(ஜானம்மாள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். எஸ். அம்புஜம்மாள், வை.மு. கோதைநாயகி உள்ளிட்ட பலருடன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்றவர். எழுத்தாளரும்கூட. அவரது காஷ்மீர் யாத்திரை அனுபவங்கள் தென்றல் வாசகர்களுக்காக…)
எனது சிநேகிதர்கள், தாங்கள் சென்று வந்த ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சதா புகழ்ந்து பெருமையடித்துக் கொள்ளும்போது எனக்குத் தாங்க முடியாத துக்கமும் கோபமும் எழும். அங்குள்ள சிறந்த காட்சிகளையும் வெனீஸ் மாநகரத்தில் உள்ள ஜலவீதிகளையும் படகு விடுதிகளையும் பற்றி அதிசயமாகக் கூறிப் பெருமை கொள்ளுவர். அதுவும் தவிர சுஸர்லாந்தில் இருக்கும் பனிச் சிகரங்களைப் பாராத கண்கள் கண்களா என்று அவர்கள் என்னிடம் கூறும்பொழுதுதான் எனது உடம்பில் உஷ்ணம் தாங்காமல் தகிப்பதற்கு ஆரம்பிக்கும். அப்பொழுது என்னையும் அறியாமல் எனது பூஜ்ஜிய தாய் தந்தையர்களை நிந்திக்கவும் செய்துவிடும். அதாவது எனக்கும் காலேஜ் படிப்பை அளித்து இருந்தால் ஐரோப்பாவில் இருக்கும் காட்சிகளைக் காணும் பாக்கியம் கிடைத்திருக்கும் அல்லவா? “என்ன பிரமாதம் நீங்கள் 'களி யாத்திரை' (Pleasure Trip) ஒன்று போய் வந்திருக்கலாமே!” என்று கேட்பது சுலபம். ஆனால் எனது இயற்கையின் போக்கு அதைத் தடுத்துவிட்டது.
ஐந்தும் பழுது இல்லாமல் ஒழுங்காய் இருக்கவேண்டும். எனக்கு விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் பிரகாசமான வெள்ளி டம்ளர், சுடச்சுட காப்பியை வைத்துக்கொண்டு என் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும். இட்டிலி, தோசை, சாம்பார், மிளகாய்ப்பொடி முதலியவைகள் பிளேட்டுகளில் ஒழுங்காய் உட்கார்ந்துகொண்டு தரிசனத்தை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்குங்கள். இவ்வளவு அன்புடன் என்னைப் போஷித்து ஆதரிக்கும் அச்சுற்றத்தார் எல்லோரையும் விட்டுப் பிரிந்து ஒரு பீங்கான் கப் தண்ணீரைத் தேடிக்கொண்டு காதவழி ஒடவேண்டும் என்றால் ஐரோப்பா சுற்றுப் பயணத்தை எவர் விரும்புவர்? நமக்கு சுயராஜ்ஜியம் வரட்டும். பிறகு அன்னிய நாடுகளில் நமக்குத் தேவையுள்ள எல்லா சௌகரியங்களும் ஏற்படும். முதலில் நமது பரத கண்டத்தில் இருக்கும் சௌந்தரிய திரிசியங்களைக் கண்டு களிப்போம் என்று எனது மனதைத் தேறுதல் செய்து ஆற்றிக்கொண்டேன்.
1938ம் வருஷம் பிறந்தது. யாத்திரை லக்ஷ்மியானவள் எனது உள்ளங்காலைத் தூண்டிய வண்ணம் இருந்தாள். 'நான்தான் கன்னியாகுமரியிலிருந்து டில்லி பிருந்தாவனம் வரையில் போய் வந்தாய் விட்டதே, இன்னும் நம்மை இவள் எவ்வளவு தூரம் அழைத்துக்கொண்டு போகப்போகிறாளோ' என்பதுதான் எனக்கு விளங்காமலிருந்தது.
அந்தச் சமயத்தில் எனது ஆப்த சினேகிதியான பத்மினி அவர்கள் தனது தாய், தந்தையரின் அதிதியாக காஷ்மீர் நாட்டிற்குத் திலகமாய் விளங்கும் ஸ்ரீநகருக்கு வரும்படி என்னை அழைத்தார். 'கரும்பு தின்னக் கூலியும் வேண்டுமா!' ஆனால் மற்றைய சினேகிதர்கள் என்னைத் தனிமையில் போகவிடமாட்டார்களே என்று தெரிவித்தேன். பத்மினியோ எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளிப்பதில் தேர்ச்சி அடைந்தவள். "யாத்திரையில் கூட்டமாகப் போனால்தான் தமாஷாகப் பொழுதைப் போக்கலாம். எல்லோரையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்" என்றாள்.
ஒருநாள் எனது சினேகிதியான மஞ்சுபாஷிணியவர்களுடன் பத்மினியின் அகத்திற்குச் சென்றேன். "ஸ்ரீநகருக்கு வரவேண்டுமென்று மிகவும் ஆவலாயிருக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்தான் வருவதற்கு உத்தேசம்" என்று தெரிவித்துக்கொண்டேன். அவளும் அதைக் கேட்டு புன்னகையுடன் "சினேகபலம் பெரியதா, நிபந்தனை பலம் பெரியதா என்பதையும் பார்த்துவிடலாம். உங்கள் நிபந்தனைகளைச் சொல்லுங்கள்" என்றாள். "நாங்கள் ஐந்து, ஆறு நபர்கள் அம்புஜம்மாள், கோதைநாயகி அம்மாள் உள்பட வரப்போகிறோம். எங்கள் விருப்பத்தின்படி அங்கு வசிப்பதற்கு நீ சம்மதிக்கவேண்டும். அவ்வளவே" என்றேன். "ரொம்ப சரி, முதலில் நீங்களல்லவோ அங்குவந்து சேரவேண்டும். உங்களின் விருப்பத்தைப் பிறகல்லவோ நான் கவனிக்க முடியும்?" என்று பளிச்சென்று பதிலளித்தாள்.
பத்மினி அவர்கள் தம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு மார்ச்சு மாதமே அவரது தந்தையார் திவான்பகதூர் என். கோபாலசாமி ஐயங்கார் வசித்துவந்த காஷ்மீரின் தலைநகருக்குப் போய்விட்டாள்.
ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் மஞ்சுபாஷிணி அவர்களும் நானும் மாத்திரந்தான் புருஷர் துணையின்றி கிராண்ட்-டிாங்கு எக்ஸ்பிரஸில் காஷ்மீர் யாத்திரையை ஆரம்பித்தோம்.
★★★★★
காலை இருள் பிரிவதற்குள்ளாகவே எங்கள் ரயில் ஜம்மு ஸ்டேஷனை அடைந்துவிட்டது. ஒரு ரெயில்வே உத்தியோகஸ்தன் எங்களுடைய கம்பார்ட்மென்ட் அருகில் வந்து 'பஹீன் ஆப்லோக் மத்ராஸ்ஸே ஆரஹீஹை' என்று வினவ, 'ஜீஹா' என்று நானும் ஹிந்துஸ்தானியில் விடையளித்தேன். அதற்கு அவன் "எங்களுக்கு பிரைம்-மினிஸ்டரிடமிருந்து தந்தி ஒன்று வந்திருக்கிறது. உங்களை ஸ்ரீநகருக்கு ஜாக்ரதையாக அனுப்பும்படி. இவ்விடத்தில் 'சா' (தேநீர்) கிடைக்கும். கார் புறப்படுவதற்குச் சற்று நேரம் ஆகும்" என்று கூறிவிட்டு இரண்டு போர்டர்களை எங்களது சாமான்களை நிறைபோட்டு காரில் ஏற்றி வைத்துவிடும்படிக் கட்டளையிட்டுச் சென்றான்.
அந்த ஜம்மு ஸ்டேஷனில் கிடைத்த 'சா'வை நங்கள் ஹிமவானின் பிரசாதம் என்று குடித்துவிட்டுக் காரில் ஏறிக்கொண்டோம். ஆனால் 7-1/2 மணியாகியும் எங்களது வாகனம் கிளம்பவில்லை விசாரித்ததில் இன்னும் இரண்டு பிரயாணிகளை ஏற்றிக்கொள்வதற்காக நிற்கிறது என்பதை உணர்ந்தோம். நல்ல வேளையோ அல்லது பொல்லாத வேளைதானோ, உடனே ஒரு தடித்த பார்ஸிக்காரி எங்களது காரை நோக்கி வருவதைப் பார்த்ததும், இனி நமது கார் கிளம்பிவிடும் என்று அல்ப சந்தோஷத்தை அடைந்தோம். ஆனால் அந்த தேவியோ எங்களது காரையும் போகவிடவில்லை. ரெயில்காரன் கேட்ட கட்டணப் பணத்தைத் தரவும் சம்மதிக்கவில்லை. கடைசியில் கேட்ட பணத்தைக் கட்டிவிட்டு எங்கள் காரில் ஏறி உட்காருவதற்குள் 8-1/2 மணி ஆய்விட்டது. அந்தோ! அம்மட்டுமல்லாமல் மேலும் சில இடைஞ்சல்களை அந்த இளமாது செய்ததால் நாங்கள் புறப்படுவதற்கு 9 மணிக்கு மேலாயிற்று. ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் 206 மைல்.
காஷ்மீர் ராஜாங்கத்தினர் வழியில் 10, 15 மைலுக்கு, தங்குவதற்கு ஒரு விடுதியையும் போஸ்டு, தந்தி ஆபீஸ்களையும் யாத்ரீகர்களின் சௌகரியத்திற்காக ஏற்படுத்தியுள்ளனர். அங்கு பிஸ்கட்டு, சா, வெண்ணெய் முதலியவை கிடைக்கும். இரவு தங்குவதாயிருந்தால் உதம்பூர், பட்டோட், பனியால் ஆகிய மூன்று இடங்களில் தூங்குவதற்குப் பெரிய அறைகள் நமக்குக் கிடைக்கும். ஸ்ரீநகர் போய்ச் சேருவதற்குள் 8 டாக் பங்களாக்களும் 10 போஸ்டாபீஸ்களும் இடையில் இருக்கின்றன. நடுவில் கார்களுக்கு பெட்ரோல் சப்ளைகளும் ஏற்படுத்தியிருக்கின்றனர்.
ஜம்மு பட்டணத்தில் நவாப் காலத்தில் உண்டான குறுகிய சந்துகள் எல்லாம் இன்னும் மாறுதல் அடையாமலே இருப்பது ஒரு விசேஷமல்லவா? ஹிமவானின் அடிவாரத்தை அடைந்தவுடன் எங்களது கார் இயற்கையின் வேகத்தை ஒடுக்கிக்கொண்டு அவரின் அடியை வணங்கி மண்டியிட்டுக்கொண்டு பயபக்தியுடன் போவதைப்போல் காணப்பட்டது. சத்புருஷர்கள் தங்களின் தற்புகழ்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ள விரும்பமாட்டார்கள். அதைப்போலவே ஹிமவானின் 27வது மைலில் 2459 அடி உயரத்தில் இருக்கும் திக்கிரி என்னும் கிராமம் வரையில் தனது வளமையையும், கம்பீரத்தையும் வெளிக்காட்டாமல் வைத்துக்கொண்டு, தன்னை இப்பவோ அப்பவோ சாவு வந்து புகப்போகும் தலை நரைத்த பழுத்த கிழவனைப்போல் தோற்றமளித்து நடித்தனர். அவர் சரீரத்திற்கு நரம்பு எலும்புகளாக இருக்கும் பாறை, கல், புல், புதர், மரம் முதலியவைகள் ஒன்றும் இல்லாமல் பொலபொல என்று உதிரும் மண்கூடான சரீரம் மட்டுந்தான் குட்டிச்சுவரைப்போல நின்றது. கடவுளைத் தவிர இதர தேவர்கள் எல்லோருமே அஸ்திரம்தான் என்பதை நமக்குப் புகல்வதைப் போல் தென்பட்டது. அதுவும் தவிர, கண்ணுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு இன்பத்தையும் தரும் காட்சிகளைத் தராமல் பார்த்தவிடமெல்லாம் திருடனைப்போல கட்டையும் குட்டையுமாக கரிமுண்டங்களாக நிற்கும் தோற்றத்தை அவ்விடத்தில் காட்டினர். அந்த முண்டங்களில் சிலதுகள் நம்மைப் பார்த்து நகைப்பதைப்போல் காணப்பட்டன. ஒருக்கால் ஹிமவான் வரும் யாத்ரீகர்களை இப்படி இந்தப் பொட்டல் காட்டில் சபித்து கரிக்கட்டைகளாக நிறுத்தி வைத்துவிட்டாரோ என்னமோ என்று என் உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. உடனே எனது தலை சுழன்று கனக்க ஆரம்பித்துவிட்டது. ''தருமபுத்திரருக்கு, போகும் வழியில் நரகத்தைப் பார்த்த பின்பு தானே சொர்க்கம் கிடைத்தது. அதைப்போலவே நமக்கும் கிடைக்கப் போகிறது போலும்' என்று நினைத்து மனதைத் தேற்றிக்கொண்டேன். பனி உறைந்து பச்சை மரங்கள் எல்லாம் பட்டுப்போய் இப்படி நிற்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டபிறகுதான் என் தலை கிறுகிறுப்பு நீங்கியது.
