|
தென்றல் பேசுகிறது... |
   |
- | ஏப்ரல் 2025 |![]() |
|
|
|
 |
வயதான பெற்றோர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்; அது போதாதென்று, கிரீன் கார்டு வேண்டாம் என்று கூறும் படிவத்தில் கையெழுத்திட வற்புறுத்தப்படுகிறார்கள். H1B விசாக்காரர்களின் இடர்ப்பாடுகளைச் சொல்ல வேண்டியதே இல்லை. மொத்தத்தில் அமெரிக்காவுக்கு வருவதே கடினமாக்கப் பட்டுள்ளது என்றால் இறக்குமதிக்கான புதிய சுங்கவரி விதிப்பு பல நட்பு நாடுகளைக் கவலைக்கும் கசப்புக்கும் உள்ளாக்கி உள்ளது. சுங்கவரி இரட்டைக் கூர்முனை கொண்டது. ஒருபக்கம் உள்ளூர் உற்பத்திக்கு உதவும் என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், உடனடியாக மக்கள் உணரப்போவது விலைவாசி உயர்வைத்தான். கல்வித் துறை, USAID இன்னும் பல துறைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அல்லது, FBI போன்றவற்றில் அதிரடியாகப் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். திடீரென இப்படி நடந்ததால் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகியுள்ளது. பொருளாதாரத் தொய்வு (Depression) ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இன்னும் கனடா, கிரீன்லாந்து போன்றவற்றைக் கையகப்படுத்தும் தடாலடிப் பேச்சும் நாம் இருப்பது 2025ஆம் ஆண்டில்தானா என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. “இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்” என்று பாரதி கூறியதைக் கண்முன் காணக் கிடைத்திருப்பதும் நம் துரதிர்ஷ்டம்தான்.
★★★★★
உலகின் பல இடங்களில் பெருமழை, வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி எனப் பலவாறான இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. வளர்ந்த நாடுகள் பல இவற்றையும் வணிக வாய்ப்புகளாகப் பார்க்கும் பரிதாபச் சூழ்நிலை உள்ளது. மார்ச் 28 அன்று மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணாமகச் சுமார் 3100 உயிரிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாரதம் உடனடியாகக் களத்தில் இறங்கியது. 'Operation Brahma' என்ற பெயர்கொண்ட பேரிடர்க்கால உதவிப் பணியில், மருத்துவம், இடிபாடுகளில் சிக்கிக்கொண்டோரை மீட்டல், உணவு, போர்வை, சமையல் பாத்திரங்கள் எனப் பல்வேறு வகைகளில் உதவி, தனது மனிதாபிமானத்தை மீண்டும் உலகின்முன் நிலைநாட்டியுள்ளது.
★★★★★
இந்தியப் புற்று நோயாளிகளுக்கு உதவ நிதி திரட்டும் பொருட்டு சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் நடத்தப்பட்ட 'விவேகானந்தர்' நாடகம் மூக்கில் விரல்வைக்கச் செய்தது. அதுவே நமது அட்டைப்படக் கட்டுரை. ஜெயராமன் ரகுநாதன் அண்மைக்கால எழுத்தாளர்களில் தனித்துவமான கருப்பொருள் மற்றும் நடையால் வசீகரிப்பவர் அவரது சிறுகதை மற்றொரு விருந்து. வழக்கமான பிற அம்சங்களும் உண்டு. |
|
வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான் மற்றும் ஸ்ரீராம நவமி வாழ்த்துகள்.
தென்றல் ஏப்ரல் 2025 |
|
|
|
|
|
|
|