Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
தூய்மை இந்தியா
- மணிராம் கார்த்திக்|அக்டோபர் 2025|
Share:
இரவுநேரப் பணி முடித்து, காலை எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான் ராகவன். நுழைந்ததும் மனைவி கலா "என்னங்க, வந்ததும் உட்காராம, அப்டியே விகாசை பள்ளிகூடத்திற்குப் போய் விட்டுட்டு வந்திருங்க. அவனுக்கு இன்னைக்குப் பேச்சுப் போட்டி இருக்காம். அதுக்குப் பயிற்சி எடுக்க பள்ளிகூடத்துக்குச் சீக்கிரமா போகணும்னு சொன்னான்" என்றாள்.

ராகவன்–கலா தம்பதியினருக்கு ஒரே ஒரு பையன் விகாஸ் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். ராகவன் தனியார் கம்பெனியில் இரவு நேர மெஷின் ஆப்பரேட்டோரா வேலை பார்க்கிறான். கலா வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனிக்கிறாள்.

"வேலை முடிஞ்சு வந்திருக்கேன், ஒரு அஞ்சு நிமிஷம் உட்காந்துட்டுப் போறேனே" என்று ராகவன் கூறினான்.

"போய்ட்டு வந்து உட்காரலாம், தூங்கலாம். இப்போ முதல்ல கிளம்பி பள்ளிகூடத்தில் விட்டு வாங்க" என்று சற்று அழுத்தமாகக் கலா கூற, சிடுசிடுப்போடு எழுந்தான் ராகவன்.

மகன் விகாஸை, "டேய் வாடா, பள்ளிக்கூடத்தில் உன்னை விட்டு வந்தாதான், உன் அம்மா என்னை வீட்ல நிம்மதியா இருக்க விடுவா" என்று கூறியபடி அழைத்து சென்றான்.

"என்னங்க போறது போறீங்க, இந்தக் குப்பைய போட்டுட்டுப் போங்க" என்று வாசலில் குப்பைக் கவரைத் தூக்கி வைத்தாள் கலா. ரொம்பவே கோவம் வந்தது ராகவனுக்கு.

இரு சக்கர வாகனத்தைத் தயார் நிலைக்குக் கொண்டு வந்து, விகாஸைத் தூக்கி எரிச்சலுடன் அமர வைத்தான். 'குப்பையக் கொட்ட ஒரு ஆளு இவ பார்க்கிற வேலைக்கு' என்று முனகியபடி கிளம்பினான் ராகவன்.

தெருக்கோடியில் இருந்தது குப்பைத் தொட்டி. வாகனத்தில் சென்றவன் அதைப் பார்த்ததும், தன் வண்டியில் வைத்திருந்த குப்பைக் கவரைத் தூக்கி எறிந்தான்.

அந்தக் குப்பைக் கவர் தொட்டியில் விழாமல் கீழே விழுந்தது.

"அடச்சே!", என்று நினைத்தபடி நகர முயன்ற ராகவனை, வாகனத்தின்முன் வந்து தடுத்தான் மாநகராட்சி குப்பை அள்ளும் சுந்தரம்.

"சார், என்ன இப்படி? இப்பதான் குப்பைய அள்ளி முடிச்சோம். அதுக்குள்ள குப்பைய வெளியில போட்டுப் போறீங்க?" என்று சுந்தரம் ராகவனை நோக்கிக் கேட்டான்.

சுந்தரத்தின் கேள்வி மேலும் ராகவனைக் கோவமாக்கியது.

"குப்பை அள்ளுற வேலைதான பார்க்கிற? பின்ன என்ன, குப்பை இருந்தா அள்ளுவயா, அத விட்டு என்னமோ பில் கலெக்டர் மாதிரி பேசுற!" என்று சுந்தரத்திடம் எகிறினான் ராகவன்.

"சார், குப்பை அள்ளுற வேலைதான் நான் பார்க்கிறேன். இப்போதான் குப்பைய அள்ளிப் போட்டு வண்டி போயிருக்கு. காலிக் குப்பைத் தொட்டிய வச்சிட்டுப் போயிருக்கு. குப்பையச் சரியா அந்தத் தொட்டியில போட சொன்னா, அத விட்டு என்னமோ பேசுறிங்க?" சுந்தரம் கூறினான்.

"போய்யா! இருக்கிற கோவத்தில நீ வேற!" என்று ராகவன் சீறிவிட்டுக் கிளம்ப முயன்றான்.

ராகவனைத் தடுத்து நிறுத்தினான் சுந்தரம்.

"ஒழுங்கா குப்பையத் தொட்டியில் போடுங்க சார். நீங்க பண்றத பார்த்து அடுத்து உங்க பையனும் செய்வான். உங்க ஒழுக்கம்தான் அவனுக்கு வரும். நீங்க ஒழுங்கா நடந்துக்க முயற்சி பண்ணுங்க" என்று சுந்தரம் கூற, சுந்தரத்தை முறைத்தான் ராகவன். அடிதடி ஆகிவிடுமோ என்று பயந்தான் விகாஸ்.

அப்போது வண்டியிலிருந்து விகாஸ் இறங்கி அந்தக் குப்பையைத் தொட்டிக்குள் போட்டான்.

"அண்ணா குப்பையத் தொட்டில போட்டேன். நன்றி உங்க கருத்துக்கு. நான் பள்ளிக்கூடம் போகணும், நேரம் ஆகுது" என்று விகாஸ் சுந்தரத்திடம் தயவுகூர்ந்து கேட்டான்.

"நல்லது தம்பி. இதுதான் ஒழுக்கம். ஆனா சொல்லி வரக்கூடாது, சொல்லாம வரணும்" என்று சுந்தரம் கூறிக் கொண்டிருந்த போது, ராகவன் அங்கிருந்து கிளம்பினான்.

ராகவனைப் பார்த்துச் சிரித்தபடி சுந்தரம் தன் வேலையைப் பார்த்தான்.

பள்ளிக்கூட வாசலில் விகாஸை இறக்கிவிட்டு ராகவன் கிளம்ப முயன்றான்.

"அப்பா, மறுபடியும் அவர்ட்ட போய்ச் சண்ட போடாதிங்க. இதோட விட்ருங்க. இன்னைக்குப் பேச்சுப் போட்டி இருக்குதுன்னு அம்மா சொன்னங்க, அதப்பத்தி நீங்க கேக்கல" என்று பயத்துடன் ராகவனை நோக்கிச் சொன்னான் விகாஸ்.

"ஆமா விகாஸ், அந்த ஆள நான் பார்த்துகிறேன். நீ பயபடாத. பேச்சுப் போட்டி என்ன தலைப்பு? கேக்க மறந்துட்டேன்!" என்று ராகவன் கேட்டான்.

"பேச்சுப் போட்டி தலைப்பு 'தூய்மை இந்தியா', அததான் இப்போ கண்கூடாப் பார்த்துட்டு வந்தேன். நாம திருந்தாம அதுக்கு வாய்ப்பு இல்ல என்பதைப் புரிஞ்சுகிட்டேன். குப்பை அள்ளுரவங்களக் கேவலமா பார்க்கிறோம். அவங்களும் மனுசங்கதான! நீ பேசுனது தப்புதானே அப்பா? அவரு உன்னை மரியாதையாதான் பேசுனாரு. நீதான் அவர மதிக்காம கேவலமா பேசுன. தூய்மை இந்தியா என்பது அரசின் திட்டம் அல்ல, ஒவ்வொருவரின் கடமை. சுத்தம் சோறு போடும் என்று முன்னோர்கள் சொன்னது சும்மாவா!" என்று அப்பா ராகவனை வெளுத்து வாங்கினான் விகாஸ்.

"சரிப்பா, பேச்சுப் போட்டிக்கு நல்ல விசயம் உன்னால கிடைச்சது. நன்றி. இதப்பற்றிப் பேசி பரிசு வாங்கிருவேன். பரிசோட உங்களப் பார்க்கறேன்" என்று கூறிவிட்டு விகாஸ் பள்ளிக்கு நுழைந்தான்.

விகாஸ் சொன்னதும் சரிதானே என்று நினைத்தான் ராகவன். தனது நல்ல மகனுக்குப் பரிசு கிடைக்கட்டும் என்று மனதில் வாழ்த்தியபடி வண்டியை நகர்த்தினான்.
மணிராம் கார்த்திக்,
மதுரை, தமிழ் நாடு, இந்தியா
Share: 




© Copyright 2020 Tamilonline