உலகளாவிய மலைகளுள் இந்துக்களால் மிகவும் புனிதமாகப் போற்றப்படும் மலை, கைலாய மலை. எந்நாட்டவர்க்கும் இறைவனான சிவன் அம்மலையில் வீற்றிருப்பதே அதன் புனிதத் தன்மைக்குக் காரணம். கைலாய மலையுள் சிவன் உறைகிறார்; அதனால் அம்மலை புனிதமானது. ஆனால் சிவனே மலையாக வீற்றிருந்தால் அம்மலை எவ்வளவு புனிதமாக இருக்கும்? ஆம். அப்படிச் சிவனே மலையாக அமர்ந்திருக்கும் தலம்தான் அண்ணாமலை. மலையே இறைவனாக, இறைவனே மலையாகக் காட்சி அருளும் ஒரே தலம், திருவண்ணாமலை திருத்தலம்.
புனிதமலை பிரம்மா, விஷ்ணுவின் ஆணவம் நீக்கச் சிவபெருமான் இங்கு அக்கினிப் பிழம்பாய் எழுந்தருளினார். அவர்கள் தங்கள் பிழை உணர்ந்து, ஆணவம் அழிந்து வணங்கித் துதிக்க, அண்ணாமலையாய்க் குளிர்ந்தமர்ந்தார். நெருப்பாய்ச் சிவந்த மலை என்பதால் இதற்கு 'அருணாசலம்' என்ற பெயரும் உண்டு. யாராலும் எளிதில் அணுக முடியாத மலை என்பதனால் 'அண்ணாமலை' என்றும் அழைக்கப்படுகிறது. 'அருணகிரி', 'சோணகிரி', 'சோணாசலம்', 'அற்புதகிரி' என்றெல்லாம் இம்மலைக்குப் பல பெயர்களுண்டு.
இம்மலை புனிதத்திலும் புனிதமானது என்பதால்தான் ஞானிகளும், மகான்களும், சித்தாதி யோகியர்களும் வந்து தொழுது செல்லும் தலமாக இன்றளவும் விளங்கி வருகிறது. யுகங்கள் அழிந்தாலும் தாம் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும் இஞ்ஞான மலையைத் தேடி வந்து பலரும் தங்கள் அஞ்ஞான இருளைப் போக்கிச் செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அண்ணாமலையின் பெருமைகள் அளவிடற்கரியன.
அண்ணாமலையின் பெருமைகள் நினைத்தாலே முக்தி தரும் தலம்; பிரம்மாவும், விஷ்ணுவும், துர்க்கையும் தவமிருந்த தலம்; பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலம்; அம்மனுக்கு இடப்பாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக ஈசன் காட்சியளித்த தலம்; சமயக் குரவர் நால்வராலும் போற்றிப் பாடப்பட்ட தலம் எனப் பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட இம்மலை, ஞானியர் பலரை ஈர்த்ததில், இன்றும் ஈர்த்து வருவதில் என்ன வியப்பிருக்க முடியும்?
அண்ணாமலை வாழ் சித்தர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும், மகா சித்தருமாக விளங்குபவர் இடைக்காடர். பண்டைய பதினெண் சித்தர்கள் பட்டியலுள் இவர்தான் முதலாமவராக வைக்கப்படுகிறார். இடைக்காடர், திருமூலர், கொங்கணவர், குதம்பைச் சித்தர், தேரையர், அகப்பேய்ச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், காலாங்கிநாதர், பிண்ணாக்கீசர், போகர், ரோமரிஷி, புஜண்டர், சட்டை முனி, கம்பளிச் சித்தர், கபில முனி, கஞ்சமலைச் சித்தர், சென்னிமலைச் சித்தர், புலிப்பாணி என்று அப்பட்டியல் சொல்கிறது.
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். காரணம், நாம் அவைபற்றிச் சரியாக அறிய முடியாதது என்பது மட்டுமல்ல; அறிந்தால் 'இதுதானா, இவ்வளவு தானா' என்ற ஓர் அலட்சிய எண்ணம் தோன்றும் என்பதற்காகவும்தான். நதிகளின் பிரம்மாண்டத்தையும், ரிஷிகளின் அளவற்ற ஆற்றலையும் அறிந்துகொண்ட பின்னர், நதியின் மூலத்தை முனிவர்களின் ஆரம்ப வாழ்க்கையை ஆராயப் புகுந்தோமானால் நமக்குச் சில சமயம் ஏமாற்றமே மிஞ்சும். 'பிரம்ம ரிஷி' என்றும் 'ராஜ ரிஷி' என்றும் போற்றப்படும் விசுவாமித்திரர் ஆரம்ப காலத்தில் ஆசாபாசமுள்ளவராக, ஒரு நாட்டின் மன்னராக இருந்தவர். தமிழ்நாடு, கர்நாடகா என்று பரந்து சீறிப் பாயும் காவிரி ஒரு சிறிய ஊற்று ஒன்றிலிருந்துதான் பொங்கி வருகிறது. இவ்வாறு பல சமயங்களில் மூலம் பற்றிய ஆராய்ச்சிகள் நமக்கு ஏமாற்றத்தையே தரும்.

மகான்கள், சித்தர்களின் வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். சாதாரண மனிதராகப் பிறந்து, சாதாரண மனிதராக வாழ்க்கை நடத்தி, கழிய வேண்டிய தங்களின் எஞ்சிய கர்மவினையை முற்றிலுமாக அனுபவித்துக் கழித்ததும் மகான்களாகவும், சித்தர்களாகவும் பரிணமித்தவர்கள் பலர் உண்டு. பல மகான்கள், சித்த புருடர்கள் எங்கு எப்போது தோன்றினார்கள் என்ற விவரம் கூடச் சரிவரக் கிடைப்பதில்லை. அவர்களும் அதனைத் தெரிவிக்க விரும்புவதில்லை. இடைக்காடரின் தோற்றம் குறித்தும் இவ்வாறு பல செய்திகள் காணக் கிடைக்கின்றன.
தோற்றம் இவர் இடையர் குடியில் தோன்றியவர் என்றும், இடையன் திட்டு என்னும் பகுதியில் வாழ்ந்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும், இடைகழி நாட்டில் பிறந்தவர் என்றும் நம்பப்படுகிறது. அதுபோக இவர் விஷ்ணுவின் அருள்பெற்ற அவதார புருடர் என்றும், அமிர்த கலசம் கையில் கொண்டவர் என்றும் கருத்துகள் உள்ளன. நாயன்மார்களில் ஒருவராகிய ஆனாய நாயனாரே இடைக்காட்டுச் சித்தர் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு இவர் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் காணக் கிடைக்கின்றன. பொதுவாக இரு இடையர்கள் பேசிக் கொள்வது போல் இவர் பாடல்கள் அமைந்திருப்பதாலும், பால் கறத்தல், பசுவை விளித்தல், கோனாரை விளித்தல் முதலிய இடையர் தொடர்பான கருத்துகள் அடங்கிய பாடல்களாக அவை இருப்பதாலும் இவருக்கு ”இடைக்காடர்” என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. சித்தர் ஞானக் கோவையில் இவர் பாடியதாகச் சில பாடல்கள் காணப்படுகின்றன. 'ஊசிமுறி', 'வருஷாதி பலன்' போன்ற நூல்களையும் இவர் இயற்றியதாகத் தெரிகிறது. போகரின் மாணக்கர் என்றும், கொங்கண மகரிஷியின் சீடர் என்றும் கூறப்படுகிறது.
மகா சித்தர் இடைக்காடர் சதய நட்சத்திரத்தில், கும்ப ராசியில் தோன்றியவர். பிறவி ஞானி. தம் குல வழக்கப்படி அண்ணாமலையில் இவர் ஆடுகள் மேய்த்து வந்தார். மனமோ எப்போதும் ஈசனிடத்தே நிலைத்திருக்கும்.
இவரது பரிபக்குவ நிலையைப் பரிசோதிக்க எண்ணி ஒருநாள் முதியவர் வடிவில் வந்தார் நவ சித்தர்களுள் ஒருவர் வந்து. உணவு வேண்டி யாசித்தார்.
மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சிலவற்றைக் கூட்டி வந்து பால் கறந்து கொடுத்தார் இடைக்காடர். முதியவரின் பாதம் பணிந்தார்.
சித்தர் மனம் மகிழ்ந்தார். ஆட்டுப் பால் அளித்துத் தன் பசிப்பிணி போக்கியவனுக்கு ஞானப்பால் அளித்து பிறவிப்பிணி போக்க எண்ணினார். காலக்கணிதம், வான சாஸ்திரம், மருத்துவம், யோகம் என அனைத்தையும் இடைக்காடருக்கு போதித்து மகா சித்தராய் ஆக்கினார்.
அது முதல் இடைக்காடர், இடைக்காட்டுச் சித்தர் ஆனார். தம் சித்தாற்றல் கொண்டு மக்கள் குறை போக்கினார். மனப்பிணி நீக்கினார்.
பஞ்சம் போக்கினார் சித்தர் இடைக்காடர் முக்காலமும் அறிந்தவராக இருந்தார். ஜோதிட மற்றும் வான இயல் சாஸ்திர அறிவு மிக்க இவர், மிகப்பெரிய பஞ்சம் வரப்போவதை ஞான திருஷ்டியால் உணர்ந்தார். தமது ஆடுகளுக்கு எருக்கிலையை உணவாகக் கொடுத்துப் பழக்கினார். மேலும் தான் வசித்த குடிலில் குறுவரகை மண்ணுடன் கலந்து தேய்த்துச் சுவரெழுப்பினார்.
விரைவிலேயே பஞ்சம் வந்தது. மற்ற உயிர்கள் எல்லாம் உணவில்லாமல் வாடி மரிக்க, இவரது ஆடுகள் மட்டும் பஞ்சத்தில் கிடைத்த எருக்கிலையைக் கொண்டு வாழ, சுவற்றைத் தேய்த்து அதிலிருந்து விழும் குறுவரகை உட்கொண்டு இவர் உயிர் வாழ்ந்தார்.
இவரும் இவரது ஆடுகளும் மட்டும் உயிர் பிழைத்திருக்கும் அதிசயத்தைக் கண்ட நவக்கிரகங்கள் ஆச்சரியத்துடன், காரணத்தை அறிய விரும்பினர். மாறுவேடத்தில் இடைக்காட்டுச் சித்தரை அணுகினர். வந்தவர்கள் நவக்கிரகங்கள்தான் என்பதை உணர்ந்து அவர்களை வரவேற்ற இடைக்காடர், எருக்கிலையை உண்ட ஆட்டின் பாலை அவர்களுக்கு விருந்தாகக் கொடுத்தார். உண்ட அவர்கள், ஒருவர் பின் ஒருவராக மயங்கிச் சரிந்தனர்.

வானசாஸ்திரம் அறிந்த இடைக்காடர், கோள்களின் நிலை எவ்வாறு இருந்தால் தற்போது பஞ்சம் மாறி, மழை பெய்து, சுபிட்சம் பெருகும் என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்பக் கீழே மயங்கிக் கிடந்த நவக்கிரகங்களின் நிலையை மாற்றி அமைத்தார். சற்று நேரத்தில் மழை பெய்தது. பூமி குளிர்ந்தது. உயிர்கள் செழித்தன. மயக்கம் தெளிந்து எழுந்த நவக்கிரகங்கள், இடைக்காடரின் திறமையையும், ஞானத்தையும், உலக நன்மைக்காக அவர் செய்ததையும் எண்ணி அவரை வாழ்த்தி விடைபெற்றனர்.
