Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறுகதை
நன்மை பயக்கும் எனின்
பாட்டி யாருக்கு
- ராம சங்கர்|ஏப்ரல் 2026|
Share:
காலங்கார்த்தால ஃபோன் அடித்து எங்களை எழுப்பியது. மூத்தமகன் கௌதம் குரல் மறுபக்கத்தில்.

"அம்மா, அப்பா, கிளம்பி எங்கள் வீட்டுக்கு வாருங்கள். தீபாவளி, பொங்கல் பண்டிகை வருகிறது, பின் பப்பு செல்லத்திற்கு பிறந்த நாள் வரும். எங்களுடன் 6 மாதமாவது தங்கணும். அதற்குத் தயாராக வாங்கள். அங்கு வீடு, மாடு, தோட்டத்தை எல்லாம் முனியனைப் பார்த்துக்கச் சொல்லிட்டு வாருங்கள்."

"என்னங்க… எப்போதும் அவுங்கதானே இங்கு வருவார்கள். இந்த வருடம் நாம் இருவரும் பட்டணத்தில் வசிக்கும் பெரியவன் வீட்டிற்குப் போகலாங்க. கூப்பிடறான்." என்றேன்.

அவர் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.

"முனியா, இங்க வா" என்று அழைத்தேன். "மகன் வீட்டுக்குப் போகவும், 2 வயது பேரப்பிள்ளையுடன் விளையாடவும் தாத்தாவுக்கு ஆவல் மிகுதியாகிவிட்டது பார். காணும்பொங்கல் அன்று, என் மகன் எங்களை காரில் எங்காவது ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வது வழக்கம். மகனிடமிருந்து போன் வந்த வேகத்தில் ஐயா பட்டணம் போகத் தயாராகி விட்டார். நீ வீட்டையும் மாடு கன்னு குட்டியையும் நன்றாக, கவனமாகப் பார்த்துக்கொள். தோட்டத்தில் உள்ள 20 மாமரங்கள் பூ விடும் நேரம். பின் வடுக்கள் விழும். பிறகு காய்க்கும். குத்தகைக்காரனை வரச்சொல்லி தகவல் அனுப்பு. உன் கைபேசியில் பணம் போட்டு வைத்துக்கொள். எந்நேரமானாலும் தேவைக்கு ஐயாவை அழைத்துப் பேசு. சரியா?"

★★★★★


"பாத்தி பாத்தி" என்றான் பேரன். நான் அவன் மழலையில் கரைந்து போனேன். "அப்பா ஆபிஷ்" என்று கையைக் காட்டி அழ ஆயத்தமானான் பப்பு. அவனை என் மடியில் அமர்த்தி "வா வா நான் உனக்கு ராபிட் கதை சொல்றேன்" என்றேன்.

வாரக் கடைசியில், "இன்றைக்கு நண்பனைக் குடும்பத்துடன் வரச்சொல்லி இருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டு மாலைதான் திரும்புவார்கள்" என்றான் கௌதம்.

"ஓ வரச்சொல். நான் என்ன சமைக்கணும் சொல்லு. ஒருநாள் தமாஷா பொழுதுபோகும்" என்றேன்.

வீணாவும் ரவியும் வந்தார்கள். கூடவே ஒரு வால். வால் என்றால்? ஆமாம் வாலேதான். அவர்கள் வளர்க்கும் நாய். பெயர் ட்ரோன். என்ன லேட்டஸ்ட்டான பெயர்!

அது என்னிடம் வந்து மூக்கை நீட்டி முகர்ந்து பார்த்தது. என்னை நக்கியது. "ஓ எனக்குப் பிடிக்கலை" கொஞ்சம் நாசூக்காகச் சொன்னேன். "ட்ரோன் அங்க போ வீணா கூப்பிடுகிறாள்."

"அவன் அப்படித்தான். உங்களுடன் பிரண்டு ஆகத்தான் அப்படி முகர்ந்து பார்ப்பான்," வீணா.

"டேய் ட்ரோன். செல்லமே..அப்பாவிடம் போ" என்றாள்.

"யார் அப்பா" என்றேன்.

"ரவிதான்" என்றாள்.

"ஆமாம் இவன்தான் எப்போதும் எங்கள் மூத்த மகன். மூன்று வருடமாக எங்களுடன் பாசமாக இருக்கிறான்" என்றான் ரவி.

"ட்ரோன் அங்க போய் தம்பியுடன் பந்து விளையாடு" என்றான் ரவி.

"யார் தம்பி? என் பேரனா! ஓ இப்படிகூடச் செல்லங்களுடன் உறவுமுறை உண்டா!" எனக்கு அதிர்ச்சி கலந்த சிரிப்பு வந்தது.

பிறகு வீணாவிடம் சொன்னேன், "சிறு வயதில் செல்ல நாய் ஒன்று வளர்த்தோம். ஒரு வருடம் நன்றாக, தமாஷாக விளையாடி, கொஞ்சி... எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ஒருநாள் தெருநாய் இதைக் கடித்துவிட்டது. எங்கள் செல்லத்திற்கு வெறி பிடித்து வாயிலிருந்து நீர் ஊற்றி, அடுத்த நாள் இறந்துவிட்டது. அந்த ஒரு நாளில் என் வீட்டில் 4 பேரையும் கடித்துவிட்டது. அது கடிக்கணும் என்று கடிக்கவில்லை, ஆனால் அதற்கு சாதம் போட்டுவிட்டுச் சாப்பிடு என்று சொல்லிகிட்டே போன என் அம்மாவை அது தற்காப்பிற்காக ஆவ் என்றது. அதோட பல் மெலிதாக அம்மா காலில் கீறிவிட்டது.

டாக்டரிடம் போனால் அவர் 14 ஊசி போடணும் என்றார். அதுவும் அப்பெல்லாம் நாய்க்கடிக்குத் தொப்புளைச் சுற்றி ஊசி போடுவதுதான் மருத்துவ முறை. அந்தக் கசப்பு அனுபவம் கஷ்டமான காலம்.

பிற்காலத்தில் எங்கள் வீட்டில் யாரும் செல்ல நாய் வளர்க்கக் கூடாதென்று தடை போட்டுவிட்டோம்" என்றேன்.

"அம்மா போதும். இந்தக் கதையை நூறு வாட்டிக்கு மேலே கேட்டாச்சு. எத்தனை வருடம் ஆயிற்று, உனக்கே வயசாய்டுச்சு. ஏதோ கஷ்ட அனுபவங்களில் இதுவும் ஒன்றுன்னு மறக்கணும். மறக்காமல் அதே கதையைத் திருப்பித் திருப்பி..." என்றான் கௌதம்.

வீணாவும் ரவியும் திகைத்தார்கள்.

"அந்தக் கதையெல்லாம் இனிமேல் செல்லாது. இப்போ… உன் பேரன் 5 வயதில் செல்ல நாய் வளர்க்க ஆசையாகக் கேட்டால், நாங்கள் வளர்ப்போம்" என்றான் கௌதம்.

சபை மரியாதை நிமித்தம் சரி என்றேன்.

"அம்மா உங்கள் சமையல் சாப்பிடத்தான் வந்தோம். நல்ல காரசாரமான சாப்பாடு. சூப்பர்" என்றாள் வீணா.

"அடிக்கடி வாருங்கள். நல்ல பேச்சு, பொழுதுபோக்காக இருக்கிறது" என்றேன்.

"கௌதம் இதை அங்கு அழைத்துக்கொண்டு போ" உள்ளிருந்து உரக்கக் குரல் கொடுத்தார் தாத்தா. ட்ரோன் அவரிடம் சென்று அவரை நக்குகிறது.

வீணா, "டேய் இங்கே வாடா செல்லம். தாத்தாவைத் தொந்தரவு செய்யாதே."

எனக்கு ஒரே குழப்பம். 'என்ன தாத்தாவா? யாருக்கு! என் பேரனுக்கு அவர் தாத்தா. இந்த நாய்க்கு அவர் தாத்தாவா? ஐயோ ‘நாய்’ என்று சொல்லக்கூடாது! அவர்களின் வளர்ப்பு மகன்.'

அப்படின்னா நான் யார்? பாட்டியா? யாருக்கு? அந்த நாய்க்கு நான் பாட்டியா? என்னடா இது புது உறவா இருக்கு.

அவர்களது புது உறவு பந்த பாசம் எல்லாம் அவர்களுக்கு. எனக்கு எதுக்கு? என் மனம் ஒப்பவில்லை. இந்த வீணா எப்படி அப்படி எங்களை நாயோடு உறவு ஆக்குவாள்?

என் லஷ்மி பசுமாடு, எங்கள் வீட்டில் 6 வருடமாக வளர்கிறது. அது கன்று ஈன்றபோது நான் சாமியை வேண்டிக்கொண்டேன். ஓ, அப்படித்தான் இந்த பாச பந்தமும், உறவும் போலிருக்கு! நான் என்னவரிடம் என் குழப்பத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

கௌதம் மாலை காப்பி போட்டு எல்லோருக்கும் கொடுத்தான். வீணாவும் ரவியும் கிளம்பினார்கள்.

"ட்ரோன், பாட்டி தாத்தாவுக்கு தாங்க்யூ சொல்லு" என்றாள் வீணா.

ஆமாம்… நாய் வேகமாக வாலை விசிறிபோல் ஆட்டியது. ஓ, மன்னிக்கவும், என் புதிய பேரன், அவன் பாஷையில் டாட்டா காண்பித்தான்.

வீணா மீண்டும் என்னைப் பாட்டி உறவு சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதைத் தாத்தா உணர்ந்து விட்டார்.

நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது அவர்களது கார் கிளம்பியது. என் கை தன்னிச்சையாக அசைந்தது, வாய் செயற்கையாகச் சிரித்தது.
ராம சங்கர்,
நியூயார்க்
More

நன்மை பயக்கும் எனின்
Share: 




© Copyright 2020 Tamilonline