திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் என்ற கிராமத்தில், சுற்றியுள்ள 15 கிராமங்கள் பயனடையும் விதத்தில் எய்ம்ஸ் இந்தியா (AIMS INDIA) மருத்துவமனை ஒன்றைக் கட்டிவருகிறது. இதற்கு நிதி திரட்டுவதற்காக ஜூலை 11, 2004 ஞாயிறு மாலை 4 மணிக்கு நியூஜெர்சியில் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பங்கேற்ற லஷ்மண் - சுருதி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கியது.
'தமிழுக்கும் அமுதென்று பேர், என்ற பாரதிதாசனின் பாடலுடன் 'மன்மதராசா' புகழ் மாலதி நிகழ்ச்சியைத் தொடங்க, ஹரிஷ் ராகவேந்திரா இளையராஜா இசையில் தான் பாடிய 'நிற்பதுவே நடப்பதுவே' என்ற பாரதி பாடலைப் பாடினார். அடுத்ததாக மனோ அவர்கள் யேசுதாஸ் பாடிய ஐயப்பன் பாடலைப் பாடவும் நிகழ்ச்சிகளைகட்டியது.
ஆடத்தோன்றும் பாடல்கள் நிறைய பாடப்பட்டன. இளைஞர்கள் ஆடிப்பாடிக் குரலெழுப்பி மகிழ்ந்த வண்ணம் இருந்தனர். ஆட்டோகிராப் படத்தில் வரும் 'ஒவ்வொரு பூக்களுமே....' என்ற பாட்டை அரங்கில் விளக்குகளை அணைத்துவிட்டு பாடி லஷ்மண் பேசியது நெஞ்சைத் தொடுவதாக அமைந்திருந்தது.
ஆண்டார்குளத்தில் மருத்துவமனை கட்ட 19,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கணக்கிட்டுப் பல்வழிகளில் 11,000 டாலர்கள் திரட்டப்பட்டு விட்டது. இந்திகழ்ச்சியின் மூலம் குறைந்தது 6000 டாலர் திரட்டப்படும் என்ற நம்பிக்கையில் 750 பேர் உட்காரக்கூடிய இசையரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். வந்தவை எண்ணிக்கை குறைந்துவிடவே வசூல் இலக்கை எட்ட முடியாவிட்டாலும், குறிக்கோள் பலரைச் சென்றடைந்ததில் அமைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியே.
எய்ம்ஸ் இந்தியாவின் குறிக்கோள் 'மக்களிடையே பாலமாய் இருப்பது' ஆகும். இது வாஷிங்டன் D.C.யைத் தலைமையாக் கொண்டு தமிழகத்தின் கிராமங்களிலே பல்வேறு அடிப்படைப் பணிகளைச் செய்துவருகிறது. இச்சேவைகளைத் தனியாகவும், மற்ற அமைப்புகளுடன் சேர்ந்தும் செயல்படுத்துகிறது. 'கல்விப் பணியில் ஆஷா' (ASHA for Education), 'இந்திய மேம்பாட்டுக் கழகம்' (Association for India's Development), எக்ஸ்நோரா (Exnora International), உதவித் தொகை அறக்கட்டளை (Help Charitable Foundation), 'ஒன்றுபட்ட இந்தியா' (India Together), சிந்தனைச் சிற்பிகள் (Sindanai Sirpigal) இன்னும் பல அமைப்புகளுடனும் சேர்ந்து செயல்படுகிறது எய்ம்ஸ் இந்தியா. |