அதுமுதல் அண்ணாமலையில் இடைக்காடரின் புகழ் பரவியது. அவரும் தம் தவ ஆற்றல்களைக் கொண்டு இறுதிக்காலம்வரை மக்களுக்குப் பல நன்மைகள் புரிந்து வாழ்ந்தார். தம்மை நாடி வந்த பக்தர்களிடம் ஏழையை, இடையனை, இளிச்சவாயனைத் தொழுது, அவர்கள் வழி நடந்து வந்தால் சீக்கிரம் நல்லது நடக்கும் என்று சொல்வார். சித்தர்களின் மொழி எப்போதுமே பரிபாஷை மொழியாகவே இருக்கும். அந்த வகையில் ஏழை என்று ராமபிரானையும் (தமது ராஜ்யத்தைத் துறந்து காட்டுக்குச் சென்றதால்); இடையன் என்று கிருஷ்ணனையும் (மாடு மேய்த்ததால்) இளிச்சவாயன் என்று நரசிம்மரையும் (இரண்யகசிபுவைக் கொன்று திறந்த வாயுடன் காட்சி தருவதால்) அவர் குறிப்பிட்டார். ராமன் வழியில் ஏகபத்தினி விரதனாகவும், கிருஷ்ணன் வழியில் தர்மத்தைக் காப்பவனாகவும், நரசிம்மர் வழியில் அதர்மத்தை அழிப்பவனாகவும் ஒருவர் இருக்க வேண்டும் என்பதே அவர் சொல்லின் சூட்சுமமான உட்பொருள்.
சங்ககாலத்தில், குறிப்பாக திருவள்ளுவர் காலத்தில், வாழ்ந்த இடைக்காடர் வேறு; இவர் வேறு என்பது குறிப்பிடத்தக்கது..
சமாதி இறுதியில் குருவின் ஆட்சி மிகுந்திருந்த ஒரு நன்னாளில் இடைக்காடர் மகா சமாதி ஆனார். இடைக்காடரின் சமாதி மலையின் பின்புறத்தே இருப்பதாகவும், அன்ணாமலையார் ஆலயத்தின் பின்புறம் இருப்பதாகவும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு சிலர் இடைககாடர் சமாதி திருவண்ணாமலையில்,. அதன் உச்சிக்குச் செல்லும் வழியில் அல்லிச்சுனை அருகே அமைந்துள்ளதாகவும் கருதுகின்றனர். சிலர் மானாமதுரையை அடுத்துள்ள இடைக்காட்டூரில் இவர் சமாதி ஆகியுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சித்தர்களான போகர் பழனி ஆலயத்திலும், திருமூலர் சிதம்பரம் தலத்திலும். சுந்தரானந்தர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் மேலும் பல சித்தர்கள் பல ஆலயங்களிலும் ஜீவசமாதி கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருப்பதாக நம்பிக்கை. அதுபோலவே இடைக்காடரும் திருவண்ணாமலை தலத்திலேயே ஜீவசமாதி கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது எங்கே அமைந்துள்ளது என்பது பலரும் அறியாததாக உள்ளது.
அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் கோபுரத்தை ஒட்டி அமைந்துள்ள 'அண்ணாமலையார் பாதம் என்பதுதான் இடைககாடர் சமாதி என்பது ஒரு சிலரது நம்பிக்கை. அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் நேர்பின்னால் அமைந்துள்ள சிறிய நான்கு கால் மண்டபத்தின் கீழே அவர் சமாதி அமைந்துள்ளதாகச் சிலர் கருதுகின்றனர். அங்கிருக்கும் சிறிய சிலா ரூபம் சித்தர் வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பலரும் அங்கே தீபமேற்றி வழிபட்டு வருகின்றனர். ஆனால் அது இடைக்காடர் சமாதி அல்ல என்றும் அருணாசல யோகீஸ்வரரின் சமாதி என்றும் சிலர் கூறுகின்றனர்.
அண்ணாமலையார் ஆலயத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள கோசாலையை ஒட்டியுள்ள ஒரு பகுதியில், குகை போன்ற அமைப்பிற்குள் அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கே உள்ள சிறிய மண்டபத்தில் சிறிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இடைக்காட்டுச் சித்தர் வழிபாட்டுக் குழுவினர் இந்த ஜீவ சமாதி ஆலயத்தைப் பராமரித்து வருகின்றனர். இடைக்காடர் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து சமாதி ஆன திருத்தலமாக திருவண்ணாமலை திருத்தலம் அறியப்படுகிறது.
இடைக்காடரைத் தொழுவோம்; என்றும் இனிமையாய் வாழ்வோம். |