2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார் தொழிலதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன். வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்து, படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வந்திருக்கும் சந்திரமோகனின் அனுபவங்கள் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாகும்.
ஆர்.ஜி. சந்திரமோகன், செல்வக் குடும்பத்தில் பிறந்தவரோ, உயர்கல்வி கற்றவரோ அல்ல. மிகச் சாதாரண குடும்பப் பின்புலத்தில் இருந்து வந்தவர். சொல்லப் போனால் பின் தங்கிய ஒரு கிராமப் பகுதியிலிருந்து வந்து சென்னையில் தொழில் தொடங்கி இன்று இந்திய அளவிலும் உலக அளவிலும் ஒரு சாதனையாளராக மதிக்கப்படுபவர்.
'அருண் ஐஸ்க்ரீம்' பற்றியும், 'அர்ஜுன் அம்மா' பற்றியும், 'ஐபாகோ' பற்றியும் பலரும் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் அறிந்திருக்கக் கூடும். ஆனால், அந்த நிறுவனங்களை உருவாக்கியவர் சந்திரமோகன் என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். மட்டுமல்ல; ஹட்ஸன் ஃபுட்ஸ், பால், ஹட்ஸன் தயிர், நெய், பனீர் என்று பல பால் பொருட்களின் உற்பத்தியாளரும் சந்திரமோகன்தான்.
ஆர்.ஜி. சந்திரமோகன், சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் கிராமத்தில் மார்ச் 01, 1949-ல் பிறந்தார். தந்தை காய்கறி மொத்த விற்பனை செய்து வந்தார். ஆனால், அது லாபம் தரும் தொழிலாக அமையவில்லை. மளிகைக் கடை தொடங்கி நடத்தினார். அதுவும் லாபம் தரவில்லை. குடும்பம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்து வந்த சந்திரமோகன், பி.யூ.சி.யில் கணிதப் பாடத்தில் தோல்வியுற்றார். குடும்பச் சூழலால் கல்வியைத் தொடர அவர் விரும்பவில்லை.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று பல்வேறு கனவுகளுடன் இருந்த சந்திரமோகன், விழுப்புரத்தில் உள்ள ஒரு மரக்கிடங்கில் மாதம் 65 ரூபாய் ஊதியத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார். சந்திரமோகனின் மனமோ தொழில் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது. மரக்கிடங்குப் பணி ஒரு வருடம் தொடர்ந்தது. பின்னர் அதிலிருந்து விலகிய சந்திரமோகன், தந்தையிடம் தன் ஆர்வத்தைத் தெரிவித்தார். மூதாதையர் நிலத்தை விற்று 13000 ரூபாய் பணத்தை சந்திரமோகனிடம் தந்தார் தந்தை.
உள்ளம் முழுவதும் சாதிக்க வேண்டும் என்ற வெறி; வாழ்வில் உயர வேண்டும் என்ற கனவு; உழைக்கத் தயங்காத மனம் இவற்றுடன், ₹13000 பணத்தை முதலீடாகக் கொண்டு, 1970ல், 21 வயதில் சென்னை ராயபுரத்தில், 'ஆர். ஜி. சந்திரமோகன் அன் கோ' என்ற பெயரில் ஒரு சிறிய ஐஸ்க்ரீம் தொழிற்சாலையை நிறுவினார். ஐஸ்க்ரீம் சந்திரமோகனுக்குச் சிறுவயது முதலே பிடித்தமான ஒன்று. தனக்குக் கிடைக்கும் காசுகளைச் சேர்த்து வைத்துத் தின்பண்டங்கள் ஏதும் வாங்கி உண்ணாமல், சைக்கிளில் 'பூம் பூம்' என்ற ஹாரனுடன் வரும் ஐஸ்கிரீம்காரரிடம் ஐஸ்க்ரீம் வாங்கி உண்பது அவருக்கு மிகப்பிடித்தமான ஒன்று. அதன் தாக்கமோ, விருப்பமோ சந்திரமோகன் நான்கு ஊழியர்களுடன் ஐஸ்க்ரீம் தொழிற்சாலையை ஆரம்பித்தார்.
சந்திரமோகன், சூரியனின் பெயராகவும், தமிழ்ப் பெயராகவும் உள்ள 'அருண்' என்பதைத் தேர்ந்தெடுத்து தனது தயாரிப்புக்கு 'அருண் ஐஸ்க்ரீம்ஸ்' என்று பெயரிட்டார். அப்போது குச்சி ஐஸ் வகைகள் பிரபலமாக இருந்த நேரம். அருண் ஐஸ்க்ரீம் ஒருநாளைக்கு 10,000 குச்சி ஐஸ்களை உற்பத்தி செய்தது. அவை தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டன. முதல் வருடமே ஒன்றரை லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட முடிந்தது. அதனால் சந்திரமோகன் கடையை விரிவுபடுத்தினார். ஆனால், விரிவுபடுத்துவதற்காகக் கடையை வேறு இடத்துக்கு மாற்றியதால் வியாபாரம் குறைந்தது. நஷ்டம் உண்டானது. சந்திரமோகன் சளைக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார். அன்றைய புகழ்பெற்ற 'அம்பிஸ் கஃபே' நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் போட்டார் அவர்கள் மூலம் அருண் ஐஸ்க்ரீம் விற்பனையைத் தொடர்ந்தார். பள்ளி, கல்லூரி மாணவர்களே சந்திரமோகனின் இலக்காக இருந்தது. அவரது விடாமுயற்சியின் விளைவு மாணவர்களிடையே அருண் ஐஸ்க்ரீம் பிரபலமானது. சந்திரமோகனின் கடும் உழைப்பு பலன் தந்தது.
அந்த உற்சாகத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய ஐஸ்கிரீம் பார்லர்களை அமைத்தார். தொடக்கத்தில் மார்க்கெட்டிங் பற்றிய முழுப் புரிதல் சந்திரமோகனுக்கு இல்லை. அதனால் சபரி கல்லூரியில் மார்க்கெட்டிங் மேலாண்மை, ஏற்றுமதியில் மேலாண்மை, தனிப்பட்ட மேலாண்மை ஆகிய பாடங்களில் பட்டயப்படிப்பை முடித்தார். அதன் நுணுக்கங்களை அறிந்துகொண்டார்.
சந்திரமோகன், ஐஸ்க்ரீம்களில் புதிய வகைகளையும், சுவைகளையும் அறிமுகப்படுத்த விரும்பி 1981ல், 'அருண் ஐஸ்க்ரீம்ஸ்' என்ற பெயரிலேயே தனி நிறுவனத்தைத் தொடங்கினார். பால் சார்ந்த ஐஸ்க்ரீம்கள் விற்பதை நோக்கமாகக் கொண்டார். அது 'க்வாலிடி வால்ஸ்', 'தாசப்ரகாஷ்', 'ஜாய்' என்று பல்வேறு ஐஸ்க்ரீம்கள் பிரபலமாக இருந்த நேரம். அவற்றுடனான கடும் போட்டியை அருண் ஐஸ்க்ரீம்ஸ் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் புதிய புதிய விளம்பரங்கள் மற்றும் விளம்பர உத்திகள் மூலம் அருண் ஐஸ்க்ரீமை மக்களிடம் கொண்டு சேர்த்தார் சந்திரமோகன்.

குறிப்பாக கிராமப்புறங்களுக்கும் அருண் ஐஸ்க்ரீமைக் கொண்டு போனார். குளிர்பதனக் கிடங்கு மற்றும் விநியோகச் செலவுகளைச் சமாளிக்க, அரிசியுடன் ஐஸ்கிரீமை அடைத்து, ரயில்கள் வழியாகத் தமிழகத்தின் கிராமப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்தார். அங்கு ஐஸ்கிரீம் பார்லர்கள் மூலம் விற்பனை செய்தார். ஐஸ்க்ரீம் என்றலே அருண் ஐஸ்க்ரீம்தான் என்று கூறுமளவுக்குச் சில ஆண்டுகளிலேயே தமிழ்நாட்டின் முன்னணி பிராண்டுகளுள் ஒன்றானது அருண் ஐஸ்க்ரீம். விற்பனை ஒரு கோடியை எட்டியது. நாளடைவில் அருண் ஐஸ்கிரீம்ஸ் நிறுவனம் மேலும் விரிவடைந்தது. கேரளா மற்றும் ஆந்திராவின் முதன்மையான நிறுவனமானது. 700 விற்பனை நிலையங்களுடன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஐஸ்கிரீம் நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது.
1986ம் ஆண்டு சந்திரமோகன் நிறுவனத்தை 'ஹாட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ்' என்று மறுபெயரிட்டார். அடுத்த ஐந்து வருடங்களில் விற்பனை மூன்று கோடிக்கு மேல் உயர்ந்தது. ஐஸ்கிரீம் செய்வதற்குப் பாலைக் கொள்முதல் செய்யவேண்டும் என்பதால் பாலையும் விற்கச் சந்திரமோகன் முடிவு செய்தார். பால்பொருள்கள் விற்பனையில் இறங்கினார். சேலத்தில் பால் பதப்படுத்தும் தொழிலைத் தொடங்கி, 'மில்க் ஷேக் மிக்ஸ்' தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் அது மக்களைக் கவரவில்லை. அதனால் பாலைப் பதப்படுத்தி தனியாக பிராண்ட் செய்து விற்கும் முறையைத் தொடங்கினார்.
1995ல், ஹாட்சன் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனம், ஆரோக்கியா மற்றும் கோமாதா பால் விற்பனையைத் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநிலங்களில் தொடங்கியது. தொடக்கத்தில் ஆவினின் கடும்போட்டியை எதிர்கொண்டது என்றாலும் 'அர்ஜுன் அம்மா யாரு?' என்ற மாறுபட்ட விளம்பரம் மூலம் ஆரோக்கியா பால் மக்களைச் சென்றடைந்தது. 'ஆவினைவிட அதிகம் கொழுப்புச் சத்துள்ள பால்' என்பதைக் குறிக்கும் 'நாலரை பால்' என்ற வாசகம் மக்களிடையே பிரபலமானது. ஆரோக்யா பால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஹாட்சன் நிறுவனம் பாலை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்தது.
2003ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 6.25 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்த இந்நிறுவனம், சென்னையில் மட்டும் 1.5 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்தது. நாளடைவில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 10 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யும் திறனை எட்டியது. அடுத்தடுத்த வருடங்களில் நிறுவனம் மேலும் வளர்ந்து, காஞ்சிபுரம், மதுரை, பெல்காம், போன்ற இடங்களில் தனது பால் பண்ணைத் தொழிற்கூடங்களை அமைத்தது.
சந்திரமோகன், தொடக்கக் காலங்களில் சந்தைப்படுத்துதலில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். பல்வேறு அனுபவங்கள் வாய்த்தபிறகு நிதி, பணியாளர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் கவனத்தைச் செலுத்தினார். விளைவு, நிறுவனம் மென்மேலும் வளர்ந்தது; உயர்ந்தது; விரிவடைந்தது. சந்திரமோகன் அடுத்த முயற்சியாகக் 2012ல், 'ஐபாகோ' என்னும் ஐஸ்க்ரீம் விற்பனை நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனமும் மக்களிடையே பிரபலமாகி சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் கிளைகள் அமையும் அளவிற்கு உயர்ந்தது.
சந்திரமோகன் வெற்றியை மட்டுமே ருசித்தவரல்ல. தனது பால் கொள்முதல் நிலையங்களில், 'சிக்கனம்' என்னும் பெயரில் மளிகை வியாபாரம் செய்ய முற்பட்டார். ஆனால், அது லாபகரமாக இல்லை என்பதால் அதைத் தொடரவில்லை. தொடர்ந்து 'ஒய்யாலோ' என்னும் ஸ்னாக்ஸ் பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டார். அதுவும் வெற்றியைத் தரவில்லை. ஆகவே அதனைக் கைவிட்டார். தொடர்ந்து சந்திரமோகன் மாட்டுத்தீவனத் தொழிலில் முனைந்தார். அது நல்ல வெற்றியைத் தந்தது. கோவிட் தொற்றுக் காலத்தில் சந்திரமோகன் பல்வேறு இடர்களை எதிர்கொண்ட போதிலும் சமாளித்து நிறுவனத்தைத் தொய்வில்லாமல் நடத்தினார்.
ஆர்.ஜி. சந்திரமோகனின் ஹாட்சன் நிறுவனம், தற்போது பால் மட்டுமல்லாமல் தயிர், வெண்ணெய், நெய், பனீர் போன்ற பிற பால்பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இன்றைக்கு ஆரோக்கியா பால், ஹாட்சன் தயிர், ஹாட்சன் பனீர், ஹாட்சன் நெய், ஹாட்சன் டெய்ரி ஒயிட்னர் மற்றும் ஐபாகோ இந்தியா மட்டுமின்றி உலக அளவில் 42 நாடுகளில் பிரபலமாக உள்ளது. இந்தத் தயாரிப்புகள் உள்நாட்டுச் சந்தை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் மக்களுக்குப் பிடித்த பிராண்டாக மாறியுள்ளது. சுமார் 9,50,000 விவசாயிகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. 12,900 கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஹாட்சன் நிறுவனத்திற்குத் தொடர்ந்து பால் வழங்கி வருகின்றனர். தினந்தோறும் 39 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்கிறது.
ஹாட்சன் நிறுவனம் இன்றைக்கு ₹7000 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தனது பால்பொருள் சந்தையைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியச் சந்தைகளில் முதன்மையான பால்பொருள் பங்களிப்பு நிறுவனமாக ஹாட்சன் உள்ளது. ஆர்.ஜி. சந்திரமோகனின் மகன் சி. சத்யன் தற்போது ஹாட்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ரூ 13,000 முதலீட்டில் 250 சதுர அடியில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம், இன்றைக்கு, 40 வட்சம் சதுர அடிக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால் நிறுவனமாக வளர்ந்திருப்பது இமாலய சாதனை என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இதற்கெல்லாம் காரணமான சந்திரமோகனுக்கு பேட்மின்டன் விளையாடப் பிடிக்கும். சில போட்டிகளில் விளையாடி வெற்றிபெற்றுள்ளார். சிறந்த பேட்மின்டன் மையம் ஒன்றையும், டென்னிகாய்ட் அகாடமியையும், திருத்தங்கலில் ஒரு செஸ் அகாடமியையும் ஏற்படுத்தியுள்ளார். தனது அனுபவங்களை 'இனி எல்லாம் ஜெயமே', 'சாதிக்கலாம் வாங்க' என இரு நூல்களாக எழுதியுள்ளார். சந்திரமோகனின் சாதனை வாழ்க்கையை 'Broke To Breakthrough' என்ற தலைப்பில் ஹரீஷ் தாமோதரன் எழுதியுள்ளார். பெங்குவின் நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
2024ல், இந்திய பால் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆர்.ஜி. சந்திரமோகனுக்கு, அவரது சாதனை மகுடத்தில் மேலுமோர் உயரிய சிறகாக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'பத்மஸ்ரீ' 2025ம் ஆண்டில் அளிக்கப்பட்டுள்ளது.
சாதனையாளருக்குத் தென்றலின் இனிய நல்வாழ்த்துகள்! |