தென்றல் பேசுகிறது....
ஆகஸ்ட் 26 அன்று பென் பெர்னான்கே தனது உரையில் மத்திய ரிசர்வ் வங்கி செய்யும் தற்காலிகப் பொருளாதாரத் திருத்தங்களைவிட, அரசின் பொருளாதாரக் கொள்கையே நாட்டின் வாட்டத்தை நீக்கி வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதைத் தெளிவாகக் கூறினார். அரசு அரசியல்வாதிகளால் நடத்தப்படுகிறது. நாட்டின் மேம்பாட்டைவிடத் தமது கட்சியின் கொள்கைப் பிடிப்பு மிக முக்கியம் என்று கட்சிகள் நினைக்கும்வரை அரசு துணிந்து எதையும் செய்துவிட முடியாது. உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்: அமெரிக்காவின் 25 மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் - இதில் eBay, Boeing, GE, Verizon அடக்கம் - 2010ல் அரசுக்குக் கொடுத்த வரிப்பணத்தைவிடத் தமது தலைமை நிர்வாகிக்குக் (CEO) கொடுத்த சம்பளம் அதிகம் என்கிறது இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாலிசி ஸ்டடீஸ் என்ற ஆய்வு நிறுவனம். இவர்கள் சராசரியாக ஓர் ஆண்டில் வாங்கிய சம்பளம் 16 மில்லியன் டாலர். இந்தக் கம்பெனிகள் கட்டிய சராசரி வரித்தொகை 10.8 மில்லியன் டாலர் மட்டுமே!

பெருந்தனவந்தர்களுக்கும் மகா வணிக நிறுவனங்களுக்கும் வரி ஏறிவிடக்கூடாது என்பதில் குடியரசுக் கட்சி காட்டிவரும் தீவிரத்தைப் பற்றி நாம் சென்ற இதழ் தலையங்கத்திலேயே பேசினோம். நமது கருத்தை முற்றிலும் ஆதரிக்கும் விதமாக வாரன் பஃபட் (Warren Buffet) "செல்வந்தர்கள் தமது செல்வத்தில் சிறிதைத் தியாகம் செய்ய முன்வர வேண்டும்" என்று பேசினார். சமூகத்தில் எந்தப் பிரிவின் செல்வத்தில் ஒரு சிறிய பகுதியை வரிகள் மூலமாக அரசு எடுத்துக் கொண்டால் அந்தப் பிரிவினருக்கு எந்த இழப்பும் ஏற்படாதோ, அப்பிரிவினருக்கு வரியை அதிகரித்து, அதன்மூலம் அரசின் வருமானத்தை அதிகரித்து, நலத்திட்டங்களைச் செய்வது ஒரு பொதுநல அரசின் கடமையாகும். ஆனால் ரிபப்ளிகன்கள் ஒத்துழைக்காத ஒரே காரணத்தால், ஒபாமா அரசு எவ்வளவோ சரியான முடிவுகளை எடுத்தும், செயல்களைச் செய்தும், 'பெரும் செல்வந்தருக்கு அதிக வரி' என்ற கோட்பாட்டைச் செயல்படுத்த முடியவில்லை. வெள்ளை மாளிகையில் ஒரு ஜனநாயகக் கட்சி அதிபர் இருக்கும் வேளையில் மட்டுமே அரசு செலவினத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பெயரில் முட்டுக்கட்டை போடுவது போன்ற கொள்கை சார்ந்த நடிப்பை ரிபப்ளிகன்கள் விட்டுவிட்டு, அமெரிக்காவின் முழுவீச்சான பொருளாதார மறுசீரமைப்புக்குத் தோள் கொடுக்க வேண்டியது கடமை.

*****


அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதமும் அதைச் சுற்றி நிகழ்ந்தவையும் இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கப்படுகின்றன. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மட்டுமல்லாமல் கடல்கடந்த நாடுகளிலுள்ள இந்தியர்களையும் அவரது குரல் தட்டியெழுப்பி இருக்கிறது. நெடுநாட்களாக 'தென்றல்' விருப்பு வெறுப்பின்றி ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்திருக்கிறது. ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான ஓர் இயக்கம் மக்களின் பேராதரவைப் பெற்று டில்லிப் பாராளுமன்றத்தை அதிரச் செய்திருப்பது ஒருவகையில் ஜனநாயக சக்திகளின் வெற்றி என்று சொல்லலாம். ஆனாலும் அரசியல்வாதிகளை அவ்வளவு எளிதாகக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. தற்காலிகமாகச் சிறிய விலையில் அமைதியை வாங்கிவிட்டு, வேகம் ஓய்ந்ததும் போட்ட புழுவோடு சேர்த்துச் சுறாமீனையும் இழுத்துக்கொள்ளும் ஆற்றலும் சூழ்ச்சித்திறமும் மிக்கவர்கள் அவர்கள். ஒரே மாதிரியான பொதுமக்கள் எழுச்சியை இவ்வளவு பரந்த நாட்டில் மீண்டும் மீண்டும் உண்டாக்குவது எளிதல்ல என்ற ரகசியத்தை அவர்கள் அறிவார்கள். "தளராத விழிப்புணர்வுதான் மக்களாட்சிக்குத் தரப்படும் விலை" என்ற பொன்மொழியை எத்தனை முறை நினைவுபடுத்திக் கொண்டாலும் போதாது.

*****


டாக்டர் ராஜன் நடராஜன் அமெரிக்கப் பொதுவாழ்வில் கால்தடம் பதிக்கும் மற்றொரு தமிழர். 'ஜெ...' என்று அறியப்படும் ஜெயராஜ் இளம் உள்ளங்களைச் சுண்டியிழுத்த ஓவிய உலகின் சுஜாதா! இவர்களோடான நேர்காணல் வாசக விருந்து. நயமான கதைகள், சூடான குறுநாவல், நாடெங்கிலுமிருந்து தகவல்கள் என்று மற்றுமொரு சுவைக் களஞ்சியத்தை உங்கள் கையில் வைக்கிறோம். அருந்துங்கள், அசை போடுங்கள். அப்படியே, சிறுகதைப் போட்டிக்கு எழுதியனுப்ப மறந்துவிடாதீர்கள்.

வாசகர்களுக்கு நவராத்திரி, திருவோணம், உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துக்கள்.


செப்டம்பர் 2011

© TamilOnline.com