Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-4)
- பா.சு. ரமணன்|செப்டம்பர் 2026|
Share:
சுவாமி சிவானந்தரின் ஆன்மிகப் பணிகளும், சமூகப் பணிகளும் மக்களின் ஆதரவுடன் ரிஷிகேஷில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. சுவாமிகள் தொடங்கிய மருந்தகம் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு பெரிய மருத்துவமனையாக மாற்றம் பெற்றது. சிவானந்தா கண் மருத்துவமனை 1957 டிசம்பரில் முறையாகத் திறக்கப்பட்டது.

சிவானந்த இலக்கிய ஆராய்ச்சி நிறுவனம்
சிவானந்தரின் படைப்புகளை ஆய்வு செய்யவும், அவரது கோட்பாடுகளையும், ஆன்மிக விளக்கங்களையும் பல மொழிகளில் கொண்டு சேர்க்கவும், 1958ல் சிவானந்த இலக்கிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. சிவானந்தரின் படைப்புகளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியைத் தொடங்கியது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. சிவானந்த சங்கத்தின் வெள்ளி விழா 1961ல் கொண்டாடப்பட்டது.

யோகம், மதம், மேற்கத்திய தத்துவம், உளவியல், இறுதிக்காலவியல், நுண்கலைகள், அறநெறி, கல்வி, சுகாதாரம். பொன்மொழிகள், கவிதைகள், கடிதங்கள், சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, கதைகள், நாடகங்கள், செய்திகள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், கட்டுரைகள் மற்றும் தொகுப்பு நூல்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் சுவாமி சிவானந்த சரஸ்வதி 296 நூல்களை எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் கோட்பாட்டு அறிவைக் காட்டிலும் யோக தத்துவத்தின் நடைமுறைப் பயன்பாட்டிற்கே முக்கியத்துவம் அளித்தன.

சுவாமி சிவானந்தர், சேவை, தியானம் மற்றும் இறை உணர்தல் ஆகியவை குறித்த தெய்விகமான, உன்னதமான கருத்துக்களை தனது நூல்கள், பத்திரிகைகள், கடிதங்கள் மூலம் உலகெங்கிலும் பரப்பினார். அதற்கு சிவானந்த இலக்கிய ஆராய்ச்சி நிறுவனமும், அவரது சீடர்களும் உறுதுணையாக இருந்தனர்.



சுவாமி சிவானந்தர், இந்தியா முழுவதும் தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் கிளைகளை அமைத்தார். சுற்றுப்பயணங்கள் மூலமும் இந்தியாவின் உத்தமமான ஆன்மிக தர்மத்தைப் பரப்பினார். தன்னுடைய யோகத்தை ஒருங்கிணைந்த யோகம் என்றே அழைத்தார்.

மாநாடு
9வது அகில இந்திய தெய்வீக வாழ்க்கை மாநாடு 1957 மார்ச் 16 அன்று வெங்கடகிரியில் நடைபெற்றது, இதற்கு பகவான் சத்ய சாயிபாபா தலைமை தாங்கினார். சச்சிதானந்த சரஸ்வதி மற்றும் சுவாமி சதானந்தா கலந்து கொண்டனர்.

சீடர்கள்
சிவானந்தரின் இரண்டு முக்கிய சீடர்களாக சுவாமி சிதானந்த சரஸ்வதியும், சுவாமி கிருஷ்ணானந்த சரஸ்வதியும் இருந்தனர். சிதானந்த சரஸ்வதி 1963ல் சிவானந்தரால் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு, 2008ல் வாழ்நாளின் இறுதிவரை அப்பதவியில் பணியாற்றினார். கிருஷ்ணானந்த சரஸ்வதி 1958ல் சிவானந்தரால் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு, 2001ல் பரிநிர்வாணம் அடையும்வரை அப்பொறுப்பில் பணிபுரிந்தார். தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளையின் ஆன்மீகத் தலைவராக சகஜானந்த சரஸ்வதி பொறுப்பேற்றுப் பணியாற்றினார்.

பிற சீடர்களும் பணிகளும்
சுவாமிகளின் சீடர்களுள் ஒருவரான சின்மயானந்த சரஸ்வதி, சின்மயா மிஷனைத் தோற்றுவித்தார். ஜோதிர்மயானந்த சரஸ்வதி, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் யோக ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள யசோதரா ஆசிரமத்தின் நிறுவனராக சிவானந்த ராதா சரஸ்வதி செயல்பட்டார். சிவானந்த யோக வேதாந்த மையங்களின் நிறுவனராக விஷ்ணு தேவானந்த சரஸ்வதி பணியாற்றினார்.

மகாசமாதி
தம் வாழ்நாள் முழுவதும் ஆன்மிகம் சார்ந்த சமூகப் பணியாற்றிய சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் ஜூலை 14, 1963 அன்று, தனது சிவானந்த ஆசிரமத்தில் மகாசமாதி அடைந்தார். அங்கேயே அவருக்கு சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.

சிவானந்தரும் அப்துல் கலாமும்
விஞ்ஞானியும், மேனாள் குடியரசுத் தலைவருமான ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் சுவாமி சிவானந்த சரஸ்வதி. அவரைச் சந்தித்து அவரது ஆலோசனையைப் பெற்ற பிறகு அப்துல் கலாமின் வாழ்க்கையே மாறிப்போனது. அது குறித்து அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்று நூலான 'அக்னிச் சிறகுகள்' நூலில் இவ்வாறு பதிவு செய்துள்ளார் (கண்ணதாசன் பதிப்பக வெளியீடு):

"குழப்பமான சிந்தனையுடன் ரிஷிகேசம் புறப்பட்டேன். கங்கையில் நீராடினேன். அதன் தூய்மையில் மனம் மகிழ்ந்தேன். அங்கிருந்து கொஞ்சம் உயரத்தில் இருந்த சிவானந்தர் ஆச்ரமம் நோக்கி நடந்தேன். உள்ளே நுழைந்ததும் அதிர்வலைகளின் வலுவான தாக்கத்தை உணர்ந்தேன். அங்கே ஏராளமான சாதுக்கள் மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார்கள். நம் மனதிற்குள் மறைந்து கிடக்கும் விஷயங்களை சாதுக்களால் தெரிந்துகொள்ள முடியும் என்று படித்திருக்கிறேன். எனக்கிருந்த விரக்தியான மனநிலையில், என்னை வாட்டிக் கொண்டிருக்கும் சந்தேகங்களுக்கு அவர்களிடம் விடை தேடினேன்.

வெள்ளை வெளேர் வேட்டியும், மரப் பாதுகைகளையும் அணிந்து, புத்தரைப் போலக் காட்சியளித்த சுவாமி சிவானந்தரை அங்கு சந்தித்தேன். பளபளக்கும் தேகம், ஊடுருவிப் பார்க்கும் விழிகள், கருணை பொங்கும் முகம், கள்ளம் கபடமற்ற குழந்தையின் புன்னகை... அவரைப் பார்த்ததும் அப்படியே சிலையாகி விட்டேன். சுவாமியிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். என்னுடைய முஸ்லிம் பெயர் அவரிடம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் வாயைத் திறப்பதற்கு முன்பே என் துயரத்தின் மூலகாரணம் பற்றிக் கேட்டார். என் வேதனை அவருக்கு எப்படித் தெரிந்தது என்று சொல்லவில்லை, நானும் அதைக் கேட்கவில்லை.

பறக்க வேண்டும் என்ற நீண்ட நாளைய ஆசை நிராசையாகிவிட்டதையும், இந்திய விமானப்படையில் சேர முடியாமல் போனதையும் அவரிடம் கூறினேன். அவர் புன்னகைத்தார். அந்தப் புன்னகை என் துயரங்களை எல்லாம் அடித்துச் சென்றது. மெல்லிய குரலில், ஆனால் அழுத்தமாக அவர் சொன்னார்: "இதயத்திலிருந்தும், துடிதுடிப்பு உணர்விலிருந்தும் துளிர்விட்டு, தூய்மையாகவும், வலுவாகவும் இருக்கும் ஆசைக்கு அபாரமான மின்காந்த சக்தி உண்டு. ஒவ்வோர் இரவும் மனம் உறக்க நிலையில் ஆழ்ந்துவிடும்போது இந்தச் சக்தி வானவெளியில் கலக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில் வலுவடைந்த அந்தச் சக்தி (Cosmics Current) தினம் தினம் காலையில் உணர்வு நிலையில் சங்கமிக்கிறது. இப்படி மனதில் தோன்றி வலுவடைந்த ஆசை நிச்சயமாக மெய்ப்படும். யுகயுகமாகத் தொடர்ந்து வரும் இந்தக் கருத்தை சூரிய உதயமும் வசந்த காலமும் எப்போதும் மாறாமல் நிகழ்வதை நம்புவது போல நீ நம்பவேண்டும் இளைஞனே! விமானப்படை விமானியாக வேண்டும் என்று உனக்கு விதிக்கப்படவில்லை. உனக்கு என்ன விதிக்கப்பட்டு இருக்கிறதோ அது இப்போது வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால், அது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. இந்தத் தோல்வியை மறந்து விடு. உனக்கு விதிக்கப்பட்டுள்ள இடத்திற்குப் போக இது வழிகாட்டும். உன்னுடைய இருப்புக்கான நிஜமான நோக்கம் என்ன என்ற தேடலில் இறங்கு. உன்னுடைய சுயத்தோடு நீ ஒன்றிவிடு, என் மகனே! கடவுளின் விருப்பத்திற்கு உன்னை ஒப்படைத்து விடு."

மேற்கண்ட வார்த்தைகள் அப்துல்கலாமிற்கு 'மந்திரச் சொற்கள்' ஆகின. இந்தச் சந்திப்பு கலாம் வாழ்வில் மிக முக்கியத் திருப்புமுனையானது. ரிஷிகேஷிலிருந்து டில்லி திரும்பிய கலாம், DTD&P (Air) அலுவலகத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராகச் சேர்ந்தார். அதன்பின் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்தவை உலகறிந்த வரலாறு.


