கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2014ம் ஆண்டுக்கான 'இயல் விருது' கௌரவைத்தை ஜெயமோகன் அவர்களுக்கு அளிக்கிறது. சமகாலத்தில் 'எழுத்து அசுரன்' என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள், சிறுகதைகள், அரசியல், வாழ்க்கை வரலாறு, காப்பியம், இலக்கியத் திறனாய்வு, பழந்தமிழ் இலக்கியம், மொழியாக்கம், அனுபவம், தத்துவம், ஆன்மீகம், பண்பாடு, திரைப்படம் எனத் தமிழ் இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது எழுத்தின் ஆழமான முத்திரையைத் தொடர்ந்து பதித்து வருகிறார்.
ஜெயமோகன் 1962ல் கன்னியாகுமரி அருகேயுள்ள அருமனையில் பிறந்தார். நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பைப் பாதியிலே விட்டுவிட்டு இந்தியாவெங்கிலும் இரண்டாண்டுக் காலம் அலைந்து திரிந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்டார். 1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராகப் பணியமர்ந்தார். எழுத்தாளர் சுந்தர ராமசாமியால் ஆற்றுப்படுத்தப்பட்டு தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்தார். 1987ல் அவர் எழுதிய 'நதி' சிறுகதை முதன்முறையாக கணையாழியில் பிரசுரமாகி அவர் எழுத்து வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தது. இவருடைய 'விஷ்ணுபுரம்' நாவல் பரவலான வாசகர்களை அடைந்து பெரும்புகழ் பெற்றது. தொடர்ந்து 'காடு', 'ஏழாம் உலகம்', 'கொற்றவை', 'வெள்ளையானை' ஆகிய 13 நாவல்கள், 11 சிறுகதைத் தொகுப்புகள், 50 கட்டுரை நூல்களை இதுவரை எழுதியிருக்கிறார். 1990ம் ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசு, 1992ம் ஆண்டுக்கான 'கதா விருது', 1994ம் ஆண்டுக்கான 'சம்ஸ்கிருதி சம்மான்' தேசியவிருது, 2008ம் ஆண்டு பாவலர் விருது, 2011ம் ஆண்டு 'அறம்' சிறுகதைத் தொகுதிக்காக 'முகம் விருது' ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். இவரது பங்களிப்பில் வெளிவந்த 'கஸ்தூரிமான்', 'நான் கடவுள்', 'அங்காடித்தெரு', 'நீர்ப்பறவை', 'ஒழிமுறி', 'கடல்', 'ஆறு மெழுகுவர்த்திகள்', 'காஞ்சி', 'காவியத்தலைவன்' ஆகிய திரைப்படங்கள் பெரும்வெற்றி ஈட்டின.
தென்றலில் இவரோடான நேர்காணல் வாசிக்க: பகுதி 1; பகுதி 2
1998 முதல் 2004 வரை 'சொல்புதிது' சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். 2010ம் ஆண்டுமுதல் இவரது படைப்பின் பெயரால் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' இலக்கிய ஆளுமைகளுக்கு விருதளித்து வருகிறது. அபூர்வமான சொல்லழகும், பொருட்செறிவும் கொழிக்கும் மொழியில் 2014 புத்தாண்டின் முதல்நாள் தொடங்கி மகாபாரதத்தின் மறு ஆக்கமாக இவர் இணையத்தில் 'வெண்முரசு' நாவலை ஒரு நாளைக்கு ஓர் அத்தியாயம் எனப் பத்தாண்டுகளுக்குத் திட்டமிட்டு எழுதிவருகிறார். ஏறக்குறைய நாற்பது நாவல்களாக இது நிறைவுபெறும். தமிழில் வேறெவரும் முயன்றிராத பிரம்மாண்டமான பணி இது.
இவர் இந்த விருதைப் பெறும் 16வது எழுத்தாளர். இதற்கு முன்னர் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜார்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியடோர் பாஸ்கரன், டொமினிக் ஜீவா போன்றோர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.
இவருடைய மனைவி அருண்மொழி நங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். 'இயல் விருது' கேடயமும், 2500 கனேடிய டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2015 ஜூன் மாதம் நடைபெறும். |