Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
அலமாரி
அரு. ராமநாதன் நேர்காணல்
- |ஏப்ரல் 2026|
Share:
கே: வணக்கம். சுதேசமித்திரன் தீபாவளி மலரிலே சிறுகதை. நவீனம் பற்றிய விமரிசனக் கட்டுரைகள் வெளியாகியிருந்தன அல்லவா? அவற்றிலே, 1947-க்குப் பின் சிறுகதை, நவீனம் இரண்டிலும் 'தேக்க காலம்' என்று குறிப்பிட்டிருந்தார்கள் திருவாளர்கள் சி.சு. செல்லப்பாவும் க.நா. சுப்பிரமணியமும். இலக்கிய வட்டத்தில் பெரியதொரு சலசலப்பை ஏற்படுத்திவிட்ட இவ்விவாதத்தைப்பற்றி நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்?
ப: 1947-க்குப் பிறகுதான் கதை இலக்கியம் பொதுமக்களுக்குப் பயன்படும் இலக்கியப் பண்ணையாக மாறத் தொடங்கியது. அதற்கு முன்னால். இலக்கியத் துறையில் மலர்ச்சிகள் ஏற்பட்டனவே தவிர, அவையெல்லாம் ஒரு சிலரின் அந்தப்புரங்களிலே ஒளிந்து கொண்டிருக்கும் பூக்களாகவே இருந்து வந்தன. பொதுவாக, இலக்கியம் பற்றிய விமரிசனம் என்று எடுத்துக் கொண்டாலே, அது அவரவர்களின் மனநிலையைப் பொறுத்த தொடர் விவாதமாகவேதான் இருந்து கொண்டிருக்கும்.

கே: 'கல்கி' சகலகலாவல்லவர்! - இலக்கிய உலகத்தின் ஒருமனப்பட்ட தீர்ப்பு இது. தங்கள் கருத்து என்ன?
ப: அதில் சந்தேகமே இல்லை! 'கல்கி'யின் அவதார விசேஷம் அது!

கே: தாங்கள் 'ராஜராஜ சோழன்' நாடகத்தை எழுத ஏதுவாயிருந்த தனி நிகழ்ச்சி ஏதாவது உண்டா?
ப: கல்லூரிப் பரீட்சையில் சரித்திரத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். அதன் பின்னர், போட்டி உணர்ச்சியுடன் எழுத்துலகில் புகுந்த முதல் பிரவேசந்தான் அந்த நாடகம்.

கே: இலட்சியத்திற்காக வாழ்பவர்களுடைய வாழ்க்கை வெற்றி பெறுமா? பெறாதா? அத்தகைய லட்சிய வெறி அம்மனிதர்களின் நலனுக்கு, வளர்ச்சிக்குத் தேவைதானா?
ப: சொந்த வாழ்க்கை வெற்றி பெறுவது சொந்த மூலதனத்தையும் மூலாம்சங்களையும் பொறுத்ததாகும். சொந்த வாழ்க்கை வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், லட்சியத்திற்காக வாழ்பவர்களின் சேவை மற்றவர்களின் வாழ்வைப் பல தலைமுறைகளுக்கும் வெற்றி பெறச் செய்யுமல்லவா? அதாவது, லட்சியம் என்பது தான்தோன்றித் தனமாகவும், அனுபவ சாத்தியமற்ற முட்டாள்தனமானதாகவும் இல்லா விட்டால்!

கே: டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகப் பணி எவ்வகையில் இலக்கிய சேவைக்கு உதவுகிறது?
ப: நாடக இலக்கியத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகப் பணி அமைந்து வருகிறதென்றே கருதுகிறேன். 'ராஜராஜ சோழன்' நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன்னால். அத்தகைய செந்தமிழ் நாடகம் போதிய பண வருவாயைத் தராது என்றாலும், வெறும் தமிழ்த்தொண்டு என்ற அளவிலாவது அதை அரங்கேற்ற வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். ஆனால், தமிழுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற மனப்பூர்வமான ஆவலுடன் அரங்கேற்றும் எந்த இலக்கியப் பணியும் மக்களிடையே வெற்றி பெறும் என்பதையும் கண்டு கொண்டார்கள். இதற்கு மேல் நான் அதிகமாகச் சொன்னால், என்னவர்கள் என்ற முறையில் பாராட்டுரைகளை வளர்ப்பதாகவே தோன்றக்கூடும்.

கே: நிச்சயம். இந்தியாவிற்குப் பொது மொழியாக விளங்கக்கூடியது ஹிந்தியா? ஆங்கிலமா?
ப: ஒரே உலகம் என்ற முறையில் பூலோகம் முழுவதும் நம்மை நெருங்கிச் சுருங்கிக்கொண்டு வரும் இக்காலத்திலே, ஆங்கிலம்தான் நமக்கு உபயோகப்படும் பொதுமொழியே தவிர, ஹிந்தியைப் பொது மொழியாகத் திணிக்க முயல்வது குறுகிய மனப்பான்மையும் சக்தி விரயமும், வடிகட்டின முட்டாள்தனமும் ஆன ஒரு வெறியேயாகும்.

கே: தாங்கள் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கின்றீர்கள். இத்தகைய புதிய சூழலிலே இலக்கியத்தோடு தொடர்பு கொண்ட பசுமை மிக்க நினைவுகள், மறக்க முடியாத அனுபவங்கள் ஏதாவது இருக்குமே, சொல்லுங்களேன்!
ப: திரையுலகில் நான் ஈடுபட்டதற்குக் காரணமே, அது திரை இலக்கியமாக மாறவேண்டுமென்ற ஆவலினால்தான். ஆனால், அதனால் ஏற்படும் அனுபவங்களின் விளைவுகள் இனிமேல்தான் விளங்க வேண்டும்!

கே: சரித்திரத் தொடர்கதை, சமூகத் தொடர்கதை - இவற்றில் வாசகர்கள் எவ்வகையை அதிகம் விரும்புகிறார்கள்? பத்திரிகாசிரியர் என்ற தொடர்பில் இக்கேள்வியைக் கேட்கின்றேன்.
ப: வாசகர்களைச் சரித்திர காலத்திற்குக் கொண்டு போக முடிந்தால் சரித்திரத் தொடர்கதைகளையும், சமூகத்தின் வாசகர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் என்ற உணர்ச்சியை உண்டாக்க முடிந்தால் சமூகத் தொடர்கதைகளையும் வாசகர்கள் அதிகம் விரும்புகின்றார்கள். நல்ல சமூகத் தொடர்கதைகள் அதிகமாகவும், நல்ல சரித்திரக் கதைகள் குறைவாகவும் வெளிவருவதால், வாசகர்களிடையே சரித்திரத் தொடர் கதைகள் மிகவும் அபாரமானவையாகத் தோற்றமளிக்கின்றன.

கே: தங்களைப் போலச் சரித்திரத் தொடர்கதைகள் எழுதுவதில் தங்கள் மனத்திற்குப் பிடித்தமான சக ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிடுவீர்களா?
ப; வாசக நேயர்களின் திருப்திக்கென இந்தக் கேள்வி புறப்படுகிறது! சரித்திரத் தொடர்கதை எழுதும் சக ஆசிரியர்கள் அனைவரும் என் மனத்துக்குப் பிடித்தமானவர்களே! அதாவது, ஜாதி, மதம் என்ற உணர்ச்சிகளுக்கு இரையாகி, தமிழரின் தனிச் சரித்திரத்திலே விஷமம் செய்யாத அனைவரும்!

கே: சரி, நீங்கள் விரும்பும் பத்திரிகாசிரியர் யார், யார் என்றாவது தெரிவியுங்கள். தங்கள் பதில் பத்திரிகாசிரியர்களின் கவனத்தைக் கவர வேண்டுமல்லவா?
ப: தமிழை மனம், மொழி, மெய்களினால் வழிபடும் எல்லாத் தமிழ்ப் பத்திரிகாசிரியர்களும் நான் விரும்புபவர்கள்தாம்!

