ஸ்ருதிஸ்வரலயா: கலாசார மாலை சங்கீதா அண்ணாமலை நாட்டியம் சங்கீதாவின் வயலின் அரங்கேற்றம் பர்க்கெலியில் 'தமிழ்நாட்டுக் கோவில்கள்' கருத்தரங்கு
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 மே 7, 2005 அன்று உதவும் கரங்கள் 'கலாட்டா 2005'ஐ வழங்கியது. சபோட் கல்லூரியில் நடைபெற்ற இந்தத் திருவிழா காலை முதல் இரவுவரை அனைவரையும் மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது.
  இந்த வருட கலாட்டாவிற்கு சிறப்பு சேர்த்தது நடிகர் மாதவன் (பார்க்க: பெட்டிச் செய்தி). அங்கு வந்திருந்தவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, கேட்ட அனைவருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
  கலாட்டாவோடு நிறுத்தி கொள்ளாமல், மறுநாள் மாதவனோடு கால்·ப் விளையாடவும், இரவு விருந்துண்ணவும் எற்பாடு செய்திருந்தனர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.
  காலை 11 மணிக்கு சூப்பர் ஸ்டார் இசை மைதானத்தில் ஒலிக்க, உள்ளே அரங்கத் தில் சிறுவர்கள் நிகழ்ச்சிகளுடன் கலாட்டா தொடங்கியது. தாய்நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்கள் தள்ளியிருந்தும், இன்றைய தலைமுறைச் சிறுவர்கள் இந்தியாவின் இயல், இசை மற்றும் நாடகத்தை உற்சாகத்துடன் அரங்கேற்றுவதைக் கண்ட மனம் மகிழ்ச்சியடைந்தது.
  சிறுவர்கள் வழங்கிய அறுபடை வீடு வெகுஜோர். அடுத்து வந்த மாறுவேடப் போட்டியும் அமர்க்களம். தொடர்ந்து வந்த ஸ்ருதிஸ்வரலயாவின் இசைக் கச்சேரியும், அபிநயா நடனக் குழுவினரின் நாட்டிய விருந்தும் தெவிட்டாத அமுதம்.
  இப்படி அரங்கத்தினுள்ளே பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறுகையில் வெளியே மைதானத்தில் மக்கள் கூட்டம் திரண்டது. பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்தபடி வந்த மக்கள், அரங்கத்திற்குச் செல்லும் வழியில் கோலப்போட்டியை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். இந்த வருடக் கோலப்போட்டி 'வசந்த காலம்' என்ற மையக்கருத்தைக் கொண்டிருந்தது.
  மைதான மேடையில் 'சந்திரமுகி' பாடல் இடையில் நிற்கவே மக்கள் கவனம் மேடையை நோக்கிச் சென்றது. மேடையில் ஊமை அபிநயம் (dumb charades) சூடு பிடித்தது. முன்பதிவு செய்து கொண்டு வந்த குழுக்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சைகை செய்வதைக் காண மிகவும் கேளிக்கையாக இருந்தது. கலாட்டாவில் பங்கு கொண்டவர்களுக்கும், கண்டு களித்தவர்களுக்கும் சுவையான உணவை வழங்கியது உட்லண்ட்ஸ், சன்னிவேல்.
  இதே சமயத்தில், அரங்கத்தினுள்ளே கோலிவுட் வினாடிவினா தொடங்கியது. நவீன வீடியோ சாதனைங்களைப் பயன் படுத்தி, மூளையைக் கசக்கும் கேள்விகளை நடுவர் கேட்க, குழுக்கள் பதில் தெரியாமல் தங்களுக்குள் ரகசியமாகக் கலந்து பேச, பார்வையாளர்களும் நகத்தைக் கடித்தனர். அடுத்து வந்த 'பாட்டுக்குப் பாட்டு' நேர்த்தியா கவும், இனிமையாகவும் அமைத்திருந்தது.
  வெளியே மைதானத்தில் சிறுவர்கள் முகத்தில் வர்ணம் பூசிக் கொள்வதும், வளையத்தை கோக் டின்னில் எறிந்து விளையாடுவதுமாகத் துள்ளித்திரிந்தனர். இதற்கிடையே Madscience நிறுவனம் விஞ்ஞானத்தையும் விளையாட்டையும் கலந்து கற்பித்தது.
  அடுத்து, க்ரியா தீபா ராமானுஜத்தின் ஓரங்க நாடகம் தொடங்கவிருந்தது. அதற்கிடையில் கூட்டத்தில் ஒரு சலசலப்பு...
  பார்த்தால் மாதவன்! மேடை முன் மிகவும் எளிமையாக வந்தமர்ந்தார்.
  Role of Della என்ற நாடகத்தை கண்டு மகிழ்ந்துவிட்டு, தன்னுடன் புகைப்படம் பிடித்துக்கொள்ள முன்பதிவு செய்து காத்திருப்பவர்களை நோக்கிச் சென்றார் மாதவன்.
  அடுத்து, மணிராம் தலைமையில் இரண்டு அணிகள் 'இன்றைய மீடியா நம் சமுதாய பிரச்சனைகளுக்கு முன்னோடியா? கண் ணாடியா?' என்று சூடுபறக்க விவாதித்து கொண்டிருந்தன.
  அடுத்த அரைமணி நேரம் கண்களுக்கு விருந்து படைத்தது ஆடை நாகரிக அணிவகுப்பு.
  கடந்த 40 ஆண்டுகளில் நாகரிகம் வளர்ந்திருப்பதை நடை, உடை மற்றும் நடனத்தில் காட்டினர்.
  வளைகுடாப் பகுதியின் முன்னணி இசைக்குழுக்களில் ஒன்றான 'பல்லவி'யின் கச்சேரி தொடங்கியது. மாதவனும், 'தென்றலே என்னை தொடு' புகழ் நட்சத்திர மான ஜெயஸ்ரீயும் வரவேற்புரை வழங்கினர். சற்று நேரத்தில் மாதவனுடன் கலந்துரை யாடல். மாதவன் இடக்குமுடக்கான சில கேள்விகளைக் கூட இலகுவாகக் கையாண்டார்.
  நிறைவாக 'அப்படி போடு, அப்படி போடு' என்று பல்லவி கலாட்டா செய்து முடிக்க, மக்கள் 'என் ஆசை மைதிலியே' என்ற பாடலைப் பிடிவாதமாக கேட்டு வாங்கிய போது மணி 11.17! நல்ல பொழுதுபோக்கு, அதே நேரத்தில் மிக அவசியமான பணிக்கு வழங்கிய சந்தோஷ உணர்வு இவற்றுடன் வீடு திரும்பினோம். | 
											
											
												| 
 | 
											
											
											
												 வசீகரா .....			
  சான் ஹோஸே உதவும் கரங்கள் ஏற்பாடு செய்திருந்த 'கலாட்டா' நிகழ்ச்சி யில் பங்கேற்க மாதவன் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். அவருடன் உரையாடியதில்...
  உதவும் கரங்களுடன் தொடர்பு
  உதவும் கரங்களுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு சமீபத்திய ஒன்று. இங்கு குடியேறியுள்ள திரைப்பட நடிகை ஜெயஸ்ரீ கேட்டுக் கொண்டதின் பேரில், இந்த 'கலாட்டா' நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவெடுத்தேன்.
  திரைப்பட நண்பர்கள் சிலரைத் தொடர்பு கொண்டதும் பொருட்கள் தந்து உதவினார்கள்.
  'அன்பே சிவம்' படத்தில் தான் உபயோகித்த கண்ணாடியை உடனே அனுப்பி வைத்தார் கமல்ஹாஸன். சூர்யா, 'காக்க காக்க'வின் பிரபலமான போலீஸ் உடையைத் தந்தார். விஜய், ஜோதிகா போன்றோரும் சந்தோஷமாகப் பொருட்கள் தந்துதவினர். அவற்றை இங்கே ஏலம் விட்டு வரும் பணத்தை உதவும் கரங்களின் முயற்சிக்குக் கொடுக்கப் போகிறேன்.
  பிரபலங்களின் சமூக சேவை
  கிரிக்கெட், திரைப்படம் போன்றவற்றில் இருப்பவர்களின் சமூக உணர்வு சுய விளம்பரம் சார்ந்தது என்று பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்தி பரப்பி வருவது வருந்தத்தக்கது.
  சொன்னால் நம்ப மாட்டீர்கள் - நான் கேட்ட இரண்டுமணி நேரத்திற்குள் கமல்ஹாஸன், சூர்யா, விஜய், ஜோதிகா முதலானோர் பொருட்களை அழகாக உறையில் இட்டு அனுப்பி விட்டனர். நடிகர்களில் பலர் வருமானவரித் தூதுவராகவும் (Income Tax Ambassador), எய்ட்ஸ் நோயாளிகளுக்காவும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமை, குழந்தைத் திருமணம் போன்றவற்றை எதிர்த்தும் விளம்பரங்களில் பங்கேற்கின்றனர். எய்ட்ஸ் நோய் விளம்பரத்தில் பங்கேற்பது பெரிய விஷயமாகும். அதற்கு மிகச் சிறந்த சமூக நோக்கு தேவை. நான் நன்கொடை, பொருள் திரட்டித் தருவது போன்ற சிறிய சேவைகளைத்தான் செய்து வருகிறேன். இளம் நடிகர்கள் பலரும் அடக்கமாக, அமைதியாக, தீவிர சமூக சேவையில் நேரடியாகவே ஈடுபட்டுள்ளனர்.
  மாதவனின் ஈடுபாடு
  நான், மிருக நேயக் குழு உறுப்பினன் (People for Ethical Treatment of Animals) மற்றும் தமிழ்நாட்டின் வருமானவரித் தூதுவன். சமூக சேவைக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கிறேன். சமூக உணர்வு என்பது மற்றவரின் முன்னுதாரணத்தால் வருவது அல்ல. ஆத்மார்த்தமான ஓர் உள்ளுணர்வாகும். சமூக சேவையில் பிரபலமானவர்கள் ஈடுபடுவதால் மற்றவரும் ஈடுபடுவர் என்பதனாலெல்லாம் என் போன்றவர் கள் பங்கேற்பதில்லை. சமூக சேவையில் பலர் பல காரணங்களுக்காக ஈடுபடுகின்றனர் - சிலர் மனமகிழ்ச்சிக்காகவும், சிலர் பரிதாப உணர்வாலும், மேலும் சிலர் சமூக மனப் பான்மையாலும் பங்கேற்கின்றனர்.
  நான் ஈடுபடுவது, மிகுதியான குற்ற உணர்வால். நான் எதிர்பார்த்ததை விடக் கடவுள் எனக்கு நிறையக் கொடுத்துள்ளார். அதில் ஒரு பங்காவது சமூகத்திற்குச் சேர வேண்டும் என்ற ஒரு உந்துதலே அதற்குக் காரணம்.
  காரணம் எதுவாயிருந்தாலும், கொடுக்க வேண்டும், பிறருக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே முக்கியம். இதைக் கொச்சைப்படுத்துவது வருந்தத் தக்கது. எங்களைப் போன்றோருக்கு இவ்வாறான வழிகளில் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
  இறுதியாக...
  இங்கு பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சிலிக்கன் வேலி மக்கள் இந்த மாதிரி விஷயங்களில் எவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்ற ஆர்வம் மே லோங்க இங்கு வந்தேன்.
  வந்தபின், உதவும் கரங்களின் ஸான் ஹோஸே கிளையை வழிநடத்தும் என் வயதொத்த இளைஞர்களின் அபார மான சேவையைக் கண்டு வியந்து நிற்கிறேன். இந்த உயரிய சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
  உமா வேங்கடராமன் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  ஸ்ருதிஸ்வரலயா: கலாசார மாலை சங்கீதா அண்ணாமலை நாட்டியம் சங்கீதாவின் வயலின் அரங்கேற்றம் பர்க்கெலியில் 'தமிழ்நாட்டுக் கோவில்கள்' கருத்தரங்கு
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |