|
மரு. சாரநாதனுக்கு 'நாடக மார்க்கண்டேயர்' விருது |
   |
- சந்திரமௌலி | ஏப்ரல் 2025 |![]() |
|
|
|
 |
ஆயகலைகள் அறுபத்து நான்கு. அவற்றில் உன்னதமான உயிர் காக்கும் மருத்துவக் கலை, உணர்ச்சிகள் பொங்கும் நாடகக் கலை இரண்டிலும் முத்திரை பதிப்பது அரிதிலும் அரிதான சாதனை. அதைத் தனக்கே உரிய பாணியில் சாதித்துக் காட்டியவர் ஹூஸ்டன் Dr. சாரநாதன். 40 வருடங்களுக்கு மேலாக மேடை நாடகப் படைப்பிலும், நடிப்பிலும் சற்றும் குறையாத ஆர்வத்துடனும், ஆற்றலுடனும் ஹூஸ்டன் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டுவரும் அவருக்கு வயது ஒரு தடையில்லை, வானமும் எல்லையில்லை. என்றும் பதினாறு வயதின் இளமையோடு வாழும் மார்கண்டேயரின் இயல்பை மேடை நாடகத் திறமையில் காட்டும் அவருக்கு மிகப் பொருத்தமாக 'நாடக மார்க்கண்டேயர்' பட்டத்தைக் கொடுத்து ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் பெருமைப் படுத்தியது.
சாரநாதன் 1987ஆம் ஆண்டில் மீனாக்ஷி தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலமாக இதுவரை 45 தரமான நாடகங்களை மேடையேற்றி நடித்துள்ளார். அதற்கு முன், 1984 முதல் 1987 வரை தமிழ் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் தயாரித்த நாடகங்களில் நடித்துத் தனது நெடுங்கால நாடகப் பயணத்தின் பாதையைச் செதுக்கினார். மீனாக்ஷி தியேட்டர்ஸ் தமிழ்நாட்டின் நாடக ஜாம்பவான்களான சோ, பூர்ணம் விஸ்வநாதன், கோமல் சுவாமிநாதன், சுஜாதா, மெரினா, காத்தாடி ராமமூர்த்தி, ராது, பாம்பே கண்ணன், வேதம் புதிது கண்ணன் ஆகியோரின் படைப்புகளை அமெரிக்க மண்ணில் இங்குள்ள கலைஞர்களின் திறமையுடன் மேடையேற்றி ரசிகர்களைக் கவர்ந்தது. மேலும் சாரநாதன், அமெரிக்காவிற்கு வருகை தந்த TV வரதராஜன், மதுவந்தி, இசைக்கவி ரமணன் மற்றும் பல தேர்ந்த நாடகக் கலைஞர்களுடன் சேர்ந்து பல படைப்புகளைச் சிறப்பாக மேடையேற்றியுள்ளார்.
தனித்துவத்தைக் காட்டும் வகையாக, ஹூஸ்டன் சந்திரமௌலியின் எழுத்தில் உருவான 15 தரமான பலவித பரிமாணங்களுடைய நாடகங்களை மீனாக்ஷி தியேட்டர்ஸின் சொந்தப் படைப்புகளாகச் சாரநாதன் வெளியிட்டு ரசிகர்களைப் பல வருடங்களாகப் பரவசப்படுத்தியுள்ளார். மீனாக்ஷி தியேட்டர்ஸின் 46 ஆவது படைப்பாக 'அமெரிக்கன் ட்ரீம்' என்ற நாடகம் ஏப்ரல் மாதம் அரங்கேற இருக்கிறது. சாரநாதனின் நவரச நடிப்பும், நேர்த்தியான இயக்கமும் ஹூஸ்டன் தமிழ் நாடக ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அதனுடன் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர்க் கலைஞர்களை உருவாக்கி, ஊக்குவித்து நாடகக் கலைக்குப் புத்துயிர் கொடுத்து வருவது அவரின் மற்றொரு மகத்தான சாதனை.

பாரதி கலை மன்றம் 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு 501(c) அமைப்பு. கடந்த ஆண்டு பொன்விழா கொண்டாடிய பாரதி கலை மன்றம், ஹூஸ்டனில் உள்ள தமிழ் பேசும் மக்களின் கலாச்சார மற்றும் சமூகத் தொடர்பை கலை, இலக்கியம் மற்றும் மொழிவழியாக வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வெற்றியுடன் இயங்கி வரும் மன்றம்.
22 ஃபிப்ரவரி 2025 அன்று பாரதி கலை மன்றம் நடத்திய விழாவில் அதன் தலைவர் அனிதா குமரனும், மீனாக்ஷி தியேட்டர்ஸின் விஷி ராமனும் சாரநாதனின் 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நாடகக் கலைச் சேவையைப் பாராட்டி உரையாற்றினர். அவரின் தரமான படைப்புகள், எந்த வேடத்திலும் அசத்தும் நடிப்பாற்றல், இயக்கத் திறமை, பாரதி கலை மன்றத்திற்குப் பல்லாண்டு காலமாக அவர் கொடுத்து வரும் ஆதரவு இவற்றைப் பற்றி சுவாரஸ்யமான நினைவுகளை அவர்கள் வழங்கினர். கணேஷ் ரகு எழுதிய அழகிய கவிதை மடலுடன் அவருக்கு 'நாடக மார்க்கண்டேயர்' விருது வழங்கப்பட்டது.
அதற்கு நன்றி கூறிய சாரநாதன், விருதைத் தனது மீனாக்ஷி தியேட்டர்ஸ் கலைஞர்கள் அனைவருக்கும் அர்ப்பணித்தார். தனது சாதனைகளுக்கு என்றும் உறுதுணையாகத் தன் மனைவி திருமதி நிர்மலா இருப்பதைப் பற்றிக் கூறினார். சிறு வயதிலேயே நாடகக் கலையிடம் இருந்த ஈர்ப்பையும், பிற்காலத்தில் மருத்துவப் பணியையும் நாடக ஆர்வத்தையும் ஈடு கொடுத்து நடத்திய நாட்களைப் பற்றியும் பேசினார். பாரதி கலை மன்றத்துடன் மீனாக்ஷி தியேட்டர்ஸ் கொண்டுள்ள பல வருட நட்பைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.
அரங்கத்தில் நிறைந்திருந்த ஹூஸ்டன் தமிழ் மக்களின் பலத்த கரவொலிகளுடன் பாரதி கலை மன்றம் சாரநாதனைக் கௌரவித்துப் பெருமை கொண்டது. அவரது கலைச்சேவை என்றென்றும் தொடர வேண்டும் என்பதே ஹூஸ்டன் தமிழ் மக்கள் அனைவரின் விருப்பம். |
|
தகவல்: ஹூஸ்டன் சந்திரமௌலி, ஹூஸ்டன், டெக்சஸ் |
|
|
|
|
|
|
|