ஹரிகதை சிந்துஜா சந்திரமௌலி
|
|
ராஜ ராஜேஸ்வரி |
|
- உமா வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன், சி.கே. வெங்கட்ராமன், மீனாட்சி கணபதி|ஜூன் 2015| |
|
|
|
|
|
நியூ யார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி, இப்பதவி வகிக்கும் முதல் இந்தியர், முதல் தெற்காசியர், முதல் அமெரிக்க இந்தியப் பெண்மணி எனப் பலவகைப் பெருமைகளைப் பெற்றவர். 16 வயதுவரை சென்னையில் வளர்ந்த ராஜேஸ்வரி பின்னர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். "நான் ஜட்ஜாக நியமிக்கப்பட்ட நாள் ஏப்ரல் 14. சிடி ஹாலில் நான் கையெழுத்திட்டபோது அன்றுதான் தமிழ் வருடப்பிறப்பு என்ற உணர்வு என்னில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது" என்கிறார் இவர். 5 வயதிலேயே பரதநாட்டியத்தைக் கற்றுத் தேர்ந்துவிட்ட ராஜேஸ்வரி தமது தாயாருடன் அதைக் கற்பிக்கத் தொடங்கியபோது அவருக்கு வயது 10! தாயின் நினைவாகத் தொடங்கிய பத்மாலயா டான்ஸ் அகடமியின்மூலம் இவர் நற்பணிகளுக்கு நிதிதிரட்ட நடனநிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தித் தருகிறார். பாலியல் வன்முறைக்கு ஆட்படும் பெண்கள் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத்தருவதற்கான முக்கிய வழியாகவே இவர் குற்றவியல் வழக்குரைஞர் பணியைத் தேர்ந்தெடுத்தார். இப்போது நியூ யார்க் நகரத்தின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றிருப்பதையும் அதன் தொடர்ச்சியாகவே கருதுகிறார். இவருடைய கணவர் பெயர் மைக்கல் கிறிஸ்டி, மகள் பெயர் பத்மா. பொதுச்சேவை இவரது மூச்சு. வாருங்கள் அவர் வாயிலாகவே அவரது உயிர்ப்பான கருத்துக்களைக் கேட்கலாம்....
*****
தென்றல்: வணக்கம் அம்மா. ராஜ ராஜேஸ்வரி: வணக்கம். என்னோட இமெயில் கிடைத்ததா?
கே: ஆமாம். நீங்க இவ்வளவு நல்லா தமிழ் பேசறதைக் கேட்க சந்தோஷமா இருக்கு. ப: நான் சென்னையில் பிறந்தேன். அங்கதான் 16 வருஷம் இருந்தேன். தமிழ் என்னுடைய தாய்மொழி.
கே: நீங்கள் பெற்றுள்ள இந்தப் பதவி ஒட்டுமொத்த இந்தியர்களைப் பெருமைகொள்ள வைக்கிறது. வாழ்த்துக்கள். ப: It's my pleasure. என் அம்மா பத்மா ராமநாதன் எனக்குப் பெரிய ரோல்மாடல். என்னோட கலையார்வத்துக்கு அவங்கதான் காரணம். நாங்க பணக்காரக் குடும்பம் இல்லை. ஆனாலும் வீட்டில எப்பவும் நடனம், பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். என்னைக் கவர்ந்த மற்றொரு இந்தியப் பண்பாடு விருந்தோம்பல். ஏழையா இருந்தாலும், வீட்டுக்கு வந்தவருக்குச் சிரித்த முகத்தோடு ஒரு டம்ளர் மோராவது கொடுத்து உபசரிக்கும் பழக்கம் நம்நாட்டில் உண்டு. நான் என் தாயுடன் பல நாடுகளில் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆனால் இந்தியாவில் உள்ளதுபோன்ற விருந்தோம்பலை எங்கும் நான் பார்த்ததில்லை. இந்தப் பழக்கம் என்னிடம் இன்றும் உள்ளது.
