| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னைத் தூங்க விடாமல் செய்வது - இது பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி Dr A.P.J. அப்துல் கலாம் சொன்ன பொன்மொழி. ஆனால் கடல்கடந்து அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்கள் பலருக்கு வரும் அமெரிக்கக் கனவு சாதாரணக் கனவு. செல்வம், வசதிகள், சுதந்திரம் இவற்றை எதிர்பார்த்துக் கனவுடன் வருவோர்தான் அதிகம். அவற்றை அடைவதைத் தாண்டிப் பிறருக்கும் பெற்றுத் தர முயற்சி செய்த நல்ல உள்ளங்களைப் பற்றிய நாடகமான American Dream, 2025 ஏப்ரல் 5ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் மேடையேறியது. இந்த நாடகம் பல்வேறு சமூகநலத் திட்டங்களை நடத்தி வரும் சாயி ஆஷ்ரயா அறக்கட்டளைக்கு  நிதி திரட்டும் குறிக்கோளுடன் ஹூஸ்டன் மீனாக்ஷி தியேட்டர்ஸ் அரங்கேற்றிய நாடகம். 
  இதய மருத்துவத்திலும், நாடகக் கலையிலும் புகழ்பெற்ற Dr. K. சாரநாதன் தலைமையில் தமிழ் நாடக ரசிகர்களை 38 வருடங்களாகக் கட்டிப்போடும் மீனாக்ஷி தியேட்டர்ஸின் 46ஆவது மேடை நாடகம் இது. Dr. சாரநாதன் தரமான இயக்கத்துடன் முக்கியக் கதாபாத்திரமான பத்மநாபனாக உருக்கமாக நடித்தார். ஹூஸ்டன் சந்திரமௌலியின் கதை மற்றும் வசனங்கள் உயிரோட்டத்துடன் மனிதர்களின் வேறுபட்ட இயல்புகளையும், பரிணாமங்களையும் சித்திரம்போலச் செதுக்கின. கோவிந்தன் சோமாஸ்கந்தன் நாடகத்தைத் தயாரித்து மீனாக்ஷி தியேட்டர்ஸ் குழுவினரை ஒருங்கிணைத்துச் சிறப்பாக வழங்கினார். 
 
  
  சில உண்மைச் சம்பவங்களை ஒட்டி எழுதிய இந்த நாடகத்தின் கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். பரத் அமெரிக்காவில் குடிபெயர்ந்து வசதியாக வாழ்ந்துவரும் இளைஞன். பரத்தின் பெற்றோர் தங்கள் நடுத்தர குடும்பக் கலாச்சாரம், பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற பெண்ணை அவன் திருமணம் செய்வான் என்று எதிர்பார்த்திருக்க, பரத் தன்னுடன் கல்லூரியில் படித்த கேரளப்பெண் திவ்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான். பரத்தின் தந்தை பத்மநாபன் ஏமாற்றமும் கோபமும் அடைந்து பரத்துடன் பேசுவதை நிறுத்தி விடுகிறார். அம்மா மீனாட்சி பரத்திடம் அன்பு இருந்தாலும் கோபக்காரக் கணவருக்கு எதிராகப் பேசமுடியாமல் தவிக்கிறார்.
  திவ்யாவும் பரத்தும் அமெரிக்கக் கனவு வாழ்க்கையைத் தாண்டி, உதவி தேவைப்படுகிற பிறருக்கும் எப்படி அதைப் பெற்றுத்தருவது என்று யோசிக்கின்றனர். இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் பெரிதாகிறது. அமெரிக்கக் கனவை அடையும் அவசரத்தில் தன் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளத் தவறிய பரத் எதிர்பாராத விதமாகத் திடீரென உயிரிழக்க, கஷ்டங்களும் சுமைகளும் கூடுகின்றன. முதல் பிள்ளையும் நோய்வாய்ப்படுகிறான். 
 
  
  பத்மநாபனும் மனைவி மீனாட்சியும் குடும்பத்திற்கு உதவ அமெரிக்கா வருகின்றனர். ஆனால் பத்மநாபன் திவ்யாதான் குடும்பக் கஷ்டங்களுக்குக் காரணம் என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார். பத்மநாபனின் நண்பர் பெருமாள் நாயுடு குடும்பத்திற்குப் பக்க பலமாக உதவுகிறார். நடுத்தர இந்தியக் குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், அமெரிக்காவிற்குப் பிள்ளைகள் சென்றாலும் அதையொட்டிய மனஸ்தாபங்கள், உணர்ச்சிகள், சங்கடங்கள் இவற்றைப் பின்னலாக இணைத்து பரத், திவ்யாவின் அமெரிக்கக் கனவின் லட்சியம் என்னவாயிற்று என்பதைக் காலத்திற்கு ஏற்ற கருத்துக்களோடு வழங்கியது நாடகத்தின் தனிச்சிறப்பு. 
  பத்மநாபனாக Dr. K. சாரநாதனும், அவர் மனைவி மீனாட்சியாக லலிதா சுந்தரேசனும், பரத்தாக விஜய் ஐயங்காரும், திவ்யாவாக வித்யா வெங்கட்டும், பெருமாள் நாயுடுவாக மணி வைத்தீஸ்வரனும், பரத்தின் நண்பன் பிரவீணாக குமரன் சிவப்பிரகாசமும், பிரவீணின் மனைவி மாலாவாக அனிதா கிருஷ்ணனும், பத்மநாபனின் பெண் கிரிஜாவாக சுகன்யா சுப்ரமணியனும், மாப்பிள்ளை சம்பத்தாக லக்ஷ்மிநாராயணன் சுப்ரமணியனும், சங்கரனாக ராமலிங்கம் மஹாதேவனும், Dr. ஶ்ரீதரன் நாயராக கோவிந்தன் சோமாஸ்கந்தனும் சிறப்பாக நடித்தனர். மீனாக்ஷி தியேட்டர்ஸ் குழுவினர் அனைவரும் உறுதுணையாக இருந்து நாடகத்தின் வெற்றியை உறுதி செய்தனர்.
 
  
  பாசம், ஏக்கம், கோபம், ஏமாற்றம், சோகம், உருக்கம், நட்பு, அன்பு, நகைச்சுவை என பல்வேறு ஆழ்ந்த உணர்ச்சிகளை அள்ளிக் கொடுத்த இந்த நாடகம் சாய் ஆஷ்ரயாவின் மருத்துவப்பணித் திட்டங்களுக்கு நிதி திரட்டியது. காலத்திற்கு ஏற்ற சில முக்கியமான கருத்துக்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது: 1) அமெரிக்கக் கனவை அடைய நாம் அவசரப்படக்கூடாது; நம் உறவுகள் மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்கத் தவறக்கூடாது: 2) நமது அமெரிக்கக் கனவு என்பது நாம் வளமாக வாழ்வதோடு நிற்கக்கூடாது; தேவைப்படும் பிறருக்கும் அவை சேர்ந்திட நாம் முயலவேண்டும்; 3) இந்தியப் பெற்றோர் தலைக்குமேல் வளர்ந்த பிள்ளைகளிடம் கடுமையான எதிர்பார்ப்புகளை வைத்திராமல், பிள்ளைகளின் தனிப்பட்ட சுதந்திரங்களைப் புரிந்துகொண்டு நடந்தால் மனஸ்தாபங்களும், ஏமாற்றங்களும் குறையும்.
  சாயி ஆச்ரயாவின் நற்பணிகளைப் பற்றி அறிய: saiaashraya.org | 
											
											
												| 
 | 
											
											
											
												| வெங்கட் ராமசுவாமி | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |