நரசய்யா
(சென்ற இதழ் தொடர்ச்சி)

கே.ஆர்.ஏ. நரசய்யா ஐ.என்.எஸ். சிவாஜியில் கடல்சார் பொறியியல் (Marine Engineering) பயின்றார். பல்வேறு கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். பின் விசாகப்பட்டினத் துறைமுகத்தில் சேர்ந்து 1991ல் ஓய்வு பெற்றார். தனது அனுபவத்தை கடலோடி, கடல்வழி வணிகம் என்ற நூல்களில் பதிவு செய்திருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளின் ஆசிரியர். தனது நூல்களுக்காகத் தமிழக அரசின் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். மதராசப் பட்டினம், ஆலவாய், மாமல்லபுரம் போன்ற ஆராய்ச்சி நூல்களுக்குச் சொந்தக்காரர். சென்ற இதழில் வெளியான நேர்காணலின் இரண்டாம் பகுதி, இதோ.....

கே: ஆலவாய் என்று மதுரையைப் பற்றி எழுதியுள்ளீர்களே, எப்படி அந்த ஆர்வம் வந்தது?
ப: மதராச பட்டினம் எழுதும்போது 'ஆலவாய்'க்கான தகவல்கள் கிடைத்தன. சென்னை ஏழுகிணறு பகுதியில் கிணறு வெட்டியது குறித்து ஒரு கல்வெட்டு உள்ளதென்று சொன்னார்கள். என் நண்பர் டாக்டர் ராஜகோபால் அது மதுரை நாயக்கர் மஹாலில் வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னார். அங்கே போய் அதை போட்டோ எடுத்தேன். அந்தப் போட்டோ இன்னமும் ஐராவதம் மகாதேவன் அவர்களிடம் உள்ளது. அவர் எனக்கு குரு போன்றவர். அவரிடமிருந்துதான் நான் பிராமி கல்வெட்டு படிக்கக் கற்றுக் கொண்டேன். மாமண்டூர் போன்ற பல இடங்களுக்கு அவருடன் சென்று ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறேன். கல்வெட்டு எழுத்து படிப்பதில் அவர்தான் எனக்கு வழிகாட்டி. அவருடைய புத்தகங்கள், ஆராய்ச்சிகள் எல்லாம் எனக்கு மிகவும் உதவின. அவர் மிகத் தேர்ந்த ஆராய்ச்சியாளர். எனது ஆராய்ச்சிகளுக்கு நிறைய உதவியிருக்கிறார். நாயக்கர் மஹாலைப் பார்த்த போது மதுரையைப் பற்றி ஆய்வு செய்ய ஆர்வம் பிறந்தது.

கே: ஆலவாய் ஆய்வு பற்றியும் அதில் கிடைத்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும் சொல்லுங்கள்...
ப: மதுரை என் சொந்த ஊர். ஆலவாய் பற்றிய ஆய்வுக்கான தரவுகள் மதுரா கல்லூரியில் கிடைத்தன. அங்கே ஹார்வி லைப்ரரி என்று ஒரு நூலகம் உள்ளது. அதில் பழைய புத்தகங்கள், ஆவணங்கள் என்று நிறைய உள்ளன. ரோஜா முத்தையா நூலகமும் நிறைய உதவியது. 'ஸ்தானிகர் வரலாறு' எல்லாம் அங்கே கிடைத்ததுதான். மேலும் மதுரையிலேயே தலைமுறையாக வசித்து வந்தவர்கள், கோயில் அர்ச்சகர்கள் எல்லாம் பல தகவல்களைத் தந்து உதவினார்கள்.

