Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-21-c)
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2026|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பலப்பலத் தருணங்களில் என்னை வினாவியுள்ளனர். அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சிலக் குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படையாகின்றன.

வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் மட்டுமல்ல. இதில் என் அனுபவ பூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும், சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம்.

இப்போது ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!

★★★★★


கேள்வி: நான் ஒரு பெரிய நிறுவனத்தில் விற்பொருள் மேலாண்மை அதிகாரி. சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க யோசனை உள்ளது. அதற்காகப் பெரிதும் ஆராய்ச்சிகள் செய்து நீங்களும் பரிந்துரைத்ததைப் போலவே பலரையும் கலந்தாலோசித்து ஆயிற்று. என் யோசனைக்குச் சாதகமாக கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஆனால் ஓரளவு சந்தேகமும் உள்ளது! வேலையை விட்டுவிட்டு, நிறுவனத்தை ஆரம்பிக்கத் தயக்கமாக உள்ளது. உங்கள் பரிந்துரை என்ன?
கதிரவனின் பதில்: இந்த யுக்திக் கட்டுரையின் பகுதியில் தயங்காதீர்கள் தாவி விடுங்கள் என்று பதிலளித்திருந்தேன்! ஆனால் அப்படித் தாவுவதற்கும் கண்மூடித்தனமாக அல்ல, புத்திசாலித்தனமாக, சில முன் நிபந்தனைகளை அனுசரித்து, பின்பே தாவவேண்டும் என்றும் சுருக்கமாகக் கூறியிருந்தேன். இப்போது அந்த முன் நிபந்தனைகள் யாவை, ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தாவ எம்மாதிரியான செயல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விவரித்து வருகிறோம்.

முன்னர், முதல் நிபந்தனையாக, நீங்கள் பெரும் நிறுவன வேலையிலிருந்து விலகி ஆரம்பநிலை நிறுவனத்திலுள்ள சிக்கல்களைச் சந்தித்து, பல வருடங்கள் பாடுபடத் தயாரா என்பதை விவரிக்க ஆரம்பித்தோம். இந்த முதல் நிபந்தனையில் பல துணை அம்சங்கள் உள்ளன என்றும் முதல் துணை அம்சமாகக் குடும்ப நிதிநிலைமையை எப்படிச் சமாளிப்பது என்பதையும் விளக்கினோம்.

இப்போது அடுத்த துணை அம்சத்தைக் காண்போம்: அமெரிக்கக் குடியரசு தலைவராக இருந்த ஹாரி ட்ரூமன் தன் அலுவலக மேஜைமீது ‘The Buck Stops Here’ என்று ஒரு சிறு செய்திப் பலகையை வைத்திருந்தார். அதற்கு அர்த்தம் என்னவென்றால், அதிபர் சாக்கு சொல்லித் தட்டிக் கழிக்க முடியாது என்பதுதான். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் (மத்திய மந்திரிகளும் கூட!) எதாவது பிரச்சனைக்கு நான் பொறுப்பில்லை என்று வேறு யாரையாவது சுட்டிக்காட்டி, சாக்குச் சொல்லி தட்டிக்கழிக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் முதல்நிலைத் தலைவரான அதிபர் அப்படி சொல்லக் கூடாது. எந்தப் பிரச்சனையானாலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல், பெரும் நிறுவனத்தில் பணியாற்றும் போது எந்த வேலை அல்லது பிரச்சனையை வேறு யார்மேலோ தள்ளிவிட முடியும். ஆனால் ஆரம்பநிலை நிறுவனத்தில் நிறுவனக் குழுவில் இருந்தால், அதுவும் முதல் நிறுவனரானால், அப்படித் தள்ளிவிட முடியாது. எதுவாயிருந்தாலும் தலைமேல் சுமந்து வேலையை முடித்து அல்லது பிரச்சனையைத் தீர்த்தே ஆகவேண்டும்.

அப்படிப்பட்ட வேலை அல்லது பிரச்சனை உங்கள் பொறுப்பாக இருக்கலாம், அல்லது உங்கள் பொறுப்புக்குச் சம்பந்தமே இல்லாததாகவும் இருக்கலாம். பொறுப்பு வட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நிறுவனத்தின் நலனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

இதைப்பற்றி நன்றாக விளங்க ஒரு உதாரணம் உதவும். நீங்கள் தொழில்நுட்பத் தலைவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் பொறுப்பு வட்டம் விற்பொருள் நுட்ப வளர்ப்பு, பொறியியல், உற்பத்தி. அவ்வளவுதான் இருக்கும்.

ஆனால், ஒரு முக்கிய வாடிக்கையாளர் சந்திப்பு நடக்க இருக்கும்போது, விற்பொருளின் அம்சங்களை விளக்கிக் காட்ட (product demo) வேண்டிய சந்தைப் பொறியாளர் உடல்நலம் சரியில்லாததால் வேலைக்கு வர இயலவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். விற்பொருளின் பல அம்சங்களையும் உங்கள் அளவுக்கு நன்கு அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள்!

அப்போது, பெரும் நிறுவனமாக இருந்தால், இது சந்தைத் தலைவரின் பிரச்சனை, அவரே எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று நீங்கள் விலகி இருக்க இயலும். ஆனால் ஆரம்பநிலை நிறுவனத்தில் அது சாத்தியமே இல்லை. உங்கள் சட்டைக் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு, களத்தில் இறங்கி, குறுகிய காலத்தில் அந்த விற்பொருள் விளக்கத்தின் இயக்கத்தை எப்படியாவது கற்றுக்கொண்டு வாடிக்கையாளருக்குக் காண்பித்துச் சமாளித்தே ஆகவேண்டும்.

இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக, தலைமைச் சமையலாளர், பாத்திரம் கழுவுபவரும்கூட (head cook and bottle washer) என்று சொல்வார்கள். அதுபோல எந்த வேலையையும் ஏற்றுக் கொண்டு செய்யும் மனப்பாங்கு இருந்தால்தான் ஆரம்பநிலை நிறுவனத்தில் தாக்குப் பிடிக்க முடியும்.

அடுத்த துணை அம்சத்தை அடுத்த பகுதியில் விவரிப்போம்.

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline