2019 ஜனவரி 17, 18 மற்றும் 20ம் நாட்களில், தெற்கு சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள சான் மார்டின் நகரில் வைதிக வித்யா கணபதி கோயிலில் புதிய விக்ரகங்களின் பிராண ப்ரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது. 12.5 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் 2017ம் ஆண்டு, இதே சமயத்தில் மஹா வல்லப கணபதி விக்ரகம் முதலில் நிறுவப்பட்டது. இவ்வாண்டு ஐந்தரை அடி உயரமுள்ள சிவலிங்கம் மற்றும் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள், சாந்த விஷ்ணு துர்கை, லலிதா மஹா திரிபுரசுந்தரி அம்மன் விக்ரகங்களும், விநாயகர், சிவ பெருமான் வாகனங்களும், நந்தியும், பலி பீடங்களும் நிறுவப்பட்டன. இவை தமிழ் நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள சில்ப கலா மையத்தில் உருவாக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டது.
முதல் நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களுக்கு ரக்ஷா பந்தனம், வாஸ்து ஹோமம், புண்ணியாகவாசனம் மற்றும் விக்ரகங்களின் கண் திறப்பு ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமையன்று சாந்தி ஹோமமும் பூர்ணாஹுதியும் செய்தபின் விக்ரகங்களுக்கு அபிஷேக ஆரத்தியுடன் வழிபாடுகள் நிறைவடைந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலையில் கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து 108 கலசங்களை வைத்து சர்வதேவதா ஹோமம் வளர்த்து, கலச நீரினால் ஏகாதச ருத்ர பாராயணத்துடன் அபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று பௌர்ணமி தினமானதால் ஸ்ரீ சத்தியநாரயண சுவாமி பூஜையும், ஆரத்தியும் செய்த பிறகு மஹாபிரசாதம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ கணேஷ் சாஸ்திரி, ஸ்ரீ சிவசங்கர் சாஸ்திரி, ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி மற்றும் பக்தர்களின் உற்சாகமும் உழைப்பும் விழா மிகச்சிறப்பாக நடக்கக் காரணமாக அமைந்தன. |