பிரெண்ட்ஸ் ஆப் ஆஷா நிகேதன் எனும் லாப நோக்கமற்ற பொதுநல நிறுவனத்தின் நிதி திரட்டு நிகழ்ச்சி கடந்த செப்டெம்பர் 28ந் தேதியன்று ப்ரூக்லின் Rex Manor, Connecticut-ல் சிறப்பாக நடந்தேறியது. இந்தியாவில் உள்ள நான்கு மையங்களில் செயல்படும் ஆஷா நிகேதனின் மன வளர்ச்சிக் குன்றிய உறுப்பினர்களின் அன்றாட வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக நிதி திரட்டுவதே இந்த விழாவின் நோக்கம். அமெரிக்காவின் பிரபல தொலைக் காட்சியாளர் ஹெரால்டோ ரெவியேரா முக்கிய விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவில் இரு நூற்றுக்கும் மேலான விருந்தினர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மனவளர்ச்சி குன்றிய மூன்று பேர் அருமையான ஒரு சிறு கலை நிகழ்ச்சியை அளித்து பார்வையாளர் களின் பலத்த கைத்தட்டலை பெற்றார்கள்.
உடல் ஊனத்தை ஒரு குறையாக கருதாத இன்றைய உலகில் மன ஊனம் பற்றிய குழப்பம் தெளிந்ததாகத் தெரியவில்லை. மன நலம் குன்றியவர்கள் மன நோயாளிகள் அல்லர். நோய் வேறு. ஊனம் வேறு. இயற்கையிலேயே ஏற்படும் குறைகளை பூரணமாக சரி செய்ய முடியாவிட்டாலும் அன்பாலும் ஆதரவாலும் ஓரளவுக்கு அந்த குறையுள்ளோரின் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தகுந்த கவனிப்பும் கனிவான சூழ்நிலையும் இக்குறைபாடுகள் உள்ளவர்களின் மனதை அமைதிப்படுத்தி அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வர உதவும். சாதாரண சமுதாயச் சூழலில் இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இதை நிறைவு செய்யும் வகையில் செயல்படும் ஒரு நிறுவனமே ஆஷா நிகேதன்.
சமுதாய ஏற்றத் தாழ்வுகள், ஜாதி மத வேறுபாடுகள், ஆண் பெண் வித்தியாசம் என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி உறுப்பினர்களின் மன அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வழி வகுப்பதே ஆஷா நிகேதனின் நோக்கம். ஆக்க பூர்வமான பணிகளில் இவர்கள் ஈடுபட முடியும் என்பதை நடை முறையில் செயல் படுத்திக் காட்டுகிறது ஆஷா நிகேதன். இதற்காக ஒரு கைவினைப் பொருட்கள் மையம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு வாழ்த்து அட்டைகள், காகித்தப்பைகள், சோப்பு, காகிதக்கூழ் கலைப் பொருட்கள் முதலியவை தயாரிக்கப் படுகின்றன. இதைத் தவிர தென்னை, வாழை, நெல்லி, சப்போட்டா மற்றும் காய்கறிகள் விளையும் தோட்டம் ஒன்றும் உறுப்பினர்களுக்கு இயற்கையுடன் உறவாடும் வாய்ப்பை அளிக்கிறது. நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமின்றி பகல் நேரம் மட்டும் வந்து போகும் உறுப்பினர்களும் இங்கு உண்டு. இவர்கள் கைவினை பொருட்கள் மையத்தில் பயிற்சி பெறுவதோடு சிகிச்சையும் பெறுகிறார்கள்.
ஆஷா நிகேதனின் அன்றாட தேவைகள் பணமாகவோ பொருளாகவோ வருகின்ற நன்கொடைகள் மூலம் நடைபெறுகின்றன. தொழில் மைய உற்பத்திப் பொருட்களின் விற்பனை மூலம் வரும் தொகை சொற்பமே. ஒரு சில உறுப்பினர்களின் குடும்பத்தாரர்கள் அவர்களால் இயன்ற அளவு ஆஷா நிகேதனுக்கு உதவுகிறார்கள். அன்புள்ளம் கொண்டவர்களின் ஆதரவு ஆஷா நிகேதனின் தடையில்லா இயக்கத்துக்கு மிகவும் தேவை. |