தென்றல் பேசுகிறது
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையை மட்டுமல்ல, இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கியுள்ளது. ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அதன் துவக்க விழாவுக்கு வந்திருந்தது, எல்லா ஆங்கில டி.வி. சேனல்களையும் தெற்கு நோக்கிப் பார்க்க வைத்தது. டெல்லியில் நடக்கும் கொலைகூட அவற்றில் இரண்டு மூன்று நாட்கள் விவாதிக்கப்படும், தெற்கில் எது நடந்தாலும் அவ்வளவு முக்கியத்துவம் பெறாது என்கிற நிலைதான் இருந்து வந்திருக்கிறது. ஆனால், முதன்முறையாக, 'இந்திப் பரவல் தமிழை அல்லது தென்னிந்திய மொழிகளை அழிக்கிறதா?' என்பது போன்ற விவாதங்களை ஆங்கிலச் சேனல்களில் கேட்க முடிந்ததென்றால் அதற்குச் செம்மொழி மாநாட்டின் உச்ச வோல்டேஜ் வெளிச்சம்தான் காரணம். பேரா. ஜார்ஜ் ஹார்ட், டாக்டர் நா. கணேசன் போன்றவர்களைத் தமிழ்ப் பத்திரிகைகள் நேர்காணல் செய்து வெளியிட்டன. மாநாட்டில் அவர்கள் பேசியவையும் முக்கியத்துவம் பெற்றன. பூமிப்பந்தின் வெவ்வேறிடங்களிலிருந்து வந்தவர்களும் 'நான் தமிழை நேசிக்கிறேன்' என்று தத்தமது உச்சரிப்புகளில் கூறியதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. என் மொழி செம்மொழி என்கிற இறுமாப்பை ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் ஏற்றியது.

★★★★★


செம்மொழி மாநாட்டுக்குச் செலவு 600 கோடி ரூபாய் என்கிறது அதிகாரபூர்வமற்ற கணிப்புகள். அதிகாரபூர்வமாக அரசு கூறியுள்ளது நேரடிச் செலவு 68 கோடி ரூபாய்தான் என்று. இருக்கட்டும். மாநாட்டுக் கவியரங்கத்தைக் கேட்டவர்களுக்குக் 'கலைஞர் புகழ் தவிரப் பாடுபொருள் வேறேதுமில்லையா?' என்று தோன்றியிருந்தால் வியப்பில்லை.

சென்னைக்கு அருகிலுள்ள ஒட்டியம்பாக்கத்தில் ஓர் அரசுப் பள்ளி உள்ளது. எளிய கிராம மக்கள் படிக்கும் பள்ளி. அதில் 7 வகுப்புகள் உள்ளன. ஆனால் இரண்டே ஆசிரியர்கள்தாம். அவர்களால் என்ன செய்ய முடியும்? பல கிராமத்துப் பள்ளிகளிலும் இதே நிலைதான். தமிழக கிராமத்துச் சிறாரிடையே கல்வி வசதியை உயர்த்துவதற்கான அத்தியாவசியச் செலவைச் செய்யாமல், ஆடம்பரச் செலவுகள் செய்வது தமிழகம் போன்ற மாநிலங்களுக்குச் சிறப்பை அளிக்காது. நீண்ட மின்வெட்டுகள் காரணமாகப் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கே அஞ்சும் நிலையும் ஏற்பட்டுள்ளது. குடிசைகள் மிக அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்று என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழில் பெயர் வைக்கும் சினிமாவுக்கு வரிவிலக்கு என்பது போன்ற வேடிக்கையான வழிகளைத் தவிர்த்து, வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் தமிழ்த் துறைகளுக்கு மானியம், தமிழ் கற்கும் பிற நாட்டவர்க்கு உதவித் தொகை, தமிழ்நாட்டுக்கு வந்து கற்க அடிப்படை வசதிகள், நல்ல நூல்கள் வெளியிட ஊக்கத்தொகை, தமிழில் கலைச்சொல்லாக்கத்தை விரைவுபடுத்தல், எல்லாத் துறை நூல்களும் தமிழில் கிடைக்க வழிசெய்தல் போன்ற ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டால் உண்மையிலேயே செம்மொழியை அடுத்த தலைமுறைகள் மேலெடுத்துச் செல்ல அது வழிகோலும் என்பது பலரின் கருத்து.

★★★★★


அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேறுகிறதா, வேலை வாய்ப்புகள் பெருகுகின்றனவா என்பது உணரமுடியாத அளவில் அத்தனை மெல்ல நடந்துகொண்டிருக்கிறது. நிதித்துறைச் சீரமைப்புச் சட்டம் மிகத் தேவையான ஒன்று. ஆனாலும் பெரிய வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும் - அவற்றில் எவ்வளவு முறைகேடுகள் நடந்திருந்தாலும் - சற்றும் சிரமப்படாமல் சீரமைப்பு நடக்க வேண்டும் என்ற முனைப்போடுதான் இந்தச் சட்டவரைவு உருவெடுத்திருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கிக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதை வரவேற்க வேண்டும். தவறுகள் நடக்காமலும், நடந்தால் தாமதிக்காமலும் தலையிட்டு திருத்த இது உதவும். காலப்போக்கில் மேலும் பல திருத்தங்கள் பெற்றுச் செம்மை பெறும். கீழ்மட்டத்தில் இழக்கப்படும் வேலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் உற்பத்தியைச் சீனாவுக்கு அனுப்பிவிடும் போக்கை மாற்ற வேண்டும். டாலர்-யுவான் மாற்றுவிகிதத்தை யதார்த்த நிலைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே இந்தச் சாய்வுநிலை மாறும். சற்றேனும் மாற்றியமைக்கச் சீனா ஒப்புக்கொண்டிருப்பது நல்ல அறிகுறிதான். பிடியை விடாமல் இதை அமெரிக்கா முன்னெடுத்துச் சென்றால் மீண்டும் அமெரிக்காவில் உற்பத்தித் துறை புத்துயிர் பெறும். தொழிலாளர் பணியிழப்பது குறையும்.

★★★★★


எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு வாழ்நாள் சாதனையாளர். தன் குரலின் வசீகரத்தால் எல்லா இந்திய மொழிபேசும் மக்களையும் கட்டிப் போட்டவர். புகழின் போதை தலைக்கேறாத எளியவர். அவரோடான சி.எஸ். ஐங்கரனின் நேர்காணல் இந்த இதழை அணிசெய்கிறது. கலைவாணரைப் பற்றி லாஸ் ஏஞ்சலஸில் வசிக்கும் அவரது மகள் கஸ்தூரி கூறியிருப்பவை இதயத்தை வருடும் ஓவியம். இவை தவிர ஏராளமான தகவல்கள், கதைகள், துணுக்குகள் என்று மேலுமொரு பல்சுவை விருந்தாக உங்களை அடைகிறது தென்றல்.

வாசகர்களுக்கு அமெரிக்கச் சுதந்திர நாள் வாழ்த்துக்கள்!


ஜூலை 2010

© TamilOnline.com