Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
காதலித்தால் என்ன?
- எஸ். செல்லம்மாள்|பிப்ரவரி 2026|
Share:
சுந்தரேசனும் மனைவி அமுதாவும் இரண்டு பிள்ளைகளுடன் கோயமுத்தூர் வந்து 25 ஆண்டுகளாகி விட்டன. இரண்டு மகன்களும் படித்து, வேலைக்குப் போனார்கள். திருமணமும் ஆகிவிட்டது. ஒருநாள், அமுதா, சுந்தரேசனிடம் "இந்த வாரம் திருச்சிக்குப் போய் அப்படியே ஸ்ரீரங்கநாதரையும் தரிசனம் செய்து விட்டு வருவோமா?" என்று கேட்டாள்.

சுந்தரேசன் ஒப்புக்கொண்டார்.

மறுநாள் சரியாக 12 மணிக்கு ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்தார்கள். மதிய உணவு அருந்திய பின் 5 மணிவரை அறையில் ஓய்வு. மாலையில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வழியில் இரவு உணவை முடித்துவிட்டு தங்கியிருந்த அறைக்கு வந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் தரிசனம். இருவரும் மன நிறைவுடன் வெளிப் பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்தார்கள்.

அப்போது ஓர் இளம் தம்பதி வந்து சுந்தரேசன், அமுதா இருவர் கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள். அவர்களை, மனமார வாழ்த்தி. "இருவரும் உங்கள் குழந்தைகளுடன் நீண்ட ஆயுள், உடல் நலம், மகிழ்ச்சியுடன் வாழ ஆசீர்வாதங்கள்" என்றார்கள்.

உடனே அந்தப் பெண், "உங்கள் இருவரிடமும் கொஞ்ச நேரம் எங்கள் மனதில் உள்ளதைப் பேச விரும்புகிறோம். ஏனோ தெரியவில்லை, உங்களைப் பார்த்ததும் எங்கள் மனதில் இனம் புரியாத மரியாதை தோன்றுகிறது. என் பெயர் சித்ரா, அவர் பெயர் ஸ்ரீதர். சாமி தரிசனம் செய்யும் போது நாங்கள் இருவரும் உங்கள் பின்னேதான் நின்றிருந்தோம். எங்களுக்குக் கல்யாணமாகி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஆனால் எங்கள் மனதில் சிறிதளவுகூட மகிழ்ச்சியும் இல்லை, நிம்மதியும் இல்லை" என்றாள்.

சுந்தரேசன், அமுதா இருவருக்கும் குழப்பமாக இருந்தது. பார்த்தால் பொருத்தமான தம்பதிகளாகத்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கமுடியும்?

ஸ்ரீதர், "நானும், சித்ராவும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒருவரை ஒருவர் விரும்பினோம். பொள்ளாச்சியில் என் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர்; அதே அளவு பணக்காரரான என் தாய்மாமனின் பெண் உஷாவைத்தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என் பெற்றோர் பிடிவாதமாக இருந்தார்கள். சித்ரா ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அப்பா எங்களுடைய டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்க்கிறார். நான் சித்ராவை விரும்புவதாகச் சொன்னதும் என்னுடைய பெற்றோர் சித்ராவைப் பார்க்கக்கூட விரும்பவில்லை; பிடிவாதமாக இருவரும் மறுத்து விட்டார்கள். எங்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை" என்று சொன்னான்.

சித்ரா, "எங்கள் வீட்டிலோ, உங்கள் திருமணத்திற்கு ஸ்ரீதரின் பெற்றோர் சம்மதித்தால், எங்களுக்குச் சம்மதம். ஆனால் அவர்களிடம் சம்மதம் வாங்குவது ஸ்ரீதரின் பொறுப்பு என்று சொல்லி விட்டார்கள். வாழ்ந்தால் இருவரும் சேர்ந்து வாழ்வது, இல்லையேல் இருவரும் வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்வதில்லை என்று முடிவெடுத்தோம்" என்றாள்.

மேலும் சித்ரா, "இந்தச் சூழ்நிலையில் நாங்கள் இருவரும் விரும்பியது, திருமணம் செய்து கொண்டது தவறா என்பது எங்களுக்கே புரியவில்லை. நாங்கள் இப்போது அனாதைகளாகி விட்டோம்" என்று கண் கலங்கியபடி சொன்னாள்.

அவர்களைப் பார்க்க சுந்தரேசனுக்கும் அமுதாவுக்கும் பரிதாபமாக இருந்தது.

அமுதா, கணவரைச் சற்று தூரம் அழைத்துச் சென்று, "ஏங்க, ரெண்டு பேரையும் பார்த்தால் மிக நல்லவர்கள் போலத் தெரிகிறது. இவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம்னு நினைக்கிறேன். என்ன செய்வது, எப்படி செய்வது என்றுதான் புரியவில்லை" என்றாள்.

சுந்தரேசன், "அமுதா, அவசரப்பட்டு எந்த வாக்குறுதியும் கொடுத்து விடாதே, சற்றுப் பொறு. இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் பிறகு முடிவுக்கு வரலாம்" என்றார்.

மறுபடியும் ஸ்ரீதர், சித்ரா இருவரும் இருந்த இடத்திற்கு வந்தார்கள்.

சித்ரா, "எங்கள் கதையைச் சொல்லி உங்களைச் சிரமப்படுத்தி விட்டோம். ஏனோ உங்கள் இருவரையும் பார்த்ததும் என் அப்பா, அம்மா நினைவு வந்துவிட்டது. எங்களை மன்னித்து விடுங்கள்" என்றாள்.

அமுதா, "அப்படியெல்லாம் சொல்லாதே அம்மா. எங்களுக்குப் பெண் குழந்தை கிடையாது. ஆண் பிள்ளைகள்தான்; இருவருக்கும் திருமணமாகி எங்கோ இருக்கிறார்கள். நாங்கள் இருவரும் கோயம்புத்தூரில் தனியாகத்தான் இருக்கிறோம். அடுத்த வாரம் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள். நிதானமாகப் பேசலாம்" என்று சொல்லி, முகவரியையும் மொபைல் எண்ணையும் கொடுத்தாள்.

★★★★★


திடீரென்று ஒருநாள், சித்ரா அமுதாவின் மொபைல் எண்ணில் பேசினாள். ஞாயிற்றுக் கிழமை மதியம் உணவருந்த சுந்தரேசன், அமுதா இருவரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்தாள். அமுதாவும் கணவரிடம் கேட்டுச் சம்மதம் தெரிவித்தாள்.

கோவையின் முக்கிய விரிவாக்கப் பகுதியான வடவள்ளியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர்கள் இருந்தார்கள். வீடு மிகச் சுத்தமாக, அழகாக இருந்தது. ஸ்ரீதர், சித்ரா இருவரையும் மனதாரப் பாராட்டினார்கள்.

சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு நால்வரும் சாப்பிட அமர்ந்தார்கள். உணவின் மணமும், சுவையும் அருமையாக இருந்தது. ஸ்ரீதருடைய பெற்றோர் பற்றிக் கேட்டார்கள். அவர்கள் பிடிவாதம், கோபம் இன்னும் தீரவில்லை என்று இருவருமே வருந்தினார்கள்.

ஸ்ரீதர், "என்னுடைய அப்பா பெயர் பத்மநாபன், அம்மா பெயர் லட்சுமியம்மாள். இருவருக்குமே தமிழ்ப் பற்று அதிகம். வருகிற ஞாயிற்றுக் கிழமை ஆர்.எஸ். புரத்தில் புரந்ததாசர் கலை அரங்கத்தில் நடக்கும் பாரதி பாடல்கள் பற்றி ஒரு கருத்தரங்கு நடக்கிறது. என்னுடையப் பெற்றோர் கண்டிப்பாக அங்கு வருவார்கள்" என்றான்.

உடனே அமுதா கணவரிடம், "அந்தக் கருத்தரங்குக்கு நாமும் போகலாம். அங்கு ஸ்ரீதருடைய பெற்றோரை எப்படியாவது அறிமுகப்படுத்திக் கொள்வோம்". என்றாள். கணவர் முகத்தில் தெரிந்த புன்சிரிப்பே இந்தத் திட்டத்திற்கு அவர் சம்மதிக்கிறார் என்பது தெரிந்தது. ஸ்ரீதரும் சித்ராவும் ஒன்றும் சொல்லவில்லை.

மறுநாள் காலை நடைப்பயிற்சிக்குப் போய் வந்த சுந்தரேசன், "அமுதா, ஸ்ரீதருடைய அப்பா பத்மநாபனை என் நண்பர் தண்டபாணிக்கு நன்கு தெரியுமாம். அவரிடம் ஸ்ரீதர், சித்ராவைச் சந்தித்தது, அவர்களுடைய பிரச்னை எல்லாவற்றையும் சொன்னேன். ஸ்ரீதர் அப்பாவும், இவரும் கல்லூரி நண்பர்களாம். பாரதி பாடல் கருத்தரங்கத்திற்கு அவரும் வந்து, ஸ்ரீதருடைய அப்பா, அம்மாவை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதாகச் சொன்னார்" என்றார்.

★★★★★


ஞாயிற்றுக் கிழமை. கலையரங்கத்துக்குச் சரியாக 6 மணிக்கு சுந்தரேசன், அமுதா இருவரும் சென்று விட்டார்கள். அங்கு வந்த தண்டபாணி, ஸ்ரீதருடைய அப்பா பத்மநாபன், அம்மா லட்சுமியம்மாள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்ததும் தண்டபாணி சார் நால்வருக்கும் ‘டின்னர்‘ கொடுத்தார். சில பொதுவான விஷயங்களைப் பேசிய பின், ஸ்ரீதரின் பெற்றோர், சுந்தரேசன், அமுதா இருவரையும் பொள்ளாச்சியில் உள்ள தங்கள் வீட்டிற்கு அடுத்த ஞாயிறன்று வருமாறு அழைத்தார்கள். இருவரும் புன்னகையோடு சம்மதம் என்றார்கள்.

ஞாயிற்றுக் கிழமை காலையில் 11 மணிக்குக் கோவையிலிருந்து சுந்தரேசனும் அமுதாவும் புறப்பட்டார்கள். பொள்ளாச்சியில் ஸ்ரீதரின் வீட்டிற்குச் சென்றதும் பத்மநாபனும், லட்சுமியம்மாளும் மிகுந்த அன்புடன் வரவேற்றார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பணக்காரர்களுக்கே உண்டான கம்பீரம், பிடிவாதம் போன்ற குணங்கள் அவர்கள் இருவருடைய பேச்சில் தெரிந்தது. மதிய உணவு முடிந்ததும் அமுதா "எங்கே உங்கள் மகனைக் காணவில்லை?" என்று கேட்டாள்.

பத்மநாபன், லட்சுமியம்மாள் இருவருடைய கண்களும் கலங்கின. "எங்களுக்கு ஒரே மகன். பெயர் ஸ்ரீதர். மிகவும் செல்லமாக வளர்த்தோம். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தோம். மிகவும் நல்ல பிள்ளை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு பெண்ணை எங்கள் பேச்சைக் கேட்காமலும், எங்களுக்குத் தெரியாமலும் திருமணம் செய்து கொண்டான். இப்போது எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் என்று தெரியவில்லை," இது லட்சுமியம்மாள்.

பத்மநாபன், "எங்கள் மகனுக்கு என்ன குறை வைத்தோம் என்று அவனிடமே கேட்டுப் பாருங்கள். அவன் விருப்பத்திற்கு மாறாக என்றுமே நாங்கள் நடந்ததில்லை. அவனைச் செல்லமாக வளர்த்தோம். என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்தோம். ஆனால் யாரோ ஒரு பெண்ணுக்காகப் பெற்று, வளர்த்து, ஆளாக்கிய எங்களைத் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டான்" என்று சொன்னார்.

சிறிது நேரம் நானும் என் கணவரும் ஒன்றுமே பேசவில்லை. அவர்கள் மனதில் உள்ளதைப் பேசி முடிக்கட்டும் என்று இருந்தோம்.

லட்சுமியம்மாள், "இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறுவயது முதல் தினம் எங்களைப் பார்க்காமல் ஒருநாள்கூட இருக்க மாட்டான். எப்போதாவது அப்படியெல்லாம் இருந்தவன் யாரோ ஒரு பெண்ணுக்காக எங்களை மறந்துவிட்டான் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நாங்கள் அப்படி என்னதான் தப்பு செய்து விட்டோம்? அந்த ஏழைப்பெண் வேண்டாம், மாமன் மகள் நல்ல லட்சணமாய் இருக்கிறாள், அவளைத் திருமணம் செய்துகொள் என்றுதானே சொன்னோம். அவனோ ஒரே பிடிவாதமாகக் காலேஜில் தன்னுடன் படித்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன், இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவளை ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டான் என்று கேள்விப்பட்டோம்" என்றாள்.

அமுதா இருவரையும் பார்த்து, "நீங்கள் எங்களைவிட வயதில் பெரியவர்கள். இருந்தாலும் மனதில் பட்டதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. பெற்ற பிள்ளைகள் ஆணோ, பெண்ணோ அப்பா, அம்மா பேச்சைக் கேட்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. உங்கள் மகன் பிறந்தது முதல் அவன் விருப்பப்பட்டதையெல்லாம், அவன் கேட்டாலும் கேட்காவிட்டாலும் வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.

"இப்போது நீங்கள் அனுமதித்தால் ஒன்று கேட்கட்டுமா? என்ன கேட்டாலும் அப்பா, அம்மா வாங்கித் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை சின்ன வயதிலிருந்தே உங்கள் மகன் மனதில் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. திருமண வயது வந்ததும், அதே மன நிலையில், தன் விருப்பத்தை உங்களிடம் சொல்லியிருக்கிறான். நீங்கள் மறுப்பீர்கள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டான். உங்களையும் மறக்க முடியாமல், அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த நம்பிக்கையையும் நிறைவேற்ற முடியாமல் அவன் எவ்வளவு தவித்திருப்பான்? இதை நீங்கள் இதுவரை யோசித்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்தப் பெண்ணுடைய அனாதரவான நிலையை நினைத்துப் பார்த்து, அவளைத் திருமணம் செய்ய ஸ்ரீதர் முடிவெடுத்திருக்கலாம்" என்றாள்.