ஸ்தானிகர் வரலாற்றில் 'மயில் முறை' என்று ஒன்று வந்தது. அது என்ன என்று விசாரித்துப் பார்த்தால் மயில் முட்டையிடும்போது தனது முதல் குஞ்சைக் கொன்று விடுமாம். அதுபோல ஸ்தானிகரிலும் முதல் வாரிசுக்கு உரிமை கிடையாது. இரண்டாவது வாரிசுக்குத்தான் எல்லா உரிமைகளுமாம். அதுதான் 'மயில்முறை'. 'ஸ்தானிகர்' என்றால் பொறுப்பாளர். ஆலய நிர்வாகம் உட்பட பராமரிப்பு, வரவு-செலவு, நகைகள் என எல்லாம் அவர்கள் பொறுப்புத்தான். அர்ச்சகரின் வேலை பூஜை செய்வது மட்டும்தான். பழைய கும்பாபிஷேக மலர்களில் இருந்தும் நிறையத் தகவல்கள் கிடைத்தன. அதிலிருந்து ஒரு செய்தி பாருங்கள்-குரங்குகளை எப்படி விரட்டினார்கள் என்பது குறித்தது. அப்போது மதுரை ஆலயத்திலும் சுற்று வட்டாரத்திலும் நிறையக் குரங்குகள் இருந்தன. கோயிலில் நடமாடவே முடியாதபடி அவை அட்டகாசம் செய்தன. அதை எப்படி விரட்டினர் என்றால், நிலக்கடலையைக் கள்ளில் ஊற வைத்துக் கூடை கூடையாகக் கோயில் முழுதும் வைத்து விட்டனர். அதைத் தின்ற குரங்குகள் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்து விட அவற்றைத் தூக்கிக் கொண்டு போய்க் காட்டில் விட்டுவிட்டனர். இது ஒரு சுவையான செய்தி அல்லவா?

கே: மதுரையில் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் உண்மையா?
ப: இல்லை. வராலாற்றாய்வாளர்கள் இதுபோன்ற விஷயங்களை ஒப்புக் கொள்வதில்லை. இதற்கு வரலாற்று ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. எல்லாம் செவிவழிச் செய்திதான். 'சமண வழிபாடு' என்பது இந்தியாவின் தொன்மையான வழிபாடுகளுள் ஒன்று. ஒருவேளை அப்படிச் சமணர்களை விரோதத்தினால் அழித்திருந்தால், கழுவேற்றப்பட்டிருந்தால் நமக்கு சமணம் பற்றிய இத்தனை ஆதாரங்கள், குகைகள், கல்வெட்டுக்கள், ஓவியங்கள், படுகைகள் கிடைத்திருக்காது. அவற்றையும் அழித்திருப்பார்கள். ஆக அவை கிடைத்திருப்பதன் மூலமே எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றிக் கொல்லப்படவில்லை என்பதை உணரலாம். பின்னர் பாடல்களில் அந்தக் குறிப்பு வருகிறதே, சில இடங்களில் அதுபற்றிய சிற்பங்கள் காணப்படுகிறதே என்றால், இதற்கு ஐராவதம் மகாதேவன் அவர்கள் விளக்கம் தருகிறார்: மதுரை அருகே 'எண்ணாயிரம்' என்ற ஊர் உண்டு. அந்த ஊரைச் சேர்ந்த சில சமணர்கள் கழுவேற்றப்பட்டு இருக்கலாம். எண்ணாயிரம் என்ற ஊரைச் சேர்ந்த சமணர்கள் கழுவேற்றப்பட்டதைப் பின்னால் வந்த சிலர் "எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றனர் என்று திரித்துக் கூறியிருக்க வேண்டும்" என்கிறார்.

இன்னும் சொல்லப் போனால் கோரிபாளையம் அருகே ஒரு கோயிலில் இன்னமும் அந்தக் கழுவை வைத்து பூஜை செய்து வருகிறார்கள், அது இன்னதென்று தெரியாமலேயே. அந்தக் கோயிலின் காலம் அநேகமாக 13 அல்லது 15ம் நூற்றாண்டாக இருக்கலாம். ஆனால் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகக் நம்பப்படும் சம்பவம் நடந்த காலம் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு. 600 ஆண்டுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பின்னால் வரும் ஒருவர் ஞாபகம் வைத்துக் கொண்டு வழிபாட்டை மேற்கொள்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்? சில இடங்களில் சமண தீர்த்தங்கரர்களின் நிர்வாண சிலைத் திருக்கோலங்கள் சற்றே செதுக்கிச் சரி செய்யப்பட்டு, பின்னால் ஒரு நாயையும் செதுக்கிவிட்டு அதை பைரவர் அல்லது அர்த்தநாரீஸ்வரர் ஆகவோ மாற்றியிருப்பதைப் பார்க்க முடிந்தது. நான் இந்துக் கடவுளரை வணங்குபவன் என்றாலும், ஆராய்ச்சியாளன் என்ற வகையில் இவற்றை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கே: உங்கள் சமீபத்திய ஆய்வான மாமல்லபுரம் பற்றி...
ப: நானும் சுவாமிநாதனும் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டோம். அவர் ஆங்கிலத்திலும், நான் தமிழிலும் அதுபற்றி நூல்கள் வெளியிட்டிருக்கிறோம். மாமல்லபுரம் ஒரு அற்புதமான கலைக்கூடம். மிக பிரம்மாண்டமாக அதை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஏன் திடீரென அதைப் பூர்த்தி செய்யாமல் பாதியில் விட்டுவிட்டனர் என்பது தெரியவில்லை. அன்னியப் படையெடுப்போ அல்லது உள்ளூர்ப் போர்களோ காரணமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் 'சுனாமி' போன்ற இயற்கைப் பேரழிவுகளால் பணி பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது ஆட்சியை மறந்து கலையில் முழுமூச்சாக ஈடுபட்டதால் மக்கள் புரட்சி அல்லது வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நமக்குத் தெரியாது. எதுவுமே முற்றுப் பெறாமல் நிற்கிறது. ஏன் என்று நமக்குத் தெரியவில்லை.

முன்னாளில் அங்கே கடல் பின்னால் தள்ளித்தான் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் கடலுக்கு அவ்வளவு அருகில் யாரும் கோயில் கட்ட மாட்டார்கள். சொல்லப் போனால் அந்தக் கலைக்குச் சமமாக எங்கேயுமே கிடையாது. கல்லிலே சங்கிலி, சிங்கத்தின் வாய்க்குள் பந்து எல்லாம் தொழில்நுட்ப விஷயம். ஆனால் பல்லவர்கள் உணர்ச்சிகளைக் கல்லில் வடித்தார்கள். உள்ளது உள்ளபடியே கண்முன் வடித்துக் காட்டுவது பெரிய விஷயம். அதுதான் மிகப்பெரிய கலை. Naturalism is Chola's style. Exaggeration is Nayaka's style. Perfection is Pallava's style. மகேந்திர வர்ம பல்லவன் அதை "அலோகம் அசுதம்" என்று அறிவித்துவிட்டுத்தான் செய்தான். மண்டகப்பட்டில் அறிவித்தான். "நான் கட்டும் கோவிலில் உலோகம் இருக்காது; சுண்ணாம்பு இருக்காது" என்பது அதன் பொருள்.

அதை ஒரு பெரிய துறைமுக நகரம் என்கிறார்கள். கடல்துறையைச் சேர்ந்த என்னால் அதை ஏற்க முடியவில்லை. அந்த இடம் முழுக்க நிறையக் கற்கள், பாறைகள் உள்ளன. அங்கே எப்படி கப்பல் போக்குவரத்து நடந்திருக்க முடியும்? 'நீர் பேர்க்கு' என்று ஓரிடம் புறநானூற்றில் வருவது உண்மைதான். ஆனால் இது மாமல்லபுரத்தைக் குறிக்கவில்லை. 'சட்ராஸ்' எனப்படும் சதுரங்கப்பட்டினத்தைக் குறிப்பது அது.

கே: தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்று ஒரு கருத்து நிலவுகிறதே?
ப: இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், பண்பாடு, கலாசாரம் பற்றிய அக்கறை அதிகம் இல்லை. சரிவர எதையும் பாதுகாப்பதில்லை. பழமையைப் பேணுவதில் ஆர்வமோ அக்கறையோ இல்லை. கோயில்கள் கூடச் சுத்தமாக இல்லை. ஆளுக்கொரு செல்ஃபோன் வைத்துக்கொண்டு பூஜை செய்கிறார்கள். ஆனால் வெளிநாட்டில் அப்படி இல்லை. அங்கே கோயில்கள் தூய்மையாக உள்ளன. ஒழுங்காகப் பராமரிக்கிறார்கள். விதிகளை மதிக்கிறார்கள். தமிழை, பண்பாட்டை, கலாசாரத்தை காப்பாற்றுபவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள்தான். மேலும் இங்கே இப்போது ஆய்வு செய்து எதையும் விவாதிப்பதைவிட, எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தே கருத்துக் கூறுவதும் எதிர்வினா எழுப்புவதும் அதிகமாகியிருக்கிறது. கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் அதற்கும் அதைப் பற்றிய அறிவோ, அடிப்படைப் புரிதலோ இருக்க வேண்டும். அப்போதுதான் அது சரியானதாக அமையும். உண்மையான ஆராய்ச்சியாளனைக் காயப்படுத்துவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

கே: இப்போது எதில் ஆராய்ச்சி செய்கிறீர்கள்?
ப: திருச்சிராப்பள்ளியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன். அடுத்த வருடத்திற்குள் முடிக்க வேண்டும். உறையூரை மையமாக வைத்து ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் மிகப் பழமையான ஊர். 'கோழியூர்' என்றும் பெயர் உண்டு. யானையோடு போரிட்டு கோழி வென்ற ஊர் அது. இதற்கான ஆதாரம் இருக்கிறது. செவந்தி புராணம் என்பது அதன் பெயர். மலைக்கோட்டையில் அதைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Lettered Dialogue என்று ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். சிட்டி-கிருத்திகா இடையே பரிமாறிக்கொண்ட கடிதங்களை மையமாகக் கொண்டது அது.

அதுபோக நாவல் எழுதுவதற்கான விஷயங்களைத் திரட்டி வைத்திருக்கிறேன். 'புதைமணல்' என்று பெயர். வரப்போகிற ஏதோ ஒன்றுக்காக நிகழ்காலத்தை மனிதன் அனுபவிக்கத் தவறிவிடுகிறான் என்பதைக் குறித்தது. 'கடல்வழி வணிகம்' நூலை ஆங்கிலத்தில் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறேன்.

நரசய்யாவுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் சென்னையிலும் மற்றொருவர் கனடாவிலும் இருக்கிறார். இருவருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. "என்னையும் மனைவியையும் தவிர யாருக்கும் தமிழ் படிக்க வராது" என்கிறார். அடிப்படையில் தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவரானாலும், நடைபழகப் போகும்போது தினந்தோறும் மூன்று முறை திருமுருகாற்றுப்படை சொல்லிவிடுவாராம். சண்முக கவசத்தைப் பாராயணம் செய்கிறார். "கடவுளை வணங்க ஏது மொழி வேறுபாடு? பக்தி உணர்வுதானே தேவை" என்கிறார். அப்போதுதான் எம்.பி.ஏ. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துவிட்டு வந்திருந்தாலும் களைப்புப் பாராமல் இரண்டு மணி நேரத்துக்கு மேல் நம்மோடு உரையாடிய நரசய்யாவுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


காலட் கட்டிய கோயில்

1917-20ல் ஜோசப் காலட் என்பவர் மதராஸின் கவர்னராக இருந்தார். அவரிடம் வீரராகவன் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமானின் பக்தர். தினந்தோறும் விடியற்காலையில் எழுந்து காஞ்சிபுரம் சென்று பெருமாளை வழிபட்ட பின்புதான் பணிக்கு வருவார். அப்படி ஒருநாள் பணிக்கு வரும்போது மிகவும் தாமதமாகி விட்டது. அதைக் கண்டு கோபமுற்ற கவர்னர் பணிக்கு தாமதமாக வந்த காரணத்தைக் கேட்டார். வீரராகவனும் நடந்த விஷயத்தைச் சொன்னார். உடனே கவர்னர், " நீ அப்படிப்பட்ட பக்தன் என்பது உண்மையானால், உன்னுடைய ஆண்டவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டார். உடனே வீரராகவன் கண்களை மூடிப் பின் திறந்து, "இப்போது அவர் காஞ்சிபுரத்தில் தேரில் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் அந்தத் தேரோ தடைப்பட்டு நிற்கிறது" என்றார். அவர் சொன்னது சரிதானா எனச் சரிபார்க்க தனது ஆட்களைக் குதிரையில் அனுப்பி விசாரித்து வரச் சொன்னார் காலட்.

அவர்கள் திரும்பி வந்து வீரராகவன் சொன்னது சரிதான் என்றும், சரியாக அவர் சொன்ன அதே நேரத்தில் தேர் அங்கே தடைப்பட்டு நின்று கொண்டிருந்ததாகவும் தகவல் கூறினர். ஆச்சரியமுற்ற காலட், வீரராகவனின் பக்திக்கு மெச்சி, இனிமேல் வீரராகவன் பெருமாளை தரிசிக்க காஞ்சிபுரம் செல்ல வேண்டாம் என்றும், தானே கம்பெனி செலவில் ஒரு வரதராஜர் ஆலயத்தைக் கட்டித் தருவதாகவும் கூறி அவ்வாறே கட்டித் தந்தார். வீரராகவனை அந்தக் கோயில் தர்மகர்த்தாவாக நியமித்ததுடன் தனது சொந்தப் பணத்தில் இருந்தும் பல திருப்பணிகளை அந்தக் கோயிலுக்குச் செய்தார். அதுதான் சென்னை காலடிப் பேட்டையில் இருக்கும் கல்யாண வரதாராஜப் பெருமாள் ஆலயம்.

