|
தென்றல் பேசுகிறது... |
   |
- | பிப்ரவரி 2025 |![]() |
|
|
|
 |
செயற்கை நுண்ணறிவு ராக்கெட் வேகத்தில் நாளொரு புதிய அறிவிப்பும், பொழுதொரு ஆச்சரியமான முன்னேற்றமுமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் சீனாவின் டீப் சீக் கொடுத்தது டீப் ஷாக். அமெரிக்காவின் AI உலகை மட்டுமின்றி, பங்குச் சந்தையையும் உலுக்கிவிட்டது டீப் சீக். பல ஆயிரம் மில்லியன் டாலர் செலவில் மிகநவீனச் சில்லுகளை உருவாக்கி, பயன்படுத்தி, மேம்படுத்தப்படும் AI-யின் வெவ்வேறு அமெரிக்க சாதனைகளை டீப் சீக் பாரம்பரியச் சில்லுகளைப் பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் செய்து காட்டிவிட்டதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். இந்தியாவும் இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்குள், சுதேசி AI கருவிகளை, இந்தியப் பாரம்பரிய கலை, கலாசார, சமுதாய எதார்த்தங்களைத் திரிபில்லாமல் தரும் வகையில் அறிவிக்கும் எனக் கூறியுள்ளது. போட்டி நல்லதுதான். ஆனால் இது மனிதகுலத்தின் நன்மைக்கானதாக இருக்கட்டும் என்பதுதான் நமது பிரார்த்தனை.
★★★★★
இந்தியாவிலிருந்து மருந்துகளை, மருத்துவச் சீட்டோடு, ஆனால் தனது நண்பருக்காகக் கொண்டுவந்த பெங்களூருவைச் சேர்ந்த மாணவருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திரும்பிப் போக விமானச் சீட்டு இல்லாமல் வந்த பெற்றோருக்கும் இதே கதி நேர்ந்துள்ளது. பதவி நாற்காலியில் அமர்ந்த கணத்திலேயே அதிபர் ட்ரம்ப் இட்ட கையெழுத்துக்குள், நட்பு நாடுகளையும், சட்டபூர்வமாக நுழைய விரும்புவர்களையும், அத்தியாவசிய இறக்குமதிகளையும் மின்னல்போலத் தாக்கியுள்ளது. சுங்கவரி அரசாங்கத்தின் நிதிப்பெட்டகத்தை நிரப்பும் என்பது ஒருபக்கப் பார்வைதான். அது அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலையை ஏற்றும், மக்களின் கைக்கெட்டாத உயரத்துக்கு அவற்றைத் தூக்கியடிக்கும், உற்பத்தியை உறைந்து நிற்கச் செய்யும் என்பது நிதர்சனமான உண்மை. சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்களை வலுக்கட்டாயமாக வெளித் தள்ளினாலும், உழைக்கும் கரங்கள் குறைந்துபோவதால், உற்பத்தியும் நுகர்வும் குறையும். பொருளாதாரம் மந்தமடையும் என்பதைச் சொல்லப் பொருளாதார மேதைகள் தேவையில்லை. எங்கே போகிறோம் என்று யோசிக்கத் திகைப்பாகவும் அச்சமாகவும் இருக்கிறது.
★★★★★
2025ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீயைப் பெற்றுள்ள தொழிலதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன் குறித்த அட்டைப்படக் கட்டுரை 'எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும்' மனவுறுதி கொண்ட ஒரு மாமனிதரின் வாழ்க்கைச் சித்திரம். எழுத்தாளர் ரா.ஸ்ரீ. தேசிகன் குறித்த கட்டுரையும் சுவையானது. அவரது சிறுகதையின் நடை இன்றைக்கு எழுதப்பட்டுள்ளது போல இருப்பது வியப்பைத் தருகிறது. ஆன்மிகம் வரம்புகளைக் கடந்தது என்பதை சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைக் குறிப்பு நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. வாசிக்க, யோசிக்க, நேசிக்க... மீண்டும் ஒரு தென்றல் இதழ். |
|
வாசகர்களுக்கு மஹாசிவராத்திரி நன்னாள் வாழ்த்துகள்.
தென்றல் பிப்ரவரி 2025 |
|
|
|
|
|
|
|