|
தென்றல் பேசுகிறது... |
   |
- | ஆகஸ்டு 2025 |![]() |
|
|
|
 |
'சத்தமில்லாமல் ஒரு கொலை'! என்ன, திகில் தொடரின் தலைப்பைப் போல் இருக்கிறதா? இனிமேல் அமெரிக்காவில் துப்பாக்கிக் கொலைகள் இப்படித்தான் நடக்கும். துப்பாக்கிச் சத்தத்தை அடக்கிவிடும் சைலன்சர்களை யார் வேண்டுமானாலும் பதிவோ லைசன்ஸோ இல்லாமல் வாங்கலாம் என்று சட்டத் திருத்தம் வந்துவிட்டது. விமான நிலையம், வங்கிகள், மால்கள் என்று பார்த்த இடத்தில் எல்லாம் பாதுகாப்புக்கு ஏராளமாகச் செலவாவதைப் பார்க்கிறோம். சென்ற 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு 11 நிமிடமும் துப்பாக்கியால் கொலை நிகழும் இந்த நாட்டில், சைலன்ஸரைக் கட்டுப்பாடின்றிப் பரவலாக்கினால் அது எங்கே கொண்டுபோய் விடும் என்று அச்சமாக இருக்கிறது. ஆனால் இதில் கொஞ்சம் சிரிக்கவும் இடமுள்ளது! சட்டத் திருத்தத்துக்குச் சொல்லப்பட்டுள்ள காரணம்: சைலன்ஸர் இல்லாமல் சுடுவதால் ஏற்படும் வெடிச் சத்தத்தில் பலபேர் செவிடாகி விடுகிறார்களாம். செவிடாவதைவிட மரணம் நல்லது என்று அரசு கருதுகிறதோ!
அதைவிடப் பெரிய ஜோக் என்னவென்றால், இந்தியப் பொருளாதாரத்தை 'இறந்த பொருளாதாரம்' என்று அதிபர் ட்ரம்ப் சொல்லியிருப்பதுதான். அமெரிக்க அரசு 36.25 ட்ரில்லியன் டாலர் கடனில் மூழ்கியிருக்கின்ற நிலையில், கனடா உட்படப் பல நட்பு நாடுகளை எதிரிகள் ஆக்கிவிட்ட நிலையில், இறக்குமதி வரி உயர்வு என்ற பெயரில் பொருட்களை வரவிடாமல் விலையை ஏற்றித் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.97% ஆகத் தத்தளிக்கும் நிலையில் இந்தியாவைப் பார்த்து இப்படிச் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கேலிக்கூத்துப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. "பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கும் நடந்த போரில் தலையிட்டு நான்தான் போர் நிறுத்தம் கொண்டுவந்தேன்" என்று அதிபர் சொல்வதாகட்டும், அதற்காக வெள்ளை மாளிகையே போய் நோபெல் கமிட்டியிடம் பரிசு கொடு என்று கேட்பதாகட்டும்... உலக அளவில் அமெரிக்காவின் பிம்பம் இவ்வளவு அதல பாதாளத்தை அடைந்து யாரும் பார்த்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. 'அவசரப்பட வேண்டாம். இதைவிடவும் கீழே போக இவரால் முடியும்' என்று சொல்லி நிறுத்திக் கொள்வோம்!
★★★★★
ஆய்வுத் திறனாலும், வெளியீடுகளாலும் பெயர் பெற்றுள்ள சிறந்த தொல்லியல் ஆய்வாளரான முனைவர் வெ. வேதாசலம் அவர்களைப் பற்றிய முகப்புக் கட்டுரை தகவல் களஞ்சியம். நல்ல சிறுகதைகள், செய்திகள், வாரியார் வாழ்க்கைச் சித்திரம் என்று பல அம்சங்களோடு சிறப்பாக வெளிவருகிறது ஆகஸ்டு மாதத் தென்றல்.
வாசகர்களுக்கு இந்திய சுதந்திர தினம், கிருஷ்ண ஜயந்தி, விநாயக சதுர்த்தி நன்னாள் வாழ்த்துகள். |
|
தென்றல் ஆகஸ்ட் 2025 |
|
|
|
|
|
|
|