போதனைகள்

சுவாமி சிவானந்த சரஸ்வதி சீடர்களுக்குப் பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மையைக் கடைப்பிடியுங்கள். உங்கள் அந்தரங்கத்தைக் கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை.

* தன்னலமற்ற தொண்டே ஆன்மிக வாழ்வின் அடிப்படை. அதன் மூலம் உள்ளத் தூய்மையும், அதனால் யோகமும், வேதாந்த ஞானமும், இறுதியில் ஆத்ம அனுபூதியும் பெறலாம்.

* தன்னலமற்ற சேவையின் மூலம் ஒருவர் மிகுந்த கருணை, பணிவு மற்றும் பற்றின்மையை வளர்த்துக்கொண்டு, இறுதியில் அகங்காரத்தைக் கடக்க முடியும்.

* அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தி. இதைப் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் நம்மை வந்தடையும்.

* இறைவனுடைய கரங்களில் தன்னை ஒரு கருவியாகக் கருதிச் செயல்படுவதும், இவ்வுலகம் முழுவதும் பரம்பொருளாகிய அவரே வியாபித்திருக்கிறார் என்ற உணர்வுடன் செயல்படுவதுமே யோகம் எனப்படும்.

* யோகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், ஒருவர் மேம்பட்ட சுய விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டு, இறுதியில் அனைத்தின் ஒற்றுமையை உணர முடியும்.

* யோக சாதகன் இதயத்தைத் தூய்மைப்படுத்துவது மிக முக்கியம். காமம், கோபம், பேராசை, பொறாமை, வெறுப்பு, அகங்காரம், தற்பெருமை, பற்று, கர்வம், மயக்கம் ஆகியவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். இது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதையோ அல்லது யோகாசனப் பயிற்சியையோ விட மிகவும் கடினமானது. யோகம் என்பது இறைவனுடன் ஒன்றிணைதல் அல்லது ஐக்கியம் அடைவதாகும்.

* அகந்தையை அடியோடு ஒழித்து விடுங்கள். கோப உணர்ச்சி, பேராசைகளைக் கிள்ளி எறியுங்கள். அப்போதுதான் அகிம்சையை முழுமையாகப் பின்பற்ற முடியும்.

* தன்னலமற்ற சேவையில் ஈடுபடும் சாதகருக்குச் சில சமயங்களில் மனக்கசப்பும் ஏமாற்றமும் ஏற்படலாம். ஆனால், அவர் அஞ்சாமல் முன்னேற வேண்டும். தனது கடமையுணர்வில் அவர் உறுதியாக இருக்க வேண்டும். அவரது நேர்மை எல்லாத் தடைகளையும் உதவியாக மாற்றும்.

* ஜபம் என்பது மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதாகும். தியானம் என்பது இறைவனின் வடிவத்தையும் அவரது குணங்களையும் தியானிப்பதாகும். இதுவே ஜபத்திற்கும் தியானத்திற்கும் உள்ள வேறுபாடு. ஜபத்துடன் கூடிய தியானம் (ஜப-சஹித) உண்டு; ஜபம் இல்லாத தியானம் (ஜப-ரஹித) உண்டு. ஆரம்பத்தில் நீங்கள் தியானத்தை ஜபத்துடன் இணைக்க வேண்டும். நீங்கள் முன்னேறும்போது, ​​ஜபம் தானாகவே நீங்கிவிடும்; தியானம் மட்டுமே எஞ்சி இருக்கும். அது ஓர் உன்னத நிலை.

* பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். தீயவர்களும் மனம் திருந்தும்படிப் பிரார்த்தனை செய்யுங்கள்.

* சேவையின் மூலமே நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும். அடிப்படை நற்பண்புகள் இல்லாமல், ஒருவரால் இறை உணர்வை அடைவதைக் கனவுகூடக் காண முடியாது.

* மனமே பந்தத்திற்கும் விடுதலைக்கும் காரணம். அமைதியற்ற மனம் தன் அழிவைத் தேடுமே அன்றி, எங்கும் இளைப்பாறுதலைக் காணாது. இறைநாமத்தை மீண்டும் மீண்டும் உச்சரித்தல், சமய நூல்களைப் படித்தல், பக்தி, மௌனப் பயிற்சி, சேவை என சாத்தியமான அனைத்து வகை ஆயுதங்களைக் கொண்டும் மனதை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்க வேண்டும். பிராணாயாமம், ஜபம், பிரார்த்தனை, கீர்த்தனம், தியானம் - இவை அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். சுய உணர்தலே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.

* பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் வாக் சித்தி பெற்று விடுவான். அவனுடைய வார்த்தைகள் அனைத்தும் தெய்விக சக்தி பெற்றுவிடும்.

* கண்களால் நல்லதை மட்டும் பாருங்கள். காதுகளால் நல்ல விஷயங்களை மட்டும் கேளுங்கள். மனதால் பிறருக்கு நல்லதையே எண்ணுங்கள். அப்போது நீங்கள் உத்தமராக மாறிவிடுவதை உணர்வீர்கள்.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline