தென்றல் பேசுகிறது
ஏப்ரல் மாதத்தில் தமிழ் நாட்டில் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. முக்கியக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என்று இலவசங்களை அறிவித்துத் தள்ளுகின்றன. ஆங்காங்கே வோட்டு வாங்குவதற்காகக் கொண்டு போகப்படும் பணம் பெட்டி பெட்டியாகப் போலிசாரால் கைப்பற்றப்படுகிறது. கூலிக்கு அரிவாள் வீசும் குண்டர் படைகள் மொத்தக் குத்தகைக்கு அரசியல் கட்சிகளால் எடுக்கப்படுவதாக ஒரு செய்தித்தாள் கூறுகிறது. உயிரின் விலை இப்போது சரியாகத் தெரிய வந்திருக்கிறது, வெறும் 2 லட்சம்தானாம். தமக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என்று நினைப்பவர்களை வாக்களிக்க விடாமல் செய்ய, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற, வராத வாக்காளர்களின் பெயரில் தமது சின்னத்தில் முத்திரைகளைக் குத்தித் தள்ள என்று இன்னும் பல 'ஜனநாயக' வழிமுறைகள் அரங்கேறுவதும் உண்டுதான். தேர்தலுக்குத் தேர்தல் இந்திய ஜனநாயகம் வெகு விரைவாக 'முன்னேறிக் கொண்டிருக்கிறது'. அரபு நாடுகளில் ஏற்பட்ட மல்லிகைப் புரட்சியின் மணம் இந்தியாவிலும் வீசுமா? அல்லது 'மதச்சார்பற்ற கல்வி' என்ற போர்வையில் ஒழுக்கக் கல்வியை, கலாசாரக் கல்வியை, பண்பாட்டுக் கல்வியை, பாரம்பரியக் கல்வியைப் புறக்கணித்து விட்டதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கப் போகிறோமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். விழித்துக் கொண்டால், வாக்காளர்களும் விடைகாண முடியும்.

*****


##Caption##விளையாட்டுத் துறை, விண்வெளித் துறை, விமானத் துறை, தொலைத் தொடர்புத் துறை ஆகியவற்றில் மோசடி, அன்னியச் செலாவணிக் குற்றம், கறுப்புப் பணத்தை வெளிநாட்டில் ஒளித்துவைத்தல், மத்திய ஊழல் தடுப்புக் கமிஷனர் நியமனத்தில் முறைகேடு என்று ஒவ்வொன்றிலும் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கும் நிலையில் நாட்டின் பிரதமர் முதலில் 'எனக்குத் தெரியாது' என்று கூறுவதும், பின்னர் 'நிர்வாகக் குறைவு ("Governance deficit")', 'தவறான கணிப்பு' ("Error of judgement") என்றெல்லாம் சொல்லித் தப்பிக்கப் பார்ப்பதும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்குச் சற்றும் பொருந்துவதாக இல்லை. எல்லா விஷயங்களிலுமே உச்சநீதி மன்றம் தலையிட்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த பின்னரே அரசு நடவடிக்கை எடுக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கது. இந்தக் காலதாமதம், தவறு செய்தவர்களால் தமது குற்றத் தடயத்தை அகற்றப் பயன்படுத்தப்படும் என்ற அச்சமும் நியாயமானதே. "சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்" என்று அடிக்கடி கூறுகிறவர் அவர். 'தூய்மையானவர்' என்று பரவலாகக் கருதப்படுகிறவர். அப்படிப்பட்டவரின் வழுவலும் நழுவலும் அவரது நேர்மையையே சந்தேகிக்க வைக்கின்றன என்னும் கருத்து பரவி வருவதில் வியப்பில்லை.

மேற்கண்ட பத்திகளின் சாடும் தொனி சற்றே கடுமையானதாகத் தோன்றலாம். ஆனால் சரியான நேரத்தில் சுட்டிக் காட்டத் தவறினால், பின்னாளில் இன்னும் அதிகமாகப் புலம்ப வேண்டிவரும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

*****


ஒரு கதை பிறப்பதிலிருந்து அது படமாக வெளிவரும் வரை என்னென்ன நடக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு அசாதாரணப் பார்வையை இளம் இயக்குனர் கிருஷ்ணாவின் நேர்காணல் வாசகர்களுக்குத் தருகிறது. தேர்ந்த ஆய்வாளரும், கதாசிரியருமான 'கடலோடி' நரசய்யாவுடனான நேர்காணல் மற்றுமொரு ரசிக்கத்தக்க தகவல் களஞ்சியம். பி.யூ. சின்னப்பா, ஸ்டெல்லா புரூஸ், மலேசியா வாசுதேவன் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள் கலைஞர்களின் ஆசை, உழைப்பு, தனிமை, வெற்றி, தோல்வி என்று பல பரிமாணங்களைக் கலைடாஸ்கோப் வண்ணங்களில் விரிக்கின்றன. வேலூர் பொற்கோவிலைக் கட்டிய அருளாளர் ஸ்ரீ நாராயணி அம்மாவின் இளமைக்கால உரையாடல் சி.கே. கரியாலியின் கைவண்ணத்தில் ஒரு மாறுபட்ட உலகுக்கு அழைத்துச் செல்கிறது. இவற்றை ரசிப்பதும் ருசிப்பதும் இனி உங்கள் கையில்.

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.


ஏப்ரல் 2011

© TamilOnline.com