தென்றல் பேசுகிறது...
2016ம் ஆண்டில் மட்டுமே சுமார் 1.7 மில்லியன் அமெரிக்கர்கள் புதிதாகப் புற்றுநோய் தாக்கியோர் பட்டியலில் சேரக்கூடும் என்று அமெரிக்கன் கேன்சர் சொஸைட்டி (www.cancer.org) கூறுகிறது. இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் புற்றுநோயால் இறப்பவர் எண்ணிக்கை சுமார் 1,630 ஆக இருக்கும் என்பது அடுத்த அதிர்ச்சிக் கணிப்பு. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது புற்றுநோய்க்கு நிவாரணம் கண்டுபிடிக்க முழுமூச்சாகச் செயல்படும் விரைவுப் பணிக்குழு ஒன்றை அதிபர் ஒபாமா நியமித்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. இதைக் குணப்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டு வந்தபோதும் தற்காலிக நிவாரணமும் வாழ்க்கை நீட்டிப்பும் ஏற்படுவதைப் பார்க்கிறோமே அன்றி முழுதான நோய்நீக்கம் என்பது இன்னமும் எட்டாக்கனிதான். நிலவுக்கு மனிதனை அனுப்ப 1960களில் அமெரிக்கா எந்தத் தீவிரத்துடன் செயல்பட்டதோ அதற்கிணையான வேகத்தில் தீர்வினைக் காண இந்தக்குழு செயல்பாடுகளை துரிதப்படுத்துமாம். சென்ற ஆண்டில் மூளைப் புற்றுநோய்க்குத் தன் மகனைப் பரிகொடுத்த துணையதிபர் ஜோ பைடன் இதற்குத் தலைமையேற்பார். அரசுத்துறைகள், தொழில்துறை, கொடையாளர்கள் எனப் பலரும் இந்த ஒருமுனைப்பான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவர். குப்பை உணவு, உடற்பயிற்சியற்ற வாழ்முறை, புகையிலை, மதுபானம் எனப் பலவகைக் காரணங்கள் புற்றுநோய்த் தாக்கத்தை அபாயநிலை மட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. இன்னும் தாமதிக்கமுடியாது என்கிற கட்டத்தில் அமெரிக்க அதிபர் இதற்குத் தீர்வுகாணும் ஆய்வுக்கு முழுமூச்சான உந்துதல் கொடுத்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.

பிப்ரவரி 4 'உலகப் புற்றுநோய் நாள்'. இந்த ஆட்கொல்லி நோய்மீது கவனம் குவிகிற இந்த நேரத்தில் அடையாறு புற்றுநோய்க் கழகத்தை நிறுவி 60 ஆண்டுகளாகத் தளராது உழைத்துவரும் டாக்டர் வி. சாந்தா அவர்களுக்கு இந்திய அரசு 'பத்மவிபூஷண்' விருது கொடுத்திருப்பதைப் பாராட்டி மகிழ்கிறோம்.

*****


நவம்பர் மாதத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பார்களின் தேர்வு தொடங்கிவிட்டது. 6 மில்லியன் எண்ணிக்கையுள்ள யூத சமுதாயம் கிட்டத்தட்ட 30 பிரதிநிதிகளை அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் கொண்டுள்ளது. 2 மில்லியன் ஆசிய-அமெரிக்கர்களின் எத்தனை பிரதிநிதிகள் செனட்டில் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடை நமக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. எங்கெல்லாம் அமெரிக்க இந்தியர்கள் பொதுப் பதவிகளுக்குப் போட்டியிடுகிறார்களோ, அங்கெல்லாம் ஒற்றுமையாக அவர்களை ஆதரித்தால் அரசியல் களத்தில் நம் குரல் ஒலிக்கும் நாள் அருகே வரும் சாத்தியத்தை உண்டாக்கியவர்கள் ஆவோம். அதுவும் தவிர, பள்ளி நிர்வாகக் கமிட்டி, நகர்மன்றம், மாநில சட்டசபை என எல்லாத் தளங்களிலும் இந்திய-அமெரிக்கர் ஆர்வத்தோடு நுழைந்து செயலாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. பார்வை விரிய வேண்டும், பங்களிப்பு பெருகவேண்டும். அதுதான் பலமும் வளமும் சேர்க்கும்.

*****


விவசாயம் ஏதோ கல்லாத மாந்தர் செய்வது என்பதான ஒரு மாயைக்கு ஆட்பட்டதாலும், அதில் சரியான வழிமுறைகளைப் புகுத்தாததாலும் விளைச்சல் குன்றி, விளைபொருளின் தரம் குன்றிப் போயுள்ளது. அதை நல்ல லாபகரமாகவும், தரமானதாகவும் செய்யமுடியும் என்பதைச் செய்துகாட்டி உள்ளார் IIT பட்டதாரி R. மாதவன். அவரது நேர்காணல் ஒரு தகவல் பொக்கிஷம். நம்மவர் அரசுப் பதவிக்குப் போட்டியிடுகையில் நாம் ஆதரிக்க வேண்டும் என்னும் கருத்துக்கேற்ப, அடுத்த நேர்காணல் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தியோடு. அவரது சமுதாயச் சிந்தனையும் நம்மைப் பெரிதும் ஈர்த்தது. 'நிணநீர்த்திசுப் புற்றுநோய்' குறித்து நமது மருத்துவக் கட்டுரை பேசுகிறது. இளம்சாதனையாளர்கள், குறள் வல்லுனர்கள் பற்றிய குறிப்புகள், கதைகள் என்று இன்னுமொரு மாதத்துக்கு உங்களைக் கட்டிப்போட்டு வைக்க வருகிறது 'தென்றல்'. படியுங்கள், எழுதுங்கள்.

வாசகர்களுக்கு வேலன்டைன் நாள் வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

பிப்ரவரி 2016

© TamilOnline.com