|
| தென்றல் பேசுகிறது... |
   |
- | ஜனவரி 2026 |![]() |
|
|
|
|
 |
நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் புத்தாண்டை வரவேற்பதுதான் வழக்கம். ஆனால், 'இத்தோடு 2025 போனதே' என்ற நிம்மதிப் பெருமூச்சோடு உலகம் 2026ஐ வரவேற்கிறது. இயற்கை ஏற்படுத்திய பனி, மழை, நெருப்பு, வெள்ளம், எரிமலை வெடிப்பு போன்ற துயரங்கள் ஒருபக்கம் என்றால் அதைவிடப் பெரிய துன்பங்கள் மனிதரால் செய்யப்பட்டவைதாம். சென்ற ஆண்டு ட்ரம்ப் அரசு பதவியேற்ற உடன் அமெரிக்காவுக்கு வருகைதந்த முதல் தேசத்தலைவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. அதற்குப் பிறகு மோதியைப் பணிய வைப்பதற்கென அமெரிக்க அதிபர் செய்த எல்லாமும் அமெரிக்க இந்தியர்களை மட்டுமல்லாமல் எல்லாத் தரப்பு அமெரிக்கர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. H1B விசா வழங்கும் முறையை மாற்றியது முதல், இறக்குமதி வரிகளை விண்ணைத் தொடவைத்தது வரை எதைச் சொல்வது, எதை விடுவது! கூரையில் தீ வைத்தால் வீடும்தான் பற்றி எரியும் என்பதைப் புரிந்துகொள்ள ஒருவருக்கு ஐன்ஸ்டைனின் IQ தேவையில்லை.
போதாக்குறைக்கு கஞ்சாவையும் அதிலிருந்து தயாரிக்கப்படும் CBD என்ற போதைப் பொருளையும் மருத்துவத் தேவை என்ற போர்வையில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. போதைப்பொருள்கள் இளைஞர்களை வன்முறைக் கலாச்சாரத்தில் தள்ளிவிடும் என்பது சமீபத்தில் திருப்பூரில் ஒருவர் கத்தி முதலிய ஆயுதங்களால் போலீஸ் அதிகாரியைத் தாக்க முயன்ற சம்பவம் காண்பித்தது. போதையில் விழுந்துவிட்ட நாடுகள் உருப்பட்டதில்லை. ஒலி மாசுபடுவதைத் தடுக்கத் துப்பாக்கிகளுக்கு சைலன்சர் பெறுவதை எளிதாக்கிய சட்டத்தை ஒத்ததே இதுவும்!
பல சவால்கள் இருந்தபோதும், GDP வளர்ச்சி விகிதம், விண்வெளி ஆய்வு, பணவீக்கத்தைக் குறைத்தல், பல நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்தல், பேரிடரில் தவிக்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கு விரைந்து உதவிக்கரம் நீட்டுதல் எனப் பல முனைகளிலும் பாரதம் காட்டும் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளே இருந்து கொண்டே அரிக்கும் கரையான்கள் தென்பட்டாலும் "நெருப்பையும் கரையான் அரிக்குமோ" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நாசகார சக்திகளைத் துணிச்சலோடு அடையாளம் காட்டும் 'துரந்தர்' போன்ற திரைப்படங்களின் வெற்றி நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
★★★★★
நல்ல படைப்புகளும், மேலோர் காட்டிய வழிமுறைகளும், சமகாலத்தவரின் சாதனைகளும் நமது சிந்தனை மற்றும் செயல்பாடுகளைச் சிறப்புற வைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு தென்றல் உங்களுக்கு இந்தப் புத்தாண்டு விருந்தைக் கொணர்கிறது. வெற்று ரசனைக்கு மட்டுமே தீனி போடாமல், நல்லவற்றைச் சுவையோடு கொடுத்து ரசிக்க வைக்கும் தென்றலின் பணி இந்த ஆண்டிலும் தொடரும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பெரியோர் வாக்கு. வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள். |
|
|
தென்றல் ஜனவரி 2026 |
|
|
|
|
|
|
|
|
|
|