திகிரியைவிட்டு மேலே போகப்போக ஹிமவான் யௌவனத்தை யடைந்து அதி சௌந்தரியத்துடன் விளங்குவதைக் கண்ட நான் தலையை நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டேன். மேலும் வாயுபகவான் 'சீனாப்' என்னும் நதியின் திவிலைகளை எங்கள் முகத்தில் மெல்லியதாக வீசிக்கொண்டு வரவே வெப்பத்தினால் அடைந்த சோர்வு மறைந்து நல்ல தெளிவையடைந்தோம். 66 மைலில் 5700 அடி உயரத்தில் இருக்கும் குத் என்ற ஸ்டேஷனில் இருக்கும் டாக் பங்களாவை யடைந்தோம்.
அங்கு 'சா'வைக் குடித்துவிட்டு சற்று சிரம பரிகாரம் செய்துகொண்டு 110 மைலில் இருக்கும் பனியால் என்ற கிராமத்தில் உள்ள சுங்கச் சாவடிக்குப் போகும்போது மாலை 3 மணியாகிவிட்டது. அங்கிருந்து 7224 அடி உயரத்தில் இருக்கும் அப்பர்முண்டா என்ற பிரதேசத்தைக் கடக்கும்போது தான் ஹிமவானுடைய கீர்த்தியைப் பார்த்தவிடங்களில் எல்லாம் நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. அந்தப் பனியிலும் இரண்டு மூன்று குகைகளைக் கடந்து 5225 அடி உயரத்திலிருக்கும் அவந்திபுரத்திற்கு இரவு சுமார் 7 மணிக்கு வந்தடைந்தோம். இனி அபாயம் நேரிட்டாலும், கிடுகிடுவென்று இருக்கும் பயங்கரப் பள்ளத்தாக்கிலோ அல்லது மலைச்சரிவுகளிலோ மோதி விழுந்து உயிரைத் துறப்போமோ என்ற பயம் மனதைவிட்டு அகன்றது. இனி ஸ்ரீநகரைப் பார்த்துவிடுவோம் என்ற தைரியமும் பிறந்தது. 4, 5 மைல் நீளமுள்ள சினார் அவின்யூ அதாவது சினார் மரத்துச் சாலையின் பாதையில் எங்களது கார் மானாய்ப் பறந்து ஸ்ரீநகருக்கு இரவு 7-1/2, 8 மணிக்குள்ளாகவே சேர்ந்துவிட்டது. எங்களை பிரைம்-மினிஸ்டர் பங்களாவில் ஒப்படைத்துவிட்டு அந்த பார்ஸிக்காரி இறங்கும் விடுதியைத் தேடிக்கொண்டு, நாங்கள் வந்த கார் சென்றது.
இன்னும் வரக்காணோமே என்று கவலையுடன் எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பத்மினி எங்களைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் உதிர்த்து எங்களை அப்படியே ஆலிங்கனம் செய்துகொண்டாள். அன்றிரவு நாங்கள் புசித்ததும் வந்த களைப்பினால் 10 மணிக்குள்ளாகவே நித்திரை வசமானோம்.
''வெனீஸ், சுஸர்லாந்து பிரதேசங்களைக் காட்டிலும் ஸ்ரீநகர்தான் இயற்கையின் அழகில் முதல் ஸ்தானத்தையுடையது" என்று அங்கு வந்திருந்த எல்லா ஐரோப்பியரும் கூறினர். அந்நகர்தான் சொர்க்கலோகமாக இருக்க வேண்டுமென்பது எனது அபிப்பிராயம். பல உணர்ச்சியுள்ள மனிதர்களுக்கும் பலனை அளிப்பதில் கற்பக விருக்ஷமாக விளங்குகிறது. ஜீலம் என்ற நதியானது ஸ்ரீதேவியான அவளை அபிஷேகம் செய்துகொண்டு பல கிளைகளாகப் பிரிந்து பல வீதிகளாகவும் ஓடிக்கொண்டு இருக்கின்றாள்.
பெற்ற தாயைப்போல தன் மடியிலும் தனது முதுகாயிருக்கும் கரை மீதிலும் ஜனங்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இடமளித்து ஆதரவளித்து வருகிறாள். கண் கொள்ளாத காட்சிகளையும் விலையில்லாப் பண்டங்களையும் தன் வசத்தில் நிரப்பிக்கொண்டு, வரும் விருந்தினர்களைத் திகைக்கும்படிச் செய்வதில் ஹிமவான் வெகு நிபுணர்.
லக்ஷ்மியின் பூரண சௌந்தர்யத்தையும் சோபையையும் பார்க்க வேண்டுமானால் அவற்றை ஸ்ரீநகரில்தான் காணமுடியும். செடி, கொடிகள் தங்களிடத்தில் மலர்ந்த புஷ்பக் குவியல்களினால் தேவியின் அடி பணிந்து அர்ச்சித்துவரும் கைங்கரியத்தையும், விருக்ஷங்கள் தங்களிடத்தில் உண்டான பலன்களை நைவேத்தியம் அளிக்கும் பக்தியையும் பார்க்கலாம். போட்டு வீடுகளிலும், கரைமீதில் உள்ள பங்களாக்களிலும் பிரகாசிக்கும் மின்சார விளக்குகளைப் பார்த்தால் ஸ்ரீதேவிக்கு தீபாராதனை கொடுக்கும் பொருட்டு நக்ஷத்திர மண்டலம்தான் இறங்கிவந்துவிட்டதோ என்ற சம்சயத்தை உண்டாக்கும். நகரைச் சுற்றி கோட்டை மதில்சுவரைப் போல நிற்கிறதும், மலைச் சிகரங்களில் பனிமயமாக உறைந்திருக்கும் அவ்வெண்மை நிறத்தைக் காணும்போதும் பாற்கடல் மத்தியில் ஸ்ரீமகாலக்ஷ்மி வசிக்கும் வாசஸ்தலம் இதுவாகத்தான் இருக்கவேண்டுமென்று நிச்சயித்துவிடும்.
அங்கிருந்த நந்தவனம் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் உல்லாசமாகப் பொழுதைப் போக்கவரும் குடும்பத்தினர்களுக்கும் புதிய தம்பதிகளுக்கும் செர்ரி கனிகளையும், சீமை பாதங்கொட்டையையும் அளிக்கும். மேலும், கண்களுக்கு இனிமையான அங்குள்ள ரோஜா, சாமந்தி முதலான நானாவித புஷ்ப வகைகள், சப்தித்துக் கொண்டிருக்கும் அருவிகளையும் ஜலக்கால்களையும் மிருதங்கமாக வைத்துக் கொண்டு வாயு பகவானை நட்டுவனாராக ஏற்படுத்திக்கொண்டு நர்த்தனமாடி பார்ப்பவர்களின் மனதை அபகரித்துவிடும்.
காஷ்மீர் தேசத்தில், அநேகமாய் ஜாதிகள் இரண்டுதானாம். அதாவது பண்டிட், முஸல்மான் என்று. பண்டிட் என்றால் பிராமணர்கள். அவர்கள்தான் தோல் பைகளில் தண்ணீரைச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் தெளிப்பது வழக்கம். அங்கு வசிக்கும் மனிதர்கள் தேக புஷ்டியடனும், கண், மூக்கு இரண்டும் விசாலமாகவும் கூர்மையாகவும் செந்தாமரை வர்ணத்துடன் உயரமாக வளர்ந்து வினயத்தையும் தைரியத்தையும் பூஷணமாகப் பூண்டிருக்கின்றனர். பொழுது போக்குவதற்கு ஹோடல்ஸ், சினிமா, கிளப், கால்ப், போட்டிங், ஸ்விம்மிங் முதலியவை இருக்கின்றன. பையில் நூற்றுக்கணக்காய் பணத்தை வைத்துக்கொண்டால் திருப்தியாய் ஷாப்பிங் போய்வரலாம். வால்நட் மரத்தில் சித்திரவேலையுடைய மேஜை, நாற்காலி, வெள்ளிப் பாத்திரங்களில் துலங்கும் நகாஸ் வேலை, துணிகளில் சித்திரிக்கும் எம்ப்ராய்டரி வேலை முதலியவைகளைப் பார்த்தால் அவர்களின் கைவேலையின் திறமை நன்கு வெளிப்படும். பேப்பர் மெஷ்களில் பலவிதமான கலர்களை ஏற்றி விளக்கு ஷேட், ஸ்டாண்ட் முதலிய அநேக சாமான்களைத் தயாரித்துப் பணமாக்கிக்கொள்ளுகின்றனர். மண் கலசங்களில்கூட கலைத்தெய்வம் ஒளிந்திருப்பாள்.
சர்க்கார் சித்திர கலாசாலையில் டிராயிங், பெயின்டிங், ரத்தினக்கம்பளம் நெய்தல், தச்சுவேலை முதவிய கைத்தொழில்களை இலவசமாகப் போதிக்கின்றனர். பட்டுகள், கம்பளங்கள் ஏராளமாக உற்பத்தியாகின்றன. பால், வெண்ணெய், கிரீம், தேன் முதலியவை எதேஷ்டமாகக் கிடைக்கும். மெரூன் கலருடன் துலங்கும் குங்குமப்பூவின் நறுமணம் நாசியைத் துளைக்கும். அந்தந்தப் பருவத்திலுண்டாகும் பழங்கள்தான் அகப்படும்.
ஹிமவான் ஹரிஹர அம்சத்தை அடைந்து சிருஷ்டிக்கும் வேலை, அழிக்கும் வேலை அவ்விரண்டையும் தானாகவே நடத்திக் கொண்டிருக்கிறார்.. 8 மாதங்கள் வரையில் நீர்வளத்துடன் கணக்கில்லாப் பலன்களை அள்ளிக் கொடுக்கும் அப்பொன்னாட்டை, சுட்டுச் சாம்பலாக்கி புல், பூண்டு முளைப்பதற்குக்கூட இடம் தராமலும், ஏரி ஒடைகளில் போகும் தண்ணீரையும் உறைத்து ஜன சூன்யப் பிரதேசமாக பனிக்கட்டி மயமாகவே மூன்று மாதங்கள் வரையில் அங்கு தோற்றமளிப்பார்.
ஸ்ரீநகரைச் சுற்றிப் பார்க்கவேண்டுமானால் மோட்டார் அல்லது டோங்கா வண்டிகளில் தரை மார்க்கமாகப் போகலாம். இன்னொன்று சிகாராவில் ஏறிக்கொண்டு ஜல மார்க்கமாகவும் போய்ப் பார்க்கலாம். சிகாரா என்பது வாடகைக்குக் கிடைக்கும் போட்டு. அது சித்திர வேலைப்பாடு அமைந்த துணியினால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குபோல் இருக்கும்.
பத்மினி திருவேங்கடாச்சாரி அவர்களுடைய தாய், தந்தையரின் விருந்தினராக ராஜபோகமாக வேளைக்குத் தவறாமல் தேங்காய் சட்னி, சாம்பார், தயிர்வடை, நாட்டுக் கறி வகையறா, சீமைக்கறி வகையறாவுடன் விருந்துண்டு களித்த என்னை “என்ன சாமான் அங்கு கிடைக்காது?" என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அவர்களின் திருமாளிகையில் "இல்லை" என்ற சொல்லுவதற்கு இடமே கிடையாது. மேலும் 'அது ஏது? இது ஏது?' என்று அப்பெரியோரை கேட்பதும் உசிதமில்லை அல்லவா?
பத்மினியின் தாய், தந்தையர்களைத் தவிர அவரின் மற்ற குடும்பத்தினர் எல்லோரும் நாங்கள் சென்ற குல்மார்க், கிலன்மார்க், பல்ஹான், சந்தன்வாடி, குலாய், கிளேஸியர் முதலிய முக்கியமான பனிச் சிகரங்களுக்கெல்லாம் வந்தனர். சில இடங்களில் பாதையே இராது. எங்களைச் சுமந்துகொண்டு போகும் அறிவுள்ள குதிரைகள், அடுக்கடுக்காக அடுக்கி வானத்தை ஓங்கி வளர்ந்துகொண்டு போகும் பாறைகளின் மீதில் அதன் கால்களால் தடவிப் பார்த்துக்கொண்டே அதிசாக்கிரதையுடன் ஏறிச் செல்லும். அநேக சிற்றாறுகளையும் சில இடங்களில் கடந்து செல்வதற்கு நேரிடும். உயரத்தில் இருக்கும் பனிச் சிகரங்களை அடையும்பொழுது காற்றுக் குறைவினால் மூச்சு இழுப்பதற்கும், விடுவதற்கும் முடியாமல் திணறும்.
நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தினராக பேதமின்றி இருந்த படியால்தான் இவ்வளவையும் பார்த்து ஆனந்திப்பதற்குச் சாதகமாக இருந்தது. பத்மினியின் தகப்பனார் அனாவசியமாக வார்த்தைகளைச் செலவிடமாட்டார். ஒரே சொல்லில் பல பேர்களுக்கும் பதிலையளிக்கும் ஆற்றலை உடையவர். எங்களைப் பார்த்து "நீங்கள் தனிமையாக ஏன் போகவேண்டும்? என் வீட்டிலேயே சமைத்து எனக்கும் போடுங்கள், நானும் உங்களது ருசிகரமான சமையலைச் சாப்பிட்டு அனுபவிக்கிறேன்" என்று மிருதுவாக மொழிந்தார். கடைசியில் சிநேக பலத்தின் முன், நிபந்தனை பலம் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்தது. ஆனால் அவர்களின் வீட்டின் அருகில் இருக்கும் ஜீலம் நதிக்கரையில் Silver Bell என்ற போட் விடுதியை அமர்த்தி அதனில் நாங்கள் வசித்து ஆனந்திப்பதற்கு மட்டும் அனுமதித்தார். அதனில் ஒரு டிராயிங் ரூம், 3 பெட்ரூம்கள், 2 பாத்ரூம்கள், அடங்கியது. நாங்கள் இரவில் துயில்வது போட் விடுதியில்; பகலில் போதை ஒழிப்பதும் புசிப்பதும் பிரைம் மினிஸ்டர் மாளிகையில், அதை எங்களுடையதாகக் கருதினோம்.
ஸ்ரீமதி கோபாலஸாமி அய்யங்கார் அவர்கள் எங்களைச் சொந்தச் சகோதரிகள் போலவும் தங்களின் சொந்தக் குடும்பத்தினர் போலவும் பாவித்து நடத்தினார். அந்த நாளை நினைத்துக்கொண்டால் இப்பவும் ஆனந்தம் பொங்குகிறது. Happy Family என்று எங்களைத்தான் கூறவேண்டும். அந்நாளை மறுபடியும் எப்பொழுது காண்போம் என்று எனது மனது அலைகிறது. அடர்ந்த காடுகளிலும் கடூரமான உறைபனிகளிலும் திரிந்து உருண்டு சுகமாக வந்து சேர்ந்ததற்கு ஹிமவானின் ஆசியும் எங்களின் ஐக்கியமுமேதான் காரணம். ஹிமவானை தரிசித்தால் தைரியமும் மனச் சாந்தியும் உண்டாகும் என்பது திண்ணம்.
(நன்றி ஜகன்மோகினி இதழ், 1943) |