கே.ஆர்.வாசுதேவன்
காந்தியவாதி, தேசியவாதி, இலக்கியச் சிந்தனையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர், சமூகசேவகர், அரசியல்வாதி, விரிவுரையாளர் எனப் பல்வேறு முகங்கள் கொண்டவர் கே.ஆர். வாசுதேவன். இவர், மயிலாடுதுறையில் மார்ச் 20, 1922ல் எம்.ஏ. ராஜகோபாலன்-பட்டம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை பாபநாசத்தில் முடித்தார். தந்தை, ராஜகோபாலன் தஞ்சை மாவட்ட காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். சிறந்த சமூகசேவரான அவர், மக்களின் அன்புக்குப் பாத்திரமானவராக இருந்தார். ஒரு சமயம் பாபநாசம் வந்திருந்த நேரு, அவ்வூரில் காங்கிரஸ் சார்பாகச் சிற்றுரையாற்றினார். மாணவரான வாசுதேவன், தன் வீட்டில் காய்ச்சப்பட்ட பசும்பாலை நேரு உரையாற்றி முடிந்ததும் அவருக்கு அளித்தார். சிறுவனைத் தட்டிக் கொடுத்து அப்பாலைப் பருகினார் நேரு. வாசுதேவனுக்கு அந்தச் சிறுவயதில் அது சொல்லொணாப் பரவசத்தைத் தந்தது. கூடவே தேச விடுதலை ஆர்வமும் சுடர்விட்டது.

திருச்சி தேசியக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலையில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார் வாசுதேவன். அங்கு இவருக்கு ஆசிரியராக இருந்து இவரது சிந்தனையில் பல தாக்கங்களை ஏற்படுத்தினார் 'வெள்ளிநாக்குப் பேச்சாளர்' எனப் புகழ் பெற்றிருந்த மகாகனம் சீனிவாச சாஸ்திரியார். படிப்பை முடித்ததும் மத்திய அரசின் கலால் துறையில் பணி கிடைத்தது. சுமார் பத்து வருடம் அத்துறையில் அவர் பணியாற்றினார். இயல்பாகவே உதவும் மனப்பான்மை கொண்டிருந்த வாசுதேவனின் மனம் சமூக சேவையின்பால் திரும்பியது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நினைத்தார். வேலையை உதறிவிட்டுச் சமூக சேவையில் ஈடுபட விரும்பினார். கோபாலகிருஷ்ண கோகலேயால் தோற்றுவிக்கப்பட்ட 'இந்திய சேவகர் சங்கத்தில்' (Servants of India) இணைந்தார். அதற்கு நேருவின் ஆதரவையும் அவர் பெற்றிருந்தார். 1952ல் நேரு சென்னை வந்திருந்த போது அவரை இந்திய சேவகர் சங்கத்தின் சார்பாக வரவேற்றவர் வாசுதேவன்தான். நேருவின் வாழ்த்துடன் நாடெங்கும் சென்று சமூகப்பணி ஆற்றினார். பழங்குடி மக்களின் கல்வி, ஆரோக்கியம், வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகத் தொடர்ந்து உழைத்தார். பல ஆண்டுகள் அப்பொறுப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார், 1967ல் அப்பணியிலிருந்து விலகி இதழியல் துறையில் நுழைந்தார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்படப் பன்மொழிகளை அறிந்திருந்த அவர், 'நாக்பூர் டைம்ஸ்' இதழில் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின், 'ஹிதவாதா', 'தி டிரிப்யூன்' போன்ற இதழ்களிலும் அவரது பணி தொடர்ந்தது. பல்வேறு தலைவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது.



அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது தமிழகம் வந்தார் வாசுதேவன். தினமணி இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்போது ஏ.என். சிவராமன் ஆசிரியராக இருந்தார். தினமணி கதிரிலிருந்து எழுத்தாளர் 'சாவி' விலகிய பிறகு, 1977ல், வாசுதேவன் அதன் ஆசிரியர் ஆனார். எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, தினமணி கதிரை ஓர் இலக்கிய இதழாக வளர்த்தெடுத்தார். எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினத்தின் திறமை அறிந்து அவரது சிறுகதைகள், தொடர்களைத் தொடர்ந்து கதிரில் வெளியிட்டு ஊக்குவித்தார். தினமணியில் இருந்து விலகிய பிறகு, 'புஷ்யம்' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். அதனால் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளானார்.

வாசுதேவன் குழந்தைகள்மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர்களை அறிவிற் சிறந்தவர்களாக, தேச பக்தர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக ஆளாக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. அதற்கான வாய்ப்பாக 'ரத்னபாலா' இதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்குமாறு வந்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டார். அது தமிழ்ச் சிறார் இதழுலகின் மிக முக்கியத் திருப்புமுனை ஆனது. 1979 தொடங்கி அவர் மறையும் 1987 வரை அவ்விதழின் ஆசிரியராக இருந்து தமிழின் முன்னணிச் சிறார் இதழாக ரத்னபாலாவை வளர்த்தெடுத்தார் வாசுதேவன்.

பஞ்ச தந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள் இவற்றோடு பொது அறிவுக் கதைகள், தமிழ் இலக்கியக் கதைகள், வரலாற்றுக் கதைகள், புராண, இதிகாசக் கதைகள், அறிவியல் கதைகள், ஆன்மிகக் கதைகள், படக்கதைகள் என விதவிதமான கதை, கட்டுரை, கவிதைகளை ரத்னபாலாவில் வெளியிட்டு குழந்தைகளின் அறிவு சுடர்விடக் காரணமானார். திருமுருக கிருபானந்த வாரியார், ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், டாக்டர் பூவண்ணன், பூதலூர் முத்து, டாக்டர் கு. கணேசன், கொ.மா. கோதண்டம் எனப் பலரது படைப்புகள் தொடர்ந்து அவ்விதழில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. வண்ணச் சிறார் கதைகளும் வண்ண ஓவியங்களும் பக்கத்துக்குப் பக்கம் இடம்பெற்றுக் குழந்தைகளை அவ்விதழ் வாசிக்கத் தூண்டியது. சிறார் மாணவ எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் 'சிறுவர் பண்ணை' என்ற பகுதியைத் தொடங்கி அதில் பள்ளி மாணவர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார் வாசுதேவன்.



இன்றைய பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தொடங்கி, ('தென்றல்' இதழ் அரவிந்த் சுவாமிநாதன் வரை) பல மாணவ எழுத்தாளர்களது படைப்புகள் அவர்களது சிறார்ப் பருவத்தில் ரத்னபாலாவில் வெளியாகியுள்ளன. இதுபற்றி ஜெயமோகன், "எனது முதல் படைப்பு நான் எட்டாவது படிக்கும்போது 'ரத்னபாலா' இதழில் பத்திரிகை ஆசிரியரின் சிறு குறிப்புடன் பிரசுரமாகி இருந்தது. எனக்கு ஏழு ரூபாய் சன்மானம் கிடைத்தது. அது, நான் ஒரு பெரிய எழுத்தாளராகிவிட்ட கர்வத்தையும், பெருமிதத்தையும் எனக்குத் தந்தது. அந்தக் கதையை எடுத்துக் கொண்டு நான் என் கிராமம் முழுதும் சுற்றி, தெரிந்தவர்களிடமெல்லாம் கொடுத்து படிக்கச் சொல்லி பரவசமடைந்திருக்கிறேன். ஏழு ரூபாய் என்பது அப்போது பெரிய தொகை. அந்தப் பணத்தில் பின்னலில் வைத்துக் கட்டும் குஞ்சலம் ஒன்றை வாங்கி எனது தங்கைக்குக் கொடுத்தேன்" என்கிறார். (பார்க்க)

வாசுதேவன் தேசப்பற்று மிக்கவர். காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர். ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் இணைந்து செயல்பட்டவர். பா.ஜ.க.வி.ன் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். கிழக்குத் தாம்பரத்தில் இயங்கிய அரவிந்தர் சொஸைட்டியில் செயலாளராகப் பணிபுரிந்ததுண்டு. நாகபுரி, சண்டிகர் பல்கலைக்கழகங்களில் இதழியல் துறையின் கௌரவ விரிவுரையாளராகப் பணி புரிந்திருக்கிறார். சென்னை மற்றும் நாகபுரி அகில இந்திய வானொலி நிலையங்களில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றியிருக்கிறார். மரபுக் கவிதைகள் மீது மிகுந்த ஆர்வமுடையவர். மரபுக் கவிஞர்களை ஊக்குவிப்பதில் மிகுந்த நாட்டமுடையவர். தான் வாழ்ந்த மயிலாப்பூரில் 'கவிதை இன்பம்' என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பில் பிரபல கவிஞர்களை அழைத்து கவியரங்கம் நடத்தி வந்தார். கவிஞர்களை, கவிதைகளை மிகவும் நேசிப்பவராக இருந்தார். இதுபற்றிக் கவிமாமணி இளையவன், தான் 15 வயதுச் சிறுவனாக இருந்தபோது சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் ராமாயண உபன்யாசம் கேட்டு, அதன் தாக்கத்தால் ஒரு பாடல் எழுதியதாகவும், அது பின்னர் சிறு நூலாக வெளியானதாகவும் குறிப்பிடுகிறார். மேலும் அவர், "ரத்னபாலா ஆசிரியராக இருந்த கே.ஆர். வாசுதேவன் அவர்கள் அந்தப் பாடலினால் கவரப்பட்டு அந்த நூலைத் தன் மகனுக்கு வாங்கிக் கொடுக்க, அவரது மகனான டாக்டர் வா. மைத்ரேயன் சிறுவயதிலேயே அதை மனப்பாடம் செய்து பூஜையறையில் தினந்தோறும் பாடி வந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்" என்கிறார். (பார்க்க)

'இதயமலர்', 'காவியத் தென்றல்', 'காலம் தந்த தலைவன்', 'வேதம் பிறந்தது', 'பிருந்தாவனமும் நந்த குமாரனும்', 'தொன் பாஸ்கோ', 'தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்' (நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பு) போன்றவை இவரது படைப்புகளாகும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு இதழ்களில் நிறையக் கட்டுரைகள் எழுதி வந்தார். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அயராது பத்திரிகைப் பணியாற்றி வந்த கே.ஆர்.வாசுதேவன், 1987, ஆகஸ்ட் 19 அன்று காலமானார். இவருக்கு மூன்று மகன்கள். ஆறு மகள்கள். இவர்களுள் மூத்த டாக்டர் வா.மைத்ரேயன் மேனாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்.



2022ம் ஆண்டு கே.ஆர். வாசுதேவனின் நூற்றாண்டு. அவரது நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் வா. மைத்ரேயன் நினைவுமலர் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். அதனை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், இந்தியக் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவும் வாழ்த்தியுள்ளனர். வெங்கய்ய நாயுடு தனது வாழ்த்துரையில், "கே.ஆர். வாசுதேவன் பொது வாழ்விலும், பத்திரிகைத் துறையிலும் ஆளுமை பெற்றிருந்தார். பத்திரிகை, அரசியல் துறைகளில் பணியாற்றிய அவர் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்ததோடு, தமிழ், ஆங்கிலத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அவரது மகன் வா. மைத்ரேயன் சிறப்பு மலரைக் கொண்டுவருவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி, "பன்முக ஆளுமை கொண்டவரான கே.ஆர். வாசுதேவன், சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். அவரது நூற்றாண்டை முன்னிட்டுக் கொண்டு வரப்படும் சிறப்பு மலர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி கதிர், ரத்னபாலா போன்ற இதழ்கள் மூலம் பல எழுத்தாளர்களை உருவாக்கிய கே.ஆர். வாசுதேவன், இலக்கிய உலகம் என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய முன்னோடி.

பா.சு.ரமணன்

© TamilOnline.com