| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												நான்கு அடி நம்பிக்கை
  இரண்டு பக்கமும் எக்கச்சக்க அவசரமாய் விதை வெடித்துப் பெருகிய புறநகர் குடியிருப்பை ஊடறுத்தோடிய மின்வண்டித் தொடரில் லயமாய்த் தடுமாறி பெட்டி பெட்டியாய் நடக்கிறான் இவன்.
  இரைதேடிப் பறவையாய் இவன் கைத்தடியோ இறங்கித் தாழ்ந்து தயங்கும் நிற்கும் நகரும்.
  கூட்டச் சகதியின் மனச்சான்றைத் தொட்டுப் பார்க்கும். வளவளத்துப் பயணித்த வாடிக்கைச் சோதரரை ஏந்தும் இவன் கைகள் இனங்கண்டு கீழிறங்கும்.
  சலிக்கும் மானிடச் சித்தத்தை கவனமாய் களைப்பின்றி கத்திமுனை வருடலாய்த் தொடரும் இவன் இரப்பு.
  இவன் கைப்பற்றில் நிலைத்திருக்கும் நீண்டதொரு நம்பிக்கைக்கு நீளம் நான்கடி.                                           ★★★★★
  வைகறைப் பறவைகள்
  செங்குழம்பு வளையமிட்ட பெருவெளிப் பரப்பினூடே கட்டித் தொங்கவிட்ட விளிம்பற்ற பிருமாண்டம்.
  கனவுநூல் இழை நெய்த ஒளிப்பாட்ட ஊறல்களின் தொன்மைச் சீரமைப்பு. கோடுகளாய் கோட்டிடைப் புள்ளிகளாய் கலக்கும், கலவி செய்யும்.
  இடையின்றி இடம்பெயரும் இந்திரஜாலத் திரையொன்றில் காலத்தளையுண்ட மாக்கோல மாயையாமோ!              
  ★★★★★
  சீசரின் அங்கி, உனது கன்னிமை, அடைமழை
  கூடத்தின் நடுவில் கூட்டாளிச் சந்திப்பு. சீசரின் உயிர் பறிப்புச் செயல் இங்கே நடந்தேறும்.
  இரவு ஞானஸ்நானத்தால் நிரம்பியிருந்த ஏரி வெள்ளம் நிலைக்கப் பார்த்த நிஜத்தவிப்பு. இருமருங்கும் கால்கள் போட்டு என்மேல் ஊர்வதற்காய் நீ எழுந்தருள தென்னங் கீற்றுக்களினூடே தெறித்து வீழும் மழைதாரை காவல் காக்கும்.
  குருதிகொட்ட மலைத்த சீசர் குறுகிவந்த புரூட்டஸின் கட்டாரிக் குத்து அவன் உயிர் பறித்த கணமதனில் சீசரின்பால் அவன் நேசம் சிகரம் தொட்டு நிற்கும்.
  நாகவனத்தின் நுழைவாயில் திரை நொறுங்கித் தூளாகும். சீசரின் அங்கியதை செங்குருதி குளிப்பாட்ட தரை சாயும் அவன் உடலம்.
  விதித்தூர்ந்த நிலப்புழுவை வேகமாய் இரை கொண்ட மைனாவுக்கு வருத்தம்தான்.
  ஓட்டசாட்ட வெறியோடு ஊர்ச்சந்தை அடி நோக்கி ரோமானியர் விரைந்திடுவர்.
  நீயோ என் விழி விளிம்பின் வியர்வை நீவி இதழ் புல்லி முத்தமிட்டு நம் வேள்வியதன் வெற்றியினை உவந்து வியந்திடுவாய்.
  ★★★★★
  தொடரும் தவிப்பு
  கடலுக்கு அடியில் ஆழ்சக்கர வியூகம் உடைபடுகிறது. அதற்கும் கீழே அஜகஜாந்தரத்தில் காலச்செல் சிறையிட்ட நினைவுகள் கிளர்ந்தவிழும் விகசிப்பு. உள்சினத்தின் ஒரு முனைப்பு சுழல் அலை விட்டங்களாய் எழுகின்ற ஆர்ப்பரிப்பு. அடகிற்கு ஆட்பட்டிருந்த ஒரு தடயம் மீட்புக்கு ஏங்கி தேடல் முனகலாய் வெளிப்படும் தவத் தவிப்பு.
  ★★★★★
 
  
  ஈமச் சடங்கு
  வீதியில் வதைபட்டுச் சேறான பூக்கள். வீட்டில் வதைபட்டு மெல்லச் செத்தவனின் உடலின் ஊர்வலம். வீதிக்கோ பூக்களுக்கோ உயிர் விட்டவனுக்கோ தெரியாமல் நடக்கும் ஈமச்சடங்கு
  ★★★★★
  கோடானு கோடிகள்
  லூப் லைனில் காத்துக் கிடக்கும் இவர்கள் போடப்போகும் புதிய பாதைக்காக பக்கத்தில் குவித்திருக்கும் கரளைக் குவியலை கண்ணாரக் கண்டிருக்கட்டும். இது போக்கற்ற சமாந்திர ஜீவிய இருட்டில் ஒட்டிக்கொள்ளாத ஒருமைப்பாடு. | 
											
											
												| 
 | 
											
											
											
												| டாக்டர் பூபதி மலைக்கொழுந்து | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |