
டிசம்பர் 2009ல் ஸ்ரீலங்கா அரசு அகதிகள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்த அகதிகைளத் தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கு அனுமதித்தது. ஏறக்குறைய 75 சதவிகிதத்தினர் மீண்டும் சொந்த இடங்களிலோ தெரிந்தவர்களுடனோ அல்லது வாடகை வீடுகளிலோ தங்குகின்றனர்.
தமிழர்கள் அதிகம் வாழும் முக்கியப் பகுதியான யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஸ்ரீலங்காவின் சின்மயா ஊரக மேம்பாட்டு நிறுவனம் (Chinmaya Organisation for Rural Development-CORD, Srilanka) மிகவும் பாதிக்கப்பட்டோரின் புனர்வாழ்வுக்கான பணிகளை அரசின் கிராமசேவகர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் மூலம் செய்து வருகின்றது. மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோரை இவர்கள் வழியே இனங்கண்டு, அவர்களுக்கான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
CORD தனது விரிவாக்கப் பணி அலுவலர்கள் மூலம் மகளிர் சங்கங்களை உருவாக்கி, வீட்டுத்தோட்டம் அமைத்தல், மாடு, கோழி வளர்த்தல் போன்றவற்றுக்கான உதவிகளைச் செய்துள்ளது. சத்து மாவு, உணவுகள் செய்து விற்கவும் ஊக்கமும் உதவியும் தரப்படுகிறது. புத்தகப்பை, சீரூடை, காலணி, புத்தகம், பேனா, பென்சில் போன்றவை 150க்கும் அதிகமான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறாருக்கும் பால்மாவு முதலியன வழங்கப்படுகின்றன.
தமிழ்ப் பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்கள் உள்ளனர். ஆயினும் இரண்டு கிராமப் பாடசாலைகளில் தெரிவுசெய்த 25 சிறாருக்கான முழுச்செலவு ம்ட்டுமே தற்போது ஏற்க முடிந்துள்ளது. நிலவறைகளில் (bunkers) வெகுநாட்கள் தங்க நேரிட்டதால் பல சிறார்கள் மனவளர்ச்சி, உடல்வளர்ச்சி குன்றிப் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ மனநல, உடல்நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |