|
|
 |
அன்று தீபாவளி. வீடு அமைதியாக இருந்தது. வாசலில் நிழல் தெரிந்தது.
"சந்தனம் என்ன செய்ற?"
"யாரு ரஞ்சிதம்மாவா வாங்கம்மா உள்ள வாங்க"
மெதுவாக நடந்து அடுப்படிக்குள் நுழைந்து பாத்திரம் விளக்கி கொண்டிருந்த சந்தனத்திடம் வந்தார் ரஞ்சிதம்மா.
ரஞ்சிதம்மாதான் சந்தனத்துக்கு இரண்டு பிள்ளைகளுக்கும் பிரசவம் பார்த்து மூன்று மாதம் வரை கூடவே இருந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டவர். இவரை 'பெத்த தாய் மாதிரி' என்று சந்தனம் அடிக்கடி சொல்வாள்.
"எங்கே பிள்ளைகளை காணோம்"
"அவுங்க சித்தப்பா துபாயில இருந்து வந்திருக்காரு அவுங்க வீட்டுக்கு தம்பியும் பாப்பாவும் போயிருக்காங்க. அவுங்க பிள்ளைகளோடு விளையாட போயிருக்காங்க. காலையிலேயே புதுசு உடுத்திட்டு பலகாரம் எல்லாம் எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க."
அடுத்து அமைதியாக தலையை ஒரு பக்கமாக பலமாக ஆட்டியபடி 'எங்கே?' என்று கைச்சாடையாக கேட்டார். சந்தனம் அதற்கு 'தெரியல' என்று கையை அசைத்துக் காட்டினாள். ரஞ்சிதம்மா பெருமூச்சு விட்டார்.
பக்கத்து அறையில் டிவியில் பட்டிமன்றம் பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கருக்கு இந்த அமைதி அவர்கள் யாரைப்பற்றிப் பேசியிருப்பார்கள் என்பதை உணர்த்தியது.
டிவியை ஆஃப் பண்ணிவிட்டு வெளியே வந்த பாஸ்கர், "சந்தனம் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேன்" என்றார். சட்டையை மாட்டிக்கொண்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் போய்விட்டார்.
"வாங்கம்மா ரெண்டு இட்லி சாப்பிடுங்க" என்று சொல்லிய சந்தனம் நான்கு இட்லியை தட்டில் வைத்து கறிக்குழம்பு ஊற்றினாள். ஹாலுக்குக் கொண்டு வந்தாள். இருவரும் உட்கார்ந்தனர்.
"எங்கேம்மா போயிருப்பான்?"
"தெரியலையே. காலையில எந்திருச்சான்; குளிச்சான்; புது டிரஸ்ஸை எடுத்துக்கிட்டு போய் சாமி படத்துக்கு முன்னாடி வச்சு மஞ்சள் தேய்ச்சு போட்டுக்கிட்டு சாப்பிடாமல் போய்ட்டான்."
"அவரு சாப்பிட்டாரா?"
"ம்ம் சாப்பிட்டாரு. பிள்ளைகள் ரெண்டும் குளிச்சுட்டு புதுசு போட்டுக்கிட்டு ரெண்டு பேர் முன்னாடியும் விழுந்து கும்பிட்டுட்டு அப்பாகூட சேர்ந்து சாப்பிட்டாங்க. இப்ப சித்தப்பா வீட்டுக்கு போய்ட்டாங்க. இவன்தான் அவுங்களை மதிக்க மாட்டேன்றான்; மரியாதையா பேச மாட்டேன்றான்"
"சந்தனம் எனக்கு அந்தக் கிழவி மேலதான் கோபம் கோபமா வருது."
"என்னம்மா செய்ய? அந்தக் கிழவி மட்டும் இவர் அவன் அப்பா இல்லன்னு சொல்லாம இருந்திருந்தா இன்னைக்கு பிள்ளைகளோடு பிள்ளையா அவனும் தங்கம்போல இருப்பான். அது வரைக்கும் அவன் எம்புட்டு பாசமா இருந்தான் தெரியுமா?"
"நடந்ததை நெனச்சு என்ன செய்ய.? சந்தனம் நீ சாப்பிடு நான் இட்லி வச்சு கொண்டு வந்து தர்றேன்" என்று ரஞ்சிதம்மாள் உள்ளே போய் தட்டில் இட்லியும் குழம்பும் கொண்டுவந்தார்.
சந்தனம் இட்லித் தட்டை பார்த்தபடி இருந்தாள். பெத்த பிள்ளை சாப்பிடாமல் எங்கோ பட்டினி கிடக்குமே என்ற எண்ணம் வந்ததும் அவள் கண்ணில் கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. முந்தானையால் கண்களைத் துடைத்தாள்.
"சாப்பிடும்போது அழாதெ'. அவன் சின்னப்பையன் அதுனால அப்படி இருக்கிறான். நாளைக்கு நல்லா வந்துருவான் தம்பி, தங்கை, அப்பான்னு பாசமா இருப்பான். சாப்பிடு, அழாத. தண்ணியக் குடி."
"அம்மா அவனுக்கு தம்பி, தங்கச்சி மேல பாசம் இருக்கு. என்ன, 'அவுங்களை கூட்டிக்கிட்டு வா. தனியா போவோம். இந்த ஆளைப் பார்த்தா எனக்கு பிடிக்கல. அவரை ஒருநாள் நான் கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போயிருவேன்'னு சொல்றான். நான் தராசு முள்ளு மாதிரி தவிக்கிறேன்மா" சத்தமாக அழ ஆரமபித்தாள்.
"அதெல்லாம் செய்யமாட்டான்மா. இந்த வயசுல எல்லா வீட்டுலயும் ஆம்பிளைப் பிள்ளைகளுக்கு அப்பாவைப் பிடிக்காது. இவனும் அப்படித்தான். நீ கொஞ்சம் பொறுமையா இரு. அவன் முன்னாடி அவர்கிட்ட நெருங்காதே. கொஞ்ச நாளைக்குதான். அப்புறம் சரியா போயிரும்."
"நாற்பது நாள் பிள்ளையை கையில ஏந்திக்கிட்டு கோயிலுக்குப் போனேன். அங்க என்னைய பார்த்திட்டு அவரை 'எங்கே'ன்னு கேட்டாங்க. 'ஒரு வாரத்துல வந்துட்டேன்'னு சொன்னேன். என்னை அப்படியே கூட்டிக்கிட்டு போய்த் தாலியை கட்டி வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்தாங்க. நான் நன்றியை மறக்கலாமா?. ஒரு காலத்துல நாங்க ரெண்டு பேரும் எப்படி காதலிச்சோம் தெரியுமா. ஊரே பார்த்து பொறாமைப்பட்டுச்சு. என் மாமன் சதிகாரன். எங்க அம்மாவை மிரட்டி என்னைக் கட்டிக்கிட்டு போனான். எனக்கு அவன்கூட இருக்க மனசு ஒப்பல. இவரு நெனவுதான் மனசு முழுக்க இருந்துச்சு. நாலு நாள் அந்த வீட்டுல இருந்தேன். அப்புறம் நடுராத்திரி எந்திரிச்சு எங்கம்மாகிட்ட வந்துட்டேன். வரும்போது அரளிக்காயை பறிச்சுக்கிட்டு வந்து எங்க அம்மாக்கிட்ட 'என்னை புருஷன் வீட்டுக்கு போன்னு சொன்னா நான் அரளியை அரைச்சு குடிச்சு செத்துருவேன்னு' சொல்லிட்டேன். அப்புறம் துரும்பை கிள்ளிப்போட்டு முறிச்சு விட்டுட்டாங்க. மறு மாசம் பார்த்தா நான் முழுகல. அப்புறம் மசக்கை. வேற வழியில்லாம இவனைப் பெத்துக்கிட்டேன். ஆனால் அவன் என்மேல உசுரா இருக்கான். நான் என்ன செய்யம்மா? இப்ப நான் உசுரோடு இருக்கிறதே அவனுக்காகதான்ம்மா. அவரு நல்லவரா இருக்காரு. இவன் அவரை கொன்றுவேன்னு சொன்னா நான் எப்படி தாங்கிக்க முடியும். நான் சாகணும் இல்லைனா அவன் சாகணும். அவுங்கப்பா தம்பியையும் பாப்பாவையும் நல்லா பாத்துக்குவாங்க."
"அந்த வார்த்தை மட்டும் சொல்லாதே. அவர் ஒன்னை கல்யாணம் செஞ்சது நீ சாகிறதுக்கா? நீ சாகணும்னா நீ மாசமானது தெரிஞ்ச உடனே செத்துருக்கணும் இப்ப மூணு பிள்ளைகளையும் அந்த புண்ணியவானையும் விட்டுட்டு சாகணும்னு நெனைக்கக் கூடாது. அந்தக் கிழவி மட்டும் 'இவன் உங்க அப்பன் இல்லடா'ன்னு சொல்லாமல் இருந்திருந்தா அவனுக்கு ஒன்னும் தெரிஞ்சிருக்காதே. அவரு நல்ல மனுசன்மா. உன்னைய இது வரைக்கும் ஒரு வார்த்தை சொல்லாமல் குடும்பம் நடத்துறாரு. நீ சின்னப் பையன் பேச்சை கேட்டுக்கிட்டு என்னைக்கும் அவர விட்டுட்டு பிரிஞ்சு போகக்கூடாது. சாகணும்னு நினைக்கக் கூடாது. அதை மட்டும் நல்லா மனசுல வச்சுக்க சந்தனம். அவர்தான் உனக்கு வாழ்க்கை, மதிப்பு, மரியாதை, குடுத்த தெய்வம் அதை மறந்துராதே. அவர் பிள்ளைகளை அநாதை ஆக்கிறாதே. அதுவும் நீ பெத்த பிள்ளைகதான? அப்புறம் ஏன் அதுகளை மறந்த? அவன் பிள்ளை ஒனக்கு முக்கியம், இவரு பிள்ளை முக்கியம் இல்லையா?"
"இல்லைங்கம்மா அதை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன் அன்னைக்கு அவர் 'அவன்தான் உன் பிள்ளை. இதுக ரெண்டும் என் பிள்ளையா'ன்னு கேக்குராரும்மா. எனக்கு உசுரே போய்டுச்சு அம்மா. எனக்கு மூணும் என் பிள்ளைதான். பெத்தவ பிரிச்சுப் பார்ப்பாளா? இதுக ரெண்டும் மரியாதையா சொன்னபடி கேட்டு நல்லா படிக்குதுக. அவன் விளையாட்டு புத்தியா திரியுறான் ரெண்டு வருஷம் பெயிலாயிட்டான். இப்ப எட்டு போகணும். ஆறு போறான். அவன் அப்பான்னு சொல்லிக்கிட்டு பள்ளிகூடத்துக்குப் போக அவருக்கு அவமானமா இருக்கு. அன்னைக்கு ஒரு டீச்சர் அவர்கிட்ட 'இவன் உங்க பிள்ளையான்னே தெரியல சார். ரொம்ப சேட்டை'ன்னு சொல்லிருக்கிறாங்க. வந்து என்கிட்டே சொல்லிட்டு 'ஊருக்கே தெரிஞ்சு போச்சு. இனி நீயே அவன் கிளாசுக்கு போய் டீச்சரை பார்த்து பேசு'ன்னுட்டாரு.
"சரி கவலைப்படாதே. கொஞ்ச நாள் பொறுமையா இரு. எல்லாம் சரியா போயிரும். அவன் கொஞ்சம் வளர்ந்தா அவனுக்கு அப்பாவைப் பத்தி தெரிய ஆரம்பிக்கும். நீ அவசரப்படாதே. சாப்பிடு தட்டில வச்ச இட்லி அப்படியே இருக்கு. சாப்பிடும்மா" என்றார் ரஞ்சிதம்மா.
வீட்டு வாசலில் செருப்பை கழற்றி போட்டு விட்டு வீட்டுக்குள் வந்தார் பாஸ்கர். ஹாலில் இருந்த சேரில் உட்கார்ந்தார். ரஞ்சிதம்மா எழுந்து ஃபேனை போட்டார்.
"இன்னும் சாப்பிடலையா? இட்லியை வச்சுக்கிட்டே உட்கார்ந்திரு, சின்னப்பிள்ளை மாதிரி". என்றார்.
சந்தனம் நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். பாஸ்கர் மனைவி மீது மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் அவளை 'சின்னப்பிள்ளை மாதிரி இருக்கியே' என்று தான் பாராட்டி சீராட்டுவதுண்டு.
"இன்னிக்கு அவன் ஹீரோ புதுப்படம் ரிலீஸ். அதனால் சார் முதல் காட்சி பார்க்கப் போயிருக்காரு இப்ப வந்திருவாரு. பதினொரு மணிக்கு அடுத்த காட்சியாம். இவர் அதிகாலையில ஆறு மணி காட்சிக்கு போயிருக்காரு'' என்றார்.
சந்தனம், ரஞ்சிதம்மாவை பார்த்துச் சிரித்தாள்.
"பார்த்தியா சந்தனம். மகனை காணலையேன்னு தேடி போயிருக்காரு".
சந்தனம் தலையை ஆட்டியபடி கண்ணைத் துடைத்துக்கொண்டு மடமடவென்று சாப்பிட்டாள். தண்ணீரை குடித்தாள் "கோபமாக இருந்தால் உன் பிள்ளை. இப்ப சந்தோஷமாக இருந்ததால அவனுக்கு சார் பட்டம் கிடைச்சிருக்கு. நல்ல மனுஷன். அவனுக்குதான் புரியல, எப்பதான் புரியுமோ?"
"சந்தனம் வரேன்மா. தம்பி வரேன்ப்பா. பார்வதி, பரமேஸ்வரன் மாதிரி நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்தியபடி ரஞ்சிதம்மா கிளம்பினார். |
|
சத்யபிரபா (செ. ராஜேஸ்வரி) |
|
|
|
|
|
|
|