சுந்தரேசன், "அமுதா, இவ்வளவு தூரம் பேசிவிட்டாய். ஸ்ரீரங்கம் சென்றிருந்த போது ஸ்ரீதரையும், சித்ராவையும் நாம் சந்தித்ததைச் சொல்லிவிடலாமே" என்றார்.

பத்மநாபன், லட்சுமியம்மாள் இருவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது. ஆனால் ஒன்றும் பேசவில்லை.

அமுதா, "ஸ்ரீதர், சித்ராவை நாங்கள் சந்தித்ததை முதலிலேயே சொல்லவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் மனநிலையை அறிந்தபின் சொல்லலாம் என்றிருந்தோம். உங்கள் மகனைப் பிரிந்த துயரம் உங்கள் பேச்சில் நன்றாகத் தெரிகிறது. பெற்ற பாசம் என்பது அவ்வளவு எளிய விஷயமா, என்ன?" என்றாள்.

பத்மநாபன், லட்சுமியம்மாள் இருவருடைய கண்களும் கலங்கின. இருந்தாலும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை.

அமுதா, "ஸ்ரீதர், சித்ரா இருவரிடம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘நாங்கள் திருமணம் செய்து கொண்டதால் எங்கள் இருவர் பெற்றோரும் மகிழ்ச்சியாக இல்லை. காதலித்துத் திருமணம் செய்து கொண்டோமே தவிர எங்கள் மனதிலும் கொஞ்சம்கூட மகிழ்ச்சி இல்லை. அதனால் எங்கள் பெற்றோர் மனம் மாறும்வரை நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டோம்’. அவர்கள் இப்படிச் சொன்னதும், சித்ராவைத் தனியாக அழைத்துச் சென்று நான் கேட்டபோது, அவர்களுக்குள் இன்னும் தாம்பத்யமே நடக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன்" என்று சொன்னாள்.

சுந்தரேசன், "இப்போதெல்லாம் காதலிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, இந்தத் தலைமுறையில் என்னவெல்லாமோ நடக்கிறது. பிள்ளைகளும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள். ஆனால் ஸ்ரீதர், சித்ரா இருவரும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று அறிந்ததுமே, அவர்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்வதென்று நானும் அமுதாவும் தீர்மானித்தோம். அதனால்தான் இன்று உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு நிறையப் பேசிவிட்டோம். மன்னிக்க வேண்டும்" என்றார்.

பத்மநாபன், "மன்னிப்பு என்ற வார்த்தையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் இருவரும் பேசியது எங்கள் வீட்டுப் பிள்ளை ஸ்ரீதரின்மேல் கொண்ட அக்கறையில்தானே, அதனால் பரவாயில்லை. நீங்கள் இருவரும் இவ்வளவு தூரம் எங்களைத் தேடிவந்து பேசியது எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சிதான். அப்படித்தானே லட்சுமி?" என்று கேட்டார்.

லட்சுமிக்குக் கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. இருவருக்கும் இரு கரங்களையும் கூப்பிக் கண்களாலேயே நன்றி சொன்னாள். நாங்கள் அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டுக் காரில் கோயம்புத்தூர் வந்துசேர இரவு 10 மணி ஆகிவிட்டது.

இரண்டு தினங்கள் சென்ற பின், ஒருநாள் காலை 10 மணியிருக்கும். அமுதாவுடைய மொபைல் போனில் லட்சுமியம்மாள் 5 நிமிடங்கள்தான் பேசிக் கொண்டிருந்தார்.

சுந்தரேசன் ஆவலுடன் "என்ன அமுதா, என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.

அமுதா, "எல்லாம் மகிழ்ச்சியான செய்திதான். நம்முடைய முயற்சிக்குப் பலன் கிடைத்து விட்டது. வருகிற மாதம் 7ந் தேதி பொள்ளாச்சியில் ஸ்ரீதர், சித்ரா இருவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஸ்ரீதரிடமும், சித்ராவிடமும் பேசி விட்டார்களாம். சித்ராவின் பெற்றோரிடமும் பேசியிருக்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தாளிகள் சுந்தரேசன் – அமுதா தம்பதிதான் என்று சொல்லிவிட்டார்கள்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்..
எஸ். செல்லம்மாள்,
கோயம்பத்தூர், தமிழ்நாடு
Share: 




© Copyright 2020 Tamilonline