கே: இந்த இடத்தைத் தொட நீங்கள் மிகவும் உழைத்திருக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர், பெண், ஆசியர், தமிழர் என்று பல இடையூறுகளைத் தாண்டி இந்த வெற்றி வந்திருக்கிறது. இதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். ப: நன்றி. என்கூடப் படித்த சில பெண்கள், 14, 15 வயதிலேயே கல்யாணம் செய்துகொண்டு படிப்பை நிறுத்திவிட்டனர். அவர்களது பெற்றோர்கள் பணத்தை அவர்கள் படிப்பில் முதலீடு செய்யாமல், வரதட்சிணையாகக் கொடுத்தனர். இது என்னை மிகவும் பாதித்தது. நான் சட்டம்பயில இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அவர்களில் பலர் மிகவும் புத்திசாலிகள். சரியான வாய்ப்புக் கிடைத்திருந்தால், கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்திருக்கக்கூடும். நோபல்பரிசு பெற்றிருக்கக்கூடும். அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்கால இந்தியப் பெண்கள் எல்லாப் பொறுப்புகளையும் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒரு தாயாக, மனைவியாக இருந்தபடி தேசத்திற்கும் கலாசாரத்திற்கும் ஏதாவது செய்யமுடியும். அதேசமயம் பொறுப்பான பதவியும் வகிக்கமுடியும். எல்லாமே சாதிக்க முடியும்.
இந்தியப்பெண்கள் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். ஏன், தெற்காசிய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்கப் பெண்களுக்குக்கூட வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஹிலரி கிளிண்டன் கண்ணாடிக் கூரையை (Glass ceiling) துளைத்துப் போவதைப்பற்றி எப்பொழுதும் பேசுகிறார். ஆனால் பல வருடங்களுக்கு முன்னரே இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதில் எனக்குப் பெருமை உண்டு. சில துறைகளில் நாம் முன்னேறியிருக்கிறோம். ஆனால் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும், குடும்ப வன்முறை (domestic violence) மற்றும் குழந்தைகள் தகாதமுறையில் நடத்தப்படுவது ஆகியவை அகற்றப்படவேண்டும். இந்த நோக்கங்களுக்காகப் பாடுபடவே இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.
கே: உண்மைதான். நீங்கள் நினைத்தால் அதிகம் சம்பாதிக்கும் வேறு வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.... ப: என் மகள் பத்மா என்னிடம் "நீங்கள் பிரபலமான அரசு வழக்கறிஞராக, கற்பழிப்பு, கொலை வழக்குகளில் வாதாடுகிறீர்கள். எதிர் வழக்கறிஞராகப் (defense attorney) பணியாற்றினால் நிறையச் சம்பாதிக்கலாமே" என்பாள். நான் "பணம்மட்டுமே முக்கியமல்ல. நடந்துவிட்ட கொலையையோ, கற்பழிப்பையோ என்னால் மாற்றமுடியாது. ஆனால் நான் வாதிடுவது பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு, என்னால் நீதியைப் பெற்றுத் தரமுடியுமானல் அதைச் செய்வது என் கடமை" என்பேன். இளவயதில் அம்மாவின் தாக்கத்தினால் கலைகளை வளர்ப்பது என் கடமை என நினைத்தேன். ஆனால் வளர்ந்த பிறகு "Art without advocacy is not enough" எனப் புரிந்துகொண்டேன். சமூகத்தில் எல்லோருக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். பொருளாதாரம், வகுப்பு, சாதி என்கிற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் நீதி கிடைக்கவேண்டும்.
இந்திய கிராமப்புறங்கள் பலவற்றில் ஒருவர் கற்பழிக்கப்பட்டால் அதைப் போலிஸில்கூடச் சொல்வதில்லை. "நமக்கு நீதி கிடைத்துவிடப் போகிறதா என்ன?" என்ற மனப்பான்மை இருக்கிறது. ஒரு கற்பழிப்பு அல்லது வன்முறையைப்பற்றிப் படிக்கும்போது நான் அதிர்ச்சியடைகிறேன். அங்கே அந்த இளம்பெண்ணுக்கு நீதிகிடைக்க வாய்ப்பு அதிகமில்லை. இந்த நிலை மாறவேண்டும். விருந்தோம்பலுக்கோ, கலாசாரத்துக்கோ இந்தியாவில் குறைவில்லை. எவ்வளவு வசதிக்குறைவு இருந்தாலும் அங்கு சந்தோஷத்துக்குக் குறைவில்லை. ஆனால், சமூகத்தில் வேரூன்றிப்போன பாரபட்சத்தினால், பெண்களைக் குறைவாக மதிப்பிடும் பழக்கம் மாறவேண்டும். மாறினால் அவர்கள் நிறைய சாதிக்கமுடியும்.
கே: அமெரிக்காவில் சட்டத்துறையில் இந்தியர்களை அதிகம் பார்க்கமுடிவதில்லை. உங்களுக்கு எப்படி இதில் ஆர்வம் வந்தது? ப: மருத்துவம், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் இந்தியர்கள் பெருமளவில் உள்ளனர். அமெரிக்காவின் சிறந்த மருத்துவர்களில் சிலர் இந்தியர்கள். சிலிக்கான் வேல்லியை ஒரு குட்டிச்சென்னை எனச் சொல்லலாம். அதில் எனக்குப் பெருமைதான். ஆனால் சட்டம், அரசியல் துறைகளில் இப்பொழுதுதான் அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறோம். புலம்பெயர்ந்த இந்தியர்கள் இங்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், சட்டத்துறையில் நாம் காலூன்ற வேண்டும். நியாயம் கிடைக்க அதுவொரு வழி. அதனால்தான் நான் சட்டம் பயின்று வழக்கறிஞரானேன். இப்பொழுது நீதிபதியாகவும் ஆகியிருக்கிறேன்.
கே: உங்களது பிற இன்ஸ்பிரேஷன்ஸ் என்னென்ன? ப: நான் இந்தியாவில் இருந்தபோது பார்த்த குடும்ப வன்முறைகள், இளவயதுத் திருமணங்கள், சமூக அநீதிகள் இவை என்னைச் சட்டம் படிக்கத் தூண்டின. நான் இங்கு படிக்கும்போது, நீதித்துறையை குறைசொல்வதை விடுத்து அதில் பங்குபெற்று மாற்றத்தை உண்டாக்க முடிவுசெய்தேன். இங்கேகூட தெற்காசியப் பெண்கள் கணவனாலோ, பாய்ஃப்ரண்டாலோ அடித்துத் துன்புறுத்தப்பட்டால் சட்டத்தின் உதவியை நாடுவதில்லை. இளவயதில் பரதநாட்டியம், குச்சிப்புடி இவைகளின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முயன்றேன். வளர்ந்தபிறகு சட்டம், நீதி இவைகளின்மூலம் ஏற்படுத்த முயல்கிறேன்.
சட்டம் படிக்க முடிவுசெய்ததும், நீதிபதியாக வேண்டும் எனத் தீர்மானித்தேன். 'இருட்டைப் பழிப்பதைவிட ஒரு விளக்கை ஏற்று' என்ற இந்தியப் பழமொழிக்கேற்ப, சட்டத்திலுள்ள குறைகளையும், அநீதிகளையும் பழித்துப் பேசுவதைவிட அந்தத் துறையில் நுழைந்து அதில் நம்மாலியன்ற சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்த முடிவுசெய்தேன். படிப்படியாக முயன்றால் மாற்றம் சாத்தியம். |
|
|
கே: நீங்கள் படித்த புத்தகம், பார்த்த சினிமா மற்றும் பொழுதுபோக்குகள் குறித்துச் சொல்லுங்கள்... ப: பதினாறரை வருஷம் அரசு வழக்கறிஞராக (DA's office) வேலை செய்தேன். நிறைய கற்பழிப்பு, கொலை வழக்குகள் எல்லாம் துப்புத்துலக்க வேண்டியிருந்தது. சாப்பிட, தூங்கக்கூட நேரம் கிடைக்காது. சினிமாவெல்லாம் பார்த்துப் பல வருஷங்கள் ஆயிற்று. கடைசியாகப் படித்த புத்தகம் மகாத்மா காந்தியின் 'சத்தியசோதனை'. பாஸ்டனில் இருந்தப்ப ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். ஆனா தமிழைப்போல இனியமொழி இல்லையென்பதால் போன டிசம்பரில் தமிழில் படித்தேன். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் இரண்டுபேருமே என்னுடைய இன்ஸ்பிரேஷன்ஸ். காந்தி "போர் வேண்டாம். அமைதியும், புரிதலும் ரொம்ப முக்கியம்" என்று சொன்னவர். அதில் எனக்குப் பெரிய வியப்பு உண்டு.
இந்தப் பதவி ஏற்றதும், முன்னர் என் பொறுப்பிலிருந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களைச் சந்தித்து, அவர்கள் வழக்கு வேறு நல்ல கைகளில்தான் போயிருக்கிறது, கவலைப்படத் தேவையில்லை என்று ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. அதற்குப்பின், நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவேண்டியிருந்தது. தற்சமயம் வேலை, கடமை இவைதான் முக்கியம்.
கே: இந்திய, அமெரிக்கச் சட்ட அமைப்புகளை எவ்வாறு ஒப்பிடுவீர்கள்? ப: இந்தியாவோடு ஒப்பிடுகையில், இங்கு சட்டத்தை அணுகுவது எளிது. வழக்குகள் வேகமாக நடக்கின்றன. குற்றவாளி கைதாகி நீதிமன்றத்தில் நிற்பது உறுதி. ஆனால் இந்தியாவில் 'White-collar crimes' எனக்கூறப்படுபவற்றுக்குத் தீர்வு கிடைத்ததாக என் கவனத்துக்கு வரவில்லை. தமிழ் சினிமாவில் அழகான வாதங்களைக் கேட்டுள்ளேன். ஆனால் அது சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஒரு பெண் மிருகத்தனமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதைப் படித்து கொதித்துப்போனாம். அவ்வளவு கொடூரம் நடக்கும்போது மட்டும் மக்கள் கொதிக்கிறார்கள். தினசரி நடக்கும் கொடுமைகளை யாரும் கண்டுகொள்வதில்லை, சிறிய அநீதிதானே என நினைக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவை சிறியவை அல்ல. பொதுவாக அவை மறைக்கப்பட்டு விடுகின்றன.
இளம்பருவத்தில் எனக்கு இது புரியவில்லை. இங்கு வந்து ஒரு தாயானதும், அங்கு நீதிபெறச் சட்டத்தை அணுகும் வாய்ப்புக் குறைவு என்பது புரிகிறது. இந்த நிலை மாறவேண்டும். நிறைய முன்னேற்றம் வந்துள்ளது. நிறையப்பேர் அர்ப்பணிப்போடு உழைக்கிறார்கள். ஆனால் குறைகளை ஒப்புக்கொண்டால்தான் எதையும் சாதிக்கமுடியும். இதைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டோருக்கு உதவவேண்டியது அவசியம்.
கே: மறக்கமுடியாத அனுபவங்களைச் சொல்லுங்கள்... ப: பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளைக் கையாளும் என்னிடம், இந்தியா, இலங்கை, பாகிஸ்தானைச் சேர்ந்த பலர் வருவார்கள். அவர்கள் ராஜேஸ்வரி என்ற பெயருடைய ஒருவரை வழக்கறிஞராகப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள். ஒரு பெண் என்னிடம் "ஏதோவொரு உயர்ந்த சக்திதான் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளது. அமெரிக்க வழக்கறிஞரால் என் பெயரைக்கூட உச்சரிக்கமுடியாது. பின் என் மாமியாருக்கு என்மேலுள்ள கோபத்திற்கான காரணத்தை எப்படிப் புரிந்துகொள்வார்! அவரது மகன், குடித்துவிட்டு என்னை அடித்துத் துன்புறுத்துவதை, என் குழந்தையை சிகரெட்டால் சுடுவதை நான் குற்றம் சொல்வதால், என் மாமியாருக்கு என்னிடம் அளவுகடந்த கோபம் வருகிறது என்றால், அமெரிக்கரால் புரிந்துகொள்ளக்கூட முடியாது" என்றார். நான் அவரிடம் "இந்தியாவிலும் இது ஏற்புடையதல்ல. இங்கு கண்டிப்பாக ஏற்கப்படாது. இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை" என்று கூறி கணவர்மேல் வழக்குத்தொடரச் சொன்னேன். தைரியமாக வழக்குத் தொடர்ந்தார். கணவருக்கு தண்டனை கிடைத்தது. அவருடைய கணவர் அவரது விசாவைப் பிடுங்கிக்கொள்வதாக மிரட்டிவைத்திருந்தார். கொடுமைக்குள்ளான பெண்களுக்கான சட்டத்தின்கீழ் அவருக்கு விசாவும் கிடைத்தது. அவருக்கென ஒரு வேலை, அப்பார்ட்மெண்ட் எல்லாம் இப்பொழுது உள்ளன. தன் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறார். "நீங்கள் ஒருவர்தான் என்னை நம்பினீர்கள்" என்று அவர் சொன்னதை என்னால் மறக்கமுடியாது.
அரை மில்லியன் டாலர் சம்பளத்தைவிட இது பெரிய நிறைவைத் தருகிறது. நான் அரசாங்க ஊழியர். எனது வருமானம் குறைவுதான். ஆனால் மனநிறைவு கண்டிப்பாகக் கிடைக்கிறது. என் 18 வயது மகள் பத்மா ஆசிரியராகிப் பிறருக்கு உதவ விரும்புகிறாள். அவள் வளர்ச்சிகுன்றிய குழந்தைகளுக்குக் கல்விகற்பிக்க விரும்புகிறாள். அதனால் மாற்றம் உண்டாக்க முடியும் என நினைக்கிறாள். நான் நியூ யார்க்கில் நடனம் கற்பிக்கிறேன். அவளும் என்னுடன் நடனம் கற்பித்தாள். அவள் என்னிடம் "அம்மா, உங்களிடமிருந்து சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதைக் கற்றுக்கொண்டேன். ஆனால் ஓர் ஆசிரியராக அதைச் செய்யவிரும்புகிறேன்" என்று கூறினாள். நான் அவளிடம் "ஆசிரியரை நாம் குரு என்கிறோம். குரு ஆசிரியரைவிட உயர்வானவர். அவர் ஒரு முன்னோடியாக இருந்து வழிநடத்துபவர். ஆசிரியராக உன்னால் ஒரு குழந்தையின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கமுடியும்" என்றேன். அவள் நியூ யார்க்கில் ஆசிரியர்பயிற்சி பெற்றுவருகிறாள்.
கே: நீங்கள் பரதநாட்டியக் கலைஞரும்கூட. எப்படி நேரம் கிடைக்கிறது? ப: நீங்கள் நேரத்தைத் தேடினால் கிடைக்காது. நீங்கள்தான் நேரத்தை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். நான் வழக்கறிஞர் பரீட்சைக்குத் தயார் செய்துகொண்டிருந்த போது, கர்ப்பமாக இருந்தேன். அத்தோடு என்னுடைய இரண்டு குச்சுபுடி மாணவர்களையும் அரங்கேறத் தயார்செய்து கொண்டிருந்தேன். அப்போது சரியாகத் தூங்கக்கூட நேரம் கிடைக்காது. ரங்கப்ரவேசம் அழகாக நடந்தேறியதோடு, நான் விரும்பியபடி அழகான பெண் குழந்தையும் பிறந்தது. என்னுடைய பார் எக்ஸாமிலும் வெற்றிபெற்றேன். பிற பொழுதுபோக்குகளை நிறுத்தித்தான் நேரம் உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.
கே: உங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதி என்று கூறினீர்கள். அதை விளக்கமுடியுமா? ப: என் தந்தை அப்போது சென்னையில் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்றுவந்தார். நான் சென்னைக்குச் சென்று அவருடன் இருக்க விரும்பினேன். அவர் அப்போது "கண்ணா, கடவுள் என்னிடம் விரும்பியதெல்லாம் செய்து முடித்தாகிவிட்டது. நான் குணமடைவேன் என்பது உறுதியில்லை. ஆனால் நீ என்ன செய்யப்போகிறாய் என்று உறுதியாகச் சொல்லமுடியும். Because you have made a real impact" என்றார். நான் பரபரப்பான பல கொலைவழக்குகளில் வாதாடுவதை, தொகுத்து வழங்குவதை அவர் பார்த்திருக்கிறார். "நீ ஒரு டான்சர், உனக்கு மேடையனுபவம் உள்ளது. அதனால் உன்னால் நீதிமன்றத்தில் தயக்கமில்லாமல் பேசமுடிகிறது. உனது நடையுடை பாவனை வித்தியாசமாக, நளினமாக உள்ளது" என்பார். ஆனால் எனது வெற்றிக்கு அதுமட்டுமே காரணமல்ல. "நீதிபதியாக அமர்ந்து நீ பல இனமக்களின் பிரதிநிதியாக விளங்கவேண்டும்" என அவர் கூறினார். நான் அவரது ஒரே குழந்தை. அவர் உயிருடன் இருந்தபோதும் சரி, இறந்த பிறகும் சரி, அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினேன்.
நான் என் தந்தையை மனதில் நினைத்துக்கொண்டு இந்தப் பதவிக்கு நவம்பர் இறுதியில் விண்ணப்பித்தேன். மார்ச் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தனர். விண்ணப்பித்த முதல்முறையே எனக்கு இந்தப் பதவி கிடைத்துவிட்டது. மார்ச் முதல்வாரத்தில் மேயர் பிளாஸியோவைச் (Bill de Blasio) சந்தித்தேன். எனக்கு முக்கியஸ்தர்கள் யாரையும் தெரியாது. All I have is my work and word. நான் மேயரிடம், இதுவரை உழைத்ததைப்போல் மூன்றுபங்கு உழைப்பேன் என்று உறுதிகூறினேன். நியூ யார்க் பெண்களுக்கு, அவர் எந்தப் பின்னணி கொண்டவராக இருந்தாலும், நீதி கிடைக்கப் பாடுபடுவேன் என்று உறுதியளித்தேன். நான் செய்திருந்த வேலைகளைப் பார்த்துவிட்டு "நீங்கள் திறம்படச் செயல்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நீங்கள் வரலாறு படைக்கப் போகிறீர்கள்" என்றார் அவர்.
கே: பள்ளி அல்லது கல்லூரிக் காலத்தில் உங்களை பாதித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? ப: நான் இங்கு வந்த இரண்டு வருடத்தில், எனது 18வது வயதில் முருகன்கோவில் நடனநிகழ்ச்சிக்குப் போகும்போது என் தாயார் கார் விபத்தில் காலமானார். அவர் எனக்குக் குரு, தோழி எல்லாம். நான் மிகவும் உடைந்துபோனேன். அப்பொழுது நான் இந்தியா திரும்புவதா அல்லது இங்கேயே வழக்கறிஞர் ஆவதா என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். நியூ யார்க் இந்தியர்களும், இலங்கையர்களும் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் அவர்களது வளர்ப்புமகள் என்றே சொல்லவேண்டும். எனக்கும் அந்த விபத்தில் காயம் ஏற்பட்டிருந்தது, போதுமான பணவசதி இல்லை. உறவுமுறை இல்லாவிட்டாலும் அவர்கள் என்னைக் குடும்பத்தில் ஒருவராக நடத்தினர். அப்பார்ட்மெண்ட் வாடகை, கல்வி உதவித்தொகை பெற என்று எல்லாவற்றிலும் உதவினர். அவர்களது ஆதரவு இல்லாமல் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது.
கே: அப்போது உங்கள் தந்தை இந்தியாவில் இருந்தாரா? ப: இல்லை. என் அம்மா காலமானதும் என் தந்தை இங்கு வந்துவிட்டார். அவர் உதவியில்தான் நான் எல்லா வேலைகளையும் சமாளிக்கமுடிந்தது. நான் சட்டம் படித்துக் கொண்டிருந்தபோது என் மகள் பிறந்தாள். அவளுக்கு அவரே தாத்தா, பாட்டி எல்லாமும். தனது இளவயதுபற்றிக் கதை சொல்வார். அவளுக்குச் சாதம் ஊட்டுவார். I still miss him very very much. என் தந்தை எங்கிருந்தாலும் என்னைப்பற்றிப் பெருமைப்படுவார். அவருடைய ஆசி இல்லாமல் இது நடந்திருக்காது.
கே: சட்டக் கல்லூரியிலிருந்து ஜட்ஜ் பதவிவரையிலான உங்கள் பயணத்தைக் கொஞ்சம் சொல்லமுடியுமா? ப: சட்டம் படிக்கும்போதே குற்றவியல் நீதிபதிகளிடம் பயிற்சி பெற்றிருக்கிறேன். அப்போதே நான் கார்ப்போரேட் அட்டர்னி ஆகப்போவதில்லை, ஆம்புலன்ஸையோ, ஏழைகளையோ துரத்திப் பணம் சம்பாதிப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். குற்றவியல் சட்டம் படிப்பதுதான் அர்த்தமுள்ளதாகத் தோன்றியது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதே என் நோக்கம். பாதிக்கப்பட்டோர் சார்பாகக் குரல்கொடுக்க விரும்பினேன்.
கே: உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும் என விவரியுங்கள்... ப: DA's ஆஃபிஸில் வேலை செய்யும்போது எல்லாருக்கும் முன்னால் அலுவலகத்தில் இருப்பேன். காலை 7 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பேன். 9.30 மணிக்குத்தான் அலுவலகம் தொடங்கும். மாலை 6 மணிவரை வேலை செய்வேன். மதிய உணவெல்லாம் கிடையாது. பகல், இரவு எப்போது வேண்டுமானாலும் என்னை அழைப்பார்கள். நான் ஒரு சூப்பர்வைஸர் என்பதால் குற்றம் நடந்த இடத்திற்குச் செல்லவேண்டும். வார இறுதியில் நடன நிகழ்ச்சிகள்; இலவச நிகழ்ச்சிகள்தான். நியூ யார்க் தீபாவளி கொண்டாட்டத்திற்கு, பள்ளிகள், அநாதை விடுதிகள், சர்ச்சுகள், மிருகக்காட்சி சாலைகள் இவற்றுக்காக இலவச நிகழ்ச்சிகள் செய்வேன். சராசரியாக வாரத்துக்கு 60 மணிநேரம் வேலை. கலாசாரப் பணிகளுக்கு 25 மணிநேரம். இந்தப் புதிய பதவியில் இன்னும் அதிகநேரம் வேலை செய்யவேண்டும் எனச் சொல்கிறார்கள். இதில் அலுவலக நேரம் போக, மாலை 5 மணிமுதல் காலை 1 மணிவரை வேலை செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்கள். இது எனக்குப் பழக்கமானதைவிட அதிகம்தான். ஆனால் நாம் செய்ய வேண்டியதைச் செய்துதான் ஆகவேண்டும்.
கே: இதற்கு உங்கள் குடும்பத்தினரது ஒத்துழைப்பு இருந்திருக்க வேண்டும் இல்லையா? ப: கண்டிப்பாக. என் கணவர், மகள், முன்னர் என் தந்தை இவர்களது உதவியில்லாமல் எதுவும் செய்திருக்க முடியாது. என் கணவர் எனது முதுகெலும்பு.
முடிக்கும்போது, "தென்றல் பத்திரிகையின் சில கட்டுரைகளைப் படித்தேன். நன்றாக இருந்தன. தென்றல் மிகநல்ல பத்திரிகை. நீங்கள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் நிறையச் சேவை செய்கிறீர்கள்" என்றார் நீதிபதி ராஜ ராஜேஸ்வரி. அத்தனை பணிகளுக்குமிடையே தென்றலைப் படித்துக் கருத்துச் சொன்ன அவரது அக்கறைக்கு நன்றிகூறி, ஒரு சமூகவுணர்வு கொண்ட முன்னோடியோடு உரையாடிய மகிழ்வோடு விடைபெற்றோம்.
உரையாடல்: உமா வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன், சி.கே. வெங்கட்ராமன் தமிழ் வடிவம்: மீனாட்சி கணபதி
*****
என் பதவியேற்பு தரும் செய்தி இந்தப் பதவியை எனது தனிப்பட்ட வெற்றியாக நான் நினைக்கவில்லை. ஒரு பாதையாக, வழிகாட்டலாக நினைக்கிறேன். சென்னையிலிருந்து வந்து நான் இதைச் சாதிக்கமுடியும் என்றால் மற்றவர்களும், குறிப்பாகப் பெண்கள், இதைச் சாதிக்கமுடியும். ஆண்குழந்தைகளை மேற்படிப்புக்கு அனுப்பத் தயங்காத பெற்றோர், பெண்களை மேற்படிப்புக்கோ, ஆராய்ச்சிக்கோ அனுப்பத் தயங்குகிறார்கள். இப்பொழுது கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது என்றாலும் ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் மேலே படிக்க வாய்ப்பு தரப்படவேண்டும். இதில் சட்டம் மற்றும் சமூகத்தின் உதவி தனக்குண்டு என்ற நம்பிக்கை எல்லாருக்கும் வரவேண்டும். நான் அதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முயல்கிறேன்.
- ராஜ ராஜேஸ்வரி
*****
பெயரில் என்ன இருக்கிறது! முதலில் ராஜ ராஜேஸ்வரி என்ற என் பெயரைச் சிதைக்காமல் சொல்லக் கற்றுக்கொள்ளட்டும். "ஏன் அமெரிக்கர்கள் உச்சரிக்க எளிதாக என் பெயரை மாற்றிக் கொள்ளக்கூடாது?" எனச் சிலர் கேட்கின்றனர். என் தாய், திருமணமாகிச் சில ஆண்டுகள் குழந்தை இல்லாததால், நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி அம்மனிடம் வேண்டிக்கொண்டு நான் பிறந்ததால் அந்தப் பெயரை வைத்தார். அதனால் நான் என் பெயரை சுருக்கவோ, மாற்றிக்கொள்ளவோ விரும்பவில்லை. இதில் நான் ஓப்ரா வின்ஃப்ரீ (Oprah Winfrey) போல. அவர் தொலைக்காட்சியில் பணியாற்றத் தொடங்கியவுடன் சிலர் அவர் பெயர் கடினமாக உள்ளதாகவும், மாற்றிக்கொள்ளும் படியும் சொன்னார்கள். ஆனால் அந்தப் பெயர் தனக்குப் பெருமை அளிப்பதாகவும், மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.
நான் நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கியதும் "இது என்ன பெயர்? எப்படி உங்களைக் கூப்பிடுவது?" எனக் கேட்டனர். நான் அவர்களிடம் இதுதான் எனது பெயர். ஆர்னால்ட் ஸ்வாஷனேகர் பெயரைச் சொல்லப் பழகவில்லையா, அதுபோல இதையும் கற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினேன். இது என்னுடைய அடையாளம். நான் மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.
நமது அடையாளத்தை நாம் இழந்துவிட்டால், சமுதாயத்திற்கு நமது பங்களிப்பு எதுவும் இருக்கமுடியாது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முதலில் நாம் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதில் நமக்குப் பெருமிதம் வேண்டும். இது எனக்குச் சிறுவயதுமுதல் சொல்லித்தரப்பட்ட பாடம். அதனால் நான் என் பெயரை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. நான் நீதிபதியாக அமரும்பொழுது அவர்கள் ராஜராஜேஸ்வரி தலைமைவகிக்கிறார் என்று சொல்லட்டும்.
- ராஜ ராஜேஸ்வரி |
|
|
More
ஹரிகதை சிந்துஜா சந்திரமௌலி
|
|
|
|
|
|
|
|