அமெரிக்காவில் வாழும் இளைய தமிழ்ச் சமுதாயத்தின் சாதனை நாயகன் கூடைப்பந்து வீரர் வருண் ராம் (பார்க்க: தென்றல், ஏப்ரல் 2015) தலைமையில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாமாண்டு விளையாட்டு தினம் மே 2, 2015 நாளன்று நடந்தது. வருண்ராம் நிகழ்வில் பங்கேற்று, அனைவருடனும் எளிமையாகப் பழகி, குழந்தைகளுடன் கலந்துரையாடி ஊக்குவித்தது மகிழ்ச்சியளித்தது.
வருண்ராம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்ட நாள்முதலே எதிர்பார்ப்பு! அதைப் பூர்த்திசெய்யும் வகையில் மே 1ம் தேதி மாலை சென்ட் சர்ச்சிலுள்ள ஜிம்மில் வருணோடு ஒரு சந்திப்பு நடைபெற்றது. குழந்தைகள்முதல் பெரியோர்வரை இதில் பங்கேற்றனர். கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம், முயற்சி எனத் தன்னைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டதோடு, கேள்விகளுக்கும் பதிலளித்தார். பின்னர் குழந்தைகள், இளைஞர்கள் என அனைவருடனும் கூடைப்பந்து விளையாடி மகிழ்ச்சி தந்தார்.
விளையாட்டு தினம் காலை 8:30 முதல் 1:00 மணிவரை ப்ளேனோ வில்லியம்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. குழந்தைகள், பெரியவர்கள் யாவரும் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அன்றைய தினமும் வருண்ராம் குழந்தைகளிடம் அன்புடனும், பெரியவர்களிடத்தில் பணிவான குணத்துடனும் நடந்துகொண்டதன் பெருமை அவரது பெற்றோரையே சாரும் என்று சொல்லலாம். வருண்ராம் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று பரிசு வென்றார் என்பது கூடுதல் செய்தி.
பரிசு வழங்கிப் பேசும்போது, விளையாட்டிலும் படிப்பிலும் கவனம் செலுத்தி கண்டிப்பாக வெற்றிபெறலாம், விளையாட்டு அல்லது படிப்பு ஏதாவது ஒன்றில்தான் சாதிக்கமுடியும் என்பதில்லை. இரண்டிலும் சாதிக்கமுடியும் என்பதன் சாட்சியாகத் தான் இருப்பதாகக் கூறியது குழந்தைகளின் நம்பிக்கையை ஊக்குவிப்பதாக இருந்தது.
விளையாட்டு நாள் ஏற்பாடுகளைத் சங்கத்தலைவி கீதா அருணாச்சலம் தலைமையில் மகேந்திரமணி, பக்தா, சிவா, முருகானந்தன், அருண்குமார், சுப்ரா, இளங்கோ, செல்வமணி, ஞானவேல், கோபி, தமிழ்மணி, மறைமலை லக்ஷ்மி, சுமதி, கவிதா ஆனந்த், லதா இளங்கோ, மணிமேகலை ஆகியோர் செய்திருந்தனர்.
சித்ரா ரத்தினசுவாமி, டாலஸ், டெக்சஸ் |