Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிரிக்க | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
நேர்காணல்
டைரக்டர் கிருஷ்ணா
நரசய்யா
- அரவிந்த் சுவாமிநாதன்|ஏப்ரல் 2011||(2 Comments)
Share:
கே.ஆர்.ஏ. நரசய்யா ஐ.என்.எஸ். சிவாஜியில் கடல்சார் பொறியியல் (Marine Engineering) பயின்றார். விக்ராந்த், ராணா, ஜெயந்தி என கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களில் 12 ஆண்டுகள் பணியாற்றினார். பின் விசாகப்பட்டினத் துறைமுகத்தில் சேர்ந்து 1991ல் ஓய்வு பெற்றார். வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்டதுடன், உலக வங்கியின் அழைப்பின் பேரில் கம்போடியாவின் புனர்நிர்மாணப் பணியிலும் பங்கு கொண்டிருக்கிறார். கடலோடியாக உலகம் சுற்றிய தனது அனுபவத்தை கடலோடி, கடல்வழி வணிகம் என்ற நூல்களில் பதிவு செய்திருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளின் ஆசிரியர். இவரது கதைகள் மதுரைக் கல்லூரியில் ஆறு வருடங்கள் துணைப்பாட நூலாக இருந்ததுண்டு. தனது நூல்களுக்காகத் தமிழக அரசின் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். மதராசப் பட்டினம், ஆலவாய், மாமல்லபுரம் போன்ற ஆராய்ச்சி நூல்களுக்குச் சொந்தக்காரர். பழகுதற்கு இனியவரான நரசய்யாவை ஒரு மதிய நேரத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து....

*****


கே: உங்களது இளமைப் பருவத்திலிருந்து தொடங்குவோமா?
"என்னோட ஏரியா, சிறுகதைதான். நாவல் அல்ல. ஒருமுறை விகடன் கேட்கவே 'மாயமான்' என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினேன். நல்ல வரவேற்பு இருந்தபோதும் தொடர்ந்து நாவல் ஏதும் எழுதவில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. என்னைப் பொருத்தவரை அது ஒரு அனுபவப் பகிர்வுதான்."
ப: நான் பிறந்தது ஒரிஸாவில் இருக்கும் பெர்ஹாம்பூரில். ஆந்திரப் பிரதேசம் சிம்மாசலத்தில் இருக்கும் இறைவன் பெயர் அப்பல நரசிம்மன். அவர் நினைவாக எனக்கு அப்பல நரசய்யா என்று பெயர் சூட்டினார்கள். தந்தையார் பெயர் ராமலிங்கம். கல்வித்துறை அதிகாரி. காவூரி எங்கள் குடும்பப் பெயர். காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா என்பதன் சுருக்கம்தான் கே.ஆர்.ஏ. நரசய்யா. எனக்கு இரண்டு சகோதரர்கள். தாய்மொழி தெலுங்கு என்றாலும் தந்தையின் பூர்வீகம் மதுரை. அவர் சிலகாலம் அமெரிக்கன் கல்லூரியில் இங்க்லீஷ் டியூட்டராகப் பணியாற்றியிருக்கிறார். தந்தையின் பணியிட மாறுதலுக்கேற்ப ஊர் ஊராகப் பள்ளிகள் மாறின. எஸ்.எஸ்.எல்.சி.யை லால்குடியில் நிறைவு செய்தேன். பின் கடல்துறைக் கல்வி படித்தேன்.

கே: கடல்துறைப் படிப்பைத் தேர்வு செய்தது ஏன்?
ப: எனது தந்தை திருச்சி மாவட்ட உயர்கல்வி அதிகாரியாக இருந்தார். வித்தியாசமான துறையை நான் கற்க வேண்டுமென விரும்பினார். அப்போது மரைன் எஞ்சினியரிங் அறிமுகமாகியிருந்தது. வளரிளம் பருவத்துக்கே உள்ள ஆர்வத்தில் நானும் சம்மதித்தேன். நுழைவுத் தேர்வு எழுதி, பூனா லோனாவாலாவில் உள்ள ஐ.என்.எஸ். சிவாஜியில் 1949ல் சேர்ந்தேன். சிவாஜியில் நான்கு ஆண்டுப் பயிற்சி. பின் கப்பலில் ஒரு வருடப் பயிற்சி ஐ.என்.எஸ். ராணாவில். பின்னர் கப்பற்படையில் பணிக்குச் சேர்ந்தேன். பின்னர் ஐ.என்.எஸ். விக்ராந்திற்காக அயர்லாந்தில் ஒரு வருடம் இருந்தேன். பெல்ஃபாஸ்ட்டில் கப்பல் கட்டும் தளத்தில். அங்குதான் டைடானிக் கப்பல் செய்த தளம் அது. உலகின் பெரிய கப்பல் கட்டுமான தளம். அங்குதான் இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தை அவர்கள் உருவாக்கினார்கள்.

கே: எழுத்தார்வம் வந்தது எப்படி?
நான் அயர்லாந்தில் ஓர் ஐரிஷ் குடும்பத்தில் பேயிங் கெஸ்ட்டாகத் தங்கியிருந்தேன். அப்போது ஆங்கில நூல்கள் எனக்கு அறிமுகமாகின. அவற்றைப் படிக்கப் படிக்க எனக்கு வாசிக்கும் ஆர்வம் அதிகமானது. அதுபோல பெயிண்டிங்கிலும் ஆர்வம் ஏற்பட்டது. நிறைய வரைந்தேன். பல ஓவியர்களைச் சந்தித்தேன். எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடினேன். லண்டனில் இருந்தபோது அடிக்கடி ஃபாயில்ஸ் புக்‌ஷாப் செல்வேன். அவர்களது இதழின் சந்தாதாரரானேன். அது எனக்குள் பல கதவுகளைத் திறந்தது. பல பிரபல எழுத்தாளர்களின் கதை, கட்டுரை, நேர்காணல்களை, விவாதங்களை அவர்களது கருத்துகளை அறிய முடிந்தது. சாதாரண விஷயத்தை சுவைபடச் சொல்வது எப்படி என்று தெரிந்து கொண்டேன். ஹெமிங்வே, சாமர்செட் மாம் போன்றோரின் நாவல்களைப் படிக்கப் படிக்க, எனக்கும் எழுத ஆர்வம் பிறந்தது. அப்போது விக்ராந்த் கப்பல் ஊழியர்களுக்காக 'விக்ராந்த் சமாச்சார்' என்ற நாளிதழ் நடத்தப்பட்டது. எனது அதிகாரி என்னை அதில் எழுதுமாறு ஊக்குவித்தார். சுதந்திரமாக எழுத அவர் பணித்ததால் நானும் நிறைய விஷயங்களை எழுதினேன். கப்பலில் நடந்த விஷயங்கள், மாலுமிகள் பற்றி, சக ஊழியர்கள் பற்றி எல்லாம் தினமும் அதில் எழுதினேன். நல்ல வரவேற்பு. அப்படித்தான் எழுதத் தொடங்கினேன்.

கே: தமிழில் எழுதத் தொடங்கியது எப்போது?
எனது எழுத்தார்வத்தைக் கண்ட அதிகாரி கப்பலின் நூலகப் பொறுப்பாளராக என்னை நியமித்தார். அதனால் ஓய்வு நேரங்களில் நிறையப் படித்தேன். எழுத்தாளர் சிட்டி எனது மாமா. சென்னை வரும்போது அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பேன். ஒருமுறை அவரைச் சந்தித்தபோது, அவரிடம் ஆங்கில எழுத்தாளர்கள் பற்றியும், அவர்களது எழுத்தாற்றல் பற்றியும் கூறிவிட்டு, இதுமாதிரி தமிழிலும் எழுதுபவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டேன். காரணம், நான் தமிழ் நூல்கள் எதையும் படித்ததில்லை. அவர் ஆனந்த விகடன் இதழை என்னிடம் கொடுத்து படித்துப் பார்க்குமாறு கூறினார். அதுதான் நான் படித்த முதல் தமிழ் இதழ். அதில் ஜெயகாந்தனின் முத்திரைக் கதை ஒன்று வெளியாகி இருந்தது. அது என்னைக் கவர்ந்தது. நானும் ஒரு சிறுகதை எழுதி அனுப்பலாமா என சிட்டி மாமாவிடம் ஆலோசனை கேட்டேன். தயங்காமல் எழுது என்றார். கடற்படையில் பேச, எழுத என எல்லாமே ஆங்கிலம் தான். ஆகையால் தமிழில் எழுதுவ‌து மிகவும் சிரமமாக இருந்தது. அப்போது நான் ஜெயந்தி என்ற வணிகக் கப்பலில் பணி புரிந்து கொண்டிருந்தேன். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ஒரு கதையை எழுதினேன். ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதினேன். 'தேய்பிறை' என்ற அந்தச் சிறுகதையை கல்கத்தா துறைமுகத்தில் இருந்து ஆனந்தவிகடனுக்கு அனுப்பி வைத்தேன். பின்னர் பணி நிமித்தமாகக் கடலூருக்குப் போய்விட்டேன். அங்குச் சென்ற சில நாட்களில் விகட‌னிலிருந்து, அக்க‌தை முத்திரைக் கதையாக‌ ஏற்றுக் கொள்ளப்ப‌ட்டதாகக் கடிதம் வந்த‌து. முதல் கதையே முத்திரைக் கதையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. என் தாய்மாமாவான சிட்டியும் அந்தக் கதையைப் பாராட்டினார். தொடர்ந்து பல கதைகள் விகடனில் முத்திரைக் கதையாக வெளியாகின. நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.

கே: 'கடலோடி' நூல் குறித்து...
ப: சிட்டி, லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து 'வாசகர் வட்டம்' அமைப்பை நடத்தி வந்தார். அதற்காக 'முப்படைகள்' பற்றிய நூல்களை வெளியிடப் போவதாகவும், என்னைக் கடற்படை குறித்து எழுதும் படியும் கேட்டுக் கொண்டார். அப்போது தி. ஜானகிராமன் உடனிருந்தார் என நினைக்கிறேன். அப்போது நான் எழுதியதுதான் 'கடலோடி'. அதைக் கப்பலில் பயணம் செய்து கொண்டே எழுதினேன். அது ஒரு சுயசரிதை நூல். ஆனால் அதை எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிக் கூறும் நூலாக இல்லாமல் கடல் வாழ்க்கையைப் பற்றிய, கடல் பயணங்கள் பற்றிய நூலாக எழுதியிருந்தேன். வழக்கம்போல ஆங்கிலத்தில் சிந்தித்துத்தான் தமிழில் எழுதினேன். 1968ம் ஆண்டில் வெளியான அந்நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹிந்துவில் விமர்சனம் எழுதிய எஸ்.ஆர். கோவிந்தராஜன், "The author thinks in English and translates the phrase into tamil. With the result it appears that the book is a tamil translation of English original" என்று எழுதியிருந்தார். எனது அண்ணா கிருஷ்ணமூர்த்தியும் அந்த முயற்சியைப் பாராட்டினார். அவர் அந்தக் காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்தியவர். நல்ல எழுத்தாளர். முருகவடியான் என்ற பெயரில் நிறைய எழுதியிருக்கிறார். இப்படிப் பலரது பாராட்டையும் பெற்ற கடலோடி நூலைப் பின்னர் யுனைடெட் ஸ்டேட்ஸ் லைப்ரரி காங்கிரஸ், அவர்களது நூற்பட்டியலில் சேர்த்து கௌரவப்படுத்தியது. அது மஞ்சரியில் தொடராகவும் வெளியானது.

கே: அடுத்தது...?
ப: என்னோட ஏரியா, சிறுகதைதான். நாவல் அல்ல. ஒருமுறை விகடன் கேட்கவே 'மாயமான்' என்ற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினேன். நல்ல வரவேற்பு இருந்தபோதும் தொடர்ந்து நாவல் ஏதும் எழுதவில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை. என்னைப் பொருத்தவரை அது ஒரு அனுபவப் பகிர்வுதான். கற்பனை என்று எதுவும் என் எழுத்தில் இல்லை. உண்மை அனுபவங்கள்தாம். வேண்டுமானால் சற்றுக் கற்பனை கலந்த நடையில் எழுதியிருப்பேன்.

கே: தற்போதைய எழுத்துலகு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ப: எழுத்தில் இன்னும் வீச்சு வேண்டும். நிறைய சப்ஜெக்ட்களில் எழுத முன்வர வேண்டும். ஆனால் இங்கு திருப்பித் திருப்பி ஒரே விஷயம்தான் மாறிமாறி கற்பனை கலந்து எழுத்தில் வந்து கொண்டிருக்கிறது. இதை நான் குறையாகச் சொல்லவில்லை. நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். பலமொழி எழுத்தாளர்களின் நூல்களைப் படித்திருக்கிறேன். அதை வைத்துத்தான் சொல்கிறேன். நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்களது வீச்சு அதிகம். மேலும் விதவிதமான கதைக்கருக்களில் அவர்கள் எழுதுகிறார்கள். 'மை சிஸ்டர் ரேஷல்' மாதிரிக் கதைகள் எல்லாம் தமிழ்நாட்டில் படிக்கக் கிடைக்கவில்லை. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, பெங்காலி உட்படப் பிற மொழிகளிலும் கூட அப்படிப்பட்ட கதைகள் படிக்க இல்லை. ஆனால் இப்போது ஒரு நல்ல மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. வணிக ரீதியான இதழ்கள் அல்லாத சிற்றிதழ்களில் நல்ல முயற்சிகள் நடக்கின்றன. அது உற்சாகத்தைத் தருகிறது.

கே: வரலாற்று ஆய்வில் ஈடுபாடு வந்தது எப்படி?
ப: ஒருமுறை நான் ரஷ்யத் தூதுவர் சர்தார் பணிக்கருடன் மாலத்தீவுகளுக்குப் பயணித்தேன். அவர்தான் கடலின் வரலாற்றை முதன் முதலில் எழுதியவர். இந்தோனேசியாவில் பல சிற்பங்களைக் கண்டுபிடித்தவர். தமிழர்களின் கடல் பயணம் பற்றி ஆராய்ந்தவர். அவர் பயணத்தின்போது பல வரலாற்றுத் தகவல்களை கூறிக்கொண்டே இருந்தார். வரலாற்றின்மீது ஆர்வம் வர அது ஒரு காரணம். அதுதவிர ஈஃபெல் டவர், எகிப்து பிரமிடு என்று எங்கு சென்றாலும் அந்த ஊரில் இருக்கும் சரித்திரச் சிறப்பு மிக்க பகுதிக்குச் சென்று பார்த்துவிட்டு வருவேன். ஆந்திராவில் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாசலத்தில் குலோத்துங்க சோழனின் தமிழ்க் கல்வெட்டைப் பார்த்திருக்கிறேன். இன்னமும் அந்தக் கல்வெட்டு இருக்கிறது. அதை ஆராய்ந்தபோது விசாகப்பட்டினத்தின் பெயரே குலோத்துங்க சோழப் பட்டினம் என்பது தெரியவந்தது. இவை எனது ஆர்வத்தை அதிகரித்தன. பின்னர் சுந்தரம் என்ற வரலாற்றுப் பேராசிரியர் மூலம் பல வரலாற்று ஆய்வாளர்களின் தொடர்பு கிடைத்தது. இப்படித்தான் வரலாற்றின் மீது எனக்கு ஆர்வம் வந்தது.

கே: கம்போடியா புனர்நிர்மாணத்தில் பங்கு கொண்டிருக்கிறீர்கள் அல்லவா, அது குறித்துச் சொல்லுங்கள்...
ப: இரண்டு வருடங்கள் வணிகக் கப்பல்களில் பணியாற்றிய பின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சேர்ந்தேன். அங்கே தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி 1991ல் ஓய்வு பெற்றேன். அதன் பிறகு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தபோது ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு வந்தது. அதே சமயத்தில் கம்போடியப் புனர்நிர்மாணப் பணி வாய்ப்பும் வந்தது. ஆலோசகராக இருக்குமாறு உலக வங்கி என்னைக் கேட்டுக் கொண்டது. அது என் வாழ்நாளில் மறக்க முடியாத மன நிறைவைத் தந்த நல்ல அனுபவம். அங்கோர்வாட்டைப் பார்த்தது மறக்க முடியாத ஒன்று. அந்த நினைவுகளை 'கம்போடிய நினைவுகள்' என்ற பெயரில் நூலாக எழுதியிருக்கிறேன்.
கே: மதராசப்பட்டினம் பற்றி ஆய்வு செய்யத் தூண்டுதல் எது?
ப: நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், மத்திய அரசு என்னை Development of Indian Ports குறித்து ஒரு ஆய்வுநூல் எழுதுமாறு கேட்டுக் கொண்டது. நானும் மிக உழைத்து, ஆதாரங்களைத் திரட்டி அந்நூலை உருவாக்கினேன். ஆனால் அந்நூல் வெளியாகவில்லை. சில கட்டுரைகளை ஹிந்து வெளியிட்டது. எனக்குத் தமிழிலும் அதுபோல ஒரு ஆய்வு நூல் எழுத எண்ணம் தோன்றியது. ஏற்கனவே கடலோடி எழுதிய அனுபவம் இருந்தது. மேலும் அரசின் சார்பாகத் துறைமுகம் பற்றி ஆராய்ந்தபோது மதராஸ் குறித்த பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்திருந்தன. இதையே ஏன் விரிவுபடுத்தி ஒரு நூலாக எழுதக் கூடாது என்று தோன்றியது. அப்போது, ராதாகமல் முகர்ஜி எழுதிய ஒரு புத்தகத்தில் மூழ்கிப் போன கப்பலை ஸ்ரீலங்கன் படையினர் கரைமேல் குதிரைகளை வைத்து கயிற்றால் கட்டி இழுத்தார்கள் என்று ஒரு குறிப்பைப் பார்த்தேன். நான் அங்கோர்வாட் சென்றிருந்த போது ஒரு கோயிலில் அதேபோன்ற ஒரு சிற்பத்தைப் பார்த்தேன். எனக்குப் புல்லரித்துவிட்டது. அந்தக் கோயில் கட்டி 1300 வருடங்கள் இருக்கலாம். அப்படியென்றால் 1300 வருடங்களுக்கு முன்னாலிருந்தே இது போன்ற தொலைதூரக் கடல் பயணம் சாத்தியமாகி இருந்தது என்ற உண்மை தெரியவந்தது.

"எழுத்தில் இன்னும் வீச்சு வேண்டும். நிறைய சப்ஜெக்ட்களில் எழுத முன்வர வேண்டும். ஆனால் இங்கு திருப்பித் திருப்பி ஒரே விஷயம்தான் மாறிமாறி கற்பனை கலந்து எழுத்தில் வந்து கொண்டிருக்கிறது. இதை நான் குறையாகச் சொல்லவில்லை. நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். பலமொழி எழுத்தாளர்களின் நூல்களைப் படித்திருக்கிறேன். அதை வைத்துத்தான் சொல்கிறேன். நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்களது வீச்சு அதிகம். மேலும் விதவிதமான கதைக்கருக்களில் அவர்கள் எழுதுகிறார்கள்."
அதுபோல, சாணக்கியர் கதையில் மன்னன் நந்தன் செல்வத்தை ஒளித்து வைத்ததைக் கண்டு கோபப்பட்ட சாணக்கியன், அதை எடுத்து எல்லா மக்களுக்கும் கொடுத்தான் என்ற ஒரு குறிப்புண்டு. அதே சம்பவம் நமது சங்க இலக்கியங்களிலும் பதிவாகி இருக்கிறது. ஆக, அது பொய்யல்ல. அதே சமயம் சாணக்கியன் காலம் கி.மு. 356. சங்க காலம் கி.பி 300. ஆக 500, 600 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் பல நூற்றாண்டுகள் கழித்தும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்றால், நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் தென்கோடி மக்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றால் அந்த அளவுக்கு அவர்களுக்குள் தொடர்பிருந்திருக்க வேண்டும் அல்லவா? அது எப்படி என்றால் அக்காலக் கடல் பயணங்கள் எல்லாம் கங்கைக் கரை வழியாகத்தான் நிகழ்ந்திருக்கின்றன. கங்கையைச் சுற்றிக் கொண்டுதான் வருவார்கள், போவார்கள். அப்படி மக்கள் தொடர்பு மூலம்தான் பல தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

எனவே கடல் வணிகத்துக்கும் வரலாறுக்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். தென்சீனாவில் இருக்கும் பான் ஷூ என்ற கோட்டையில் ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. ஒரு ஜப்பானியப் பேராசிரியர் அதைப் படம் பிடித்துள்ளார். அதில் "தவச்சக்கரவர்த்தி என்கிற சம்பந்தப் பெருமாள்" என்ற பெயர் காணப்படுகிறது. அதன் காலம் 1283. அதாவது 13ம் நூற்றாண்டு. இதுவும் கடல்வழிப் பயணத்தின் மூலமே சாத்தியமாகியிருக்கிறது. இது போன்று கிடைத்த தகவல்களைக் கொண்டு 'கடல்வழி வணிகம்' நூல் எழுதுவதில் மேலும் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. அந்த நூலுக்காகத் தொல்லியல் துறையிலும், சென்னை கோட்டை அருங்காட்சியகத்திலும் நிறைய ஆய்வுகள் செய்தேன். அதில் எனக்கு நிறையப் புதிய விஷயங்கள் கிடைத்தன. இவற்றையெல்லாம் தொகுத்து, மேலும் ஆய்வு செய்து ஒரு புத்தகமாக எழுதலாமே என்று தோன்றிற்று. அப்படி ஆரம்பித்ததுதான் 'மதராசப்பட்டினம்'.

கே: மதராச பட்டினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
ப: நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. சென்னை என்ற பெயர் பின்னால் வந்ததுதான். மதராஸ் என்ற பெயர்தான் முன்னாலேயே இருந்தது. ஆனால் மதராஸப்பட்டினம் என்ற பெயர் ஏன் வந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை. Chennai is a second name. First name is Madras. ஆனால் எப்படி, ஏன் அந்தப் பெயர் வந்தது என்பது தெரியாது. அதுபோல பார்பர்ஸ் பிரிட்ஜை ஹாமில்டன் பிரிட்ஜ், பின்னர் அதிலிருந்து அம்பட்டன் வாராவதி ஆகி அதனால் பார்பர்ஸ் பிரிட்ஜ் என்ற அந்தப் பெயர் வந்ததென்று சொல்கிறார்கள். அது உண்மையல்ல. அதன் பெயரே பார்பர்ஸ் பிரிட்ஜ்தான். ஏன் அந்தப் பெயர் வந்தது என்பது தெரியவில்லை.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

விமானம் வாங்கிய முதல் இந்தியர் ஒரு தமிழர்
நான் பணி ஓய்வு பெற்றபின் பிரிட்டிஷ் கவுன்சில் மூன்று தொகுதிகள் கொண்ட நூல் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். திரு எஸ். முத்தையா அதன் தொகுப்பாசிரியர். அதன் இரண்டாவது வால்யூமுக்கு என்னுடைய கட்டுரைகள் இரண்டைக் கேட்டிருந்தார்கள். மெட்ராஸ் பட்டினம் பற்றி எழுதலாம் என முடிவு செய்தேன். அவர்கள் சிவில் ஏவியேஷன் பற்றி எழுதச் சொன்னார்கள். நான் ஃப்ளையிங்க் க்ளப்பில் போய் பேசினேன். அங்கு நிறைய பழைய ரிகார்டுகள் கிடைத்தன. அதில் ஒரு தகவல் கிடைத்தது. "In India the first Plane was purchased by one Avudaiappa Chettiar" என்ற தகவல் இருந்தது. அவருக்கு பைலட் லைசன்ஸும் இருந்தது. வருஷம் 1932-33. எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த ப்ளேன் எங்கே இருக்கிறது என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. முத்தையாவிடம் கேட்டேன். அவர், "நீங்கள் கண்டுபிடித்தால் எனக்குச் சொல்லுங்கள்" என்றார். ஓரிடத்தில் விசாரித்ததில் போலீஸ் தலைமையகம் அருகே இருக்கிறது என்றார்கள். திலகவதி ஐ.பி.எஸ். அவர்களிடம் கேட்டதற்கு, அவர்களும், "அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னால் சுடுகாடுதான் இருக்கிறது" என்று சொல்லிவிட்டார்.

