தெரியுமா?: சாம் கண்ணப்பனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது
சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களுக்கு Hindus of Greater Houston அமைப்பு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. யோகம் மற்றும் வேதாந்தத்திற்காக இந்திய அரசின் 'பத்மபூஷண்' விருதுபெற்ற 'பண்டித வாமதேவ சாஸ்திரி' எனப் பரவலாக அறியப்படும் முனைவர். டேவிட் ஃப்ராலி (Dr. David Frawley) இவ்விருதை வழங்கினார்.

ஹூஸ்டன் நகரில் 40 ஆண்டுகளுக்குமேல் வசித்துவரும் கண்ணப்பன், பியர்லாண்ட், டெக்சஸில் 'ஸ்ரீமீனாட்சியம்மன் கோவில்' அமைக்கும் பிரம்மாண்டமான பணியை முன்னின்று நடத்தினார். இவர் ஹூஸ்டனின் தமிழ் கலாச்சார அமைப்பான பாரதி கலைமன்றத்தின் நிறுவனர்; GOPIO அமைப்பின், ஹூஸ்டன் பிரிவுத் தலைவர்; டெக்சஸ் Professional Engineers நிர்வாகக்குழுவுக்கு 2012 முதல் 2017 வரை மாநில கவர்னர் திரு. ரிக் பெரி அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூகநலப் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர் சங்கர நேத்ராலயாவின் கண்தான சேவைக்கு நன்கொடை சேகரித்துள்ளார். ஹூஸ்டன் பெருநில இந்துக்கள் அமைப்பின் நிறுவனர் உறுப்பினர். 72 வயதிலும் சுறுசுறுப்பாகப் பல அமைப்புகளில் செயல்பட்டுவருகிறார். "சனாதன தர்மம் உலகின் மிகப்பழமையான மதம். சாதாரண, எளிய மனிதருக்கும் நேர்மையாக வாழும் வழிமுறைகளை அது காட்டுகிறது. பக்தி, அர்ப்பணம் ஆகியவை கடவுளை அடைய எளிமையான வழிகள்" என்கிறார் இவர்.

இவரது மனைவி மீனாட்சி கண்ணப்பன். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள், ஒரு பேரன் உள்ளனர்.

இவரது நேர்காணல் வாசிக்க தென்றல் டிசம்பர் 2009 இதழ் பார்க்கவும்

தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com