Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2)
- பா.சு. ரமணன்|ஜூலை 2026|
Share:
நூலும் தெளிவும்
கடப்பா சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய 'ஜீவ-பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம்' என்ற நூல், டாக்டர் குப்புசுவாமிக்கு, துறவி ஒருவரால் அன்புடன் அளிக்கப்பட்டது. அந்தப் புத்தகமே குப்புசுவாமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படக் காரணமாக அமைந்தது.

தினந்தோறும் ஓய்வு நேரத்தில் அந்த நூலை வாசித்தார். அது அவரது வாழ்வின் போக்கை மாற்றியது. சிந்தனைகளை மேம்படுத்தியது. எது நித்தியம், எது அநித்தியம், மனிதனாகப் பிறந்தவன் எதைக் கடமையாகச் செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மைகள் அவருக்கு விளங்க ஆரம்பித்தன. மானுட வாழ்வின் உண்மையான நோக்கம் அவருக்குப் புலப்பட்டது.

துறவு நாட்டம்
மானுடர்களின் துயரம், நோய், மரணம், இழப்பு ஆகியவை அவருள் பல கேள்விகளைத் தோற்றுவித்தன. பொருளாதார ஆசை அவரை விட்டு நீங்கியது. செல்வம், பதவி, பட்டம், அந்தஸ்து மற்றும் துன்பங்களுக்கு நிரந்தரத் தீர்வைக் கொடுக்க முடியாத பொருள்சார் வாழ்க்கை மீது அவருக்கு மிகப்பெரிய சலிப்பு ஏற்பட்டது. மனம் ஆன்மிகத்தையும் துறவையும் நாடியது.

ஏற்கனவே கருணை மிகுந்திருந்தவர், மேலும் கருணை கொண்டவரானார். நோயாளிகளுக்கு உதவுவதும், பிரார்த்தனை செய்வதும் மேலும் அதிகரித்தன. நாளடைவில் அவர் மனம் முழுக்க முழுக்க ஆன்மிகத்தை நாடியது. வேலையை விட்டுவிட்டு, உடைமைகளைத் தானம் செய்துவிட்டு, மலேசியாவிலிருந்து வெளியேறினார். கப்பல்மூலம் இந்தியாவுக்குப் பயணப்பட்டார். சென்னையை வந்தடைந்தார். நண்பர் ஒருவர் வீட்டில், கொண்டு வந்திருந்த உடைமைகளை வைத்துவிட்டு அவரிடம் ஏதும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார். துறவி ஆகவேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

பரிவ்ராஜக வாழ்க்கை
குப்புசுவாமி கடவுளையே வழிகாட்டியாகக் கொண்டு, உடைமைகள் ஏதுமின்றி பரிவ்ராஜக வாழ்க்கையை மேற்கொண்டார். முதலில் ரயிலில் காசிக்குச் சென்றார். கங்கையில் நீராடினார். காசி விஸ்வநாதரைத் தரிசித்தார். காசியிலேயே சில நாட்கள் தங்கினார். பின் வழிப்போக்கர் ஒருவர் செய்த உதவியால் காசியை விட்டு நீங்கி பூனாவுக்குச் சென்றார். பின் பண்டரீபுரம் சென்றார். தொடர்ந்து கிராமம் கிராமமாகச் சென்றார். பசித்தால்கூட உணவை யாசிக்காமல் அமைதியாக அமர்ந்திருப்பார். யாராவது அவர் துறவி என்பதையும் பசியோடிருக்கிறார் என்பதையும் அடையாளம் கண்டு உணவளித்தால் ஏற்றுக் கொள்வார். இப்படியே வாரங்கள், மாதங்கள் கடந்தன. குப்புசுவாமி மேற்கொண்ட துறவு வாழ்க்கை அவருக்கு இன்பத்திலும், துன்பத்திலும் சகிப்புத்தன்மை, சமநிலையான பார்வை மற்றும் மன அமைதியை வளர்த்துக்கொள்ள உதவியது.

ரிஷிகேசில் குப்புசுவாமி
செல்லும் வழியில் உடன் வந்த பயணி ஒருவர் மூலம் இமயமலையில் அமைந்திருந்த, இறை ஞானத்திற்காக ஏங்கும் ஒரு சிலரைத் தவிர வெளி உலகிற்கு அக்காலத்தில் அதிகம் அறியப்படாத இடமான ரிஷிகேசத்தைப் பற்றிக் குப்புசுவாமி அறிந்துகொண்டார். மே 08, 1924 அன்று ரிஷிகேசத்தைச் சென்றடைந்தார். கங்கைக் கரையிலும் அங்குள்ள சில தங்குமிடங்களிலும் நாட்களைக் கழித்தார். பெரும்பாலான நேரத்தைத் தியானத்தில் செலவிட்டார்.



குருவும் சீடனும்
அன்று ஜூன் 1-ம் தேதி. அதிகாலை. கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார் குப்புசுவாமி. அப்போது அங்கே மற்றொரு சாதுவைக் கண்டார். அவர் தான் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி. முன்ஜன்ம நற்பயனால் சாதுவின் பார்வையால் கவரப்பட்டார் குப்புசுவாமி. சாதுவும் குப்புசுவாமியின் ஒளிவீசும் முகத்தைக் கண்டு வியந்தார். இருவரும் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டனர்.

குப்புசுவாமி, அவரே தன் குரு என்பதை உள்ளுணர்வால் உணர்ந்தார். ஓடிச்சென்று கால்களில் விழுந்து வணங்கினார். அவரை ஆசிர்வதித்தார் விஸ்வானந்த சரஸ்வதி. பின் குப்புசுவாமி, உணவுக்காக 'பாபா காளிகாம்லிவாலா' சத்திரத்திற்குச் சென்றார். அது சன்யாசிகளான சாதுக்களுக்கு மட்டுமே உணவு வழங்கும் இடம். குப்புசுவாமி 'துறவி' அல்ல என்பதால் அவருக்கு உணவு மறுக்கப்பட்டது. அதனால் குப்புசுவாமி வந்த வழியே திரும்பிச் சென்றார்.

சோர்வுடன் செல்லும் வழியில் ​​சுவாமி விஸ்வானந்த சரஸ்வதியை மீண்டும் சந்தித்தார். விஸ்வானந்த சரஸ்வதி, குப்புசுவாமி எதுவும் கூறாமலேயே நடந்ததை உணர்ந்து கொண்டார். குப்புசுவாமியைத் தனது குடிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு உணவளித்து ஆற்றுப்படுத்தினார். சில சடங்குகளுக்குப் பின் குப்புசுவாமிக்கு சன்யாச தீட்சை அளித்தார். (விரஜா ஹோமம் எனும் சடங்கு பின்னர் கைலாச ஆசிரமத்தில் சுவாமி ஸ்ரீ விஷ்ணு தேவானந்தஜி மகாராஜ் அவர்களால் செய்யப்பட்டது.) குப்புசுவாமி உலகியல் ஆடைகளைக் களைந்து, குருவால் வழங்கப்பட்ட, சன்யாசிகளுக்கான காவி உடையை அணிந்து கொண்டார். அவருக்கு ரகசிய மந்திரங்கள் அடங்கிய குரு உபதேசம் செய்யப்பட்டது.

டாக்டர் குப்புசுவாமி, தீட்சை பெற்று 'சுவாமி சிவானந்த சரஸ்வதி' ஆனார்.

அது குறித்து சுவாமி சிவானந்த சரஸ்வதி தமது சுயசரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “ஒரு குருவைத் தேடி நான் ரிஷிகேசம் சென்றடைந்து, இறைவனின் அருளுக்காகப் பிரார்த்தனை செய்தேன். 'எனக்குக் குரு தேவையில்லை. கடவுளே என் குரு' என்று சொல்லும் ஆணவம் பிடித்த மாணவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தங்கள் ஆடைகளைத் தாங்களே மாற்றிக்கொண்டு சுதந்திரமாக வாழ்கிறார்கள். சிரமங்களும் துன்பங்களும் அவர்களைச் சந்திக்கும்போது, ​​அவர்கள் திகைத்துப் போகிறார்கள். சாஸ்திரங்கள், முனிவர்கள் மற்றும் ஞானிகள் விதித்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறுவதை நான் விரும்புவதில்லை. உள்ளத்தில் மாற்றம் ஏற்படும்போது, ​​புறத்தோற்றத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒரு சன்யாசியின் மகிமையையும் விடுதலையையும் கோழைகளாலும் பலவீனமானவர்களாலும் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது.

ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட குரு அவசியம். குருவுக்கெல்லாம் குருவான இறைவனை அடைவதற்கான பாதையை அவரால் மட்டுமே உங்களுக்குக் காட்ட முடியும், மேலும் உங்கள் பாதையில் உள்ள கண்ணிகளையும் இடர்ப்பாடுகளையும் அவரால் மட்டுமே நீக்க முடியும். ஆத்மஞானம் என்பது ஒரு தெய்விக அனுபவம். சத்தியத்தை உணர்ந்து ஆத்மஞானத்தை அடைந்த முனிவர்களின் வார்த்தைகளில் முழுநம்பிக்கை வைப்பதன் மூலமே நீங்கள் ஆன்மிகப் பாதையில் முன்னேற முடியும்.

மனம் மாறிய ஒருவருக்கு காவியாடை அணிவது மிகவும் அவசியம். பழக்கத்தின் காரணமாக, புலன்கள் தன்னிச்சையாகச் சஞ்சரித்தால், ​​நீங்கள் அணிந்திருக்கும் அந்த வண்ண ஆடையைப் பார்த்த கணமே, நீங்கள் ஒரு சன்யாசி என்பதை உங்களுக்கு அது நினைவூட்டும். அது ஒரு உத்வேகத்தைக் கொடுத்து, தீய செயல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும். அதற்குத் தனிப்பட்ட பெருமையும் நன்மைகளும் உண்டு. ஓர் உண்மையான சன்யாசியால் மட்டுமே எல்லாத் தொடர்புகளையும் பந்தங்களையும் துண்டித்து, பற்றுகளிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.”

(தொடரும்)
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline