முந்தைய இதழ்களில் நாம் எழுதி வந்த ரெளத்திரம் பழகு தொடரில் 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்ற குறளை வேறொரு கோணத்திலிருந்து அணுகியிருந்தோம். வாசகர் சுதாமா அது குறித்து எழுதியிருப்பதில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
'செப்டம்பர்-07 இதழில் வந்துள்ள அக்கட்டுரை பகுதி குறித்து எனக்கு ஓர் சந்தேகம். அன்பர் ஹரிகிருஷ்ணனின் மறுமொழி-விளக்கம் அறிய ஆவலாய் உள்ளேன்.
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று
என்னும் திருக்குறளுக்குப் புதியதோர் நோக்கிலே அவர் அணுகுவது. சிந்தனைக்கு உரிய ஓர் அரிய சுவையே. எனினும், வள்ளுவப் பெருந்தகையாரின் உட்கருத்து என, பண்டிதர்களிடமிருந்து இதுகாறும் நான் அறிந்ததை கூறுகிறேன்.
இங்கு 'காய்' எனப்படுவதன் ஆதாரக் கருத்து 'பக்குவம் அடையாத பழம்' என்பதே.'
இவ்வாறு குறிப்பிட்டு, இந்தக் கருத்தை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார் அன்பர் சுதாமா. நம் கருத்தை அறிய ஆவலும் தெரிவித்திருக்கிறார். அவருக்கு நன்றி. அன்பர்களின் உற்சாகமான வரவேற்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
நம்முடைய இந்த முயற்சியின் நோக்கம், வழக்கமாக சொல்லப்பட்டு வரும் பொருளை மறுபடியும் எடுத்து வைப்பது அன்று. வழக்கமான பொருளுக்கு ஏராளமான உரைகள் இருக்கின்றன. வழக்கமான உரைகளைக் கடந்ததும், பொருத்தமாகவும் ஏற்புடையதாகவும் உள்ள பார்வைக்குக் குறளையும் பொதுவாகத் தமிழிலக்கியத்தையும் உட்படுத்துவதுமான சோதனை முயற்சி நம்முடையது. இந்தக் குறளுக்கு நம்முடைய அணுகுமுறையும் எவ்வாறு பொருந்தி வருகிறது என்பதை விளக்கியிருக்கிறோம்.
ஆகவே, பழைமையான விளக்கங்களை மறுக்கிறோம் என்பதல்ல பொருள்; புதியதும் பொருத்தமானதுமான தடங்களைத் திறக்க முயல்கிறோம் என்பதே. வாசகர்களின் ஆதரவு மட்டுமல்ல; கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.
இலக்கியத்தில் புதிதும், மாறுபட்டதுமான கோணங்களில் சிந்திப்பதும், பொருத்திப் பார்ப்பதும் உவப்பை அளிப்பன. ஆகவேதான் தேவர் 'நவில்தொறும் நூல்நயம் போலும்' என்றார். பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கருத்தையும் அனுபவத்தையும் அளிப்பதே நூலின்பம். சிலசமயங்களில் ஒரு நூலைப் படிக்கும்போது கிடைக்கும் தடயங்கள் வேறொரு நூலில் எழுந்த ஐயங்களுக்குச் சாவியாக அமைவதுண்டு. அப்படி எதிர் பாராத தருணத்தில் எனக்கு அவிழ்ந்த முடிச்சை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
என்ற குறளில் 'தாழ்' என்ற சொல்லுக்குத் தாழ்ப்பாள் என்பதே வழக்கமான பொருளாக இருக்கிறது. பேரறிஞர்கள் இந்தக் குறளுக்கு அளித்துள்ள உரையிலிருந்து ஒரு சிலவற்றைப் பார்ப்போம்:
'Can love be latched and hidden?' (P. S. Sundaram) 'Is there any latch that can shut in love?' (Rev. Drew & John Lazarus)
இவர்களும் சரி; பிறரும் சரி. அன்பைத் தாழிட்டு மூடி வைக்க முடியுமா என்று கேட்கிறார்கள். இது ஏற்புடைய உரையே என்றாலும் இந்தக் குறிப்பிட்ட குறளில் அன்பு உருவகப்படுத்தப் பட்டுள்ள விதம் 'தாழ்ப்பாள்' என்ற பொருளைக் காட்டிலும் வேறு பொருத்தமான விளக்கம் ஏதும் கிடைக்குமா என்றே சிந்திக்கத் தூண்டுகிறது. பாரம்பரியமான சிந்தனையில் ஐம்பூதங்களை ஐந்து குணங்களோடு பொருத்தியே உருவகப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை நாம் இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னோம். பூமி பொறுமைக்கும்; ஆகாயம் அறிவின் விசாலத்துக்கும்; நெருப்பு சினத்துக்கும்; காற்று வலிமைக்கும்; அன்பு நீருக்கும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் பார்த்தோம்.
அதுமட்டுமில்லாமல் மேற்சொன்ன குறளிலும் 'புன்கணீர் பூசல் தரும்' என்று முடிக்கும் போதும் நீர்மை நிறைந்த அன்பையே வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. 'அன்பு நீர்மை நிறைந்த பொருளானால் அதைத் தாழ்ப்பாள் போட்டு எவ்வாறு மூடி வைக்க முடியும்' என்பது உருவக, உவமைப் பொருளை ஒட்டிச் சிந்திக்கும்போது ஏற்படும் சிக்கல். சற்று விளக்கமாகச் சொல்கிறேன்.
கதவை மூடித் தாழிட்டால், திடப்பொருளை வெளியே தோன்றாமல் மறைத்து வைப்பது எளிது. திரவப் பொருளைத் தாழிட்டு மூடி வைக்க முடியாது. அதனை அணையிட்டுத் தடுக்கலாம்; தடையிட்டு நிறுத்தலாம்; தாண்டிச் செல்ல முடியாமல் ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தலாம். தண்ணீரைத் தாழ்ப்பாள் போட்டு நிறுத்துவது எப்படி என்று ஒரு சிக்கல் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், 'அடைக்கும் தாழ்' என்ற பயன்பாட்டைப் பார்த்தால் ஏதோ கொஞ்சம் உதைக்கிறது. நாம் பேசும்போது 'கதவை அடை' என்றுதானே சொல்கிறோம்! தாழ்ப்பாளை அடை என்று எப்போதாவது சொல்வது உண்டோ! தாழ்ப்பாள் போடு; கதவை அடை. இதுதான் நடைமுறைப் பயன்பாடு. வள்ளுவர் காலத்திலும் இந்தப் பயன்பாடுதான் நிலவி வந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நாம் இப்போது எதிர்கொள்வது இரண்டு வகையான சிக்கல்களை. தண்ணீரை எவ்வாறு தாழிட்டு அடைப்பது என்பது ஒன்று; தாழ்ப்பாள் என்பது 'போடவேண்டியது'; 'அடைக்க வேண்டிய' ஒன்றல்ல என்பது மற்றொன்று.
இத்தகைய சிக்கலுக்கு விளக்கம் காண்பதற் காக நாம் பார்த்த உரைகளில் பரிமேலழகர் உரை சற்று வேறுபட்டிருந்தது. 'அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?' என்று கேட்கிறார் பரிமேலழகர். 'தாழ்' என்றே திரும்பச் சொல்கிறாரேயன்றி, 'தாழ்ப்பாள்' என்று சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
பின்னர் வ.வே.சு ஐயர் அவர்களின் மொழிபெயர்ப்பு கொஞ்சம் புருவத்தை உயர்த்த வைத்தது. 'Where is the bar that can close in the gates of love?' என்று மொழிபெயர்க்கிறார் ஐயர். தாழ் என்பதை bar என்று மொழிபெயர்த்தார்; அதற்கு விளக்கமாகவும், பொருள் முழுமைக்காகவும் (குறளில் சொல்லப்படாத) அன்பின் கதவம்--gates of love--என்ற தொடரை வருவித்துக் கொண்டிருக்கிறார். இது கொஞ்சம் சிந்திக்க வைத்தது.
பின்னர் ஒருமுறை பாரதியின் சுயசரிதை யைப் படித்துக் கொண்டிருக்கும்போது தன்னுடைய குருவான குள்ளச்சாமியின் பெருமையை எடுத்துச் சொல்லும் பாரதி
'ஆசை எனும் கொடிக்கு ஒரு தாழ்மரமே போன்றான்'
என்று பேசுவதைப் பார்த்தோம். மிக எளிய நடையாக இருந்தாலும் பொருள் விளங்காத ஒன்றாகவும் வியப்பையும் ஐயத்தையும் ஏற்படுத்துவதாகவும் இதைக் கண்டோம்.
வியப்புக்கு என்ன காரணம்? பாடலின் பொருள் என்னவாயிருக்கும் என்று தோன்றுகிறது? ஆசை ஒரு கொடி. குருவான குள்ளச்சாமி அதற்கு ஒரு தாழ்மரம். எளிமையாகத் தோன்றுகிறது அல்லவா? ஆனால் பொருள் எவ்வாறு பொருந்தும் என்ற சிக்கல் ஏற்படுகிறது அல்லவா? ஆசை என்பது கொடி என்று உருவகிக்கப்படுவதால், குள்ளச்சாமி தாழ்மரமாகிறார். சரி. தாழ்மரம் என்றால் என்ன? சின்ன மரமா? தாழ இருக்கும் மரமா? பந்தல் என்றால் 'தாழ இருக்கும் பந்தல்', 'உயர இருக்கும் பந்தல்' என்றெல்லாம் சொல்லலாம். அதென்ன தாழ்மரம்? கொடி பற்றிப் படர்வதற்கான மரம் எப்படி இருந்தால் என்ன? மரத்துக்கு எட்டவேண்டும், அவ்வளவுதானே!
தாழ்மரம் என்பதற்கு, 'கொடி படர்வதற்கு ஏதுவாகத் தாழ இருக்கும் மரம்' என்று பொருள் கண்டால் இன்னொரு விபரீதமான விளைவும் ஏற்படுகிறது. இங்கே பேசப் படுவதோ குள்ளச்சாமி என்ற குருவைப் பற்றி. குரு எதற்கு உதவுவார்? ஆசை வளர உதவுவாரா அல்லது ஆசையை அடக்க உதவுவாரா? ஆசை என்பது கொடி என்றால், குரு எப்படி தாழ்மரமாகும் என்றெல்லாம் பொருள் சிக்கல்கள் தோன்றின. இப்படி ஒரு பொருள் வருமாயின் பாரதி சொன்னது இதுவாக இருக்காது என்ற முடிவு ஏற்பட்டது.
அந்தச் சமயத்தில்தான் வ.வே.சு ஐயருடைய திருக்குறள் மொழிபெயர்ப்பையும், தாழ் என்பதற்கு bar என்ற ஒரு பொருளையும் கவனித்தோம். சாவி இங்கே இருக்கிறது என்று தெளிந்தோம். பாரதியை விளங்கிக் கொள்ள திருக்குறளும், திருக்குறளை விளங்கிக் கொள்ள பாரதியும் பயன்பட்டது இவ்வாறுதான்.
பாரதி என்ன சொல்ல வருகிறான்? திருக்குறளில் உள்ள 'அடைக்கும் தாழ்' எதைக் குறிக்கிறது. கொஞ்சம் யோசிப்போம்.
ஹரி கிருஷ்ணன் |