் காணவில்லை!
"கிட்டு எங்கே பாலு?" அதற்குப் பதில் இல்லை.
"கிட்டு உன்னோடு வரமாட்டேனென்று சொல்லிவிட்டானா?" அதற்கும் பதில் இல்லை.
"குழந்தையை ஆற்றில் பறிகொடுத்து விட்டாயா?" அதற்கும் பதில் இல்லை.
"ஐயோ! ஐயோ! இதற்குத்தானா இரண்டு மாதம் காத்தேன்? ஐயையோ! பதினெட்டாம் பெருக்குக்குச் சேர்ந்து சாப்பிடலாமென்று சொன்னாயே அம்மா! இதுதான் பதினெட்டாம் பெருக்கோ, அம்மா!"
"அம்மா, சுவர்ணம்? நான் என்ன பண்ணுவேன்! இதற்குத்தானா நான் பாலுவை அனுப்பினேன். எமன் பாலக் கரையிலே உட்கார்ந்திருந்தான். அனுமாரே! இதற்குத்தானா உனக்கு வடைமாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டேன்?"
தாயும் பெண்ணும் கட்டிக்கொண்டு புலம்பினார்கள். பாலு பேச்சற்று நின்றான். அவனுக்கு அழுகைகூட வரவில்லை. கண்ணீர் ஊற்றுக்கள் கூடச் சுடுசோகத்தினால் வறண்டு போய்விட்டன போலும்!
மழை இரக்கமின்றிப் பெய்தது; இடி ஓயாமல் இடித்தது; மின்னல் இடைவிடாமல் மின்னிற்று. ஊர் பெரிய உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. பொழுது விடிந்ததும் கூத்தும் கொண்டாட்டமும்; ஆனால் ஓர் அகத்தில் விழிப்பும், விம்மலும் ஏனோ இது! ஏனோ இது! |