'பலகுரல் வித்தகர்' ஐங்கரன்
'பலகுரல் வித்தகர்', 'பாடும் வானம்பாடி' என்றெல்லாம் போற்றப்பட்ட திரு. ஐங்கரன், ஆகஸ்ட் 18, 2016 அன்று காலமானார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எமது அன்பு நண்பர். என் மனைவி திருமதி. ரமா ரகுராமனும் 1990லிருந்து மேடைக்கச்சேரி செய்ய ஆரம்பித்தவர். சுமார் 200க்கும் மேலான கச்சேரிகளில் ஐங்கரனுடன் இணைந்து நான் பங்கு பெற்றிருக்கிறேன். இசையொன்றே அவரது வாழ்க்கையாக இருந்தது. சங்கீதத்தை முழுமையாகப் பயிலவில்லை என்றாலும், சினிமா சங்கீதத்தின் மேல் கொண்ட அளவற்ற காதலால் எந்தப் பாடலையும் அநாயாசமாகப் பாடத் தெரிந்தவர். பி.பி. ஸ்ரீனிவாஸ், ஏ.எம். ராஜா, டி.எம். சௌந்தரராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் யாவரையும் அப்படியே நம் கண்முன் கொண்டுவந்த வித்தகர். திரையுலகப் பிரபலங்களான எஸ்.பி.பி., ஜேசுதாஸ், பி.சுசீலா, சித்ரா, மனோரமா, கிரிஷ் மற்றும் பலருடன் பாடியதுடன் அமெரிக்காவாழ் பாடகர்களான சுனிதா கிருஷ்ணா, ரமா ரகுராமனோடு எண்ணற்ற இசைநிகழ்ச்சிகளை நடத்தியவர். 2002ம் ஆண்டு Fetna இசை நிகழ்ச்சியில் திருமதி. சித்ரா, “ஐங்கரன் இவ்வளவு அழகாகப் பாடுவார் என்று நினைக்கவில்லை! இப்படி ஒரு திறமையா?” என்று வியந்தார். ஆச்சி மனோரமாவுடன், ஒரு மாலை வேளையில் 'முத்துக்குளிக்க வாரீயளா' என்று எல்லாரையும் அழைத்தவர்.

எஸ்.பி.பி. அவர்களுடனான ஐங்கரனின் நேர்காணல் தென்றல், ஜூலை 2010 இதழில் வெளியானது. வாசிக்க: ஐங்கரன் நம்மைவிட்டுப் பிரிந்த செய்திகேட்டுத் துயருற்ற எஸ்.பி.பி., ஒரு கண்ணீர் மடலை அனுப்பியிருந்தார். அதில், இருவருக்கும் இடையே இருந்த நட்புபற்றி மிக விபரமாகத் தெரிவித்திருந்தார்.

திரு. ஐங்கரனுக்கு செப்டம்பர் 25 அன்று சிகாகோவில் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நினைவஞ்சலி சிகாகோ ரகுராமன் தலைமையில் நடைபெற்றது. இறுதியில் ரமா ரகுராமன் குழுவினரின் பஜனை நடைபெற்றது. அவரது இசை நிகழ்ச்சிகளின் சில காட்சிகள் திரையிடப்பட்டன. நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியை ஐங்கரனின் சகோதரர் திரு. சிவ. பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தார்.

ஐங்கரனுடனான தென்றல் நேர்காணல் வாசிக்க: தென்றல், ஜூன் 2008.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எங்களின் கண்ணீர் ஆறுதல்.

ஜூலியட் ரகு,
சிகாகோ

© TamilOnline.com