Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-21-e)
- கதிரவன் எழில்மன்னன்|நவம்பர் 2026|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவைகள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பலப்பல தருணங்களில் என்னை கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கமல்ல. இந்தக் கட்டுரை வரிசையில் என் அனுபவ பூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்தளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இப்போது ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!

★★★★★


கேள்வி: நான் ஒரு பெரிய நிறுவனத்தில் விற்பொருள் மேலாண்மை அதிகாரி. என் சொந்த நிறுவனத்தை ஆரம்பிக்க ஒரு யோசனை உள்ளது. அதற்காகப் பெரிய ஆராய்ச்சிகள் செய்து நீங்கள் பரிந்துரைத்ததைப் போலவே பலரையும் கலந்து ஆலோசித்தாயிற்று. என் யோசனைக்குச் சாதகமாகக் கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஆனால் ஓரளவு சந்தேகமும் உள்ளது! வேலையை விடுத்து நிறுவனத்தை ஆரம்பிக்கத் தயக்கமாக உள்ளது. அதற்கு உங்கள் பரிந்துரை என்ன?
கதிரவனின் பதில்: இந்த யுக்திக் கட்டுரையின் பகுதியில் "தயங்காதீர்கள் தாவி விடுங்கள்" என்று பதிலளித்திருந்தேன்! ஆனால் கண்மூடித்தனமாகத் தாவச் சொல்லவில்லை. புத்திசாலித்தனமாகச் சில முன் நிபந்தனைகளை அனுசரித்து, பின்னரே தாவ வேண்டும் என்றும் சுருக்கமாகக் கூறியிருந்தேன். இப்போது அந்த முன் நிபந்தனைகள் என்ன, ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தாவ எம்மாதிரியான செயல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பவற்றை விவரித்து வருகிறோம்.

முந்தைய பகுதிகளில் முதல் நிபந்தனையாக, நீங்கள் பெரும் நிறுவன வேலையிலிருந்து விலகி ஆரம்பநிலை நிறுவனத்திலுள்ள சிக்கல்களைச் சந்தித்து, பல வருடங்கள் பாடுபடத் தயாரா என்பதை விவரிக்க ஆரம்பித்தோம். இந்த முதல் நிபந்தனையில் பல துணை அம்சங்கள் உள்ளன என்றும் முதலிரண்டு துணை அம்சங்களாகக் குடும்ப நிதிநிலைமை பற்றியும், எந்தப் பிரச்சனை, பணியானாலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிவரும் என்பதையும், ஏன் நிறுவனம் ஆரம்பித்தோம் என்பதில் தெளிவும் உறுதியும் வேண்டும் என்றும் விளக்கினோம்.

இப்போது முதல் நிபந்தனையின் துணை அம்சத்தைப் பற்றிக் காண்போம்.

ஆரம்பநிலை நிறுவனம் என்றால் பல தரப்பட்ட நெருக்கடிகள் பல திசைகளில் இருந்து எழக்கூடும் என்று சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவற்றை நிவர்த்திப்பதைப் பற்றி மட்டுமே கண்டிருந்தோமே ஒழிய, நிவர்த்திக்க முடியாமல் போனால் என்ன செய்வது என்பதை விவரிக்கவில்லை!

ஆம்! எதிர்வரும் நெருக்கடிகள் அத்தனையையுமே சமாளித்து வெற்றிகண்டு மேற்கொண்டு சர்வ சாதாரணமாகப் பயணித்துக் கொண்டே இருக்க முடியும் என்பதில்லை! சில சமயம் எதாவது ஒரு நெருக்கடியை, உங்கள் அதி சாமர்த்தியத்தினாலும், தீவிர பிரம்மப் பிரயத்தனத்தினாலும் கூட நிவர்த்திக்க முடியாமல் போகக் கூடும்!

அப்போதும் மனம் தளராமல் அத்தகைய தோல்வியை ஏற்றுக்கொண்டு, உங்கள் திட்டத்தையோ, யோசனையையோ சற்று மாற்றிக்கொண்டு, பயணிக்கும் திசையைச் சற்றேயோ அல்லது பெருமளவோ திருப்பிக் கொண்டு மேற்கொண்டு முயலும் மனோதிடம் வேண்டும்.

ஆரம்பநிலை நிறுவனப் பயணத்தில் இத்தகைய சிறு தோல்விகள் சகஜம். அவற்றை ஏற்றுக் கொண்டு பயணிப்பதற்கான சிறு மாற்றங்கள் அல்லது பெரும் மாற்றங்களைப் (small adjustments or big pivots) பற்றி ஏற்கனவே வேறு ஒரு யுக்தியில் விவரித்து விட்டதால் இத்தோடு அதை நிறுத்திக் கொள்கிறேன்.

ஆனால், சில ஆரம்பநிலை நிறுவனங்கள் சிறு தோல்விகளை மட்டும் அல்லாமல், சில நிர்ப்பந்தங்களால் பெரும், நிவர்த்திக்க முடியாத இடைஞ்சல்களைச் சந்திக்கின்றன. அத்தகைய இடைஞ்சல்கள் பலதரப்பட்டவையாக இருக்கலாம். பொதுவாக ஐந்து வகைகளாக அவற்றைப் பிரிக்கலாம்.

முதல்வகை, தொழில்நுட்ப இடைஞ்சல். அதாவது, நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால், விற்பொருள் அப்போது கிடைப்பவற்றை விடப் பெருமளவு அதிகப் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். அதற்கு மிக முன்னேறிய தொழில்நுட்பம் தேவைப்படும். அந்த உன்னத நுட்பத்தை உருவாக்க முடியாமல், தேவைப் படுமளவு பலன் கிட்டாமல் போகலாம்.

இரண்டாவது, வணிக ரீதியாக இடைஞ்சல். எதிர்பார்த்த அளவுக்கு நிறுவனத்தின் விற்பொருளுக்கான தேவை, வாடிக்கையாளர் வரவேற்பு மிகக்குறைவாக இருக்கக் கூடும்.

மூன்றாவது, செயல்பாட்டு இடைஞ்சல் (execution risk). அதாவது, ஓரளவு வாடிக்கையாளர் வரவேற்பு இருந்தாலும், உற்பத்திச் செலவைக் குறைக்க முடியாமல், லாபம் கிட்டும் வழியை எட்ட முடியாமல் போகலாம். அல்லது விற்பனை அல்லது வணிகத் திறமைக் குறைபாட்டால் தேவையான வளர்ச்சி இல்லாமல் போகலாம்.

நான்காவது, நிறுவனக் குழுவினருள் உட்பூசல் உண்டாகி நிறுவனமே சின்னா பின்னமாகி விடவும் கூடும்! இத்தகைய உட்பூசல்கள் பலதரப் பட்டவை. இதை மற்றொரு கட்டுரையில் விவரிப்போம்!

இறுதியாக, பிரச்சனை நிறுவனம் சம்பந்தப் பட்டதாக இல்லாமல் பொருளாதார சூழ்நிலையால் ஏற்படக்கூடும்:

டாட் காம் குமிழி வெடிப்பு, அல்லது 2008-இல் நிகழ்ந்த வீட்டுக்கடன் உருகல் (home mortgage meltdown) போன்ற நிகழ்வுகளால் மூலதனத்தார், நிதியளிப்புகளை ஒரேயடியாக நிறுத்தி விடுவது, அல்லது வாடிக்கையாளர் பொருள் வாங்குவதை வெகுகாலம் தள்ளிப் போடுவது போன்ற நிலைமைகளால் நிறுவனத்தில் முழுமையாக நிதி வறட்சி ஏற்படலாம்.

இவைபோன்ற கடும் இடைஞ்சல்களால் நிறுவனம் முழுத் தோல்வியை அடைந்து, அதை மிகக் குறைந்த விலைக்கு விற்கும் நிர்ப்பந்தமோ அல்லது அதுகூட முடியாமல் ஒரேயடியாக மூடிவிடும் நிலையையோ அடையக் கூடும். அத்தகைய தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் ஆரம்பத்திலேயே இருக்க வேண்டும்.

"எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும்" என்னும் திரைப்பாடல் வரி ஞாபகம் வருகிறது!

அவ்வாறு தோல்வியை ஏற்றுக் கொண்டு, மீண்டும் குதித்தெழுந்து மற்றொரு நிறுவனம் நிறுவியோ, அல்லது மீண்டும் பெரும் நிறுவனப் பதவியில் சேர்ந்தோ, பெரும் வெற்றி கண்டவர்கள் பலர் உள்ளனர். மூலதனத்தாரும் தோல்வியுற்ற தொழில்முனைவோர்களைத் தள்ளி வைப்பதில்லை. அவர்கள் தோல்வியில் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதைத்தான் விசாரிப்பார்கள்.

அதனால் தோல்வி நேர்ந்தாலென்ன, அதன் பிறகு வேறு வெற்றி காண்போம் என்று துணிவொடு களத்தில் இறங்க வேண்டும்!

இத்தோடு முதல் நிபந்தனையைப் பற்றிய விளக்கத்தை முடித்துக் கொள்கிறேன். அடுத்த நிபந்தனையைப் பற்றி அடுத்த பகுதியில் விவரிப்போம்.

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline