ரங்கநாயகி ஜெயராமன், தமிழ்நாட்டின் முன்னோடி நாட்டியக் கலைஞர்களுள் ஒருவர். நடனக் கலைஞர்கள் பலரை உருவாக்கியவர். அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் அவரது சீடர்கள் நடனப் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். சங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ரங்கநாயகி, செப்டம்பர் 19, 1935 அன்று, விழுப்புரம் மாவட்டத்தில், பி.எஸ். கிருஷ்ணசாமி (எ) கண்ணன் ஐயங்கார் – ஜெயலக்ஷ்மி இணையருக்குப் பிறந்தார்.
இளவயது முதலே நாட்டியத்தில் ஆர்வம் கொண்டிருந்த ரங்கநாயகி, சென்னை திருவல்லிக்கேணியில், ஸ்ரீ சரஸ்வதி கான நிலையம் என்னும் இசைப் பயிற்சிப் பள்ளியை நடத்திவந்த கே. லலிதாவிடம் பரதநாட்டியம் கற்கச் சேர்ந்தார். அப்பள்ளியின் முதல் மாணவி ரங்கநாயகிதான். ரங்கநாயகி ஜெயராமனின் நாட்டிய அரங்கேற்றமே ஸ்ரீ சரஸ்வதி கான நிலையத்தினரின் முதல் அரங்கேற்றமாகும். அந்நிகழ்ச்சியில் பிரபல நாட்டியக் கலைஞர் ருக்மணி தேவி அருண்டேல் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
ரங்கநாயகி, குரு லலிதாவிடம் பெற்ற பயிற்சிக்குப் பிறகு அரசுக் கல்லூரியில் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தியிடம் இசைப்பயிற்சி பெற்றார். பரதநாட்டியத்தின் தஞ்சாவூர் பாணி மற்றும் பந்தநல்லூர் பாணி இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றார். நாட்டியத்துடன் குரலிசை, வீணை, வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் மற்றும் மிருதங்கம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார். ஹரிகதை காலட்சேபத்திலும் தேர்ந்தவராக இருந்தார்.

தனது குரு கே.லலிதாவின் மறைவுக்குப் பிறகு ஸ்ரீ சரஸ்வதி கான நிலையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ரங்கநாயகி. சரஸ்வதி கான நிலையம், கலாக்ஷேத்ராவுக்கு அடுத்தபடியாகச் சென்னையில் உள்ள மிகப்பழமையான கலைப்பள்ளி ஆகும். 1939ல் தொடங்கப்பட்டது. 1995வரை இங்கு நடந்துவந்த தியாகராஜ ஆராதனையில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மதுரை மணி ஐயர், எம்.எல். வசந்தகுமாரி, மஹாராஜபுரம் சந்தானம், வீணை எஸ். பாலச்சந்தர் உள்ளிட்ட பல கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அத்தகைய புகழ் வாய்ந்த நாட்டியப் பள்ளியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரங்கநாயகி ஜெயராமன், நாட்டியத்தில் அதிக கவனம் செலுத்தி, பல்வேறு சிறப்பான பயிற்சிகளை அளித்து நூற்றுக்கணக்கான மாணவிகளை உருவாக்கினார். நான்கு அல்லது ஐந்து குழந்தைகளைக் குழுவாக அமைத்து அவர்களுக்கு ஒரே நேரத்தில் அரங்கேற்றம் செய்துவைக்கும் முறையைக் கையாண்ட முதல் பரத குருவாக ரங்கநாயகி ஜெயராமன் அறியப்படுகிறார்
ரங்கநாயகி, குழு நடனம் மற்றும் நட்டுவாங்கத்திற்காகச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் முக்கிய நடன விழாக்களில் பல்வேறு கச்சேரிகளை நடத்தினார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு கருத்தரங்குகளை, பயிலரங்குகளைப் பொறுப்பேற்று நடத்தினார். நாட்டிய நிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் நடத்திப் புகழ்பெற்றார். நாட்டிய நாடகங்களில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். லலிதா பிரபாவம், சக்திப் பிரபாவம், சிவப் பிரபாவம், நவரச நாயகி, அஷ்டபதி, கிருஷ்ணாஞ்சலி, ஷண்முகப் பிரபாவம், பாவயாமி ரகுராமம், குருநாம ஸ்மரணம், தெய்வீக வாகனங்கள், கந்த புராணம், பக்தியின் சக்தி, நமாமி கணேசம், மாருதி மஹிமை, குறவஞ்சி போன்ற பல நாட்டிய நாடகங்கள் மற்றும் குழு நடனங்களை மேடையேற்றினார்.

லலிதா பிரபாவம் உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலும் மிகுந்த புகழைப் பெற்றது. லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள, அகத்திய முனிவருக்கு ஹயக்ரீவ முனிவர் உபதேசித்த ‘லலிதா பிரபாவம்' என்ற காவியத்தை அடிப்படையாகக் கொண்டு ரங்கநாயகி இந்த நாடகத்தை உருவாக்கியிருந்தார். அதுபோல கந்தபுராணத்தை மையமாக வைத்து உமையின் திருமணம், முருகன் பிறப்பு, தாரகன் வதம், சூரன் வரலாறு, வீரபாகு தூது, சூரசம்ஹாரம், வள்ளி திருமணம் என்ற தலைப்புகளில் ஏழு நாட்கள் ஏழு விதமான நாட்டிய நாடகங்களை நடத்தினார்.
ரங்கநாயகி ஜெயராமன் அகில இந்திய வானொலியின் முதல் கிரேடு வீணை இசைக் கலைஞர்களுள் ஒருவர். சென்னை தொலைக்காட்சிக்காக அவர் தனது மாணவிகளைக் கொண்டு உருவாக்கி அரங்கேற்றிய 'பஞ்ச தாளப்ரிய மாலிகா' மற்றும் 'பஞ்ச ராக ஔடவ மாலிகா' போன்ற வீணைக் கச்சேரிகள் மிகவும் புகழ்பெற்றவை. 400-க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களை நிகழ்த்திய பெருமைக்குரியவர்.
ரங்கநாயகி ஜெயராமன், லலித வந்தனம் (பாகம் 1, 2), நிருத்ய கீதம், பரத கீதம் (பாகம் 1, 2) ஆகிய ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் அவரே இயற்றி இசையமைத்த பாடல்களுடன், அவருடைய குருவின் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் சில பாடல்கள் பல்வேறு கவிஞர்களுடையவையாகும். தாமே இயற்றி இசை, நாட்டிய அமைப்புச் செய்த பாடல்கள் கொண்ட 'குரு சமர்ப்பணம்' என்ற பெயரிலான குறுந்தகட்டையும் வெளியிட்டுள்ளார். தில்லானா, புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரம், வர்ணம் மற்றும் பத வர்ணங்கள் பலவற்றை இயற்றியுள்ளார்.
விருதுகள் தமிழ்நாடு இயல் இசை மன்றம் அளித்த கலைமாமணி பட்டம் – 1995 ஸ்ரீ சரஸ்வதி கான நிலையம் அளித்த 'நாட்டியத் திலகம்' பட்டம் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அளித்த 'ஹரிகதா சிரோன்மணி' விருது நட்டுவாங்க நாயகி பட்டம் பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் அளித்த 'நடனக்கலை வித்தகி' பட்டம் கலாரத்னம் பட்டம் கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் வழங்கப்பட்ட 'நாட்யாசார்யா' விருது - 2001 ஆஷ்ரம் பள்ளி அளித்த 'பீஷ்மா' விருது – 2010 பாரதீய வித்யா பவன் அளித்த 'நிருத்ய ரத்னா' – 2011 நாட்டிய கலாநிதி விருது – 2012 க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனா விழாவில் பெற்ற 'நிருத்ய ரத்னாகரா பட்டம்' – 2013 சங்கீத நாடக அகாடமி விருது – 2018
சரஸ்வதி கான நிலையத்தில் ரங்கநாயகி ஜெயராமனிடம் பயின்ற மாணவர்கள் இன்று உலகமெங்கும் பரவியுள்ளனர். அவர்களில் பலர் நாட்டியப் பள்ளியை நடத்தி வருகின்றனர். கணவர் ஜெயராமன் பலவிதங்களிலும் ரங்கநாயகிக்குப் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்தார். இவர்களுக்கு கணேஷ், ரமேஷ் என இரு மகன்கள். விரிகுடாப் பகுதியில் இந்துமதி கணேஷ் (நிருத்யோல்லாசா நாட்டியப் பள்ளி), ஆஷா ரமேஷ் (ராகமாலிகா இசைப்பள்ளி) ஆகியோர் ரங்கநாயகி ஜெயராமனின் மருமகள்கள். (பார்க்க) ரங்கநாயகி-ஜெயராமன் இணையரின் பேரக் குழந்தைகளும் இசை மற்றும் நடனக் கலைஞர்களாக அறியப்படுகின்றனர்.
ரங்கநாயகி ஜெயராமன் டிசம்பர் 1, 2021 அன்று சென்னையில் காலமானார். நாட்டிய உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டிய முன்னோடிகளுள் ஒருவர் ரங்கநாயகி ஜெயராமன். |