'பாடும் நிலா', 'கந்தர்வ கானக் குரலோன்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். இவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில், ஜுன் 4, 1946ல், எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலாம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சிறந்த ஹரிகதா வித்வான். இசைச்சூழலில் வளர்ந்தாலும் சிறு வயதில் பெரிதாக இசை நாட்டம் ஏதும் எஸ்.பி.பி.க்கு இல்லை. பொறியாளர் ஆவதையே லட்சியமாகக் கொண்டிருந்தார்.
ஒருசமயம் கல்லுரி பாட்டுப் போட்டியில் எஸ்.பி.பி. பாடினார். நடுவராக வந்த பின்னணிப் பாடகி எஸ். ஜானகி இவரைத் திரைப்படங்களில் பின்னணி பாட ஆலோசனை கூறினார். இவரது குரலால் ஈர்க்கப்பட்ட தெலுங்குப் பட இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணி இவருக்கு முதல் வாய்ப்பை அளித்தார். 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ மர்யாத ராமண்ணா' என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனைச் சந்தித்தபோது, அவர், இவரை நன்கு தமிழைப் பயின்றபின் வருமாறும், தான் வாய்ப்பளிப்பதாகவும் உறுதியளித்தார். அதன் படி இரண்டு வருடங்கள் தமிழைப் பேச, எழுத, உச்சரிக்கப் பயின்ற பின் எம்.எஸ்.வி.யை அணுக, அவரும் தன் சொல்படி, 'ஹோட்டல் ரம்பா' என்ற படத்திற்குப் பாடும் வாய்ப்பை அளித்தார். உடன் பாடியவர் எல்.ஆர். ஈஸ்வரி. ஆனால், அந்தப் படம் வெளிவரவில்லை. அடுத்து 'சாந்தி நிலையம்' படத்தில், ஜெமினி கணேசனுக்காக "இயற்கை என்னும் இளைய கன்னி..." என்ற பாடலைப் பி. சுசீலாவுடன் இணைந்து பாடி, ஒரு சரித்திரத் தொடக்கத்துக்கு முதலடி எடுத்துவைத்தார்.
சென்னையில் நடந்த ஒரு தெலுங்குப் படப்பிடிப்பில் எஸ்.பி.பி.யின் குரலைக் கேட்ட எம்.ஜி.ஆர்., தான் நடித்த 'அடிமைப் பெண்' படத்தில் அவர் பாட வேண்டுமென விரும்பினார். எஸ்.பி.பி.க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும், அவர் குணமாகும் வரை எம்.ஜி.ஆர். காத்திருந்தார். பின்னர் பதிவு செய்யப்பட்ட பாடல்தான் "ஆயிரம் நிலவே வா." எஸ்.பி.பி. பிற்காலத்தில் ஆயிரக்கணககன பாடல்களைப் பாடப்போகிறார் என்பதற்கு அச்சாரமாக அப்பாடல் அமைந்தது. தொடர்ந்து சிவாஜிக்காக "பொட்டு வைத்த முகமோ" என்று பாடினார்.
இளையராஜாவின் வருகை இவரது இசை வாழ்வில் முக்கியமான திருப்பம். அடுத்தடுத்த தலைமுறைகளான மோகன், ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ் என்று பலருக்கும் பாடியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மொத்தம் ஆறுமுறை சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றிருக்கிறார். எந்த மொழியானாலும் திருத்தமான உச்சரிப்புடன் பாடும் வழக்கத்தை வைத்திருந்தார். தமிழக அரசு வழங்கிய சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதைப் பலமுறை பெற்றவர். ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்பட பல விருதுகள் இவரைத் தேடி வந்திருக்கின்றன. இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 16 இந்திய மொழிகளில் 42000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பி.க்கு புல்லாங்குழல் வாசிக்கத் தெரியும். ஓவிய ஆர்வம் உண்டு. படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், தயாரித்திருக்கிறார், நடித்திருக்கிறார். இயக்கமும் அறிந்தவர். கமல், ரஜினி போன்றோரின் தெலுங்கு மொழிமாற்றப் படங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். சிவன், விஷ்ணு, முருகன், அம்பாள், விநாயகர் எனப் பல தெய்வங்கள் மீது நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
40,000 பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், அதிலிருந்து மீண்டு வந்தாலும் நுரையீரல் பிரச்சனையாலும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாலும் இதய அடைப்பினால் காலமானார்.
பின்னணி பாடுவதை வெறும் தொழிலாக எண்ணாமல், கர்ம யோகமாகவே கருதிச் செயல்பட்ட'பாடக ரத்னா'வுக்குத் தென்றலின் அஞ்சலிகள்!
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தென்றலுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் வாசிக்க. |