சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியின் 17வது பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவிக்கு டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ரோ கன்னா ஒரு வசீகரமான இந்திய அமெரிக்க இளைஞர். அவருடைய தகுதி அவருடைய தோற்றத்தோடு நின்றுவிடுவதில்லை. யேலில் சட்டம் பயின்றபின், ஸ்டான்ஃபோர்டு மற்றும் சான்ட கிளாரா பல்கலைகளில் சட்டம் கற்பிக்கிறார். அமெரிக்க அரசின் வணிகத்துறைக்கு 2009ல் அவரை அதிபர் ஒபாமா நியமித்தபோது அமெரிக்காவின் ஏற்றுமதியை அதிகரிக்க உழைத்தார். "Entrepreneurial Nation: Why Manufacturing is Still Key to America's Future" என்ற சிந்தனைக்கு விருந்தான நூலொன்றை 2012ல் அவர் எழுதினார். அதே ஆண்டில் அவரை கலிஃபோர்னிய கவர்னர் ஜெர்ரி பிரௌன் Workforce Investment Board வாரிய உறுப்பினராக நியமித்தார். பலதுறைகளிலும் தடம் பதித்து வரும் ஆசிய அமெரிக்கர்கள், அரசியலிலும் தமது அடையாளத்தை ஏற்படுத்த அதிகம் முன்வந்துள்ள இந்தச் சமயத்தில் அவர்களை-குறிப்பாக இந்திய அமெரிக்கர்களை-ஆதரிப்பது அவசியம். கட்சி, கொள்கை மாறுபாட்டுச் சகதியில் சிக்கிக் கொள்ளாமல், இவர் நம்மவர் என்ற எண்ணத்தில் ஒன்றுபட்டு இதனைச் செய்தாக வேண்டும். ஏனென்றால் வரலாறுகள் படைக்கப்படுவது வெற்றி பெற்றவர்களால். நாமும் வெற்றியைப் பழக்கமாக்கிக் கொள்வோம்.
*****
சென்ற பொருளாதார வீழ்ச்சிக் காலத்துக்கு முன்னோடியாக வந்தவை கேசலீன் விலையேற்றமும் சீன நாணயம் யுவானின் மதிப்புக் கூடுதலும் ஆகும். இப்போதும் இது நடந்து கொண்டிருக்கிறதென்பது அச்சம் தருகிறது. அமெரிக்க அரசின் வரி வசூல் அளவு அதிகரித்திருப்பதும், பட்ஜெட் பற்றாக்குறையின் விகிதம் குறைந்திருப்பதும் நல்ல செய்திகள்தாம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நேரடியாக உணரப்படுவது கேசலீன் விலையேற்றம்தான்.
சீனாவின் யுவான் (ரின்மின்பி என்றும் அழைக்கப்படும்)-அந்த நாட்டில் எல்லாவற்றையும் போலவே-மிக அழுத்தமாக அரசுக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. சீன அரசின் அன்னியச் செலாவணிக் கையிருப்பில் டாலர் கையிருப்பு மட்டுமே 4 டிரில்லியன்! "எப்படிப் பார்த்தாலுமே இது மிகையானது" என்கிறது ஓர் அமெரிக்க அரசின் அறிக்கை. மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின், அன்னிய செலாவணிச் சந்தையில் டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பு சற்றே அதிக அளவில் மேலும் கீழும் நகரலாம் என்பதாகச் சீன அரசு அனுமதித்துள்ளது. இது அன்னியச் செலாவணிச் சந்தையின் இழுப்புக்கேற்ப யுவானின் மதிப்பு மாறுவதற்கு ஏதுவாகும் என்பது நம்பிக்கை. ஆனாலும், உடனடி அபாயம் என்னவென்றால் சீனப் பணத்தின் வலு ஏறியபடியே இருப்பதுதான்.
*****
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனாலும் காங்கிரஸ்-பி.ஜே.பி. என்ற இரண்டு பாரம்பரிய எதிரிகளும், ஆம் ஆத்மி கட்சி என்ற புதிய கோமாளியும் தேர்தல் களத்தில் பரிமாறிக்கொள்ளும் வசவுகளின் தரம், 'உலகின் மிகப்பெரிய மக்களாட்சி' என்று சொல்லிக்கொள்ளும் இந்தியப் பெருமிதத்துக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. எல்லா இடங்களிலும் வாக்குப் பதிவு அதிகமாகியிருப்பதும், இளவயதினர் அதிகம் வாக்குச் சாவடிக்குப் போயிருப்பதும் நம்பிக்கை தரும் முன்னேற்றங்கள். நல்லதை எதிர்பார்ப்போம். நடக்கும்.
*****
புறநானூற்றில் புகுந்தெழுந்த கணிப்பொறியாளர் மேகலா ராமமூர்த்தி மற்றொரு பெருமைக்குரிய தமிழ் அமெரிக்கர். பத்து வயதிலேயே அத்தனைக் குறள்களையும் ஒப்பித்துப் பரிசு பெற்றவர். அவரது நேர்காணலும், அண்மையில் தமது பாடலுக்குத் தேசிய விருது பெற்ற கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களுடனான உரையாடலும் இந்த இதழுக்குச் சுவை சேர்ப்பவை. இந்தியாவின் மனையியல் முன்னோடி டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், எழுத்தாளர் இராசேந்திரசோழன் குறித்த கட்டுரைகள், சுவையான கதைகள், தகவல் துணுக்குகள் என்று பலவும் அணி சேர்க்கின்றன தென்றலுக்கு. வாசியுங்கள், நேசியுங்கள்!
வாசகர்களுக்கு உழைப்பாளர் நாள் மற்றும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
தென்றல் குழு
மே 2014 |