கே: போகட்டும். அரசியல் உலகை மீண்டும் எட்டிப் பார்க்கட்டுமா? ஆமாம், நம் நாட்டின் தற்போதைய அரசியலைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? தேர்தல் முரசு முழங்கத் தொடங்கி விட்டதல்லவா?
ப: ஜனநாயகத்தை ஊட்டி வளர்த்துத் தாயாக விளங்க வேண்டிய அரசியல் தற்போது ஜனநாயகத்தின் உயிரைக் குடிக்க முயலும் பூதகி உருவம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்குமேல், பூதகியின் முடிவு பற்றிய கதைதான் உங்களுக்குத் தெரியுமே!

கே: மற்றுமொரு கேள்வி. எழுத்தாளனுக்கோ அல்லது கலைஞனுக்கோ கட்சி உண்டா?
ப: ஆஹா! அவனுக்கென்று ஒரு தனிக்கட்சி உண்டு. அதற்கு அவன் ஒருவனே தலைவன். தமிழ்நாட்டுக் கட்சிகளின் கொள்கைகளிலே நல்லவையெல்லாம் அவனுடைய கட்சியின் அங்கத்தினர்களாவார்கள்.

கே: நம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நம்முடைய தமிழ் எழுத்தாளர்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் கூறும் யோசனைகள் யாவை?
ப: நல்ல கேள்விதான். சொல்கிறேன். வடநாட்டுப் படப்பிடிப்பாளர்கள் நல்ல சத்துப்பிடிப்பான கதைகளுக்குத் தமிழ்நாட்டைத் தேடிவருகிறார்கள் என்பதை நமது தமிழ்த் திரைப்பட முதலாளிகள் ஆழ்ந்து சிந்திப்பார்களேயானால், நம் தமிழ் எழுத்தாளர்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள, பிறர் யோசனைகளை எதிர்பார்க்கும் நிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள்! ஆனால், ஒன்று மட்டும் கூறுவேன். ஒரு கதையைப் படம் பிடிக்கும்போது, படமுதலாளிகளும் கைதேர்ந்த நம் தமிழ் எழுத்தாளர்களும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் அனுசரிப்பையும் ஓரளவாவது கைக்கொள்ள மனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.

கே: இதுநாள்வரை உங்களுடைய இலக்கியப் பேனா படைத்த கதாபாத்திரங்களுள் தங்களது இலக்கிய மனம் மறக்க முடியாதவை எவை?
ப: 'வீரபாண்டியன் மனைவி'யில் ஜனநாதனும், 'ராஜராஜ சோழ'னில் குந்தவியும், 'அசோகன் காதலி'யில் சாணக்கியனும். 'கறுப்புத் திராட்சையும் வெள்ளை ரோஜாவும்' கதையில் கதாநாயகனும் நானே மறக்க முடியாத பெயர்கள்!

கே: 'எழுத்துலகில் நான்' - இதே கேள்வியைப் பெரும்பாலான பேட்டிகளில் கேட்டிருக்கிறேன். அபிப்பிராயங்களை அறிந்துகொள்வதில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓர் ஈடுபாடு உண்டு என்பதாலேதான் இக்கேள்வி
ப: எழுத்துலகில் என்னைப்பற்றி வாசகர்கள்தாம் சொல்லவேண்டும்; விமரிசகர்கள் சொல்வதுகூட வெற்றுரையாகவே இருக்கும். என்னை வற்புறுத்திக் கேட்டால், வேறு உலகங்களைப் பார்த்து வரும் என்னை எழுத்துலகம் விடாப்பிடியாக மயக்கி வைத்திருக்கிறது என்றே சொல்லுவேன்!
பேட்டி கண்டவர்: பூவை எஸ். ஆறுமுகம்
நன்றி: உமா இதழ், பிப்ரவரி, 1957
Share: 




© Copyright 2020 Tamilonline