நானும் சளைக்காமல் ஓர் ஆட்டோ எடுத்துக் கொண்டு அந்தப் பகுதியில் சுற்றினேன். போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸுக்குப் பின்னால், ஃபயர் ஸ்டேஷனை ஒட்டிச் செல்லும் சந்தில் ஒருவரிடம் விசாரித்ததில், பின்னால் ஒரு பெரிய தோட்டம் இருப்பதாகச் சொன்னார். சற்றுத் தொலைவில் பெரிய தோட்டம் ஒன்று தெரிந்தது. அதில் "ஆவன்னா கார்டன்" என்ற போர்டைப் பார்த்தேன். ஆவன்னா கார்டன், ஆவுடையப்பச் செட்டியார் இரண்டிற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றியது. தோட்டத்தின் வாசலில் ஒருவர் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தார். அவரிடம் இதன் உரிமையாளர்களைப் பார்க்க வேண்டும். உள்ளே இருக்கிறார்களா என்று விசாரித்தேன். "நீங்கள் யார்?" என்று கேட்டார் அவர். "நான் ஒரு ஆய்வாளர். ஆவுடையப்பச் செட்டியார் என்பவர் ஒரு விமானம் வைத்திருந்தாராம். உள்ளே இருப்பவர்கள் யாருக்காவது அதுபற்றித் தெரியுமா என்று விசாரிக்க வந்திருக்கிறேன்" என்று சொன்னேன். அவரை ஒரு வாட்ச்மேன் என்று நினைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரோ உடனே எழுந்து நின்று, "I am the son of Avudaiappa Chettiar. I am Ramanathan Chettiar, Advocate" என்றார். உடனே நான் பதறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். உடனே அவர், "No problem. Come with me. you are the first man asking me about this" என்றார். பின்னர் உள்ளே அழைத்துக்கொண்டு போனார். அந்த இடம் 3 ஏக்கருக்கு மேல் இருக்கும். 'கீரைத் தோட்டம்' என்று பெயர். பழைய உலோக ஸ்க்ராப் வாங்கி விற்கும் தொழிலை அவர் செய்து வந்ததால் எங்கு பார்த்தாலும் ஒரே வேஸ்ட் மெடீரியலாக இருந்தது. "நான் அந்த ப்ளேனைப் பார்க்க வேண்டும். அது இங்குதான் இருக்கிறதா" என்று கேட்டேன். "You are the first man to ask me about my father's memory. I can do anything for this" என்றவர், மூன்று நாள் கழித்து வருமாறும் அந்த இடத்தைச் சுத்தம் செய்து வைப்பதாகவும் கூறினார். அதன்படியே மூன்றுநாள் கழித்துச் சென்றேன். அந்த விமானத்தைப் புகைப்படமும் எடுத்தேன். அந்தப் புகைப்படமும் தகவலும் ஹிந்துவில் வெளியாயின.

மதராசப்பட்டினம் - ஊரும் பேரும்
ஊர்ப் பெயர்களுக்கெல்லாம் சுவாரஸ்யமான வரலாறு உண்டு. மாம்பலம் என்பதன் பூர்வீகப் பெயர் மஹா பில்வ க்ஷேத்திரம். மாம்பழம் நிறையக் கிடைத்ததால் இந்தப் பெயர் என்று சொல்வார்கள். அது சரியல்ல. அதற்கு ஆதாரமும் இல்லை. அங்கே ஒரு சிவன் கோவில் இருந்தது. அதன் அருகே ஒரு மிகப்பெரிய பில்வ மரம் இருந்தது. அதன் அடிப்படையில் மஹா பில்வ க்ஷேத்திரம் என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும். சிந்தாதிரிப் பேட்டை என்பதன் பழைய பெயர் சின்ன தறிப் பேட்டை. நெசவாளர்களை அங்கே குடியேற்றி அவர்கள் தறி போட்டு நெய்ததால் அந்தப் பெயர். அதுபோல கோமளீஸ்வரன் பேட்டை, திருவேட்டீஸ்வரன் பேட்டை எல்லாம் பழைய பெயர்கள். இப்போது நாம் 'கூவம்' என்று அழைக்கும் ஆற்றின் பெயர் கோமளேஸ்வரம். அதன் கரையில் கோமளீஸ்வரர் ஆலயம் இருந்தது. அந்த ஆற்றில் குளித்து கோமளீஸ்வரனை வழிபட்டதாகப் பச்சையப்ப முதலியார் எழுதிய குறிப்பு சொல்கிறது. அதுபோல துணி வணிகம் பெருகியதால் நெசவாளர்களுக்கென்று தனிக் குடியிருப்பு ஏற்படுத்த நினைத்தார் அப்போதைய ஆங்கிலேய கவர்னர் காலட். இதற்காக திருவொற்றியூர் அருகே உள்ள ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அங்கே குடியேறியவர்கள், அவர் நினைவாக அந்தப் பகுதியை 'காலட் பேட்டை' என்று குறிப்பிட்டனர். அதுதான் இன்றைய காலடிப் பேட்டை. அதுபோல துணிவெளுப்பவர்கள், சாயம் போடுபவர்கள் குடியேறிய பகுதி வண்ணாரப்பேட்டை ஆயிற்று. சையதுகான் பேட்டைதான் சைதாப் பேட்டை. தண்ணீர் பஞ்சத்தைப் போக்க கவர்னர் எல்லீஸ் பெரிய கிணறுகளை வெட்டியதால் அந்த இடம் பின்னர் 'ஏழு கிணறு' ஆனது.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
மேலும் படங்களுக்கு
More

டைரக்டர் கிருஷ்ணா
Share: 




© Copyright 2020 Tamilonline