தமிழ்த் திரைப்படங்களில் தனது வசனம் மற்றும் தான் நடித்த பாத்திரங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக் (59) காலமானார். நகைச்சுவை நடிகராக இருந்தாலும் சமூக அக்கறை மிக்கவர். பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபாட்டோடு செயலாற்றினார். குறிப்பாக மரம் நடுதலில் அக்கறை காட்டி, சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அன்பைப் பெற்றவர்.
நவம்பர் 19, 1961ல் கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி கிராமத்தில், அங்கய்யா பாண்டியன் - மணியம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் விவேக். இயற்பெயர் விவேகானந்தன். செல்லப் பெயர் ராஜு. இளவயதிலேயே கலைகளில் ஆர்வம் மிகுத்திருந்தார். ஊட்டி கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றார். பள்ளிக்காலத்திலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். கல்லூரிக் காலத்தில் சில நாடகங்களில் நடித்தார். சிறந்த பல்குரல் (மிமிக்ரி) கலைஞராகவும் பரிணமித்தார். பரதநாட்டியத்தை முறையாகக் கற்றவர். இசையார்வமும் உண்டு. வயலின், தபேலா, பியானோ போன்ற இசைக் கருவிகளை வாசிப்பார். மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றினார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் பணி வாய்ப்பு அமைந்தது.
'கலாகேந்திரா' கோவிந்தராஜன் மூலம் இயக்குநர் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது. பாலசந்தர் இவரை 1987ல் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகப்படுத்தினார். சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். அருள்செல்வியுடன் திருமணம் நிகழ்ந்தது. திரைப்பட வாய்ப்புகள் அதிகரிக்கவே, தலைமைச் செயலகப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுக்கத் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாது, விக்ரம், மாதவன், சூர்யா, தனுஷ், சித்தார்த், சிம்பு என அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்தார். 'மகனே என் மருமகனே', 'நான்தான் பாலா', 'வெள்ளைப்பூக்கள்' போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன்-2' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை நான்கு முறை பெற்றவர். இதற்கான தமிழக அரசின் விருதையும் நான்கு முறை பெற்றிருக்கிறார். ITFA வழங்கிய சிறந்த நகைச்சுவை நடிகர் விருது, எடிசன் விருது, கொடைக்கானல் பண்பலை வானொலி வழங்கிய சிறந்த நகைச்சுவை நடிகர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதளித்துச் சிறப்பித்தது.
தாயின் நினைவாக 'மணியம்மாள் கல்வி அறக்கட்டளை'யை நிறுவி அதன்மூலம் சமூகப் பணியாற்றி வந்தார். அமெரிக்காவில் பல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். ஜனங்களின் கலைஞர், சின்னக் கலைவாணர் என்றெல்லாம் போற்றப்பட்ட விவேக், 2015ல், மகன் சாய் பிரசன்னாவின் இழப்பால் மிகவும் மனம் வாடினார். 'சாய் பிரசன்னா ஃபவுண்டேஷன்' அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டார்.
தடுப்பூசி போட்டுக் கொண்டு கோவிட்-19 பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர், அதற்கு மறுநாள் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு அமிர்தா நந்தினி, தேஜஸ்வினி என்ற இரு மகள்கள் உள்ளனர். (விவேக் தென்றலுக்கு வழங்கிய நேர்காணலை வாசிக்க)
நடிகர் விவேக்கிற்குத் தென்றலின் அஞ்சலி! |