தென்றல் பேசுகிறது...
கேரளத்தின் கண்ணூரில் பிறந்து, மைசூரில் வளர்ந்து, புதுடெல்லியின் லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் படித்த கீதா கோபிநாத், பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) தலைமைப் பொருளியலராக (Chief Economist) நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ரகுராம் ராஜன் (முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர்) மட்டுமே இதற்கு முன்னர் இந்தப் பதவியை வகித்த இந்தியர் ஆவார். முன்னதாக இவர் இந்திய அரசின் சிறப்பு ஆலோசகர் குழுவில் இருந்துள்ளார்; 2016ல் கேரள முதலமைச்சருக்குப் பொருளியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஓர் இந்தியப் பெண்மணி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம்.

Forbes இதழின் 'உலகத்தின் பேராற்றல் வாய்ந்த 100 பெண்மணிகள்' பட்டியலில் 2வது இடத்தை 2015ல் பிடித்தவரும், பெப்சிகோ கம்பெனியின் தலைமை நிர்வாக அலுவராக (CEO) உலகத்தின் கவனத்தை ஈர்த்தவருமான இந்திரா நூயி அக்டோபர் 3, 2018 அன்று பதவியிலிருந்து விலகினார். பன்னாட்டு உணவுத்துறைக் குழுமமான பெப்சிகோவில் பணியாற்றிய 24 ஆண்டுகளில், அவர் தலைமைப் பதவியில் இருந்தது 12 ஆண்டுகள். “என் தோற்றம் அல்லது பேச்சுத்திறனை நம்பாமல், நான் முழுக்க முழுக்க என் உழைப்பையும் அறிவையுமே நம்புகிறேன்” என்று அவர் கூறியது இளைய தலைமுறையினருக்கு ஒரு முக்கியமான பாடம்.

*****


ஃபிப்ரவரி 2015 தென்றல் இதழில் திருட்டுச் சிலைகள் மீட்பு ஆர்வலர் விஜயகுமார் அவர்களை நேர்கண்டிருந்தோம். அப்படித் தூறலாகத் தொடங்கிய சிலை திருட்டு விவகாரம் இன்றைக்குப் பூதாகாரம் எடுத்திருக்கிறது. தமிழகப் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மிகத்துணிச்சலாகத் திடீர்ச் சோதனைகள் நடத்திக் கணக்கற்ற சிலைகளைக் கடத்தி வைத்திருக்கும் பெரிய புள்ளியான ரன்வீர் ஷா உட்பட்டவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிவருகிறார். இதன் அடிப்படைக் காரணம் கோவில் நிர்வாகங்கள் பக்தர்களின் கைகளிலிருந்து மாறிப் பணம் கறக்கும் அரசுத்துறை ஆகிவிட்டதுதான். மதச்சார்பற்றவையாகத் தம்மை அறிவித்துக்கொள்ளும் அரசுகள் கோவில் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொள்வதால் கோவில்களுக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் ஏற்படும் தீங்குகளும் இழப்புகளும் கணக்கற்றவை. இதனை இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளும் கோவில்களுக்குச் செல்பவர்களும் சிந்திக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

*****


காந்தி பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த மாதத்தில், இளம் காந்தியச் சிந்தனையாளரும் எழுத்தாளருமான டாக்டர் சுனில் கிருஷ்ணனின் நேர்காணல் நம் பார்வைக்குப் பல உண்மைகளைக் கொண்டு வருகிறது. “அன்னா ஹசாரே ஏன் காந்தி அல்ல?” என்ற கேள்வியை எழுப்பி அவரே அதற்கு விடையும் கூறுகிறார். 14 வயதான ஹரீஷ் பாலசுப்பிரமணியன் மற்றும் ஷ்ரேயா, 12 வயதான கீதாஞ்சலி ஆகியோர் தமது அறிவியல்சார் உழைப்பினாலும் சமூக சிந்தனையாலும் சிறப்புகளை அடைந்த சாதனையாளர்களாக இந்த இதழில் இடம்பெறுகிறார்கள். கோதுமை கார அல்வா சாப்பிட்டதுண்டா? இந்த இதழில் அதைத் தயாரிக்க வழி சொல்லியிருக்கிறோம். நாடக விமர்சனம், சிறுகதைகள் எல்லாமும் உண்டு. உங்கள் ஆர்வத்துக்குக் குறுக்கே நிற்க மாட்டோம், இதோ தென்றல்... வாசியுங்கள்.

வாசகர்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள்.

தென்றல் குழு

அக்டோபர் 2018

© TamilOnline.com