275,000 டாலர் பரிசுத்தொகை கொண்ட இந்தியா ஓப்பன் பாட்மின்டன் போட்டித்தொடரில் பெண்கள் பிரிவில் சயினா நெஹவாலும், ஆண்கள் பிரிவில் கே. ஸ்ரீகாந்த்தும் முதலிடங்களைப் பிடித்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. பாட்மின்டன் ஆட்டத்தில் சீனர்களின் ஆதிக்கத்தை இவர்கள் முறியடித்துள்ளார்கள் என்று கருதுவாரும் உள்ளனர். இந்த சாம்பியன்ஷிப்பை வெல்வதற்குச் சில நாட்கள் முன்னர்தான் உலக பாட்மின்டன் கூட்டமைப்பு இவரை உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றவராக அறிவித்தது. ஓரிரு ஆண்டுகளாகவே காயங்கள், எதிர்பாராத் தோல்விகள் என்று தொய்ந்திருந்த சயினாவுக்கு இது பொன்மயமான கனவொன்று நனவான கதை. கோச் கோபிசந்தை விட்டு நீங்கி விமல்குமாரிடம் சயினா சென்றபோது அதை நம்பிக்கை துரோகம் என்ற அளவில் பேசத் தொடங்கியவர்கள் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் மனந்தளர்கிறவரல்ல சயினா. சென்ற ஆண்டு ஜூன்மாதம் உலகத் தரவரிசைப் பட்டியலில் 9வது இடத்துக்கு இறங்கியிருந்த அவர், விடாது போராடி, தன்னைவிட உயர்நிலையில் இருந்தவர்களைத் திறம்பட வென்று முதலிடத்தை எட்டிவிட்டார். இவருக்கு விளம்பர வாய்ப்புகள் வந்து குவிகின்றன என்கிறது ஒரு செய்தி. இவரை 'பாட்மின்டன் சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா. சயினா என்னும் வெற்றித்திருமகளின் புன்னகையில் நாமும் பங்கேற்றுப் பெருமிதம் கொள்கிறோம்.
*****
திருநங்கை என்பவர் ஆணுடலில் சிக்கித் தவிக்கும் பெண் என்று கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் சொல்லத் தெரிந்த சமுதாயத்துக்கு, அடிப்படையில் அவரும் தன்னைப்போல் ஒரு மனிதர் என்பதைப் புரிந்துகொள்ளத் தெரிவதில்லை. பொதுவிடத்தில் திருநங்கை ஒருத்தி வந்து கையை நீட்டும்போது அவருக்கு ஏதும் தரத்தயங்குவதோடு அல்லாமல், கொடுப்பவரையும் சற்றே பரிதாபமாகப் பார்க்கிறது பொதுஜனம். திருநங்கை என்பவர் ஒருபக்கம் பிச்சைக்காரர் மறுபக்கம் பாலியல் தொழிலாளி என்கிற அளவில்தான் புரிதல் இருக்கிறதே தவிர, அவரும் இந்த மானுடசமூகத்தின் பிரிக்கவியலாத அங்கம், அவரும் நம்மைப்போலவே கல்வி, தொழில், சமுதாயத்தில் மரியாதை, வாழ்க்கை வசதிகள் என எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமை பெற்றவர் என்பதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. சிறப்புத்திறன் குழந்தைகளுக்கெனக் கல்விக்கூடங்கள் இருப்பதுபோலத் திருநங்கை/திருநம்பியருக்கும் தனியே கல்விவசதி என்று தொடங்கி, சமுதாயத்தில் ஏற்புணர்வு பெருகி, பொதுக்கல்விக் கூடங்களிலேயே அவர்கள் சேர்ந்து பயிலவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிவாய்ப்புப் பெற்று எவரையும்போல இயல்புவாழ்க்கை வாழவுமான நிலை வரவேண்டும். இவர்கள் கேலிப்பொருளோ, போகப்பொருளோ, இழிபொருளோ அல்ல, என் உடன்பிறப்பு என்னும் எண்ணம் ஒவ்வொரு மனதிலும் வரவேண்டும். 2010ம் ஆண்டு மே மாதத்தில் தென்றல் 'லிவிங் ஸ்மைல்' வித்யாவின் நேர்காணலை வெளியிட்டது. அதை மறுவாசிப்புச் செய்வது அவசியம். நம்போலவே அவர்களும் கடவுளின் குழந்தைகள்தாம். அவர்கள்மீது அன்பான கவனம் செலுத்தி அவர்கள் அனைவர் முகத்திலும் 'லிவிங் ஸ்மைல்' வரவைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
*****
'விசிறிவாழை', 'தோப்பாகும் தனி மரம்' என இந்த இதழில் இரண்டு கதைகள் திருநங்கையரைப் பற்றி உணர்வுபூர்வமாகப் பேசுகின்றன. அவர்களைப்பற்றிய நமது புரிதலை அவை விரிவுபடுத்தும். 'பறவைக்காதலர்' விஜயாலயனின் படங்கள் அழகுணர்வும் வண்ணச்சேர்க்கையும் அற்புதமான கோணங்களும் கொண்டவை. அட்டைப்படத்தின் கருப்பு அன்னங்களே அதற்குச் சாட்சி. உள்ளேயும் ஆல்பம் உண்டு. எளிய பின்புலத்தைக் கொண்ட திரைக்கவிஞர் விவேகாவின் நேர்காணலையும் நீங்கள் ரசிக்கத்தான் போகிறீர்கள். கூடைப்பந்துக் களத்திலிறங்கிக் கலக்கும் அமெரிக்கத் தமிழர் வருண் ராம் பற்றிய கட்டுரையும் படங்களும் வசீகரமானவை. இந்தக் கதம்பச் சுவையை ரசிக்க இதோ தென்றல், உங்கள் கையில்....
வாசகர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு, மஹாவீரர் ஜெயந்தி, புனிதவெள்ளி மற்றும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்.
தென்றல் குழு
ஏப்ரல் 2015 |