இந்திய அரசின் பொதுமக்களுக்கான உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. 2023ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு மொத்தம் 128 பேர் இவ்விருதுகளைப் பெறுகின்றனர்.
பத்மவிபூஷண் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய மருத்துவர் திலீப் மஹாலானாபிஸ் மறைவுக்குப் பின் பத்மவிபூஷண் பெறுகிறார். தபேலா கலைஞர் ஜாகீர் ஹுசைன், அரசியல்வாதிகள் எஸ்.எம். கிருஷ்ணா, முலாயம் சிங் உள்ளிட்டோரும் பத்ம விபூஷண் விருது பெறுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கணிதவியல் நிபுணருமான ஸ்ரீனிவாச வரதன் (பார்க்க: தென்றல், ஜூலை 2012) பத்மவிபூஷணுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதில் நமக்குப் பெருமகிழ்ச்சி.
பத்மபூஷண் சுதா மூர்த்தி, குமாரமங்கலம் பிர்லா உள்ளிட்ட ஒன்பது பேருக்குப் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. பிரபல பின்னணிப் பாடகி வாணிஜெயராம் பத்மபூஷண் பெறுகிறார்
பத்மஸ்ரீ தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் இருவரும் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர். பாலம் கலியாணசுந்தரம் அவர்களும் (பார்க்க: தென்றல், டிசம்பர் 2007) பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி மருத்துவத்துறை சாதனைக்காக பத்மஸ்ரீ பெறுகிறார்.
பரதநாட்டியக் கலைஞர் கே. கல்யாணசுந்தரம் பிள்ளை, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் நளினி பார்த்தசாரதி, கர்நாடக எழுத்தாளர் எஸ்.எல். பைரப்பா, கேரள இலக்கியவாதி சி.ஐ. ஐசக், தெலுங்கானாவின் எழுத்தாளர் ராமகிருஷ்ண ரெட்டி, ஆந்திராவின் பிரகாஷ் சந்திரசூட், நடிகை ரவீனா டாண்டன், இசையமைப்பாளர் கீரவாணி, சுஜாதா ராம்துரை (கனடா), எஸ். சுப்பராமன் (கர்நாடகா) ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
விருதாளர்களுக்குத் தென்றலின் வாழ்த்துகள் |