தென்றல் பேசுகிறது...
"ISIS, அல் கைடா போன்ற வன்முறை இயக்கங்களில் சேருபவர்களைத் தண்டிக்கக்கூடாது" என்று பேசியிருக்கிறார் நடாலி பென்னெட். இவர் பிரிட்டனின் கிரீன் கட்சித் தலைவர். "மாவோயிஸ்டாக இருப்பதொரு குற்றமல்ல" என்று அண்மையில் கூறியுள்ளது கேரள உயர்நீதிமன்றம். "உன்னை நேசிக்க ஒருவழிதான் உண்டு, ஆனால் கொல்ல ஆயிரம் வழிகள் உண்டு. உன் உடலைச் சின்னாபின்னமாக்கி, அதன் சிறுசிறு வெட்டுக்களில் வழியும் ரத்தத்தில் மிதந்து நீ சாகும்வரை நான் ஓயப்போவதில்லை" என்று முகநூலில் தன்னைவிட்டுப் பிரிந்த மனைவிக்கு எழுதினார் எலோனிஸ். அப்படி எழுதியதையே ஒரு குற்றமாகக் கருதமுடியாது என்று கூறிவிட்டது அமெரிக்க உச்சநீதிமன்றம். சட்டத்தை மதிக்கும், அமைதியைநாடும் சராசரி மனிதனுக்கு இத்தகைய அணுகுமுறைகள் கவலையை ஏற்படுத்தினால் ஆச்சரியமல்ல.

நம்மைச்சுற்றிலும் வன்முறை அதிகரித்துக்கொண்டே போவதை நாம் பார்க்கிறோம். கல்வி, அதிகவருமானம், முன்னைவிட உயர்ந்த வாழ்க்கைத்தரம் என்கிற இவையெதுவும் வன்குற்றங்களைக் குறைக்கவில்லை. இந்த நிலையில் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவு கொடுங்குற்றங்களைச் செய்யும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர்வதும், முகநூல் உட்பட்ட பொதுமன்றங்களில் கொலைமிரட்டல் விடுவதும் தண்டிக்கத்தக்கவையல்ல என்கிற அளவுக்கு நீதிமன்றங்களே பேசுவது அச்சந்தருவதாக உள்ளது. "யாதொன்றும் தீமையிலாத சொலல்" வேண்டுமென்றார் வள்ளுவப் பெருந்தகை. ஏனெனில் சொல்லிலிருந்து பிறப்பதே செயல். செய்வதற்கான மன உந்துதலைச் சொல் தெரிவிக்கிறது. மிரட்டல் என்ற நிலையிலேயே அதனைத் தடுத்தால், மீளாத பேரிழப்பு ஏற்படுமுன் நிறுத்தமுடியும்.

*****


அமெரிக்க மண்ணில் குறள் பரப்பும் செயல்பாடுகள் அதிகரித்துவருவது மகிழ்ச்சியாக உள்ளது. குறட்பாவை மனனம் செய்வதோடு நில்லாமல், அதுகுறித்துப் பெருமிதப்படுவதோடு நில்லாமல், அதை வாழ்வின் உரைகல்லாகப் பார்க்கும் மனநிலை ஏற்படவேண்டும். "நான் செய்வதை வள்ளுவர் ஏற்பாரா?" என்று சிந்தித்துப் பின் செயல்படவேண்டும். அப்படிச் செய்யாமல் "குறள் ஒரு வாழ்நெறி" என்று கோஷமிட்டுப் பயனில்லை. வாழ்நெறி என்பது வாழ்ந்துகாட்டப்பட வேண்டியது. "சொல்லுதல் யார்க்கும் எளியவாம்; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்." செய்துகாட்டுவோம்.

*****


"குடும்பவன்முறை ஆசிய சமுதாயங்களில் கலாசாரக் காரணங்களால் வெளியே தெரியவருவதேயில்லை. அது மாறவேண்டும். வன்முறைக்கு ஆட்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்கவேண்டும்; குற்றவாளி தண்டனை பெறவேண்டும்" என்ற தீர்மானமே உள்ளுந்துதலாக அமைந்து, அதன் காரணமாக நியூ யார்க்கின் குற்றவியல் நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறார் ராஜ ராஜேஸ்வரி. இந்த முன்னோடியின் நேர்காணல் நம்மில் பலரின் கண்ணைத் திறப்பதாக இருக்கும். ஹரிகதையாளர் சிந்துஜா மகான்களின் வாழ்க்கைச் சரிதங்களை இசையோடு வழங்கும் கலைஞர் மட்டுமல்ல, 1330 குறட்பாக்களையும் கற்றுத்தேர்ந்து பரிசில் பெற்றவர். இரண்டாவது நேர்காணல் அவருடையது. உலர்செர்ரி ரசமென்ன, முப்பரிமாண அச்சின் மர்மமென்ன, அழகழகான சிறுகதைகளென்ன.... இந்த இதழ் மீண்டும் நவரச விருந்தாக வந்திருக்கிறது உங்கள் கையில்.

தென்றல் வாசகர்களுக்குப் புனித ரமலான் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜூன் 2015

© TamilOnline.com