நரசய்யா

*****


ஜேஷ்டை வழிபாடு

திருப்பரங்குன்றம் ஆலயத்தில் இருக்கும் மூதேவி (ஜேஷ்டை) சன்னதியைப் பற்றித் தொல்லியல் துறையில் பணியாற்றிய சாந்தலிங்கம் என்ற நண்பர் என்னிடம் தெரிவித்தார். எப்படியாவது அதைப் பார்க்கும் ஆர்வத்தில் நான் திருப்பரங்குன்றம் போனேன். அங்கே மூலவருக்குக் கீழே ஒரு குகை இருக்கிறது. அதைப் பூட்டி சீல் வைத்திருக்கிறார்கள். அதற்குள்தான் மூதேவி சன்னதி இருக்கிறது. நான் போய்க் கேட்டதற்கு திறக்க முடியாது என்று பதில் வந்தது. நானும் பிடிவாதமாக எப்படியாவது பார்த்து விடுவது என்று ஆலயத்திலேயே அமர்ந்து விட்டேன். ஆலயத்தின் பணியாளர் ஒருவருக்கு அதுபற்றிய விவரம் தெரியும். மதிய நேரம் வந்தது. பூஜை முடிந்து கோயிலைச் சாத்தினார்கள். நான் உள்ளேயே அமர்ந்துவிட்டேன். உடன் சாந்தலிங்கமும் இருந்தார். அப்போது அந்த பியூன் வந்தார். அவர் திறந்து காட்ட மிகவும் பயந்தார். எத்தனையோ ஆண்டுகளாக அது பூட்டிக் கிடக்கிறது, உள்ளே பாம்பு, தேள், பூரான் என ஏதாவது இருக்கலாம் எனத் தயங்கினார். அவருக்கு தைரியம் சொல்லி, ஒரு தீவட்டியை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல உள்ளே சென்றோம். உள்ளே கும்மிருட்டு. சுத்தமாகக் காற்று என்பதே இல்லை. ஏதோ ஒருவித வாசனை வேறு. மயக்கம் வரும்போல் இருந்தது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சென்று தீவட்டி ஒளியில் பார்த்தால், அமர்ந்த நிலையில் ஜேஷ்டா தேவி, கோமுகன் சிலை ஆகியவை இருந்தன. ஜேஷ்டா தேவி வழிபாடு சமணத்தில் முக்கியமான வழிபாடுகளுள் ஒன்றாக இருந்தது. பின்னர் அது வழக்கொழிந்ததால் அந்த ஆலயத்தை மூடி விட்டார்கள்.

நரசய்யா

*****


பிலடெல்ஃபியாவில் மதுரை மண்டபம்

எனக்கு ஒரு குறிப்பு கிடைத்தது. "1914-15 வாக்கில் ஒரு பெண்மணி வெளிநாட்டிலிருந்து மதராசிற்கு வந்தவர் ஹனிமூனுக்காக மதுரை சென்றார். அங்கே ஒரு கோவில் மண்டபத்தை விலைக்கு வாங்கி, வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று விட்டார்" என்ற அந்தக் குறிப்பு மதராசப்பட்டின ஆய்வின் போது எனக்குக் கிடைத்தது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் மதுரைக்குச் சென்று ஆய்வு செய்தபோது அது உண்மை என்பது தெரிய வந்தது. மதுரையில் மதனகோபாலசுவாமி ஆலயம் என்ற ஒன்று இருக்கிறது. அதில் முன்னால் இருந்த ஒரு மண்டபத்தை அந்தப் பெண் விலைக்கு வாங்கியிருக்கிறார். அதை எப்படி வாங்கினார், யார் அதை அவருக்கு விற்றது என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவர் அதை வாங்கி மண்டபத்தை அப்படியே பகுதிகளாகப் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார் என்பது மட்டும் தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் அது பாஸ்டன் வழியாகப் போனது, பிலடெல்பியா மியூசியத்தில் இருக்கிறது என்றார்கள். நான் அமெரிக்கா போயிருந்தபோது,அந்த மியூசியத்துக்குப் போனேன். அது அப்போது பரமாரிப்புக்காக மூடப்பட்டு இருந்தது. என்ன வேண்டுமென்று கேட்டார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். பின்னர் அவர்களுக்கு மெயில் அனுப்பினேன். அதற்கு மிக விரிவான பதில் வந்தது. நடந்த சம்பவம் உண்மை என்றும், மதுரையில் இருந்து அந்த மண்டபத்தை வாங்கி வந்து இங்கே அசெம்பிள் செய்திருக்கிறோம் என்றும் அவர்கள் பதில் அனுப்பியிருந்தனர். இந்த விவரம் ஆதாரங்களோடு பிலடெல்பியா மியூசியத்தில் இருக்கிறது.

நரசய்யா

*****


கொந்தளித்துப் போன கடல்

இது நடந்த சம்பவம். இதை 'நனைந்த உடல்கள், உலர்ந்த இதயங்கள்' என்ற சிறுகதையாக எழுதியிருக்கிறேன். சிவசங்கரி தனது 60 சிறந்த சிறுகதைகள் நூலில் இதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மிகச் சிறந்த கேப்டன் ஒருவன். எல்லோராலும் விரும்பப்படுபவன். உலகம் முழுவதும் சுற்றியவன். அவனுக்குத் திருமணமானது. அவன் கப்பலில் போகிறான். மனைவி ஜப்பானில் அவனோடு சேர்ந்து கொள்கிறாள். பயணம் தொடர்கிறது. கடல் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. கப்பல் கவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது. அந்தப் பெண் மிகவும் பயந்து விடுகிறாள். இவன் ஆறுதல் கூறுகிறான். எப்படியோ ஆஸ்திரேலியா போய்ச் சேர்ந்ததும் அவளுக்கு ஆறுதல் கூறி அங்கேயே விட்டுவிட்டுச் செல்கிறான். திரும்பப் போகையில் கடல் அமைதியாகி விடுகிறது. அப்போது இரண்டு மாலுமிகள் பேசிக் கொள்கின்றனர், "கேப்டனின் மனைவி வந்ததும் கடல் பொங்கி ஆர்ப்பரித்தது. அவள் சென்றதும் அமைதியாகி விட்டது பார்த்தாயா?. கடலுக்குக் கேப்டன் திருமணம் செய்துகொண்டது பிடிக்கவில்லை போலிருக்கிறது." அதைக் கேட்ட கேப்டன், அவர்களது கருத்து தவறு என்று அவர்களுக்கு நிரூபிக்க நினைத்து, மனைவியை மீண்டும் கப்பலுக்கு வரவழைத்தான். சற்றுநேரத்தில் கடல் மீண்டும் பொங்க ஆரம்பித்து விட்டது. கப்பல் கவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது. சக அதிகாரிகள் அவனைப் பரமாரிப்பிற்காக அழைக்கின்றனர். அதனால் மனைவியிடம் அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு, கப்பலை கவனிக்க மேல்தளத்துக்குச் செல்கிறான். சற்று நேரம் கழித்து அவள் அவனைப் பார்க்க வெளியே ஓடிவருகிறாள். இவன் வராதே, வராதே என்று கத்துகிறான். கடல் அலை பெரிதாக எழும்புகிறது. அவள் தள்ளாடி மெல்லக் கடலில் விழுந்து விடுகிறாள். அவ்வளவுதான். ஆறுமணிநேரம் வரை கடலில் தேடியும் உடல் கிடைக்கவில்லை. கடலும் அமைதியாகி விடுகிறது. இது 100 சதவிகிதம் உண்மைக் கதை. எனது நண்பர் கேப்டன் சைகல் என்பவருக்கு ஏற்பட்டது. நான் எழுதிய பல கதைகளும் உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதியவைதான்.

நரசய்யா

*****


வழிகாட்டிகள்

ஆருத்ரா தரிசனம் அன்று கப்பல் ஏறினால் அது நேராக சிலோனின் அக்கரைப் பட்டி என்ற ஊரில் போய் நிற்கும். 'வடக்கன் கரண்ட்' என்று அதைச் சொல்வார்கள். நேராக நம்மை அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும். அதேபோல அங்கே ஏறினால் இங்கு கொண்டு வந்து விடும். தை மாதத்தில் மட்டும் கப்பலுக்குத் தானாகச் செல்ல வழி கிடைக்கும் என்பதைத்தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று சொல்லியிருக்கிறார்கள். அதுபோல மிருகசீரிஷம் என்றால் 'மார்க்க தரிசி' என்பது பொருள். மார்க்கம் என்றால் வழி. வழிகாட்டும் நட்சத்திரம் என்பது பொருள். கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி 'சப்த ரிஷி மண்டலம்' என்பார்கள். இவையெல்லாம் கடற்பயணத்தின் வழிகாட்டிகள்.

நரசய்யா

*****

© TamilOnline.com